Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » பண்டைய நாகரிகங்கள் – 3

பண்டைய நாகரிகங்கள் – 3

பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்பதற்கு, பல்லாண்டுகால ஆராய்ச்சிகளின் அடிப்படையில், நாம் இன்று ஏற்றுக்கொண்டுள்ள அறிவியல் கொள்கை பெருவெடிப்புக் கோட்பாடு (Big Bang Theory).

உங்களைச் சுற்றி இருக்கும் உலகத்தை, வானத்தை, நட்சத்திரங்களை, வெட்ட வெளியை ஒருமுறை நன்றாகக் கவனியுங்கள். பார்த்துவிட்டீர்களா? இப்போது கண்களை மூடுங்கள். திறங்கள். இந்தக் ‘கண் சிமிட்டும் நேரம்’ சுமார் ஆறு விநாடிகள்.

இப்போது மறுபடியும், உலகத்தை, வானத்தை, நட்சத்திரங்களை, வெட்டவெளியை உற்றுக் கவனியுங்கள். வித்தியாசம் தெரிகிறதா? என்ன, ஒரு வேற்றுமையும் தெரியவில்லையா? நீங்கள் கண் மூடும் முன் பார்த்த பிரபஞ்சத்தைவிட, கண் திறந்தபின் பார்த்த சர்வலோகம் மிக மிகப் பெரியது. ஆமாம், ஒவ்வொரு விநாடித் துகளிலும், பிரபஞ்சம் பேரளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது, அதன் எல்லைக் கோடுகள் விரிவடைந்துகொண்டேயிருக்கின்றன. பிரபஞ்சத்தின் இந்தத் தொடர் வளர்ச்சிதான் பெருவெடிப்புக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவம்.

பெல்ஜிய நாட்டில் ஜார்ஜஸ் லெமட்ரே (Georges Lemaître) என்னும் கத்தோலிக்கப் பாதிரியார் இருந்தார். வேதாகமத்தில் மட்டுமல்ல, கணிதம், பௌதீகம், வானியல் ஆகிய துறைகளில் உயர் கல்வி பெற்றவர். பெல்ஜியப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். அவர் உள்ளம் கணித வானியலில் லயித்தது. அமெரிக்கா சென்று ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் வான் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து, அமெரிக்க எம்.ஐ.டி – இல் இயற்பியல் ஆராய்ச்சி, இரண்டாவது டாக்டர் பட்டம்.

அதுவரை, பிரபஞ்சம் வளர்ச்சி முற்றுப் பெற்றுவிட்ட பூகோள அமைப்பு என்று எல்லோரும் நினைத்தார்கள். 1931 – இல் லெமட்ரே, A homogeneous Universe of constant mass and growing radius accounting for the radial velocity of extragalactic nebulae என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டேயிருக்கிறது என்னும் புரட்சிகரமான கருத்தைக் கணித முறைகள் மூலமாக நிரூபித்தார். அறிவியல் உலகம் இந்தக் கருத்தை ஏற்கவில்லை, கேலி செய்தது. அறிவியல் மேதை ஐன்ஸ்டின், லெமட்ரே இருவரும் ஒரு கருத்தரங்கில் சந்தித்தார்கள். அப்போது ஐன்ஸ்டின் என்ன சொன்னார் தெரியுமா, ‘உங்கள் கணிப்பீடுகள் சரிதான், ஆனால், உங்கள் இயற்பியல் அறிவு வெறுக்கும்படியாக இருக்கிறது.’

அதே சமயம், எட்வர்ட் ஹபிள் (Edward Hubble) என்னும் அமெரிக்க வானியல் அறிஞரும் இதே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அவருடைய அணுகுமுறை கணிப்பீடு அல்ல, பரிசோதனைகள். டெலஸ்கோப்கள் மூலமாகப் பால் மண்டல (மில்கி வே) நட்சத்திரங்களின் போக்குகளைக் கவனித்துக்கொண்டிருந்த அவருக்கு, விண்மீன் மண்டலங்கள் விரிவடைந்துகொண்டே போவது சந்தேகமில்லாமல் நிரூபணமானது. தன் கண்டுபிடிப்பை Hubble Sequence என்னும் கொள்கையாக 1929 – இல் வெளியிட்டார்.

லெமட்ரே கணிப்பு + ஹபிள் பரிசோதனை, சர்வலோகம் வளர்கிறது என்பதை அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டது. இந்த அடிப்படையில், கணக்கீடுகள், பரிசோதனைகள், ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. பெருவெடிப்புக் கோட்பாடு பிறந்தது. இந்தக் கொள்கை என்ன சொல்கிறது?

1380* கோடி வருடங்களுக்கு முன்னால், சில மி.மீ அளவில் கூழாங்கல்போல் ஒரு தீப்பிழம்பு எப்படியோ தோன்றியது. அது திடீரெனப் பல துண்டுகளாக வெடித்தது. இதுதான் பெருவெடிப்பு. துண்டுகள் அத்தனையும் நெருப்பாய்த் தகித்தன. பல நூறு கோடி வருடங்கள் ஓடின. துண்டுகள் குளிர்வடைந்தன.

(* சரியாகச் சொல்ல வேண்டுமானால், 1379. 90 + / – 3.70 வருடங்கள். 508
உயிரின வகை தொடக்கம்).

இந்தத் துண்டுகளிலிருந்து முதலில், எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியூட்ரான் என்னும் அணுவை உருவாக்கும் துகள்கள் (Subatomic particles) வந்தன: இத்துகள்களின் அடுத்த அவதாரம், ஹைட்ரஜன், ஹீலியம், லித்தியம் ஆகிய வாயுக்கள். இவை குளிர்ந்து, சூரியன், சந்திரன், கிரகங்கள், பூவுலகம், நட்சத்திரங்கள் எனப் பல வடிவெடுத்தன. ஒவ்வொரு அவதாரத்துக்குமிடையே பல நூறு கோடி வருடங்கள்! பிரபஞ்சம் பிறந்தது. பெருவெடிப்பு தொடங்கிவைத்த கைங்கரியத்தால்தான், பேரண்டம் தொடர்ந்து பே…ர….ண்…ட…மாகிக்கொண்டே வருகிறது.

பிரபஞ்சம் படைத்தது கடவுள் அல்ல, அது தானாகவே உருவானது என்று பெருவெடிப்புக் கோட்பாடு அடிப்படையில் பகுத்தறிவாளர்கள் வாதிடுகிறார்கள். இவர்களிடம் மதவாதிகள் கேட்கும் கேள்வி: ‘எல்லாவற்றுக்கும் ஆரம்பம், அந்தக் கூழாங்கல் சைஸ் தீப்பிழம்புதானே? அதை முழுமுதற் கடவுள் படைத்தார் என்று நாங்கள் நம்புகிறோம். இல்லை என்கிறீர்களா? அப்படியென்றால், அது எப்படி வந்தது? சொல்லுங்கள் பார்க்கலாம்?’

விஞ்ஞானிகளிடம் இந்த சவாலுக்கு பதில் கிடையாது. பிரபஞ்சம் எப்படிப் படைக்கப்பட்டது என்று சொல்லும் இந்தியா, ஃபின்லாந்து, சீனா, கிரேக்கம், எகிப்து, நியூசிலாந்து நாடுகளின் இதிகாசக் கதைகளை மனக்கண்ணில் ஓட்டுங்கள். தொடக்கப் புள்ளியான தீப்பிழம்பு விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் இரண்டிலும் பொதுவானதாக இருக்கிறது. ஆகவே, இதிகாசங்கள் சொல்வது முழுக் கற்பனையல்ல.

ஆனால், ஜீவராசிகளும், மனிதர்களும் எப்படிப் படைக்கப்பட்டார்கள் என்பதில், அறிவியல், இதிகாசக் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. இந்தப் புதிய பாதை போட்டவர் இங்கிலாந்தின் அறிவியல் மேதை சார்ல்ஸ் டார்வின். இந்தக் கொள்கை – பரிணாமக் கொள்கை. 1859 ல் வெளியானOn the Origin of Species 1871 ல் வெளியான The Descent of Man ஆகிய புத்தகங்கள் டார்வினின் பரிணாமக் கொள்கையை ஆதாரங்களோடு நிரூபித்தன.

எல்லாவகையான ஜீவராசிகளும் எப்படி உருவாயின என்கிற கொள்கை டார்வினுக்கு முன், டார்வினுக்குப் பின் என்று இரண்டு காலகட்டங்களாகப் பிரிக்கப்படவேண்டிய சித்தாந்தம்.
பிரம்மா உயிரினங்களை எப்படிப் படைத்தார்? தன் உடலின் ஒவ்வொரு வயவங்களிலிருந்தும் ஒவ்வொரு விதமான ஜீவராசியை உருவாக்கினார். முதலில் புல், அடுத்து பூக்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், மீன்கள் ஜனனமாகின்றன. கடைசியாக ஒரு ஆண், ஒரு பெண்.

இது உண்மையில்லை, உயிரினங்கள் படிப்படியாக உருவாயின என்கிறார் டார்வின். சுமார் 210 கோடி வருடங்களுக்கு முன்னால் தொடங்கிய இந்த வரலாற்றின் சில முக்கிய மைல்கற்களைப் பார்ப்போம்:

  • மரம், மிருகம் ஆகியவற்றின் மையக்கரு கொண்ட அணு (Cells with nucleus) : 210 கோடி வருடங்கள் முன்னால்.
  • முதுகெலும்புள்ள விலங்குகள் (மீன்கள், பல்லி, பாம்பு போன்ற ஊரும் பிராணிகள்) பறவைகள் – Vertebrates : 50.5 கோடி வருடங்களுக்கு முன்னால்.
  • குட்டியிட்டுப் பாலூட்டும் விலங்குகள் (Mammals) : 22 கோடி வருடங்களுக்கு முன்னால்
  • முயல்கள், எலிகள், அணில்கள் (Supraprimates) : 10 கோடி வருடங்களுக்கு முன்னால்
  • குரங்குகள் : 3 கோடி வருடங்களுக்கு முன்னால்.
  • மனிதக் குரங்குகள் (வாலுள்ள கொரிக்கலாக்கள். வால் இல்லாத சிம்பன்ஸிகள்) : 1.50 கோடி வருடங்களுக்கு முன்னால்.
  • மனிதர்கள் : 5 லட்சம் வருடங்களுக்கு முன்னால்

விண்மண்டலம், பூவுலகம், மரம், செடி கொடிகள். ஜீவராசிகள், ஆண், பெண் ஆகிய எல்லாம் ரெடி. இனி மனித வாழ்க்கை தொடங்குகிறது.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top