Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » பண்டைய நாகரிகங்கள் – 7

பண்டைய நாகரிகங்கள் – 7

விவசாயம்

சுமேரியாவின் உயிர்நாடியே, யூப்ரேடீஸ், டைக்ரிஸ் நதிகள்தாம். எனவே, வாழ்க்கை விவசாயத்தை மையமாகக்கொண்டு சுழன்றது. வசந்த காலங்களில் இந்த இரண்டு ஆறுகளும் கரை புரண்டு ஓடும். நீரின் அளவும் வேகமும் அக்கம்பக்கக் குடிசைகளையே மூழ்கடிக்கும். பருவகாலம் முடிந்தபின், தண்ணீரைத் தேடித் தேடி அலையவேண்டும். சுமேரியர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழவைக்கும் தீர்வு கண்டார்கள்.

வெள்ளம் வடியும்போது, மணல்மேடுகள் உருவாகும். சுமேரியர்கள் இந்த மேடுகளால், தண்ணீரைத் தடுத்து நிறுத்தி சேமிக்கும் பாதுகாப்புச் சுவர்களை உருவாக்கினார்கள். மழைக் காலங்களில், வெள்ளத்தின் ஒரு பகுதியை இந்த அணைகள் சேமித்து வைக்கும். மழைக்காலம் முடிந்தபின், இந்த மணல் படுகையில் துவாரங்கள் போடுவார்கள். சிறிய கால்வாய்கள் மூலமாக, தண்ணீரை விளைநிலங்களுக்குக் கொண்டுபோவார்கள். அணைகள் மூலமாக நீர் சேமித்தல், கால்வாய்கள் வழியாக நிலங்களுக்கு விநியோகம் ஆகியவை அடங்கிய நீர்ப்பாசனம் மனிதகுல வரலாற்றில் முக்கிய மைல்கல். இது முழுக்க முழுக்க சுமேரியர்கள் கி.மு. 6000 அளவில் நமக்குத் தந்த மாபெரும் அன்பளிப்பு!

மணல் அணைகளின் ஆயுட்காலம் குறுகியது என்பது விரைவில் தெரிந்தது. வெள்ளம் அதிக வேகமாக வந்தால் அணைகள் காணாமல் போயின. அதிக நாட்கள் நீடிக்கும் அணைகள் கட்டுவது எப்படி? சுமேரியாவில் கற்பாறைகளோ, மரங்களோ அதிகமில்லை. ஆற்றில் களிமண் கிடைத்தது. ஒட்டிக்கொள்ளும் தன்மைகொண்ட களிமண்ணால் அணை கட்டலாமே என்றான் ஒருவன்: ஆற்றோரம் ஏராளமாக நாணலும், கோரைப்புல்லும் வளர்கிறதே, அவற்றைக் களிமண்ணோடு சேர்த்துப் பிசைந்தால், ஒருவேளை அணையின் பலம் கூடுமோ என்றான் இன்னொருவன். பல சிந்தனைகளை ஆக்கபூர்வமாக ஒன்றிணைத்தார்கள். நாணலையும் கோரைப்புல்லையும் களிமண்ணோடு சேர்த்துக் குழைத்து அணைகள் கட்டினார்கள். உறுதியாக, கம்பீரமாக அணைகள் உயர்ந்து நின்றன.

நாள்கள் ஒடின. தயாராக இருந்த களிமண்ணை ஏதோ காரணங்களால், அவர்கள் பயன்படுத்தவில்லை. கொளுத்தும் வெய்யிலில் அது காய்ந்தது. சில நாள்களுக்குப் பின் மண்ணை எடுத்தார்கள். உடைக்கவே முடியவில்லை. அத்தனை உறுதி. உடனே களிமண்ணை எடுத்து, நாணல், கோரம்புல்லோடு சேர்த்துக் குழைத்தார்கள். சிறு சிறு வடிவங்களாக மாற்றினார்கள்.  (இன்று செங்கல் என்று நாம் அழைக்கும் வடிவங்களில்). வெய்யிலில் காயவைத்தார்கள். பிறகு இவற்றைக் கொண்டு அணை கட்டினார்கள்.

இந்த அணைகள் காலம் காலமாக இயற்கையின் சீற்றங்களைத் தாங்கி நின்றன. விவசாயத்துக்காகத் தொடங்கிய முயற்சி கட்டடக் கலையில் புதிய பரிமாணம் தோன்றவைத்தது. வெய்யிலுக்குப் பதில் நெருப்பு வெப்பத்தில் சூளைகளில் சுட வைத்ததும், செங்கல்கள் தோன்றியதும், அவற்றால் வீடுகள் கட்டியதும், இந்த வளர்ச்சியில் ஒரு கிளைக் கதை.

ஆரம்ப காலங்களில், குறுகிய நீர்ப்பாசன வசதிகளால், குறைந்த அளவு நிலப்பரப்பில் மட்டுமே பயிர் செய்தார்கள். அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் மட்டுமே உழைத்தார்கள். கால்வாய்கள் வந்தபின், அதிகப்பட்ட நிலப்பரப்பில் பயிரிட முடிந்தது. ஒரே ஒரு பிரச்னைதான். ஆள் தட்டுப்பாடு. எப்போதும், தேவைகள்தாம் தீர்வுகளின் காரணங்கள். மாடுகள், குதிரைகள் ஆகிய மிருகங்கள் களத்தில் இறக்கப்பட்டன. அடுத்தபடியாக, இயந்திரங்கள் புழக்கத்துக்கு வந்தன. நிலம் உழும் ஏர் கண்டுபிடித்தவர்கள் சுமேரியர்கள்தாம்.

பாசன வசதிகள் பல முக்கிய சமுதாய மாற்றங்களுக்கு வித்திட்டன. குடும்ப அங்கத்தினர்களோடு, அக்கம் பக்கத்தாரும் அடுத்தவர் நிலங்களில் உழைக்கத் தொடங்கினார்கள். முதலாளி – தொழிலாளி சித்தாந்தம் ஆரம்பித்தது. இத்தோடு, தனிமனிதத் தொடர்புகளும், உறவுகளும் குடும்ப எல்லைகளைத் தாண்டி வளர்ந்தன. தனிமரங்கள் தோப்பாயின. மக்கள் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். தனியாகச் சிதறிக் கிடந்த வீடுகள் கிராமங்களாயின. சமுதாய வாழ்க்கை தொடங்கியது.

சுமேரியர்கள் கோதுமை, பார்லி, எள், ஈச்சை, ஆளிவிதைச் செடிகள் (Flax)*, பல்வேறு காய்கறிகள் ஆகியவற்றைப் பயிரிட்டார்கள். பொன் விளையும் பூமி. அமோகமான விளைச்சல். தேவைக்கு அதிகமான தயாரிப்புகளைக் களிமண்ணால் கட்டிய கிடங்குகளில் சேமித்தார்கள்.

(* இவை குறுஞ்செடிகள். இவற்றின் இழைகள் ஆடைகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இவற்றின் விதைகளிலிருந்து ஆழிவிதை நெய் (Linseed Oil) எடுக்கிறார்கள். உணவுகளிலும், லினோலியம் (Linoleum) என்னும் மேற்பரப்புத் தரை (Floor Covering) தயாரிக்கவும் இந்த நெய் பயன்படுத்தப்படுகிறது.

தொழில்கள்

விவசாயம்தான் முக்கியத் தொழிலாக இருந்தது. ஏர் மற்றும் விவசாயக் கருவிகள் தயாரிப்பிலும் பலர் ஈடுபட்டிருந்தார்கள். விவசாய வளம் வியாபார வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. சுமேரியாவில் இயற்கை வளங்கள் குறைவாக இருந்தன. கல், மரம் போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கே அண்டை நாடுகளை நம்பியிருக்கவேண்டும். அதே சமயம், விவசாயத்தில் உற்பத்தி பெருகியது. வியாபாரிகளுக்கு இது அற்புத வாய்ப்பு.

கோதுமை, பார்லி ஆகியவற்றைப் பக்கத்து நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தார்கள். பண்டமாற்று முறை மூலமாக, தங்கள் நாட்டுக்குத் தேவையான பொருள்களைத் தாயகத்துக்குக் கொண்டுவந்தார்கள். யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகள் வழியாக இந்தச் சரக்குப் போக்குவரத்து நடந்தது. வெளிநாட்டுப் பயணத்துக்கும், சரக்குகளை அனுப்பவும், வியாபாரிகள் சிறு கப்பல்கள் வைத்திருந்தார்கள். இவை மரம், செடிகொடி, மிருகத்தோல் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டிருந்தன.

ஆடு, மாடுகள் வளர்த்தலும் பிரதானமான தொழில். மந்தைகள் வைத்திருந்தவர்கள் பால், மாமிசம் ஆகியவற்றை வியாபாரம் செய்தார்கள். வீடு கட்டும் கொத்தனார்கள், தச்சர்கள், ஆபரணங்கள் செய்வோர், மண் பாத்திரங்கள் செய்வோர், சிற்பிகள், ஓவியர்கள் எனப் பல்வேறு தொழில் விற்பன்னர்கள் இருந்தார்கள். நாகரிகம் வளர வளர, யுத்த வீரர்கள் , ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், வியாபாரிகள் எனப் புதுப் புது தொழில்கள் மலர்ந்தன.

குடும்பம்

ஆரம்ப காலங்களில். வயதில் மூத்தவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவரே குடும்பத் தலைவராகக் கருதப்பட்டார். நாளடைவில், ஆண்கள் இந்த உரிமையை எடுத்துக்கொண்டார்கள். நாடு ஆணாதிக்கச் சமுதாயமானது.

அரசர்கள், பணக்காரர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள், கோவில் நிர்வாகிகள் ஆகியோரின் ஆண் வாரிசுகள் மட்டுமே கல்வி கற்கலாம். மற்றவர்களுக்கு அவர்கள் பெற்றோர் குலத் தொழில் பயிற்சி கொடுத்தார்கள். வர்ணாசிரம தர்மம் நிலவியது. பெண்கள் அவர்கள் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும் கல்வி நிலையங்களுக்குப் போக அனுமதி கிடையாது. இவர்களுக்கு அவர்களுடைய தாயார் சமையல், வீட்டு வேலைகள் ஆகியவற்றில் பயிற்சி கொடுத்தார்கள்.

ஓர் ஆச்சரியம். இத்தனை அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டன என்றாலும் பெண்களுக்குச் சொத்து உரிமை இருந்தது. மண வாழ்க்கை கசப்பாக இருந்தால், கணவனை விவாகரத்து செய்யும் சுதந்திரமும் இருந்தது. விந்தையான சமுதாயம்தான்!

சுமார் 4000 ஆண்டுகளாக, சுமேரியப் பெண்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இந்தப் பழக்கத்தில் மாற்றம், முன்னேற்றம், கி.மு. 1894 காலகட்டத்தில் வந்தது. பாபிலோன் தனி நாடானது. ஏழை, பணக்காரர் என்னும் பாகுபாடு இல்லாமல் எல்லா ஆண்களுக்கும், எல்லாப் பெண்களுக்கும் கல்வி கற்கும் உரிமையும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.

பொழுதுபோக்குகள்

மன்னர்கள், பணக்காரர்கள் ஆகியோருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு வேட்டையாடுதல். சாதாரண மக்களிடையே குத்துச் சண்டை, மல்யுத்தம் ஆகியவை பிரபலம். மஜோர் (Majore) என்னும் விளையாட்டில், ஆறிலிருந்து அறுபதுவரை எல்லா வயது ஆண்களும் ஈடுபட்டார்கள். ரக்பி போன்ற முரட்டு ஆட்டம் இது. ஒரு வித்தியாசம் – பந்து மரத்தால் செய்யப்பட்டது. வீட்டுக்குள் விளையாடும் Royal Game of Ur  என்னும் விளையாட்டு இருந்தது. சதுரங்கம், தாயக்கட்டம் ஆகியவற்றின் கலவை போன்றது இந்த விளையாட்டு.

திருவிழாக்கள்

ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் இருந்தன. இந்தக் கொண்டாட்டங்களுக்கான நாட்கள் ஏழு அம்சங்களின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன:

  1. பௌர்ணமி, அமாவாசை. புது முயற்சிகளுக்கான சடங்குகள் வளர்பிறையிலும், துர்தேவதைகளைத் திருப்தி செய்யும் பரிகார விழாக்கள் தேய்பிறையிலும் நடத்தப்பட்டன.
  2. சாகுபடிக் காலங்கள்
  3. இரவும், பகலும் சமமான கால அளவாக இருக்கும் சமபங்கு நாட்கள் (Equinoxes)
  4. அயன நாட்கள் (Solstices). சூரியன் பூமியின் நில நடுக்கோட்டிலிருந்து வடக்கே அல்லது தெற்கே மிகத் தொலைவில் இருக்கும் நாட்கள் இவை. உத்தராயணம், தட்சிணாயனம் என்று நம் இந்த நாட்களைச் சொல்லுவோம்.
  5. உள்ளூர் தேவதைகளுக்கு முக்கியமான நாட்கள்.
  6. மன்னர் பிறந்த நாள், அவர் முடிவு செய்யும் பிற நாட்கள்.
  7. யுத்த வெற்றி விழாக்கள்.

இசை

சுமேரியர்கள் இசைப் பிரியர்கள். பெரும்பாலான பாடல்கள் ஆண்டவன் புகழ் பாடுபவை. ஒரு சில, மன்னரை வாழ்த்தியும், வரலாற்றுச் சிறப்பான நிகழ்ச்சிகளைப் போற்றியும் எழுதப்பட்டன. எல்லாமே, ராகத்தோடு பாடப்படுபவை. மன்னர்கள் சபையில் தினமும் இசைக் கச்சேரிகள் உண்டு. சாதாரண வீடுகளிலும், ஆண், பெண், குழந்தைகள் பண்ணோடு பாடுவார்கள். நாளடைவில் பாடலுடன் ஆடலும் இணைந்தது. பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குச் சிறுவயதிலேயே வாய்ப்பாட்டும், நடனமும் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார்கள்.

எத்தனை விதமான இசைக் கருவிகள் இருந்தன என்று தெரியவில்லை. ஔத் (Oud) என்னும் வீணைபோன்ற மீட்டும் இசைக்கருவி கி.மு. 5000 – இலேயே இருந்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

எழுத்துக்கள்

cuneiformகளிமண் பாளங்களில் விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். மிருகங்களின் எலும்புகள் எழுத்தாணிகளாகப் பயன்பட்டன. எழுத்துக்கள் கிடையாதே? ஆடு, மாடு என்று குறிப்பிட அவற்றின் படங்களை வரைந்தார்கள். இது சிரமமான வேலை. எனவே ஒவ்வொரு படத்துக்கும் குறியீடுகள் கண்டுபிடித்தார்கள். ஒரு வட்டம் போட்டு அதன் பக்கத்தில் நான்கு கோடு, இரண்டு புள்ளி வைத்தால் அதுதான் மாடு. ஆடு, பூனை, வீடு, கோவில், ஆண், பெண், என இப்படி ஒவ்வொரு குறியீடு.

மத விஷயங்கள், கணக்கு வழக்குகள், எல்லாமே பதிவு செய்யப்பட்டன. காகிதங்களைத் தொகுத்து ஃபைல் செய்வதுபோல் இந்தக் களிமண் பாளங்களைச் சேர்த்து அடுக்கியிருக்கிறார்கள். பின்னாளில் இந்த எழுத்துகளைப் புரிந்துகொண்டு படித்து, திரட்டப்பட்டவைதாம் பைபிளில் வரும் பல சம்பவங்கள்.

எழுத்துகளில் பல வட்டங்கள், வளைவுகள் இருந்தன. இவற்றைக் களிமண்ணில்
கொண்டுவருவது சிரமமாக இருந்தது. எனவே, கி.மு. நான்காம் நுற்றாண்டில் வட்டங்கள், வளைவுகளுக்குப் பதிலாக முக்கோண வடிவ எழுத்துக்களைக் கண்டுபிடித்தார்கள். உண்மையில் இவை முக்கோண வடிவம் அல்ல, உளி வடிவம். அதனால், இந்த எழுத்து வடிவத்துக்கு உளி வடிவ எழுத்துக்கள் என்று பொருள்படும் க்யூனிஃபார்ம் (Cuneiform) என்று பெயர் சூட்டினார்கள்.

cuneiform2களிமண்ணில் சிறிய பொம்மைகள்போல் இந்த வடிவங்களைச் (எழுத்துகள்) செய்து வைத்திருந்தார்கள். கருத்துப் பரிமாற்றத்துக்கு இந்த வடிவங்களைப் பயன்படுத்தினார்கள். அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கி.மு. 2600ன் களிமண் பாளம் ஒன்று, பல்வேறு க்யூனிஃபார்ம் எழுத்துகளைக் காட்டுகிறது.

இலக்கியம் 

கி.மு. 1894 ல் வந்த பாபிலோன் சாம்ராஜ்ஜியத்தில்தான் இலக்கணமும் இலக்கியமும் புது மலர்ச்சி பெற்றன. அகர வரிசை (Alphabets), இலக்கண விதிகள் ஆகியவை தொகுக்கப்பட்டன. ஏராளமான இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்பட்டாலும், நமக்குக் கிடைத்திருப்பது கில்காமேஷ் காவியம் மட்டும்தான்.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top