நிம்மதியான வாழ்வுக்கு துறவறமே உயர்ந்தது என நினைத்தான் ஒரு மனிதன்.
காட்டுக்கு தவமிருக்க போய்விட்டான். அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. “”இது என்ன வாழ்க்கை! காலை முதல் மாலை வரை கண்மூடிக்கொண்டே இருப்பது!
இரவானாலும் தூங்குவது! அதிகாலையில் கொட்டும் பனியில் குளத்திற்குப் போய் நீராடுவது! பூ பறிப்பது! சுவாமியை வணங்குவது! போதாக்குறைக்கு தனிமை வேறு! பேச்சுத்துணைக்கு ஆளில்லையே! ஏன் இங்கு வந்தோம்! இது வேண்டாமென்று ஊருக்குத் திரும்பிப் போனால் “இவ்வளவுதானா உன் வைராக்கியம்?’ என ஊரே கேலி பேசுமே! என்ன செய்வது?” என யோசித்தபடியே உறங்கி விட்டான்.
அன்று கனவில் ஒரு தேவன் வந்தான்.
“”அன்பனே! நாளை முதல் இந்த தவத்தையெல்லாம் விட்டு விடு. பக்கத்து ஊருக்குப் போ. அங்கே உன்னை யாருக்கும் அடையாளம் தெரியாது. அங்கு வசிக்கும் பண்ணையாரின் நிலத்தில் வேலை செய். நிம்மதி உன்னைத் தேடி வரும்,” என்றான்.
இவனும் மறுநாள் பக்கத்து ஊருக்குப் போனான். பண்ணையாரும் வேலை கொடுத்தார்.
உழுதான், உரமிட்டான், நாற்று நட்டான், களையெடுத்தான், அறுவடைப் பணிக்குச் சென்றான். அந்த உழைப்பின் பலன் இரவில் நிம்மதியாகத் தூக்கம் வந்தது. கையில் போதுமான அளவு பணம்…சிறிது காலத்தில் அவனே நிலம் வாங்கினான். கடுமையாக உழைத்தான். துறவு வாழ்வை விட உழைத்து வாழும் வாழ்வே உயர்தரமானது என்பதைப் புரிந்து கொண்டான். அது மட்டுமல்ல! தன் நிலத்தில் பலருக்கு வேலை கொடுத்து, அவர்களது குடும்பமும் வாழ வழி செய்தான்.
வேலை செய்யும்போது மனம் பக்குவப்படுகிறது. பணமும் கிடைக்கிறது. உடலுக்கு வலிமையும், ஆத்மாவுக்கு புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்தால் துருப்பிடிக்காது. அதுபோல், உழைத்துக்கொண்டே இருந்தால் தான் சலிப்பு ஏற்படாது.
கடிகாரத்தின் முள் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியானால் தான் அது சரியான நேரத்தைக் காட்டும். நீங்களும் நிற்காத கடிகாரமாயிருங்கள்.