நாகரிகம் – நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. அதே சமயம், அதன் முழுமையான அர்த்தம் அல்லது உண்மையான அர்த்தம் நமக்கு தெரியாது.
வரலாற்று அறிஞர்கள், அகழ்வாராய்ச்சி அறிஞர்கள் ஆகியோரையே திணற அடிக்கும் வார்த்தை இது. நாகரிகத்தை ஆங்கிலத்தில் Civilisation என்று சொல்கிறோம். Civilis என்னும் லத்தீன் வார்த்தை ஆங்கிலச் சொல்லின் அடிப்படை. Civilis என்றால், குடிமகன், நகரம். இந்த அடிப்படையில், மனிதன் சமுதாயமாக வாழ ஆரம்பித்ததுதான் நாகரிகத் தொடக்கம் என்று சிலர் சொல்கிறார்கள். லத்தீன் மிகப் புராதனமான மொழிதான். ஆனால், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்த மொழி அல்ல. மனித நாகரிகம் லத்தீன் மொழியைவிட முந்தையது. பின்னால் பிறந்த அளவுகோலால், முந்தைய வளர்ச்சியை அளப்பது தவறு. ஆகவே, இன்னும் சில வர்ணனைகளைப் பார்ப்போம்.
ஸ்காட்லாந்தின் தத்துவ மேதையும், வரலாற்று நிபுணருமான ஆடம் ஃபெர்கூஸன் (Adam Ferguson) 1767ல் எழுதிய An Essay on the History of Civil Society என்னும் புத்தகத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார். நாகரிகம் என்றால், ‘தனிமனிதன் குழந்தைப் பருவத்திலிருந்து மனிதத் தன்மை உடையவனாக வளர்ச்சியடைவது மட்டுமல்ல, மனித இனமே, முரட்டுத்தனத்திலிருந்து பண்பாட்டுக்கு முன்னேறுவது.’
மருத்துவம், மதம், தத்துவம் ஆகிய பல துறைகளில் அழியாக் கால்தடம் பதித்த ஜெர்மன் அறிஞர் ஆல்பர்ட் ஸ்விட்சர் (Albert Schweitzer) இன்னும் அற்புதமாக வர்ணிக்கிறார். நாகரிகம் என்பது ‘எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும், எந்தச் செயல்கள் மனித ஆன்மாவைச் செம்மைப்படுத்துகின்றனவோ, அவற்றின் ஒட்டுமொத்த முன்னேற்றம்.’
அமெரிக்கக் கார்னெல் பல்கலைக் கழகப் பௌதீகப் பேராசிரியர் ஸ்டீஃபன் ப்ளாஹா (Stephen Blaha) நாகரிகத்தை இப்படி வரையறுக்கிறார். ‘ஒரே வாழ்க்கைமுறை, ஒரே மொழி கொண்டு ஒரே பூகோளப் பிரதேசத்தில் குறைந்தது பல ஆயிரம்பேர் சேர்ந்து வாழவேண்டும். அங்கே நினைவுச் சின்னக் கட்டடங்களும், அரசியல் கட்டமைப்பும் இருக்கவேண்டும்.’
மேற்படி அறிஞர்கள் அளித்த விளக்கங்களை மட்டுமே வைத்து நாகரிகத்தைப் புரிந்துகொண்டுவிடமுடியாது என்று வேறு சிலர் வாதிட்டனர். நாகரிகம் என்பது என்ன என்பதற்குத் தெளிவான அளவுகோல்கள் தேவை என்பது இவர்கள் வாதம். வெறும் தத்துவார்த்த விளக்கங்களை மட்டும் வைத்துக்கொண்டு நாகரிகத்தை எடைபோடமுடியாது என்று அவர்கள் வேறு சில திட்டவட்டமான அளவுகோல்களை முன்வைக்க முனைந்தனர்.
1. மனிதகுலம் வேட்டையாடத் தொடங்கிய காலம்
வேட்டையாடத் தொடங்கியபிறகுதான், மனிதன் கல், வெண்கலம், இரும்பு என்று ஒவ்வோரு வகையான ஆயுதங்களைக் கண்டுபிடித்தான். இவற்றின் உதவியோடு விவசாயத்தில் இறங்கினான். உபரி உற்பத்தி மனிதன் பிறரோடு இணந்து வாழும் சமுதாய வாழ்க்கைக்கு அடிகோலியது. ஆட்சி முறை, சட்டத் திட்டங்கள், சமுதாய நெறிகள் ஆகியவை உருவாயின. ஆகவே, நாகரிகத்தின் தொடக்கப் புள்ளி வேட்டையாடுதல்தான்.
2. சமுதாய வாழ்க்கை
இதன் ஆதரவாளர்கள் கணிப்புப்படி, வேட்டையாடத் தொடங்கிய காலம்வரை பின்னோக்கிப் போக வேண்டியதில்லை. இந்த அணுகுமுறை நம்மைக் கற்காலத்துக்கே கூட்டிகொண்டுபோய்விடும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று மனித குலம் உணர்ந்த நாள்தான், நாகரிகத்தின் பிறப்பு. அப்போதுதான், மனிதர்கள் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்தார்கள், அவன் வழி நடந்தார்கள். தொழில் அடிப்படையிலான சமுதாயப் பிரிவுகள் வந்தன. ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் தொழிலில் கவனத்தை ஒருமுகப்படுத்தினார்கள். விவசாயம், வீடு கட்டுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், வியாபாரம் எனப் பல துறைகளில் வளர்ச்சியும், முன்னேற்றமும் வந்தன. ஆகவே, நாகரிக வளர்ச்சியை எடைபோடச் சிறந்த அடையாளம், மனிதர்கள் எப்போது கூடி வாழத் தொடங்கினார்கள் என்பதுதான்.
3. நகர வாழ்க்கை
இவர்கள் போவது இன்னும் ஒரு படி முன்னால். நகரங்கள் வந்தபிறகுதான் நாகரிகம் வந்தது என்னும் இவர்கள் வாதம், லத்தீன் வார்த்தையான Civilis -ன் அடிப்படையிலானது.
4. எழுத்துவடிவ மொழி
சுமேரியாவில் கி.மு. 4000ல் க்யூனிபார்ம் என்னும் சித்திர எழுத்து வந்தது. கி.மு. 3500ல் எகிப்திலும், கி.மு. 1600ல் இஸ்ரேல், லெபனான் பகுதிகளிலும் அகரவரிசை எழுத்து மொழியும் நடைமுறைக்கு வந்தன. மனிதன் தன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வழி வகுத்தது எழுத்து வடிவ மொழிதான், எனவே, எழுத்துவடிவ மொழிதான் நாகரிகத் தொடக்கம் என்பது இவர்கள் வாதம்.
இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்த கோர்டன் சைல்ட் (Gordon Childe) என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் பத்து அளவுகோல்களை முடிவு செய்தார். இவற்றின் அடிப்படையில்தான் நாகரிகங்களை அளக்கவும், ஒப்பிடவும் வேண்டும் என்று கூறினார். அவர் குறிப்பிடும் அம்சங்கள் இவைதாம்:
- நகரக் குடியிருப்புகள்
- தேர்ந்தெடுத்த சில தொழில்களில் தொழிலாளர்கள் வித்தகர்கள் ஆதல்
- தேவைக்கு அதிகமான உற்பத்தி
- வரையறுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகள்
- அரசாங்க அமைப்பு
- பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான பெரிய கட்டடங்கள்
- தொலைதூர வாணிபம்
- கலைப் பொருட்கள்
- எழுத்துக்கள், இலக்கியம்
- கணிதம், வடிவியல் (Geometry) வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி.
அது சரி, ஒரு நாகரிகம் இந்த வரைமுறைகளுக்கு உட்படுகிறதா என்று எப்படி மதிப்பீடு செய்வது? இதற்குப் பயன்படும் முக்கிய முறை அகழ்வாராய்ச்சி. உடைந்த மண்சட்டி, உருக் குலைந்த கட்டடங்கள், புதைந்திருக்கும் மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகள், கல் பொறிப்புக்கள், பழைய லிபி எழுத்துகள் என ஒவ்வொரு புள்ளியாகத் தேட வேண்டும். இந்த ஆதாரங்கள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்று துல்லியமாகக் கணிக்கும் அறிவியல் சோதனை முறைகள் பல உள்ளன.
கோர்டன் சைல்டின் அளவுகோல்கள். அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், ஏழு பழங்கால நாகரிகங்களை முதிர்ச்சி பெற்றவைகளாகச் சொல்லலாம். அவை:
- சுமேரியன் நாகரிகம் ( கி.மு 5500 – கி.மு. 2334 )
- சீன நாகரிகம் ( கி.மு 5000 – கி.மு. 1912 )
- எகிப்தியன் நாகரிகம் ( கி.மு 3150 – கி.மு. 332 )
- சிந்து சமவெளி நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 1700 )
- கிரேக்க நாகரிகம் ( கி.மு 2500 – கி.மு. 323 )
- மாயன் நாகரிகம் ( கி.மு 2000 – கி.மு. 900 )
- ரோமன் நாகரிகம் ( கி.மு 753 – கி.பி. 476 )
இந்தப் பழங்கால நாகரிகங்கள் ஒவ்வொன்றையும் இனி விரிவாகப் பார்ப்போம்.
தொடரும்…