கலையும் கலை சார்ந்த வாழ்வும்
கி. பி. 250 – 900 காலத்தின் சிதிலம் அடைந்த கட்டடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். எகிப்தின் பிரமிட் போன்ற கட்டடங்கள், மன்னர்களின் அரண்மனைகள், கோவில்கள் ஆகியவை மிகுந்த கலைநயத்தோடு விளங்குகின்றன. குறிப்பாக மனித வடிவங்கள் மிகவும் துல்லியமாகப் படைக்கப்பட்டுள்ளன.
மாயர்கள் காலத்தில் மாடுகள், குதிரைகள் போன்ற உழைப்புக்குப் பயன்படும் மிருகங்கள் இருந்ததாக ஆதாரங்கள் இல்லை. அதனால், மனித முயற்சியும் உழைப்புமே இந்தக் கட்டடங்களை உருவாக்கப் பயன்பட்டன. கருங்கல், தண்ணீர் கலந்த சுண்ணாம்பு ஆகிய பொருட்கள்தாம் கட்டட மூலப்பொருட்கள்.
அரண்மனைகள் நகரங்களின் மையப்புறத்தில் இருந்தன. இவை பல மாடிக் கட்டடங்கள். ஏராளமான அறைகள் கொண்டவை. மன்னர், பிரபுக்கள் என தங்குபவர்களின் சமுதாய அந்தஸ்துக்கு ஏற்ப, அறைகளின் எண்ணிக்கைகள், வசதிகள், கலை நயங்கள் ஆகியவை இருந்தன.
மாயர்கள் அற்புதமான சிற்பங்களைக் கல்லிலும் மண்ணிலும் படைத்தார்கள். வகை வகையான வடிவ மண் பாண்டங்கள், பீங்கான் பாத்திரங்களின் மேல் தீட்டப்பட்ட ஓவியங்கள் ஆகியவை ரசிகர்களைப் பிரமிக்க வைக்கின்றன. மரப் பட்டைகளில், கடவுள்கள், இயற்கைக் காட்சிகள், மிருகங்கள். பறவைகள் ஆகிய ஓவியம் வரைவது மிகப் பிரபலமாக இருந்தது.
தங்கம், வெள்ளி, செம்பு, பவழங்கள், ரத்தினங்கள் போன்ற இயற்கைச் செல்வங்கள் அவர்களிடம் இல்லை. ஆனால், தங்கத்தில் அவர்கள் ஆலய மணிகளையும் கடவுள்கள் வடிவ முகமூடிகளையும் உருவாக்கினார்கள்.
ஜேட் (என்கிற பச்சை மணிக்கல்லால் செய்த காதணிகள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்திருக்கின்றன. இவை பெரும்பாலும் கடவுள்கள், மிருகங்கள் ஆகிய உருவங்களைத் தாங்கி இருக்கின்றன.
மாயர்களின் மத நம்பிக்கைகள்
மாயர்களின் வாழ்க்கையில் கடவுள்கள் மிக மிக முக்கியமானவர்கள். சாக்லெட்டுக்கு ஒரு கடவுள், சோளத்துக்கு ஒரு சாமி. மழை, காற்று, வானம், பிறப்பு, மரணம், கல்வி, சூரியன், சந்திரன், அன்பு, வியாபாரம், பாதாள உலகம் என எல்லாவற்றுக்கும் கடவுள்கள்!
மரணக் கடவுள் பெயர் ஆ புக் (Ah Puch). இடிக் கடவுள் பேக்காப் (Becab). நாலு பேக்காப்கள் பிரபஞ்சத்தின் நான்கு மூலைகளையும் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது மாய ஐதீகம்.
சாக் (Chaac) மாயர்களின் வருண பகவானான மழை தெய்வம். காமஸோட்ஸ் (Camazotz) என்பவர் வௌவால் சாமி. தற்கொலை செய்பவர்களைக் காப்பாற்றும் கடவுள் இக்ஸ்டாப் (Ixtab) ஸிப்கானா (Zipcana) பாதாள உலக பூதம்.
மாயர்களுக்கு 166 கடவுள்கள் இருந்ததாக ஆதாரங்கள் சொல்கின்றன.
மாயர்களின் கடவுள் நம்பிக்கை மிக ஆழமானது. கடவுள்கள்மேல் வைத்திருந்த பக்தியின் சின்னங்களாக அவர்கள் பிரம்மாண்டமான கோயில்கள் கட்டினார்கள். இந்தக் கோயில்கள் பிரமிட்களின் உச்சியில் இருந்தன.
எகிப்து பிரமிட்கள் உலகப் புகழ் பெற்றவை. பிரமிட் என்றால் கூம்பு வடிவம். அடிப்பகுதி நீண்ட சதுரமாக இருக்கும். நான்கு சரிவான முக்கோணப் பகுதிகள் உச்சியில் ஒன்றாக இணையும். மாயர்களின் பிரமிட்கள் இதே வடிவக் கட்டடங்கள்தாம்.
உச்சியில் இருக்கும் கோயில்களுக்குப் போக, பிரமிட்களின் பக்கப் பகுதிகளில் படி வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. கோயில்களை அழகிய சிற்ப வேலைகள் செய்யப்பட்ட கற்களால் கட்டினார்கள். தரையில் ஓவிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டன. சுவரிலும் ஓவியங்கள்!
கோயில்கள் மதச் சடங்குகளுக்கும், மக்கள் ஒன்றுகூடிக் கொண்டாடும் சமுதாய
விழாக்களுக்கும் பயன்பட்டன. எனவே கோயில்களுக்கு மாய நாகரிகத்தில் மிக முக்கிய இடம் உண்டு.
கோயில் பூசாரிகளுக்கு சமுதாயத்தில் மிக உயர்ந்த மதிப்பு இருந்தது. அவர்கள் அறிவில் சிறந்தவர்களாக விளங்கினார்கள். கணிதம், வானியல் ஆகிய துறைகளில் அவர்களுக்கு மிகுந்த புலமை இருந்தது.
காலண்டர் கண்டுபிடித்த மாயர்களுக்கு நல்ல நாள், கெட்ட நாள் என நாள் பார்ப்பதில் அதிக நம்பிக்கை. வருடத்தில் ஐந்து நாட்கள் அதிர்ஷ்டம் கெட்ட நாட்கள். அந்த நாட்களில் ஒரு நல்ல காரியமும் தொடங்க மாட்டார்கள். பூசாரிகள்தான் நல்ல நாள், கெட்ட நாள் குறித்துக் கொடுப்பார்கள்.
மாயக் கோவில்களில் பலி கொடுப்பது வழக்கம். மனித பலி சாதாரணமாக இருந்தது.
கைதிகள், அடிமைகள், குழந்தைகள் ஆகியோரைப் பலி கொடுத்தால், ஆண்டவன் மிக்க மகிழ்ச்சி கொள்வார் என்று மாயர்கள் நம்பினார்கள். மன்னர் குடும்பத்தில் வாரிசு பிறக்கும் நாட்களிலும் மன்னர் பதவி ஏற்கும் தினங்களிலும் மனித பலி கொடுத்தேயாக வேண்டும். அப்போதுதான் ஆண்டவன் அவர்களையும் நாட்டையும் பத்திரமாகக் காப்பாற்றுவார்.
இந்தப் பலிகள் இரவு நேரங்களில், மைதானம் போன்ற பெரிய திறந்த வெளிகளில் நடக்கும். மக்கள் பெரும் கூட்டமாகக் கூடி இவற்றைப் பார்த்து ரசிப்பார்கள். பலர் தீப்பந்தங்கள் கொண்டு வருவார்கள், சங்கு ஊதுவார்கள். ஒரே கோலாகலக் கொண்டாட்டம் நடக்கும்.
மாயர்களின் நாகரிகத்தில் அவர்களுடைய இறுதிச் சடங்குகள் முக்கிய இடம் பிடித்தன. மரணம் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சிதான், இறப்பவர்களில் பெரும்பாலோனோர் மறுபடி பிறப்பார்கள் என்று நம்பினார்கள்.
உலகத்தில் நல்ல காரியங்கள் செய்பவர்கள், நாட்டுக்காக உழைப்பவர்கள், போர் வீரர்கள், பிறக்கும்போது இறக்கும் குழந்தைகள் ஆகியோர் மறு பிறவிகள் இல்லாமல் நேரடியாக சொர்க்க உலகம் போவார்கள் என்பது மாயர்களின் சித்தாந்தம். இந்த நம்பிக்கைகள் நம் இந்து மதத்தின் பிறப்பு-இறப்பு தத்துவங்கள் போலவேதான்.
ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் இந்து, மாய நம்பிக்கைகள் மாறுபடுகின்றன. தற்கொலை செய்து கொள்பவர்கள் பேய்களாக வேப்ப மர உச்சியில் வசிப்பார்கள், உலகத்தைச் சுற்றுவார்கள், மனிதர்களுக்குத் துன்பங்கள் தரும் வில்லன்கள் என்கிறது இந்து மதம். மாயர்களோ, தற்கொலை செய்து கொள்பவர்கள் மரணத்துக்குப் பின் நேராக சொர்க்கம் போகும் அதிர்ஷ்டசாலிகள்.
மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும் என்றும் மாயர்களுக்குத் தெளிவான எண்ணம் இருந்தது. சாதாரண மக்கள் மரணத்துக்குப்பின் பாதாள உலகம் போவார்கள். பணக்காரர்களும் பிரபுக்களும் சொர்க்கம் போவார்கள்.
வாழ்க்கையில் பாவம் செய்தால், கெட்டவர்களாக வாழ்ந்தால், அதற்குரிய தண்டனை மரணத்துக்குப் பின் கிடைத்தே தீரும். ஊருக்கு உழைக்கும் உத்தமர்களுக்கு மறு பிறவி கிடையாது. அவர்கள் மனித நிலையில் இருந்து கடவுள்கள் ஆவார்கள். இறந்தவர்களுக்கு மரியாதைகள், படையல்கள் செய்து அவர்களின் ஆவிகளை சந்தோஷமாக வைத்திருக்கப் பல சடங்குகள் வைத்திருந்தார்கள்.
மாயர்களின் இறுதிச் சடங்குகளிலும் நம் ஊர் சம்பிரதாயங்கள்போல் பல நடைமுறைகள் உள்ளன. நம் ஊரில் மரணம் அடைந்தவர்களின் வாயில் அரிசி போடுவார்கள். அவர்கள் சொர்க்கம் அல்லது நரகம் போவதுவரை அவர்களுடைய பசி தீர்க்க இந்த அரிசி உதவும் என்பது நம் நம்பிக்கை.
மாயர்களும் இப்படித்தான். இறந்தவர்களின் வாயில் அவர்கள் ஊர் “அரிசி”யான சோளம் போட்டார்கள். மாயர்களைப் பொறுத்தவரை சோளம் வாழ்க்கையின் அடையாளம். சோளத்தோடு மறு உலகம் போனால் இறந்தவர்களின் மறுபிறவி வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
அமரர் ஆனவர்கள் மேல் உலகம் போக வழிச் செலவுக்குப் பணம் வேண்டுமே?
ஜேட் போன்ற விலை உயர்ந்த மாணிக்கக் கற்களும் அவர்களுடைய உடல்கள்மீது வைக்கப்பட்டன
இன்னொரு வினோதப் பழக்கமும் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட விசில் மறைந்தவர்கள் உடல்களோடு வைக்கப்பட்டது. இவை கடவுள்கள், மிருகங்கள் ஆகிய வடிவங்களில் இருந்தன. இந்த விசில்கள் உயிர் இழந்தவர்களைப் பத்திரமாக மேல் உலகம் கொண்டு சேர்க்கும் என்று நம்பினார்கள்.
சிவப்பு நிறம் பிறப்பு, மறு பிறவி ஆகியவற்றோடு தொடர்பு கொண்ட நிறமாகக் கருதப்பட்டது. உடலின் மேல் குங்குமம் போன்ற சின்னபார் என்ற சிவப்பு நிறத் தூள் தாராளமாகத் தூவப்பட்டது. இது ஒரு தாதுப் பொருள்.
உடல்கள் புதைக்கப்பட்டு கல்லறைகளும் அவற்றின்மேல் கோவில்களும் கட்டப்பட்டன. இந்த பந்தாக்கள் எல்லாம் கடவுள்களுக்கும் பணக்காரர்களுக்கும்தான். ஏழைகளை வெறுமனே புதைப்பதோடு சரி.
சில கல்லறைகளின் மேல் பிரமிட் போன்ற கட்டடங்கள் எழுப்பப்பட்டன. சில பிரமிட்களுக்கு 13 படிகள். சொர்க்கத்தில் 13 வகை உலகங்கள் இருப்பதாக மாயர்கள் நம்பியதன் பிரதிபலிப்பு இது. மற்றும் சில பிரமிட்களில் ஒன்பது படிகள் மட்டுமே. பாதாள உலகத்தில் ஒன்பது வகை உலகங்கள் இருப்பதாக அவர்கள் நம்பியது இதற்குக் காரணம்.
கல்லறைகளில் அழகிய பீங்கான் கைவினைப் பொருட்கள், ஜேட் ஆபரணங்கள், முகமூடிகள் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் மறைந்தவரின் உடலோடு சேர்த்துப் புதைப்பது வழக்கம். சில சமயம், மறைந்தவரின் வேலைக்காரர்களையும் தங்கள் எஜமானர்களோடு சேர்த்துப் “பரலோகம்: அனுப்புவதுண்டு.
காடுகளில் பிசாசுகள் இருக்கும் என்ற நம்பிக்கையும் பயமும் மாயர்களுக்கு உண்டு, அவற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பல வகையான தாயத்துகளை அவர்கள் அணிந்தார்கள்.
தொடரும்…