உழுவதற்கான ஏர், நீர்ப்பாசன முறைகள், செங்கல், வளைவுகள், நகரமைப்புத் திட்டங்கள் போன்ற மனித குல முன்னேற்றத்தை விரைவாக்கிய ஏராளமான கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள் சுமேரியர்கள். இரும்பு, செம்பு, வெண்கலம் ஆகிய உலோகங்களைத் தயாரிக்கும் அறிவியல் முறை சுமேரியர்களுக்குப் பழக்கமானதாக இருந்தது.
இந்த உலோகங்களால் விவசாயக் கருவிகள். வாள், ஈட்டி போன்ற யுத்த ஆயுதங்கள் தயாரித்தார்கள்.
கட்டடக் கலை, பொறியியல், வானியல், கணிதம் போன்ற பல்வேறு துறைகளில் சுமேரியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்த்திய சாதனைகள் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.
கட்டடக் கலை – வீடுகள்
விவசாயம் கல்லாவை நிரப்பியது. இந்த வருமானத்தால், சுமேரியர்கள் வசதியான வாழ்க்கை நடத்த முடிந்தது. களிமண்ணைப் பாளம் பாளமாகச் செய்து வெயிலில் காய வைத்து செங்கற்களால் வீடுகள் கட்டினார்கள். இவை சாதாரண வீடுகள் அல்ல. இரண்டு அல்லது மூன்று அறைகள் கொண்டவை. தங்கள் வசதிக்கும் தேவைகளுக்கும் ஏற்ப பலர் மாடி வீடுகள், பரந்து விரிந்த பங்களாக்கள் என வகை வகையாய்க் கட்டினார்கள். எல்லா வீடுகளின் நடுப்புறத்திலும் பெரிய முற்றம் இருக்கும். அறைகள் முற்றத்தை மையமாக வைத்துக் கட்டப்பட்டன. இதனால், வீடு வெயிலின் கடுமையால் பாதிக்கப்படாமல், குளிர்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை. இது அறிவியல் ரீதியான உண்மைதான் என்று இன்றைய சுற்றுப்புறச் சூழல் அறிஞர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்.
எல்லா வீடுகளும் குழாய்கள் மூலம் குடிநீர் பெறும் வசதி கொண்டவை. வீடுகளில் உலோகங்களாலான சமையல் பாத்திரங்கள் பயன்படுத்தினார்கள். பண்டமாற்று முறையில் இறக்குமதி செய்த மர வகைகளால் செய்யப்பட்ட நாற்காலிகள், மேசைகள், தட்டு முட்டுச் சாமான்கள் இருந்தன.
கட்டடக் கலை – அரண்மனைகள்
சாமானியர்கள் வாழும் வீடுகளிலேயே இத்தனை வசதிகள் என்றால், மன்னர்கள் வாழும் அரண்மனைகள் எப்படி இருக்கும்? பரந்த நிலப்பரப்புகளில் உயர்ந்து நின்ற படாடோபப் படைப்புகள் அவை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில், காஃபாஜா (Khafajah), டெல் அஸ்மார் (Tel Asmar) ஆகிய இரண்டு இடங்களிலும் கட்டப்பட்டிருந்த அரண்மனைகள் பிரம்மாண்டமானவை. ஓவியங்கள், கலைப் பொருட்கள் ஆகியவற்றால் அற்புதமாக அவை அலங்கரிக்கப்பட்டிருந்தன.
உர் (Ur), மாரி (Mari) ஆகிய நகரங்களில் நடந்த அகழ்வாராய்ச்சி தந்திருக்கும் சிதிலங்கள், அரண்மனைகளின் சிறப்புகளுக்குச் சான்றுகள்.
பிற்காலங்களில், பிற நாடுகளில் எழுந்த மன்னர்களின் உறைவிடங்களுக்கும், சுமேரிய அரண்மனைகளுக்குமிடையே மிகப் பெரிய வித்தியாசம் உண்டு. சுமேரிய அரண்மனைகளில் அரசர்களும், அவர்கள் குடும்பமும் மட்டும் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. இந்த வளாகத்தில், கட்டடப் பரமரிப்பாளர்கள், தச்சர்கள், கொத்தனார்கள், நீர்க்குழாய் பழுது பார்ப்பவர்கள், சிற்பிகள், ஓவியர்கள் ஆகியோரும் குடும்பத்துடன் தங்குவதற்கான வீடுகளை அரசர்கள் அளித்தார்கள். பட்டறைகள், உணவகங்கள், பொதுப் பொழுதுபோக்கு இடங்கள், அரங்கங்கள், கோவில்கள், இடுகாடுகள், ஆகியவையும் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தத்தில், அரண்மனை வளாகம் ஒரு வசதிகள் நிறைந்த நகரம்!
வாசல் கதவுகளிலும், முக்கிய கதவுகள் அருகிலும், பிரம்மாண்டமான கடவுள் சிலைகள் நிறுவப்பட்டன. உட்புறச் சுவர்கள் வரலாறு, கலை ஆகியவற்றின் பொக்கிஷங்கள். பெரிய கற்பாளங்களில், கலா நிகழ்ச்சிகள், அரச கட்டளைகள், அரசரின் போர் மற்றும் இதர வெற்றிகள் ஆகியவை செதுக்கப்பட்டு, சுவரில் பதிக்கப்பட்டன. அரண்மனையின் ஏராளமான இருக்கைகள் யானைத் தந்தங்களால் செய்யப்பட்டவை. அரியணை கலையம்சம் கொண்டதாக, தங்கம், முத்துகள் பதிக்கப்பட்டு காட்சியளித்தது. அரச சபை அருகே, பெரிய அரங்கம். முக்கிய நாட்களில், பொதுமக்களை மன்னர் இங்கே சந்திப்பார்.
கட்டடக் கலை – நகரங்கள்
மக்கள் கூடி வாழ்ந்த குடியிருப்புகள் நாளடைவில் நகரங்கள் ஆயின. இந்த நகரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு குட்டி ராஜா வந்தார். இப்படி, பல நகரங்களைத் தன்னுள் அடக்கிய நாடாக மெஸப்பொட்டேமியா உருவானது. உர் நகரம்தான் உலகின் பழமையான நகரம். இது தவிர பாபிலோனா, உருக் (Uruk), எரிடு (Eridu), ஸிப்பர் (Sippar), ஷுரூப்பக் (Shuruppak), லார்ஸா (Larsa), நிப்பூர் (Nippur) ஆகியவையும் முக்கிய நகரங்கள்.
நகரங்கள், வீடுகள், கடைகள், பொது இடங்கள் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. வீடுகள், வீதிகள், கடைகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு இடங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என ஒவ்வொன்றும் எங்கெங்கே, எப்படி எப்படி அமையவேண்டும் என்று வரையறுக்கும் தெளிவான சட்டங்கள் இருந்தன. இந்த விதிகளை மன்னர்கூட மீற முடியாது.
கி.மு. 2100 ல் எழுதப்பட்ட கில்காமேஷ் காவியம் உருக் நகரத்தின் ஒவ்வொரு அம்சமும், எவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதைத் தெளிவாகச் சொல்கிறது. எல்லா நகரங்களின் அருகிலும், விவசாய நிலங்கள், சிறு கிராமங்கள், கால்வாய் ஆகியவை கட்டாயமாக இருக்கவேண்டும். குடிநீர்த்தேவை, சாமான்கள் போக்குவரத்து ஆகியவை ஒழுங்காக நடப்பதற்காக இந்த ஏற்பாடு.
கட்டடக் கலை – தெருக்கள்
நகரங்களில், தெருக்கள் ஒழுங்கான வரிசை முறையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன. வரிசை வரிசையாக வீடுகள், அவை முடியும் இடத்தில் பிரம்மாண்டமாகக் கோவில். இந்தக் கோவில்களிலும் வீடுகளிலும் ஏராளமான சிற்பங்கள், வண்ண ஓவியங்கள், விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட உலோக வேலைப்பாடுகள் இருந்தன.
கட்டடக் கலை – பொறியியல்
கட்டக் கலைப் பொறியியலில் arch என்னும் வளைவுகள் மிக நுணுக்கமானவை, பல பிரம்மாண்டக் கட்டடங்கள், அணைகள், பாலங்கள் ஆகியவற்றுக்கு அடிப்படையானவை. இரண்டு தூண்கள் அல்லது தாங்கிகளுக்கு நடுவே இருக்கும் திறந்த இடைவெளியை இணைக்க, சாதாரணமாக, தூண் அல்லது உத்திரம் பயன்படும். வளைவான வடிவமைப்பைச் சுமேரியர்கள் கண்டுபிடித்தார்கள். பிற வடிவமைப்புகளைவிட, ஆர்ச் பன்மடங்கு அதிகமான சுமையைத் தாங்கும். எப்படிக் கண்டுபிடித்திருப்பார்கள் என்னும் கேள்வி, இன்றும் பொறியியல் வல்லுநர்கள் விடை காணாத வியப்புக் கேள்வி.
சக்கரங்கள்
சுழற்சி என்றால் அசைவு, அசைவு என்றால் முன்னேற்றம். சுழற்சியைத் தருபவை சக்கரங்கள். மனிதகுல முனேற்றத்தில், சக்கரம் மிக முக்கியமானது. உராய்வு (friction) இல்லாமல் அசைவை உண்டாக்கச் சக்கரங்கள் அத்தியாவசியம். களிமண்ணால் செங்கற்கள் செய்து அணைகளும், வீடுகளும் செய்த சுமேரியர்கள், அடுத்து மண்பாண்டங்கள் செய்ய ஆரம்பித்தார்கள். முதலில் கைகளால் தயாரித்தார்கள். இயந்திரம் ஒன்று இருந்தால் வேலை சுளுவாகுமே என்று ஒரு சுமேரியன் மனதில் விளக்கு எரிந்தது: குயவர் சக்கரம் (Potter’s Wheel) வேலையை எளிமையாக்கியது, உற்பத்தியைப் பெருக்கியது.
சக்கரங்களை வைத்து, மாடுகள், குதிரைகள் பூட்டிய வண்டிகள் தயாரித்தார்கள். போக்குவரத்து தொடங்கியது. புதுப் புது இடங்களுக்குப் பயணம் செய்வது, புதிய மனிதர்களை சந்திப்பது, அவர்களோடு சமுதாய மற்றும் வியாபாரத் தொடர்புகள் தொடங்குவது. அவர்கள் கலாசாரத்திலிருந்து கற்றுக்கொள்வது என்று நம் மன ஜன்னல்களைத் திறந்துவைப்பதும், விசாலமாக்குவதும், போக்குவரத்துதான். இதைச் சாத்தியமாக்குவது சக்கரங்கள். இந்தச் சக்கரங்களைச் சாத்தியமாக்கியவர்கள் சுமேரியர்கள்.
சக்கரங்கள் இல்லையென்றால், நம் வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும். மாட்டு வண்டியால்தானே சைக்கிள் தோன்றியது, பிற இரட்டை சக்கர வாகனங்கள் வந்தன? கார்கள், விமானங்கள் வந்தன? இவை இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்துகூட நம்மால் பார்க்கமுடியுமா?
குயவர் சக்கரம் நம்மை எவ்வளவு தூரம் முன்னால் கொண்டுவந்திருக்கிறது தெரியுமா? எல்லா இயந்திரங்களின் உயிர்நாடியும் சக்கரங்கள்தாம். Gears எனப்படும் பற்சக்கரங்கள் இல்லாவிட்டால், தொழிற்சாலைகளே கிடையாது.
கணித அறிவு
தீவாக வாழ்ந்த மக்கள் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். சமுதாய வாழ்கையை நெறிப்படுத்த, தங்களுக்குள்ளேயே ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தார்கள். தனி ஆளாக இவரால், நிர்வாகம் செய்ய முடியவில்லை. உதவியாளர்களைத் துணையாகச் சேர்த்துக்கொண்டார். நாள்பட நாள்பட, அரசாங்கம், அதிகாரிகள் என்னும் கட்டமைப்பு உருவானது. நிர்வாகச் செலவுக்குப் பணம் வேண்டுமே? ஒவ்வொரு குடும்பமும், அவர்களிடம் இருந்த நிலங்களுக்கு ஏற்றபடி. ஒரு குறிப்பட்ட தொகையை அரசாங்கத்துக்குச் செலுத்தவேண்டும். வரிகளின் ரிஷிமூலம், நதிமூலம் இதுதான். எல்லோரும் ஒரே அளவு வரி தருவது நியாமல்ல. அதிக அளவு நிலங்களின் உடைமையாளர்கள் அதிக வரி தரவேண்டும், நில அளவுக்கு ஏற்ப வரி என்னும் சிந்தனை தொடங்கியது. நிலங்களின் நீளம், அகலம் அளக்கவேண்டுமே? கணிதம் பயன்படத் தொடங்கியது. மிக அடிப்படை நிலையில் இருந்த கணிதம் மாபெரும் வளர்ச்சிகள் கண்டதற்கு முக்கிய காரணம் வரி!
60 இலக்கங்கள் கொண்ட கணித முறையை சுமேரியர்கள் கண்டுபிடித்தார்கள்.
60 வது இலக்கம் எங்கே என்று தேடுகிறீர்களா? 1, 60 ஆகிய இரண்டு எண்களுக்கும் ஒரே இலக்கம்தான்.
100 என்கிற எண்தானே சாதாரணமாகப் பிரபலமானது? சுமேரியர்கள் ஏன் 60 இலக்கங்கள் கொண்ட கணிதமுறையைப் பயன்படுத்தினார்கள்? காரணம் இருக்கிறது.
நாம் கணிதம் படிக்கத் தொடங்கும்போது, எப்படி எண்ணுகிறோம், கூட்டல், கழித்தல் எப்படிக் கணக்குப் போடுகிறோம்? கை விரல்களால். பத்து விரல்களால். இதனால்தான், உலகின் ஏராளமான கணித முறைகள் 10 என்பதை அடிப்படையாகக்கொண்ட தசாமிச முறையில் (Decimal System) உள்ளன. சுமேரியர்களின் அணுகுமுறை கொஞ்சம் வித்தியாசம். நம் ஒவ்வொரு கையிலும் 5 விரல்கள். நம் கட்டை விரலில் 2 மூட்டுக்களும், மற்ற நான்கு விரல்களிலும் தலா 4 மூட்டுக்களும் உள்ளன. அதாவது ஒரு கையில், மொத்தம் 14 மூட்டுக்கள். சுமேரியர்கள் இவற்றுள் 2 மூட்டுக்களைக் கண்டுபிடிக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, இரு கையில் 12 மூட்டுக்கள்தாம். 12 x 5 என்னும் அடிப்படையில் 60 இலக்கங்கள் கொண்டதாகக் கணித முறையை உருவாக்கினார்கள்.
நிலங்களை அளக்க மட்டுமல்ல, சதுரம், செவ்வகம், வட்டம் என நுணுக்கமான வடிவங்களின் பரப்பளவு காணவும் கணிதத்தைப் பயன்படுத்தும் தேர்ச்சி விரைவிலேயே அவர்களுக்கு வந்தது. ஒரு மணிநேரத்துக்கு 60 நிமிடங்கள் என்னும் கால அளவும், 60 இலக்க அடிப்படையில்தான் வந்திருக்கவேண்டும் என்பது அறிஞர்கள் கணிப்பு.
கணித அறிவு பொதுமக்களிடமும் பரவியிருந்தது. கூட்டல். கழித்தல், ஜியாமெட்ரி, ஆகிய கணக்கு வகைகளில் சாமானியருக்கும் தேர்ச்சி இருந்தது. பல கணிதச் சூத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அன்றாட வாழ்க்கையிலும், கட்டக் கலையிலும் மக்கள் இந்தச் சூத்திரங்களைப் பயன்படுத்தினார்கள்.
தொடரும்…