Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » பண்டைய நாகரிகங்கள் – 25

பண்டைய நாகரிகங்கள் – 25

 நகரங்கள், வீடுகள்

சிந்து சமவெளி கால நகரங்கள் அற்புதமாகத் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்தன.  ஒவ்வொரு நகரத்திலும் இரண்டு பகுதிகள்: ஒரு பகுதி தரை மட்டத்தில், இன்னொரு பகுதி செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்றின்மேல். இரு பகுதிகளையும் கோட்டைகள் பிரித்தன. உயரத்தில் இருந்த பகுதி அக்ரோப்போலிஸ் என்று அழைக்கப்பட்டது.  இங்கே, பொதுமக்கள் கூடும் அரங்கங்கள், கோயில்கள் , நெற்களஞ்சியங்கள் இருக்கும். மொஹெஞ்சதாரோ நகரத்தில் பொதுக் குளியலறை இருந்தது.

ancient-indus-map

தரைமட்டப் பகுதிதான் மக்கள் வசிக்கும் இடம். இங்கே சாலைகள் 30 மீட்டர் அடி அகலம் கொண்டவை. எல்லாச் சாலைகளும் செங்குத்தாகச் சந்தித்தன. இதனால், சாலைகளுக்கு நடுவே இருந்த பகுதிகள் செவ்வக வடிவம் கொண்டவை.  இந்தப் பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டன.  கட்டுமானத்துக்கு உலையில் சுடப்பட்ட செங்கற்களைப் பயன்படுத்தினார்கள். இவை 1:2:4 என்னும் விகிதத்தில் உயரம், அகலம், நீளம் என சமச் சீரானவை. ஒரு சில வீடுகள் மிகப் பெரியவை. மாடி வீடுகளும் இருந்தன. பெரிய வீடுகளில் விசாலமான முற்றம் இருந்தது.

பண்டைய நாகரிகங்களில் சிந்து சமவெளியில்தான் மிகச் சிறந்த சுகாதார வசதிகள் இருந்தன. எல்லா வீடுகளிலும், குடிநீர் வசதிகளும், குளியல் அறைகளும், கழிப்பறைகளும் இருந்தன.  ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? நகரங்களில் கழிவுநீர் வடிகால் அமைப்பு இருந்தது. எல்லா வீதிகளிலும் மூடிய சாக்கடைகள் இருந்தன. வீடுகளின் அசுத்த நீர் இவற்றில் சென்று சேரக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன.  5000 வருடங்களுக்கு முன்னால், இத்தனை கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட நகரங்களும், வீடுகளுமா?

நெற்களஞ்சியங்கள் பிரம்மாண்டமானவை – 150 அடி நீளம், 75 அடி அகலம், 15 அடி உயரம். அதாவது, 1,68.750 அடி கொள்ளளவு. இவற்றுள் 3 வரிசைகள், 27 சேமிப்புக் கிடங்குகள்! இந்து சமவெளியின் விவசாயச் செழிப்புக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இன்னொரு முக்கிய அம்சம், பொதுக் குளிப்பிடங்கள். வட்டச் சுவர்கொண்ட உயரமான கிணறுகள், படிக்கட்டுகளுடன் நீள்சதுரப் பொதுக் குளியல் துறைகள், அதைச்சுற்றிலும் சிறிய குளியல் அறைகள்.  இவற்றுள் பிரம்மாண்டம், மொஹெஞ்சதாரோவில் இருந்த பெரும் குளியலறை (கிரேட் பாத்) 179 அடி நீளமும், 107 அடி அகலமும் கொண்ட பகுதி இது. மையத்தில் 39 அடி நீளம், 23 அடி அகலம், 8 அடி ஆழம் கொண்ட நீச்சல் குளம். அடியில் தண்ணீர் தேங்கி நிற்பதற்காகச் செங்கற்கள் நெருக்கமாகப் பதிக்கப்பட்டிருந்தன. குளத்தின் உள்ளே ஏறி, இறங்க வசதியாக இரண்டு பக்கங்களிலும் படிக்கட்டுகள் இருந்தன.

குளத்தைச் சுற்றி ஆடைகள் மாற்றுவதற்கான அறைகள் இருந்தன. அவற்றில்  கிணறுகள் இருந்தன. கிணறுகளுக்குள் தண்ணீர் இறைத்துக் குளத்துக்குள் பாய்ச்சலாம். குளத்தின் அழுக்கு நீரை வெளியேற்ற வடிகால் குழாய்கள் இருந்தன.

நகரங்களில் இருந்த கட்டடங்கள் வியக்க வைப்பவை. சுட்ட செங்கற்களால் அமைக்கப்பட்ட இவற்றில், சிமெண்ட் போன்ற சுண்ணாம்பும், செம்மண்ணும் சேர்ந்த ஒரு கலவையைப் பயன்படுத்தினார்கள். அருகருகே இரண்டு செங்கற்களை வைத்து, அவற்றின் நடுவே இன்னொரு செங்கல்லைப் பொருத்தி, கலவையைப் பூசினார்கள். உறுதியான கட்டடங்களை உருவாக்கும் இந்தப் பொறியியல் அறிவு நம்மை வியக்கவைக்கிறது.

நகரங்களுக்கு வெளியே, விசாலமான கோட்டைகள் இருந்தன. அவற்றுக்குள்ளும் வீடுகள் – சில மிகப் பெரியவை, பல சிறியவை. வெள்ளம், எதிரிகள் தாக்குதல் ஆகியவை நடந்தால், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, ஆட்சிபீடத்தில் இருந்தவர்கள் இந்தக் கோட்டைவீடுகளைப் பயன்படுத்தியிருக்கலாம்.

ஆட்சி முறை  

இத்தனை வரைமுறைகளோடும், ஒழுங்காகவும் நகரங்களும், கிரமங்களும் இருந்தமையால், நிச்சயமாகக் கட்டுக்கோப்பான ஒரு தலைமை ஆட்சி செய்திருக்கவேண்டும். அகழ்வில் கிடைத்திருக்கும் முத்திரைகளும் இதை நிரூபிக்கின்றன. வணிகர்களின் விற்பனைப் பொருட்களை மேற்பார்வையிடவும், அரசுக்கான வரிப்பணம் வசூலிக்கப்பட்டுவிட்டதா என்பதை மேற்பார்வை செய்யவும், இந்த முத்திரைகள் அடையாளங்களாக உதவியிருக்கலாம். ஆனால், இவற்றுள் பல முடிவுகளின் அடிப்படை ஆதாரங்கள், பல அனுமானங்கள். விடை இல்லாத பல வினாக்கள் உண்டு:

  • பரந்து விரிந்து கிடந்த சிந்து சமவெளி வட்டாரம் ஒரே பேரரசின் கீழ் இருந்ததா, எனில் பேரரசர் யார்?
  • ஒரே குடும்பம் தொடர்ந்து ஆண்டதா?
  • தலைநகரம் எது?
  • ஒரே மன்னர் ஆண்ட ஆட்சியா அல்லது ஏராளம் குறுநில மன்னர்களோடு பேரரசர் பகிர்ந்துகொண்ட கூட்டாட்சியா?
  • நிர்வாக அமைப்பு எப்படி வடிவமைக்கப்பட்டிருந்தது?

சமூக வாழ்க்கை

சிந்து சமவெளி நாகரிகம் ஆணாதிக்கச் சமுதாயமாக இருந்தது. இதைப் போலவே, சமூகத்தில் இரண்டு வர்க்கங்கள் இருந்தன. ஆட்சியாளர்கள், வியாபாரிகள், பூசாரிகள் ஆகியோரிடம் பணம் / பதவி / அதிகாரம் இருந்தது. இவர்கள் உயர் மட்டத்தினர். இவர்கள் வீடுகளுக்கும், சாமானியர்  வீடுகளுக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள். முதலாவதாக, வீடுகளின் அளவில் வித்தியாசம். பெரிய வீடுகளில் முற்றம், பல குளியலறைகள், ஏராளமான அறைகள் எனப் பல வசதிகள். சிறிய வீடுகளில் அடிப்படை வசதிகள் மட்டுமே.

உடையிலும், சாமானியர் எளிய சணல் ஆடைகளை அணிந்தார்கள். செல்வந்தர்கள் பருத்தி ஆடைகளில் பவனி வந்தார்கள். பெரும் குளியலறைகள் பணம், பதவி படைத்தவர்களின் ஏகபோக உரிமை. பொதுஜனங்கள் பொதுக் கிணறுகளில் குளித்தார்கள்.

வசதி படைத்தவர்கள் தங்கள் வீடுகளிலும் வியாபாரத்திலும் வேலைக்காரர்களையும், அடிமைகளையும் பயன்படுத்தினார்கள். அடிமைகள் எஜமானர்களின் “சொத்துக்கள்.”  அவர்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். அடிமைகள் வியாபாரம் அனுமதிக்கப்பட்டிருந்தது. சிந்து  சமவெளி அடிமைகள் மெசப்பொட்டேமியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது சாதாரண வழக்கம்.

தொழில்கள்

வியாபாரம்

ஏராளமானவர்கள் ஈடுபட்டிருந்த விவசாயம், வியாபாரத்துக்கு வழி ஏற்படுத்திக்கொடுத்தது.  விவசாயிகள் உபரித் தயாரிப்பை நகரங்களுக்கும், அண்டைய நாடுகளுக்கும் விற்பனை செய்தார்கள். தானியங்களை எடைபோட்டு விற்க, எடைக் கற்களைப் பயன்படுத்தினார்கள். இவை கல், களிமண், உலோகம் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை.

வியாபாரம் பண்டமாற்று முறையில் நடத்தப்பட்டது. பணம் புழக்கத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. கிராமத்து விவசாயிகள் உணவுப் பொருள்களை  நகரத்தாரிடம் கொடுத்து, ஆடைகள், நகைகள் ஆகியவற்றைப் பகரமாகப் பெற்றார்கள். காலப்போக்கில், பிற தொழில்களுக்குத் தேவைப்பட்ட மாக்கல், செம்பு, வெண்கலம், தங்கம், வெள்ளி, பீங்கான், பருத்தி, கடல் சங்கு ஆகிய பொருள்களைப் பெறும் வழக்கம் வளர்ந்தது. சாலைச் சரக்குப் போக்குவரத்துக்கு மாட்டு வண்டிகள் பயன்படுத்தினார்கள்.

சிந்து நதியின் துணையால், படகுப் போக்குவரத்து எளிமையாக இருந்தது, பிற நாடுகளோடு வியாபாரம் நடத்த வழி வகுத்தது. இதனால், சிந்து சமவெளியினரின் வணிக உறவுகள் தொலைதூர மெசப்பொட்டேமியா வரை நீண்டன. சிந்து சமவெளிப் பொருட்களை விற்பதற்காகவே, ஆப்கனிஸ்தானில் தனிச்சந்தை ஒன்று இருந்தது. மத்திய ஆசியப் பகுதிகளுடன் வியாபாரம் செய்ய இந்தச் சந்தை உதவியது.

குஜராத் மாநிலத்தில் லோதால் நகரம், அகமதாபாத் பவநகர் பாதையில், அகமதாபாதிலிருந்து 85 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஏராளமான மணிமாலைகள், வளையல்கள், நகைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், செம்பு உருக்கும் தொழிற்சாலைகள், வெண்கலத் தயாரிப்புத் தொழிற்கூடங்கள் இங்கே இருந்தன. இந்தத் தொழிற்கூடங்கள் 2400 சதுர அடியும், பதினான்கு அறைகளும் கொண்டவையாக இருந்தன. லோதாலின் முக்கிய ஏற்றுமதி மணிமாலைகளும், நகைகளும்: முக்கிய இறக்குமதி அரேபிய நாடுகளிலிருந்து செம்பு வார்ப்புக் கட்டிகள். ஏற்றுமதி, இறக்குமதியால் விறுவிறுப்பாகச் சுழன்ற லோதால் துறைமுகம் சிந்து சமவெளி நாகரிக ஏற்றுமதியின் மையப்புள்ளி.

கை நெசவு

அன்றைய சிந்து சமவெளியினர் சணலிலும், பருத்தியிலும் ஆடைகள் நெய்தார்கள். நூல் நூற்கும் தக்கிளிகள், தறிகள், சாயம் தோய்த்த பருத்தி ஆடைகள் என இதற்குப் பல ஆதாரங்கள்!

களிமண் பொருட்கள்

களிமண், சிந்து சமவெளி முன்னேற்றத்தின் அற்புத வெளிப்பாடு. நகரங்களிலும், கிராமங்களிலும் சூளைகள் இருந்தன. நெருப்பின் சூடு எல்லாப் பாத்திரங்களுக்கும் சமமாகக் கிடைக்கும்படி சூளைகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் விதம், எப்படித்தான் செய்தார்களோ என்று நம்மை ஆச்சரியப்படவைக்கிறது.

களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள், சட்டிகள், கலயங்கள், ஜாடிகள், அடுக்களை சாமான்கள் குயவர் சக்கரத்தால் உருவாக்கப்பட்டு, உலைகளில் சுடப்பட்டன. சில பானைகளில் மயில் வடிவ ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top