கிரேக்கம் : கதை, கலை, மனிதர்கள்
பொழுதுபோக்குகள்
ஒலிம்பிக் தேசியத் திருவிழாவாக, மாபெரும் பொழுதுபோக்காக இருந்தது. விளையாட்டு வீரர்கள் பயிற்சி எடுக்கவேண்டும், அரசாங்கம் அயராது ஏற்பாடுகள் செய்யவேண்டும். நான்கு வருடங்களுக்கு ஒரு முறையே வந்தாலும், ஒவ்வொரு நாளும் ஒலிம்பிக் சம்பந்தமான ஏதோ ஒரு முன் ஏற்பாடு கிரேக்கத்தில் எங்காவது நடந்துகொண்டேதான் இருக்கும், அதற்காக, கற்பனா சக்தி கொண்ட மனிதர்கள் ஒலிம்பிக் என்னும் ஒரே கூட்டுக்குள் தங்களை அடக்கிக்கொண்டுவிட முடியுமா? கிரேக்கர்களின் பொழுதுபோக்குகளுக்குப் பல பரிணாமங்கள் இருந்தன.
நாடோடிக் கதைகள்
ஒலிம்பிக்ஸுக்கு அடுத்து பிரபலமான பொழுதுபோக்கு என்றால், அது கதை சொல்வதுதான், கதை கேட்பதுதான். இதற்கு இரண்டு காரணங்கள் – கிரேக்கர்கள் கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். குடும்பம் என்றால் கணவன், மனைவி, குழந்தைகள் என்ற அளவில் நின்றுவிடாது. தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, மாமன், மாமி, பேரன், பேத்தி என்று அத்தனை சொந்தங்களும் சேர்ந்த குடும்பங்கள், வீட்டுப் பெரிசுகள் எப்படி நேரம் செலவிடுவார்கள்? வீட்டுக் குழந்தைகளுக்குக் கதை சொல்லிகளாகத்தான், இதற்குத் தேவையும் இருந்தது. பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படவில்லை. அவர்களுக்கு எப்படி நீதிகள் போதிப்பது? கதைகள் மூலமாகத்தான்.
பெரியவர்கள் குழந்தைகளுக்குக் கதைகள் சொல்வார்கள்: ஆண்களும், பெண்களும் கூடும்போது தங்களுக்குள் நாடோடிக் கதைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். தெருப்பாடகர்கள் உண்டு. இவர்கள் கதைகளை ராகம் போட்டுப் பாடுவார்கள். அவற்றில் தங்கள் கற்பனைகளையும் கலப்பார்கள். நாட்டில் ஏராளமான முழு நேரத் தெருப்பாடகர்களும் இருந்தார்கள். நாட்டில் மட்டுமல்ல, யுத்த களங்களுக்கும் போர்வீரர்களுக்கு உற்சாகமூட்டத் தெருப்பாடகர்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
பிரபலமாக இருந்த நீதிக் கதைகளுள் இரண்டு இதோ:
மக்கள் எவ்வழி, மன்னர் அவ்வழி
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா. மக்களிடம் அதிக அன்பு கொண்டவர், நல்ல ஆட்சி நடத்தினார். அவருக்குப் புத்திசாலியான ஒரு மந்திரியும், வருங்காலத்தைக் கண்டுபிடிக்கத் தெரிந்த ஒரு ஜோசியரும் உறுதுணையாக இருந்தார்கள்.
ஒரு நாள் ஜோசியர் மன்னரிடம் வந்தார்.
“ராஜா, ராஜா, நாளை முதல் பத்து நாட்களுக்கு விசித்திரமாக மழை பெய்யப்போகிறது.”
“நம் நாட்டில் மாதம் மும்மாரி பொழிகிறதே? இப்போது வரும் மழையில் என்ன விசித்திரம்?”
“ராஜா, இந்த மழைத் தண்ணீரை யார் குடித்தாலும் அவர்கள் முட்டாள்களாகி விடுவார்கள்.”
“நாம் என்ன செய்யலாம் ஜோசியரே?”
“நாடு முழுக்க மக்கள் மழைத் தண்ணீர் குடிப்பதையும், அவர்கள் முட்டாள்கள் ஆவதையும் தடுக்க முடியாது. அரண்மனையில் இப்போதே குளத்திலிருந்து தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளலாம், நீங்கள், ராணி, இளவரசர், மந்திரி, நான் ஆகியோர் குடிக்கலாம். நாம் மட்டும் அப்போது புத்திசாலிகளாக இருப்போம். அப்போதுதான் மக்களுக்குத் தொடர்ந்து நல்லாட்சி தர முடியும்.”
ராஜா சம்மதித்தார்.
அடுத்த பத்து நாட்களுக்கு மழை கொட்டியது. நீரை அருந்திய மக்கள் எல்லோரும் முட்டாள்களாகிவிட்டார்கள். ராஜா, ராணி, இளவரசர், மந்திரி, ஜோசியர் ஆகிய ஐந்து பேர் மட்டுமே அறிவாளிகள். நாட்டு மக்களின் நன்மைக்காகப் பல புதிய திட்டங்கள் தீட்டினார்கள். ஆனால், பொதுமக்களுக்கு இவை புரியவில்லை. திட்டங்களை எதிர்த்தார்கள். நாடு முழுக்க அதிருப்தி.
ராஜாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மந்திரியிடம் ஆலோசனை கேட்டார். அவர் சொன்னார், “ராஜா, ராஜா, மக்களுக்கு நல்லது செய்தால் போதாது. அவர்கள் தங்களுக்கு எவை நன்மை தரும் என்று நினைக்கிறார்களோ, அவற்றை மட்டும்தான் செய்யவேண்டும்.”
ராஜா தன் காவலாளிகளை அழைத்தார். மழைத் தண்ணீர் கொண்டுவரச் சொன்னார். அவர், மந்திரி, ஜோசியர், ராணி, இளவரசர் ஆகிய அனைவரும் குடித்தார்கள். இப்போது அவர் கொண்டுவந்தவை “முட்டாள்தனமான திட்டங்கள்.” ஆனால், மக்கள் எல்லோருக்கும் அமோக திருப்தி.
ராஜா, மக்கள் எல்லோரும் பல்லாண்டு காலம் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.
அகங்காரம் அழிவு தரும்
காட்டில் ஒரு சிங்கம் வசித்தது. புலி, யானை, மான், முயல், கிளி, குருவி, குயில் போன்ற எல்லா மிருகங்களும், பறவைகளும் அதைக்கண்டு பயந்தன. சிங்கத்துகுக் கர்வம் வந்தது. பிற எல்லா மிருகங்களையும் துச்சமாக நடத்தியது. இரவில் மிருகங்கள் தூங்கும்போது வேண்டுமென்றே உரத்த குரலில் கர்ஜிக்கும். மிருகங்களும், பறவைகளும் திடுக்கிட்டு விழிக்கும். அப்போது சிங்கம் அவற்றைப் பார்த்துக் கேலியாகச் கிரிக்கும்.
ஒரு நாள் குரங்குக் குட்டி மர உச்சியில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தது. அங்கே வந்த சிங்கம் சப்தமாக உறுமியது. குட்டி பயந்து விழித்தது. அம்மா குரங்கு கை கூப்பிச் சிங்கத்திடம் வேண்டியது.
“சிங்க ராஜா, சிங்க ராஜா, தயவுசெய்து உரக்க உறுமாதீர்கள். என் குட்டி பயப்படுகிறது.”
“போடா குரங்குப் பயலே. நான் அப்படித்தான் சப்தம் போடுவேன். என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது.”
சிங்கம் தொடர்ந்து சப்தமிட்டது. இரவு முழுக்க குரங்கும் அதன் குட்டியும் தூங்கவேயில்லை.
குரங்குக்குப் பல நண்பர்கள். அதில் ஈ நெருங்கிய நண்பன். குரங்கு தோழனிடம் தன் சோகக் கதையைச் சொன்னது. ஈ மகா புத்திசாலி. கொஞ்ச நேரம் ஆலோசித்தது. அப்போது சொன்னது.
“குரங்கு நண்பா, நான் உன் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன்.”
குரங்குக்குச் சிரிப்பு வந்தது.
“ஈயாரே,ஈயாரே, யானை, புலிகள்கூடச் சிங்கத்தைக் கண்டு பயந்து ஓடுகின்றன. நீங்கள் பொடியன். உங்களால் என்ன செய்யமுடியும்?”
“என்னோடு வாருங்கள். சிங்கத்தின் குகை அருகே போகலாம். நீங்கள் பத்திரமாக மரத்தின்மேல் உட்கார்ந்துகொண்டு நான் நடத்தப்போகும் வேடிக்கையைப் பாருங்கள்.”
ஈ சிங்கத்தின் மூக்குக்குள் நுழைந்தது. அதன் மூக்கைக் குடைந்தது. சிங்கத்துக்கு உபத்திரவம் தாங்க முடியவில்லை. கோபத்தில் கத்தியது.
“யாரது என்னைத் தொந்தரவு செய்வது? மரியாதையாகப் போய்விடு.”
“மாட்டேன்,மாட்டேன்.”
ஈ சிங்கத்தின் மூக்கிலிருந்து வெளியே வந்தது, அதன் முகத்தைச் சுற்றி ரீங்காரமிட்டது, மறுபடியும் மூக்கினுள் புகுந்தது.
“ஈயே, பொடிப்பயல் நீ. மரியாதையாக ஓடிவிடு. இல்ல்லாவிட்டால் உன்னை என்ன செய்வேன் தெரியுமா?”
“என்னை என்ன பண்ணுவீங்க? என்னை என்ன பண்ணுவீங்க?”
ஈ கேலி செய்தது. சிங்கத்துக்கு ஈயின் செய்கை சித்திரவதையாகிவிட்டது. இப்போது ஈயிடம் வேண்டிக்கொண்டது.
“ஈயாரே, ஈயாரே, என்னை விட்டுவிடும்.”
“நீங்கள் இனிமேல் எந்த மிருகத்தையோ, பறவையையோ தொந்தரவு செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்யுங்கள். அப்புறம் நான்தான் காட்டுக்கு ராஜா என்று சப்தமாகச் சொல்லுங்கள்.”
சிங்கம் கத்தியது, “இனிமேல் காட்டுக்கு ராஜா நானில்லை, ஈ தான்.”
குரங்கு ஈக்கு நன்றி சொன்னது. இப்போது ஈக்கு, தான்தான் காட்டுக்கு ராஜா என்ற நினைப்பும் கர்வமும் வந்துவிட்டது. கண்ணை மூடிக்கொண்டு உயரே பறந்தது. அங்கே, ஒரு சிலந்தி வலையில் மாட்டிக்கொண்டது. ஈ மகாராஜாவைச் சிலந்தி சாப்பிட்டார், ஏப்பம் விட்டார்.
இப்படி ஏராளமான குட்டிக் கதைகள், அவற்றில் மனங்களில் ஆழப் பதியும் அற்புதமான நீதிக் கருத்துக்கள்.
நாடகக் கலை
கதைகள் பிடிப்பவர்களுக்கு, அத்தோடு இசையும், நடிப்பும் இணந்தால் இன்னும் பிடிக்குமே? எல்லோருக்கும் பிடித்த இன்னொரு பொழுதுபோக்கு நாடகம் பார்த்தல். டையோனிஸஸ் மதுபானம், மகிழ்ச்சி ஆகியவற்றின் கடவுள். இவருக்காக அடிக்கடி கொண்டாட்டங்கள் நடத்தப்படும். அப்போது நாடகங்கள் போடுவார்கள். இவை இசை நிறைந்த நாடகங்கள். 24 இசைக்கலைஞர்கள் பல கருவிகளோடு பாடுவார்கள், நடிப்பார்கள். தாங்கள் ஏற்கும் வேடத்துக்கு ஏற்ற முகமூடிகள் அணிந்து கொள்வார்கள். நாடகங்கள் நடத்துவதற்காக, அரசாங்கம் எல்லா நகரங்களின் மையப்பகுதிகளிலும் அரங்கங்கள் கட்டி வைத்திருந்தார்கள். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கல் இருக்கைகள் கொண்ட மாபெரும் அரங்கங்கள் இவை. ஆச்சரியம் என்னவென்றால், நிகழ்ச்சிகள் நடக்கும்போது இங்கே ரசிகர் கூட்டம் பொங்கி வழியும்.
இரட்டைக் காவியங்கள்
கதைகள் கலாசாரமான நாட்டில் இதிகாசங்கள் இல்லாமலா? கிரேக்க நாட்டின் இலியட், ஒடிஸி ஆகிய இரு இதிகாசங்களும் நம் ராமாயணம், மகாபாரதம் போல் ஒவ்வொரு வீட்டிலும் படிக்கப்பட்டவை. எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. இவை இரண்டையும் படைத்தவர் ஹோமர். பிறவியிலேயே கண்பார்வை அற்றவராக இருந்த ஹோமர் அமர காவியங்களை உருவாக்கியிருப்பது அதிசயிக்கவைக்கும் உண்மை.
சில கிரேக்க மாமனிதர்கள்
அறிவியல் மேதைகள்
கி. மு 580 – 500 வாக்கில் வாழ்ந்த பித்தகோரஸ் கணித மாமேதை. செங்கோண முக்கோணங்கள் குறித்த a2 + b2 = c2 என்கிற சமன்பாட்டை இவர்தான் கண்டுபிடித்தார்.
அனக்ஸகோரஸ் (Anaxagoras) கி. மு. 500 கால கட்டத்தில் பிரபஞ்சக் கொள்கைகள், கிரகணத்துக்கான காரணங்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தார்.
ஹிப்பார்க்கஸ் (Hipparchus) கி. மு. 127 வாக்கில் வாழந்தவர். வானியல், கணிதம், ஆகியவற்றில் தேர்ந்தவர். பிரபஞ்ச மத்தியில் பூமி இருக்கிறது என்று சொன்னவர். அட்ச ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றைக் கண்டுபிடித்ததோடு 850 விண்மீன்களின் பட்டியலையும் உருவாக்கினார்.
கி.மு. 460 காலத்தில் வாழ்ந்த ஹிப்போகிரட்ஸ் (Hippocrates) உயிரியல் மேதை. நோய்கள் கடவுள்களின் கோபத்தால் வருகின்றன என்னும் அன்றைய மூட நம்பிகைகளைத் தகர்த்து எறிந்து, அவை சுற்றுச் சூழல்களால் வருகின்றன என்று எடுத்துச் சொன்னார். இவர் உலக மருத்துவத்தின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
கி.மு, 290 காலகடத்திய ஆர்க்கிமிடீஸ் மாபெரும் கணிதவியலாளர், கண்டுபிடிப்பாளர். ஆர்க்கிமிடீஸ் தத்துவம், தண்ணீரை உயர் மட்டத்துக்குக் கொண்டுபோகும் ஸ்க்ரூ முறை ஆகியவை இவர் கண்டுபிடிப்புகளுள் அடங்கும்.
தத்துவ மேதைகள்
சாக்ரடீஸ் :
கி. மு 470 வாக்கில் வாழ்ந்தார். துருவிக் கேட்கும் கேள்விகள் மூலம் அவரோடு உரையாடுபவர்கள் தங்கள் அறியாமையை உணர்ந்து ஞானம் தேடவேண்டும் என்பது இவரது சித்தாந்தம். சிந்திக்க வைத்து இளைஞர்களைக் கெடுக்கிறார் என்று குற்றம் சாட்டிய அரசு ஹெம்லக் என்னும் நஞ்சு கொடுத்து இவரைக் கொன்றது.
பிளேட்டோ :
கி. மு 428 முதல் 348 வரை வாழ்ந்தவர். 12 ஆண்டு காலம் பல நாடுகளுக்கு பயணம் செய்தார். இவருடைய சிந்தனைகள், தர்க்கம், நுண்பொருள் ஆய்வு, ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருந்தன.
அரிஸ்டாடில் :
கி. மு 384 முதல் 322 வரை வாழ்ந்தார். பிளேட்டோவின் மாணவர், அலெக்ஸாண்டரின் ஆசிரியர். இயற்பியல், வேதியல், உயிரியல், விலங்கியல், உளவியல், அரசியல் கோட்பாடு, நீதி நெறி, தர்க்க சாஸ்திரம், மெய்ஞ்ஞானவியல், இலக்கியம், பேச்சுக் கலை என்று பல துறைகளில் சகலகலாவல்லவர்.
மாவீரன் அலெக்சாண்டர் :
கி.மு. 356 – இல் பிறந்து, வருடங்கள் மட்டுமே வாழ்ந்த இந்த இளைஞர் தன் வீரத்தால், அழிக்க முடியாத தடங்களை வரலாற்றில் பதித்திருக்கிறார். பாரசீகம் முதல் இந்தியாவரை உலகின் பெரும்பகுதியைத் தன் குடைக்கீழ் கொண்டுவந்தார். நாடுகளை வென்றதோடு மட்டுமல்லாமல், கிரேக்க நாகரிக விதைகளைச் சென்ற இடமெல்லாம் தூவினார். இன்று உலகம் முழுக்கக் கிரேக்க நாகரிகத்தின் தாக்கம் இருக்கிறதே, அதற்கு முக்கிய காரணம் அலெக்சாண்டர்!
தொடரும்…