மொழி, இலக்கியம் ஆகிய நுண்கலைகளில் முன்னணியில் நின்ற எகிப்து, கட்டடக் கலையில் உச்சங்கள் தொட்டதைப் பார்த்தோம். அறிவியலின் பல துறைகளிலும் எகிப்தியர்கள் கொடி கட்டிப் பறந்தார்கள்.
கண்டுபிடிப்புகள்
காகிதம்
கி.பி. கே லுன் என்னும் சீன அறிஞர் சணல், துணி, மீன் பிடிக்கும் வலைகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கூழாக்கி, அவற்றால் மெல்லிய பாளங்களை உருவாக்கினார். இதுதான் காகிதத்தின் தொடக்கம் என்று பார்த்தோம்.
எகிப்தின் ரசிகர்கள் சொல்லும் வரலாற்றுச் செய்தி வித்தியாசமானது. Papyrus என்னும் நாணல் நைல் நதிக் கரைகளில் வளர்கிறது. இதற்குக் காகிதத் தாவரம் என்னும் காரணப் பெயரும் உண்டு. எகிப்தியர்கள் இந்த நாணலால் காகிதம் தயாரித்தாதர்கள். பேப்பர் என்னும் ஆங்கிலப் பெயரே, பேப்பிரஸ் என்னும் எகிப்திய வார்த்தையிலிருந்து வந்ததுதான். ஆகவே, காகிதம் கண்டுபிடித்தவர்கள் எகிப்தியரே என்பது இவர்களுடைய ஆணித்தரமான வாதம்.
கடிகாரங்கள்
கடிகாரத்தைப் பயன்படுத்தியவர்களில் எகிப்தியர்கள் முன்னோடிகள். ஆரம்ப நாட்களில், சூரிய நிழலை அடிப்படையாகக் கொண்ட சூரியக் கடிகாரங்களைப் பயன்படுத்தினார்கள். நான்கு முகத் தூண் இருக்கும். இதன் நிழலை வைத்து, காலை, பகல், மாலை ஆகிய வேளைகளைக் கணக்கிட்டார்கள்.
அடுத்த கட்டமாக நீர்க் கடிகாரங்கள் பயன்படுத்தப்பட்டன. கி.மு. 1400 வாக்கில் இவை புழக்கத்தில் இருந்தன. தலைகீழ்க் கூம்பு வடிவத்தில் கல்லால் செய்யப்பட்ட பாத்திரம் இருக்கும், இதன் அடிப்பாக ஓட்டை வழியாக, தண்ணீர் வெளியேறும். பாத்திரத்தில் 12 அளவுகள் குறிப்பிடப்பட்டிருக்கும். பாத்திரத்தில் தண்ணீரின் அளவை வைத்து எகிப்தியர்கள் நேரத்தைக் கணக்கிட்டார்கள்.
நேரம் அளக்கத் தெரிந்துவிட்டது. அடுத்தது என்ன? நாள்காட்டிகள் என்னும் காலெண்டர்களும் எகிப்தியரால் கண்டுபிடிக்கப்பட்டன.
மருத்துவம்
அந்தப் பிராந்தியத்தில் சிறந்த டாக்டர்கள் எகிப்தில்தான் இருந்தார்கள். பக்கத்து நாட்டு நோயாளிகள் சிகிச்சை பெற எகிப்து வருவது வழக்கம். இந்த டாக்டர்கள், நோயாளிகளின் உடலை நன்றாகச் சோதித்த பின், எந்தச் சிகிச்சை அவருக்குச் சரியாகும் என்று சிந்தித்து முடிவெடுத்தார்கள். மூலிகை மருந்துகள், தாயத்துகள் போகப் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.
எகிப்து மருத்துவர்கள் அறுவை சிகிற்சையிலும் நிபுணர்கள். அவர்கள் காயங்களுக்குத் தையல் போட்டார்கள், எலும்புகள் முறிந்தால் கட்டுகள் போட்டார்கள். ஏன், சில சமயங்களில் உறுப்புகளைத் துண்டிக்கும் அறுவை வைத்தியம்கூட செய்திருக்கிறார்கள்.
அறுவை சிகிச்சைக்கு அவர்கள் பயன்படுத்திய வகை வகையான கருவிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
காயங்கள் குணமாக, அவற்றின் மேல் மாமிசம், தேன் ஆகியவற்றை வைத்து அதன்மேல் பாண்டேஜ் கட்டினார்கள். தேன் நல்ல கிருமிநாசினியாம். காயம் அழுகாமல் இருக்க, பரவாமல் இருக்க, தேன் உதவியது. காயங்களால் ஏற்படும் வலியைக் குறைக்க அபின் என்ற போதை மருந்து பயன்பட்டது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உணவில் சேர்த்தால், ஆரோக்கியம் பெருகும், ஆஸ்த்மா போன்ற நோய்கள் அண்டாது என்பது அவர்கள் கண்டறிந்த உண்மை.
மம்மிகள்
எகிப்தியரின் மருத்துவத் துறை முன்னேற்றத்துக்கு மம்மிகள் அற்புதமான உதாரணங்கள். மம்மி என்றால் புதைப்பதற்காகப் பாதுகாக்கப்பட்ட உடல். உள் உறுப்புகளை எடுத்தல், உப்புத் தொட்டிக்குள் அமிழ்த்தி வைத்தல், மெழுகுகொண்டு பதனிடுதல், பின் லினன் துணிகளால் பாண்டேஜ்போல் சுற்றுதல் ஆகிய முறைகளைப் பயன்படுத்தினார்கள். Mumo என்றால் மெழுகு. அதனால்தான் இந்த மேக்கப் போட்ட உடலுக்கு மம்மி என்று பெயர். மம்மி செய்ய உடற்கூறு, அறுவை சிகிச்சை, மருத்துவம் ஆகிய துறைகளின் அறிவு தேவை. எகிப்தியர்கள் அறிந்திருந்தார்கள்.
இறந்த பின்னும், கடவுள் அவதாரங்களான மன்னர்கள் உயிர் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில், மம்மி வடிவத்தில் அவர்கள் உடல் கெடாதவாறு பாதுகாத்து, அவற்றின் மேல் பிரம்மாண்ட பிரமிட்கள் கட்டினார்கள் . விஐபிக்கள், முக்கியமாக, ராஜா ராணிகளின் மன்னர்களின் உடல்களை “மம்மி”யாக்குவது முக்கிய எகிப்திய வழக்கம். இது சாதாரண வேலையல்ல. உடற்கூறு, அறுவை சிகிச்சை, மருத்துவம் ஆகிய துறைகளை அறிந்த நிபுணர்கள் இதற்குத் தேவை. ஏன் தெரியுமா?
இறந்தவர் உடலின் வயிற்றுப் பாகத்தில் துளை போடுவார்கள். நுரையீரல், குடல் ஆகிய அங்கங்களை லாவகமாக வெளியே எடுப்பார்கள். மருத்துவப் பச்சிலைகளை வயிற்றுக்குள் நிரப்பித் துளை போட்ட இடத்தைத் தைத்து மூடுவார்கள். உடல் கெடாமல், அழுகாமல் இருக்க இந்த மூலிகைகள் உதவும். இதயம்? அது அப்படியே விடப்படும்.
மூளை? மூக்கு வழியாக மூளை உறிஞ்சி எடுக்கப்படும். சில சமயங்களில் கண்கள் அகற்றப்பட்டு செயற்கைக் கண்கள் பொருத்தப்படும். அடுத்ததாக, உடலை உப்புத் தொட்டிக்குள் நாற்பது நாட்களுக்கு வைப்பார்கள். உடலில் உள்ள திரவங்களை வெளியேற்றும் வழி இது. உடல் அழுகுவது உடலின் உள்ளே உள்ள திரவங்களால். உப்பு இந்தத் திரவங்களை உறிஞ்சுவதால், உடல் அழுகுவது தடுக்கப்பட்டு விடுகிறது.
இத்தோடு வேலை முடிந்ததா? இல்லை. உடலை வெளியே எடுத்து அதன்மீது மெழுகு பூசுவார்கள். இதன்மேல் லினன் துணிகளால் பாண்டேஜ் போல் சுற்றுவார்கள். மம்மி, ராஜாவா, ராணியா, குட்டி மன்னரா, மந்திரியா, தளபதியா என்கிற சமூகத் தகுதியின் அடிப்படையில் தங்க, வைர வைடூரிய நகை அலங்காரங்கள் அணிவிப்பார்கள். இப்போது மம்மி தயார். சுமார் 3000 ஆண்டுகள் தாண்டியும், பல் மம்மிகள் இன்று கிடைத்துள்ளன. எகிப்து நாட்டு மம்மி செய்யும் முறை காலத்தை வெல்லும் மருத்துவ முறைதான்!
கணித அறிவு
கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அத்தனையும் அவர்களுக்கு அத்துப்படி. முக்கோணங்கள், சதுரங்கள், செவ்வகங்கள், பெட்டிகள், பிரமிட்கள், வட்டங்கள், ஆகியவற்றின் பரப்பளவு, கொள்ளளவு கண்டு பிடிக்கும் சூத்திரங்களையும் அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். பிரமிட் கட்டுவதில் பல கணித சூத்திரங்கள் பயன்பட்டதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
நாகரிக வீழ்ச்சி
இப்படிப் பாரம்பரியப் பெருமை கொண்ட எகிப்தின் நாகரிகம் முற்றுபெற்றுவிட்டது. கி.மு. 1279 முதல் கி.மு. 1213 வரை ஆண்ட இரண்டாம் ராம்சேஸ் மன்னரின் ஆட்சி எகிப்தியப் பொற்காலம். அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. இயற்கையின் கருணையில் விளைச்சல் செழித்தது, உள்நாட்டு, வெளிநாட்டு வியாபாரங்கள் அமோகமாக நடந்தன. மக்கள் சொர்க்கபோக வாழ்க்கை நடத்தினார்கள்.
எகிப்தின் வளம் அண்டைய நாடுகளின் பொறாமையைத் தூண்டியது. அடிக்கடி அவர்கள் எல்லை மீறி எகிப்துக்குள் நுழைந்தார்கள். இரண்டாம் ராம்சேஸ் மறைவுக்குப் பின்னர் இந்த ஊடுருவல்கள் அதிகரித்தன. குறிப்பாக, இன்றைய வட ஈராக்கில் அசிரியா என்னும் பேரரசு இருந்தது, அசிரியர்கள் எகிப்துமீது தொடர்ந்து படையெடுத்தார்கள். மெள்ள, மெள்ள, ஒவ்வொரு பகுதியாகக் கைவசம் கொண்டுவந்தார்கள். கி. மு. 667 -இல் எகிப்து அசிரியர் ஆட்சியின்கீழ் வந்தது. ஆனால், அவர்களால், எகிப்தைக் கட்டியாள முடியவில்லை. கி.மு. 525 – இல் எகிப்தியக் குறுநில மன்னர்களிடம் நாட்டை விட்டுவிட்டு வெளியேறினார்கள். நாடு சிதறுண்டது. காலம் காலமாகக் கட்டிக் காத்த நாகரிகம் சிதிலத்தில்! வெற்றிடத்தில் பாரசீகம் புகுந்தது. எகிப்தில் பாரசீக ஆட்சி ஆரம்பம்.
சுமார் 200 ஆண்டுகள் ஓடின. கி. மு. 325. எகிப்திய மக்களுக்குப் பாரசீக மன்னர்கள்மேல் அளவுகடந்த வெறுப்பு. தங்களைக் காப்பாற்ற ஒரு தேவதூதனை எதிர்பார்த்தார்கள். அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாய், எகிப்துமீது படையெடுத்து வந்தார் மாவீரன் அலெக்சாண்டர். மக்கள் அவரை வரவேற்றார்கள். அதிகம் ரத்தம் சிந்தாமலே, எகிப்து அலெக்சாண்டருக்கு மண்டியிட்டது. எகிப்து கிரேக்க நாட்டின் ஒரு பகுதியானது. எகிப்திய நாகரிகம் முடிவுற்றது.
இப்போது உங்கள் எல்லோர் மனங்களிலும் ஒரு கேள்வி வரும். நம்மில் ஏராளமானவர்களுக்குப் பேரழகி கிளியோபாட்ரா எகிப்தின் முக்கிய அடையாளம். கிளியோபாட்ராவைப் பற்றி ஏன் குறிப்பிடவேயில்லை? கிளியோபாபட்ரா இல்லாத எகிப்திய நாகரிகமா, வரலாறா?
சில அதிர்ச்சியான உண்மைகள்:
கிளியோபாட்ராவின் எகிப்தியரே அல்ல: அவர் உடலில் ஓடியது கிரேக்க ரத்தம். அலெக்சாண்டரின் மெய்க்காப்பாளர்களாக ஏழு வீரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் முதல் தாலமி. அலெக்சாண்டர் கிரேக்கம் திரும்பும்போது, எகிப்தின் ஆட்சியைத் தாலமியிடம் ஒப்படைத்தார். அலெக்சாண்டர் அகால மரணமடைந்ததால், தாலமி மன்னரானார்: அவர் வம்சம் எகிப்தை ஆண்டனர். இந்த வம்சாவளியில் வந்த கிளியோபாட்ரா கிரேக்கப் பெண்.
கிளியோபாட்ரா வாழ்ந்த காலம் கி.மு. 69 முதல் கி.மு. 30 வரை. அதாவது, அவர் பிறப்பதற்கு 263 ஆண்டுகளுக்கு முன்பாகவே எகிப்திய நாகரிகம் “மம்மி”யாகிவிட்டது.
தொடரும்…