Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » பண்டைய நாகரிகங்கள் – 4

பண்டைய நாகரிகங்கள் – 4

முதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் மற்ற எல்லா உயிரினங்களையும்போல வயிற்றுப் பசியும், உடல் பசியும்தான் இருந்திருக்கும். இயற்கையில் கிடைக்கும் காய்களை, பழங்களைப் பச்சையாகச் சாப்பிட்டார்கள். பிற மிருகங்கள் தங்களைத் தாக்க வந்தால் ஓடித் தப்பினார்கள் அல்லது கைகளால் சண்டை போட்டார்கள் கைகள் மட்டுமே அவர்களின் கருவிகள், ஆயுதங்கள்.

சோம்பேறித் தனமும், ஆசைகளும்தாம் மனித முன்னேற்றத்தின் உந்துசக்திகள். காய்களையும், பழங்களையும் பறிக்க மரங்களில் ஏறவேண்டியிருந்தது. அதற்குப் பதிலாகக் கல்லை வீசி எறிந்தால், காயும் பழமும் கைகளில் வந்து விழுமே? மலைகளின் பெரிய பாறைகளை உடைத்துச் சிறு கற்களாக்கினான்.

ஒரு மனிதன் காட்டில் நடந்துகொண்டிருந்தான். ஒரு முயல்குட்டி அப்போதுதான் இறந்துபோயிருந்தது. அவனுக்கு அகோரப் பசி. சாப்பிட்டான். அந்த ருசி அவனுக்குப் பிடித்தது. தன் பெண் துணையிடம் கொடுத்தான். அவள் ரசித்துச் சாப்பிட்டாள். படைப்பின் அடிப்படையே இனக் கவர்ச்சிதானே? பெண்ணைத் திருப்திப்படுத்த, மிருகங்கள், பறவைகளின் சடலங்கள் தேடி அலைந்தான்.

அவனுக்குள் ஒரு பொறி – இப்படி ஏன் அலைந்து திரிந்து, உடல்கள் கிடைக்குமா என்று திண்டாடவேண்டும்? ஏதாவது கருவிகள் இருந்தால், மிருகங்கள், பறவைகளை வேட்டையாடிக் கொன்று, வேண்டும்போதெல்லாம் சாப்பிடலாமே? அவனுக்குத் தெரிந்த ஒரே மூலப்பொருள் கல்தான். மலைப் பிஞ்சுகளால் கருவிகள் செய்தான். இப்போது இன்னொரு பொறி, பிற மிருகங்களோடு ஏன் வெறும் கைகளால் மட்டுமே சண்டை போடவேண்டும்? கல்லால் ஆயுதங்கள் செய்துகொண்டான்.

இந்தக் காலகட்டத்தில், மனிதன் தன் உணவு, பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்திசெய்யப் பயன்படுத்தியவை தன் கைகள், கல்லால் ஆன கருவிகள், ஆயுதங்கள். எனவே, இந்தக் காலகட்டம் Palaeolithic Age என்று அகழ்வாராய்ச்சி நிபுணர்களாலும் கற்காலம் (Stone Age) என்று ஜனரஞ்சகமாகவும் அழைக்கப்படுகிறது. கி.மு. 2000000 வாக்கில் கற்காலம் தொடங்கியிருக்கவேண்டும் என்று நம்பப்படுகிறது.

சுமார் 10,000 ஆண்டுகள் ஓடின. சுமார் கி.மு. 10,000. மனித வாழ்வில் முக்கியத் திருப்பம். இதுவரை, காய்கள், பழங்களைப் பறித்தும், பறவைகள், விலங்குகளை வேட்டையாடியும் வாழ்ந்த மனிதன் உணவுவகைகளைப் பயிரிடத் தொடங்கினான். விவசாயம் ஆரம்பித்தது. பலவிதக் கருவிகள் படைக்கப்படுவதற்கு விவசாயம்தான் வித்திட்டது. கை சக்தியை மட்டுமே நம்பிப் பயிரிடத் தொடங்கியவன், கருவிகள் உதவியால், தன் குடும்பத் தேவைகளுக்கும்

அதிகமாக உற்பத்தி செய்தான். மெள்ள மெள்ள, இந்த உபரித் தயாரிப்பைப் பிறருக்குக்கொடுத்தான். பண்டமாற்றுமுறை தொடங்கியது, வியாபாரமாக வளர்ந்தது.

அடுத்ததாக வந்தது வெண்கலக் காலம் (Bronze Age). செம்பு, அதன் உலோகக் கலவையான வெண்கலம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்கள், கருவிகள், ஆயுதங்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றை மனித இனம் பயன்படுத்திய நாட்கள். செம்பு தயாரிக்கவும், உருக்கவும், அதைப் பிற உலோகங்களோடு சேர்த்துக் கலவைகள் தயாரிக்கவும் அவர்கள் தெரிந்துகொண்டிருந்தார்கள்.

கி.மு. 3800 – இல் தொடங்கியதாகக் கணக்கிடப்படும் வெண்கலக் காலம் மனித வாழ்க்கை முன்னேற்றத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. உலோகங்களைப் பயன்படுத்தப் பலதுறை அறிவு வேண்டும் – தாதுப் பொருட்களைக் கண்டுபிடித்து அவற்றை வெட்டி எடுக்கவேண்டும், அவற்றை உருக்கவேண்டும், அவற்றிலிருந்து பொருட்கள் தயாரிக்கவேண்டும். இவற்றிற்கெல்லாம் ஏராளமான தொழிலாளிகளும், கைவினை வல்லுநர்களும் தேவை.

(கற்காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகியவற்றிற்கு இங்கே சொல்லப்படும் வருடங்கள் பொதுவானவை. பூகோளப் பகுதிகளுக்கு ஏற்ப இவை மாறுபடும்.)

இந்தப் பட்டியலில், மூன்றாவதாக, இறுதியாக வருகிறது இரும்புக் காலம் (Iron Age). கி.மு. 1200 -த்தில் தொடங்கிய இந்த நாட்களில் இரும்பும், உருக்கும் புழக்கத்துக்கு வந்தன. இரும்புக் காலம், வெண்கலக் காலத்தை புறம் தள்ளிவிட்டு, அதன் இடத்தைப் பிடிக்கவில்லை, இரண்டும் ஒருசேர இணைந்து இயங்கின.

இவறுக்கு நடுவே, மனிதர்களின் வாழ்க்கை முறைகளில் ஏராளமான மாற்றங்கள். ஆண் பெண்ணாக வாழ்வைத் தொடங்கியவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தன. காடுகளில் அலைந்து திரிந்த அவர்கள், கொளுத்தும் வெயில், கொட்டும் மழை, கொடிய மிருகங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புத் தேடினார்கள்.

ஒவ்வொரு மனிதனும், தன் குடும்பத்துக்குத் தேவையான உணவுவகைகளைப் பயிரிடத் தொடங்கினான். தன் இருப்பிடத்தை அவனே கட்டிக்கொண்டான். முதலில், தனித் தனியான தீவுகளாக வாழ்ந்தார்கள். விரைவிலேயே, சேர்ந்து இருந்தால் பாதுகாப்பு அதிகம் என்று உணர்ந்தார்கள். அருகருகே வீடுகள் கட்டிக்கொண்டார்கள்.

ஒவ்வொரு குடும்பத்தின் தேவைகளும் விரிவடைந்துகொண்டிருந்தன. தன்னுடைய எல்லாத் தேவைகளையும், தங்கள் குடும்ப அங்கத்தினர்கள் உழைப்பால் மட்டுமே பூர்த்திசெய்ய முடியாது, தான் பக்கத்து வீட்டுக்காரனுடைய சில அவசியங்களை நிறைவேற்றினால், தன்னுடைய சில தேவைகளை அவன் திருப்தி செய்வான் என்பதைத் தெர்ந்துகொண்டார்கள். ஒத்துழைப்பும், இணைந்து வாழ்தலும் தொடங்கின. தனிமரங்கள் தோப்பாயின, சமுதாய வாழ்க்கை ஆரம்பித்தது.

இந்தப் பயணத்தின் பல முக்கிய மைல்கற்கள் இதோ:

( கி.மு. காலத்தின் முக்கிய நிகழ்வுகள் மட்டுமே இங்கு தரப்பட்டுள்ளன. இது முழுமைப் பட்டியல் அல்ல. ஒவ்வொரு நாகரிகத்தையும் ஆராயும்போது, முழுமையாகப் பார்ப்போம்.)

கி.மு. 10500 – சிரியா, லெபனான் பகுதிகளில் விவசாயம்.

கி.மு. 7000 – இராக், சிரியா, துருக்கி பகுதிகளில் மண்பாண்டங்கள் – ஆடு மாடுகள் வளர்த்தல் – ஆப்பிரிக்கா.

கி.மு. 6200 – துருக்கியில் செம்பு உருக்குதல் – தெற்கு ஆசியாவில் பருத்தி பயிரிடல்.

கி.மு. 5500 – இரான், இராக் பகுதிகளில் நீர்ப்பாசனம்.

கி.மு. 5000 – சீனாவில் பட்டுப் புழு வளர்ப்பு, பட்டுத் தொழில்.

கி.மு. 4500 – இஸ்ரேல், லெபனான், ஜோர்டான், சிரியா, துருக்கி ஆகிய பகுதிகளில் விவசாயத்தில் கலப்பை உபயோகித்தல்.

கி.மு. 4300 – ஐரோப்பாவில் கல்லறைகள்.

கி.மு. 4000 – இந்து சமவெளியில் ஆடு, மாடுகள் வீட்டுப் பிராணிகளாக வளர்ப்பு – ஐரோப்பாவில் ஆடு மாடுகளோடு குதிரைகளையும் வீட்டுப் பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் –  க்யூனிஃபார்ம் என்னும் எழுத்துவடிவ சுமேரிய மொழி-

கி.மு. 3800 – சுமேரியாவில் வெண்கலம் தயாரிப்பு.

கி.மு. 3500 – சுமேரியாவில் நகர வாழ்க்கை – எகிப்தின் நகரங்கள், அரசாட்சி முறை

கி.மு.3000 – மொகஞ்சதாரோவில் செங்கலால் கட்டப்பட்ட 12 மீட்டர் நீளமும், 7 மீட்டர் அகலமும், 2.4 மீட்டர் ஆழமும் கொண்ட பிரம்மாண்டக் குளியல் இடம்.

கி.மு. 2630 – எகிப்து பிரமிட்கள்.

கி.மு. 2600 – எகிப்தில் கோதுமை ரொட்டி தயாரிப்பு.

கி.மு.2350 – சுமேரியா, இந்து சமவெளி மக்களிடையே வியாபாரத் தொடர்புகள்.

கி.மு.2100 – சுமேரியாவின் Ziggurats எனப்படும் செங்கல்களால் கோட்டைகள்போல் கட்டப்பட்ட கோவில்கள்.

கி.மு. 1772 – சுமேரியா- ஹமுராபி அரசர் அமுல்படுத்திய சட்டங்களின் தொகுப்பு.  (Hamurabi Code)

கி.மு. 1700 – சுமேரியா- குதிரைகள் இழுக்கும் வண்டிகள், தேர்கள்.

கி.மு. 1600 – இஸ்ரேல், லெபனான் பகுதிகளில் அகர வரிசை முறை (Alphabets).

கி.மு.1500 – துருக்கி. இரும்பு தயாரிப்பு.

கி.மு.776 — கிரேக்கத்தில் முதல் ஒலிம்பிக் போட்டிகள்.

கி.மு. 753 – மக்களவை, மேலவை என இரண்டு படிநிலைகளில் இருந்த ரோமாபுரியின் அரசியல் கட்டமைப்பு.

கி.மு.700 – பாபிலோனியன் ஜோதிடர்கள் ராசி மண்டலம் (Zodiac Signs) கண்டுபிடிக்கிறார்கள். துருக்கி மற்றும் அண்டைப் பகுதிகளில் நாணயம் – அமெரிக்காவில், செவ்விந்தியர் (மாயர்கள்) வசிக்கும் பகுதிகளில் படங்களை அடிப்படையாகக் கொண்ட சித்திர எழுத்து (Hieroglyph) –அகரவரிசை புழக்கத்துக்கு வருகிறது.

கி.மு.600 – உலக அதிசயங்களில் ஒன்றான பாபிலோன் தொங்கும் தோட்டங்கள் உருவாக்கம்.

கி.மு.580 – கி.மு. 500 – a2 + b2 = c என்னும் செங்கோண முக்கோணங்கள் பற்றிய தேற்றம் கண்டுபிடித்த கிரேக்கக் கணித மேதை பிதகோரஸ் வாழ்ந்த காலம்.

கி.மு.469 — கி.மு. 399 – கிரேக்கத் தத்துவ மேதை சாக்ரட்டீஸ் வாழந்த காலம்.

கி.மு.460 — கி.மு. 370 – நோய்கள் கடவுள்கள் உருவாக்குவதல்ல, சுற்றுச் சூழல்களால் வருகிறது என்று சொன்ன உலக மருத்துவத் தந்தை ஹிப்போகிரட்ஸ் கிரேக்கத்தில் வாழ்ந்த காலம்.

கி.மு. 450 – உலக நீதிமுறைகளுக்கு வழிகாட்டும் ரோமானியரின் Twelve Tables என்னும் சட்டமுறை.

கி.மு.400 – மாயர்களின் காலண்டர்.

கி.மு. 366 – சீனாவின் குகைக் கோவில்கள்.

கி.மு.300 – அரசர்கள், பிரபுக்கள், பூசாரிகள் என அதிகாரம் வரையறுக்கப்பட்ட மாயன் ஆட்சிமுறை.

கி.மு. 214 – உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெரும் சுவர் உருவாக்கம்.

கற்காலத்தில் முதல் அடி எடுத்துவைத்த நாம், இத்தனை சாதனைகளையும் தாண்டி, இன்று கம்ப்யூட்டர் யுகத்துக்கு வந்துவிட்டோம். இன்டர்நெட்டையும், இணையதளத்தையும் இருபது வருடங்களுக்கு முன் நினைத்தே பார்த்திருக்கமாட்டோம். இன்றோ, இவை இல்லாத வாழ்க்கையைக் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? நாளை எந்தப் புதிய தொழில்நுட்பம் வரும், நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் என்று கணிக்கவே முடியவில்லை. நாகரிக வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top