Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்!!!

ஹான்ஸ் ஜென்னி விளக்கும் மந்திர மகத்துவம்!!!

சென்ற இதழில் க்ளாட்னி ஆராய்ந்து வியந்த ஒலி மகத்துவத்தைப் பார்த்தோம். அவர் வழியில் வந்த ஹான்ஸ் ஜென்னி ஆராய்ந்து கண்ட மந்திரங்களின் மகத்துவத்தை இனி படிக்கலாம்..

ஹான்ஸ் ஜென்னியின் ஆராய்ச்சி

ஸ்விட்சர்லாந்து தேசத்தைச் சேர்ந்தவர் டாக்டர் ஹான்ஸ் ஜென்னி (1904-1972). இவர் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர். ஒலி அலை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு 1967ம் ஆண்டு Cymatics: The Study of Wave Phenomena என்ற புத்தகத்தை இவர் வெளியிட்டார்.

பத்தாண்டு காலம் க்ளிசெரின், பாதரஸம், ஜெல், பவுடர், இரும்பு போன்ற ஊடகங்களில் ஒலி அலைகள் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை முறையாக ஆராய்ந்து அவற்றைக் குறிப்பெடுத்தார்.

குறைவான அதிர்வுள்ள ஒலி அலைகள் ஜியாமெட்ரி வரைபடங்களை உருவாக்குவதைக் கண்டு இவர் அதிசயித்தார். ஒலி அதிர்வு அதிகமாக்கப்பட்ட போது சிக்கலான படங்கள் உருவாக ஆரம்பித்தன. இதைத் தொடர்ந்து ஹிந்து மதம் சித்தரிக்கும் வெவ்வேறு மண்டலங்களை அதாவது யந்திரங்கள் மேல் இவர் கவனம் திரும்பியது.

மந்திரங்களும் யந்திரங்களும்

வேதங்கள் கூறும் மந்திரங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு சக்தி உண்டு. இதே போல ஒவ்வொரு யந்திரமும் ஒரு வித ஜியாமெட்ரி உருவமாக அமைக்கப்படுவதோடு குறிப்பிட்ட யந்திரத்தை பிரதிஷ்டை செய்ய குறிப்பிட்ட மந்திரம் உச்சரிக்கப்பட்டு சக்தி ஊட்டப்படுகிறது.ஹான்ஸ் ஜென்னி குறிப்பிட்ட மந்திரம் ஒன்றை உச்சரிக்கச் செய்த போது குறிப்பிட்ட யந்திரத்தின் உருவம் வந்ததைப் பார்த்து பிரமித்துப் போனார்.

ஓம் எனும் மந்திரமும் ஸ்ரீ யந்திர அமைப்பும்

தலையாய மந்திரமான ஓம் என்பதை உச்சரிக்கச் செய்தார். ஓ என்ற வார்த்தை உச்சரித்தவுடன் ஒரு முழு வட்டம் தோன்றியது. ம் என்று முடிக்கும் போது சிக்கலான ஸ்ரீ யந்திரம் உருவானது

நவீன உடலியல் இரசாயன வல்லுநர்கள், வானியல்-இயற்பியல் விஞ்ஞானிகள் மற்றும் ஹிந்து யோகிகள் நம்முடைய உடல்கள் அணுத்துகள் அதிர்வுகளின் அமைப்புகளே (system of vibrations) என்று ஒரு மனதாக ஒப்புக்கொண்டுள்ளனர். நம்முடைய உடலின் ஒவ்வொரு அங்கமும், ஒவ்வொரு திசுவும், உறுப்பும் வெவ்வேறு அதிர்வெண்களுக்குத் தக்கபடி இயங்குகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஸ்வரத்தைக் கொண்டுள்ளது. இதை சுருக்கமாக சொல்லப் போனால் நம்முடைய உடலே உண்மையில் ஒலி அலைகளால் உருவாக்கப்பட்டுள்ளது என்று ஆகிறது.

எல்லாம் அதிர்வு மயம்

உடலே அதிர்வுகளின் கூட்டு என்னும் போது நம்மைச் சுற்றி உள்ள ஒலிகள் நம்மைப் பாதிக்காமல் இருக்குமா?. ஆனால் எப்படி என்ற கேள்வி எழுகிறது. எதிரொலி கொள்கையின் அடிப்படையில் இரண்டு ஒத்த அதிர்வுகளைக் கொண்டுள்ளவை ஒன்றுக்கொன்று ஆதரவாக இயங்கும் என்பதை அனைவரும் அறிவர். நம்முடைய உடல் இயல்பாக அதிக ஓய்வுடன் இருக்கும் நிலையில் வினாடிக்கு 7.8 முதல் 8 சைக்கிள் (cycle) வரை அதிர்வுகளைக் கொண்டுள்ளது.

ஆல்பா மூளை அலைகளும் ஓய்வான நிலையில் வினாடிக்கு 8 சைக்கிள் அதிர்வுகளையே கொண்டுள்ளன. பூமி கூட வினாடிக்கு 8 சைக்கிள் என்ற அளவிலேயே அதிர்கிறது. உலகில் உயிர் வாழும் ஒவ்வொரு உயிரின் நரம்பு மண்டலமும் இந்த அதிர்வெண்ணுக்கு இயைபுடையதாகவே உள்ளது.

இதையெல்லாம் ஏராளமான பரிசோதனைகள் மூலம் ஆராய்ந்த டாக்டர் ஹான்ஸ் ஜென்னி அதிர்வெண்ணின் ஸ்தாயி அல்லது சுருதி மிகவும் அதிக அளவில் இருந்தால் ஜியாமட்ரி வடிவங்கள் சிக்கலானதாக உள்ளன என்று கண்டறிந்தார்.

ரகசிய சாஸ்திரங்கள்

இந்த அடிப்படையில் ஒவ்வொரு யந்திரத்திற்கும் ஒரு வடிவ ஆற்றல் அல்லது உருவ ஆற்றல் உள்ளது என்று ஆகிறது. அதாவது ஒவ்வொரு வடிவமும் ஒரு சக்தியை உமிழ்கிறது. இதன் அடிப்படையிலேயே தேவைக்குத் தக்கபடி யந்திரங்களை ஒலியின் அடிப்படையில் நமது பண்டைய ரிஷிகள் அமைத்தனர்.

யாக சாலை குண்டங்களும் குறிப்பிட்ட அளவில் குறிப்பிட்ட வடிவில் குறிப்பிட்ட திசையில் அமைக்கப்படுவது மரபு. டேவிட்டின் நட்சத்திரம், பிரமிட், ஸ்ரீ சக்கரம் போன்ற ரகசிய சாஸ்திர அமைப்புகள் எல்லா நாகரிகங்களிலும் இருந்து வருவது ஆச்சரியப்படும் விஷயம் அல்லவா?

புதிய ஒலி இயல்

ஹான்ஸ் ஜென்னி தனது இயலை cymatics என்று குறிப்பிட்டார் இந்தச் சொல் கிரேக்க வார்த்தையான kyma (அலை என்று பொருள்படும்) என்பதிலிருந்து உருவானது. ஆகவே, cymatics என்ற சொல் எப்படி ஒலி அதிர்வுகள் பல்வேறு வடிவங்களை உருவாக்குகின்றன, அவை எப்படிப்பட்ட செல்வாக்கை இதர அமைப்புகளின் மீது ஏற்படுத்துகின்றன என்ற பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்று கூறலாம். தான் உருவாக்கிய கருவிக்கு அவர் டோனோஸ்கோப் (tonoscope) என்று பெயரிட்டார்.

சமஸ்கிருத மொழியின் ஆற்றல்

தனது சோதனைகளில் சம்ஸ்கிருத மற்றும் ஹிப்ரூ உயிர் எழுத்துக்களை உச்சரித்தபோது (தகட்டின் மீதுள்ள) மணல் அந்த எழுத்து வடிவை அடைந்ததைக் கண்டு அதிசயித்தார்! ஆனால் பின்னாளில் தோன்றிய மொழிகளில் இந்தச் சிறப்பை அவர் காணவில்லை. இது எப்படி சாத்தியம்?. இந்த மொழிகள் தெய்வீக மொழிகளா? அவைகளின் ஒலிச் சேர்க்கைகள், ஒலிகள் அவை கூறும் பொருளை உருவாக்க வல்லவையா? பௌதிக உலகில் தனது செல்வாக்கை இந்த மொழிகளின் ஒலி அலைகள் ஏற்படுத்துகின்றனவா? இவை கூறும் ஸ்தோத்திரங்கள் அதில் சொல்லி இருப்பது போல மனித நோய்களைக் குணப்படுத்துமா? இப்படிப்பட்ட ஏராளமான கேள்விகள் அவருக்கு எழுந்தன!

திரவம் பூசப்பட்ட ஒரு தகடை அதிர்வுக்குள்ளாக்கி அவர் சாய்த்தார். புவி ஈர்ப்பு விசை கொள்கையின் படி அந்தத் திரவம் தகடிலிருந்து கீழே வடிந்து விழவில்லை. மாறாக வெவ்வேறு வடிவங்களைக் காண்பிக்க ஆரம்பித்தது. அதிர்வது நிறுத்தப்பட்டவுடன் திரவம் கீழே வடிய ஆரம்பித்தது! மீண்டும் தகடை அதிர்வுக்குள்ளாக்கினால் திரவம் வடிவது நின்றது. இந்தச் சோதனையின் மூலம் அதிர்வுகள் புவி ஈர்ப்பு விசையைத் தடுக்கும் வல்லமை கொண்டவை என்பதை அவர் உணர்ந்து அறிவித்தார்.

1972 -அவர் இறந்த வருடம் அவரது நூலின் இரண்டாம் பாகம் வெளி வந்தது.

ஹான்ஸ் ஜென்னியின் புகைப்படங்கள்

அவரது சோதனையின் போது எடுக்கப்பட்ட ஏராளமான புகைப்படங்கள் வெளி வரவே உலகமே பரபரப்புக்குள்ளானது. மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் ஒரு அதிர்வு உண்டு என்றும் மனிதனின் பரிணாமமே இந்த அதிர்வின் அடிப்படையில் எழுந்ததுதான் என்றும் அவர் தன் முடிவைத் தெரிவித்தார். ஓம் என்ற மந்திரத்தின் உயர்ந்த தன்மையை அவர் விளக்கி உலகை வியப்பில் ஆழ்த்தினார். மனித காதுகளை இன்னும் தீவிரமாக ஆராய்ந்தால் ஒலி அதிர்வுகளின் நுட்பங்களையும் ரகசியங்களையும் அறிய முடியும் என்று அவர் அறிவித்தார்!

டாக்டர் பீட்டரின் ஒலி சிகிச்சை

பிரிட்டிஷ் மருத்துவரான டாக்டர் பீட்டர் கை மானர்ஸ் ஆங்கில மருத்துவ முறைக்கு நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இல்லாததைக் கண்டு மனம் வெதும்பி மாற்று மருத்துவ முறைகள் உண்டா என்று நாடு நாடாக அலைந்து திரிந்து தேடலானார். அவர் ஹான்ஸ் ஜென்னியைச் சந்திக்க நேர்ந்தது. ஒலி சிகிச்சை முறை அவரைக் கவர்ந்தது. அதில் தன் ஆராய்ச்சி மனதைச் செலுத்தினார். தனது சைமாடிக் அப்ளிகேடர் (cymatic applicator) மூலமாக உலகெங்கும் ஒலியால் இப்போது சிகிச்சை செய்து வருகிறார். ஏராளமான புத்தகங்களையும் எழுதி உள்ளார்.

ஆக, க்ளாட்னியின் ஆராய்ச்சி ஹான்ஸ் ஜென்னியைக் கவர்ந்து ஒரு புதிய ஒலி இயலையே உருவாக்க, இன்றைய நவீன விஞ்ஞானிகள் அதை ஆராய்ந்து வருகின்றனர்.

வேத மந்திரங்களின் ஒலி ரகசியத்தை ஆராயப் புகுந்துள்ள விஞ்ஞானிகள் இன்னும் எத்தனை பௌதிக ரகசியங்களைக் கண்டுபிடிக்கப் போகிறார்களோ?!

காலம்தான் பதில் சொல்லும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top