பெரிய நகரங்களில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட கம்பத்தை அல்லது அமைப்பைக் கண்டிருக்கிறோம். இவ்விளக்குகள் 3 வண்ணங்களில் அமைந்திருக்கும். அவை முறையே பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு ஆகியன.
ஜே.பி.நைட் என்பவர் லண்டன் மாநகரில் 1868ஆம் ஆண்டு இப்போக்குவரத்து விளக்குகளைக் கண்டு பிடித்தார். மக்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் இவ்விளக்குகள் நிறுவப்பட்டன. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்நாளில் தானியங்கிப் போக்குவரத்து வாகனங்கள் சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கவில்லை. குதிரையை அல்லது குதிரை பூட்டிய வண்டிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
பச்சை, சிகப்பு ஆகிய இரு வண்ணங்கள் மட்டுமே அப்போது பயன்படுத்தப்பட்டு வந்தன. உருளையில் நிரப்பப்பட்ட வாயுவினால்தான் அவ்விளக்குகள் எரிந்து வந்தன; இவ்வமைப்பு அப்போது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றுதான் கூறவேண்டும்.
அமெரிக்காவின் மிக்சிகன் நகரில் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், காவல் துறையைச்சார்ந்த வில்லியம் பாட்ஸ் என்பவர் இரயில்வே சமிக்கைகளின் அடிப்படையில் போக்குவரத்து விளக்குகளை அமைக்க முயற்சி செய்தார். பச்சை, சிகப்பு, காவி பூசிய மஞ்சள் ஆகிய நிறங்களுடன் கூடிய விளக்குகளை நிறுவி இவர் தமது முயற்சியில் 1920ஆம் ஆண்டு வெற்றி பெற்றார்.
இப்போக்குவரத்து விளக்குகளில் சிகப்பு விளக்கு “நிறுத்துக”, மஞ்சள் விளக்கு “ஆயத்தமாகுக”, பச்சை விளக்கு “செல்க” என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டன. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் 1923ஆம் ஆண்டு போக்குவரத்து விளக்குகள் நிறுவப்பட்டன. முதலாவது தானியங்கிப் போக்குவரத்து விளக்கு 1927ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நிறுவப்பட்டது.
****