மொழி
இத்தனை கலைநயமும் கற்பனையும் கொண்ட மக்கள் நிச்சயம் இலக்கியம் படைத்திருக்க வேண்டுமே, வளர்த்திருக்க வேண்டுமே?
ஆம், அவர்கள் ஹைரோக்ளிஃப் (Hieroglyph) என்கிற சித்திர எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதனர். தமிழில் அகர வரிசை அ, ஆ, இ, ஈ, என்று வரும். எகிப்திய மொழியில் அகர வரிசை இப்படி இருக்காமல், படங்களாக இருக்கும். 500 படங்கள் இருந்தன. தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை இடது பக்கத்தில் தொடங்கி வலது பக்கமாக எழுதுகிறோம். உருது மொழி வலது பக்கத்தில் இருந்து இடது பக்கமாக எழுதப்படும். எகிப்து மொழியும் வலமிருந்து இடமாக எழுதப்பட்டது.
இந்த மொழி இப்போது புழக்கத்தில் இல்லை. ஆனால், பழங்காலக் கல்வெட்டுக்கள், மண் பாத்திரங்கள் போன்றவற்றில் இந்தச் சித்திர எழுத்துகளைப் பார்க்கலாம்.
இலக்கியம்
எகிப்தின் பரம்பரைக் கதைகளும் மிகப் பிரசித்தமானவை. இவை எழுதப்பட்ட கதைகளாக இல்லாமல், சொல்லப்பட்ட கதைகளாக இருந்தன. மக்கள் கூட்டமாகக் கூடும்போது ஒருவர் கதைகள் சொல்ல, மற்றவர்கள் அதைக் கேட்பது பொழுதுபோக்காக இருந்தது. அத்தோடு சுருங்கிவிடாமல், நீதிகளைப் போதிக்கும் ஊடகங்களாகவும் பயன்பட்டன.
இந்தக் கதைகள் கற்பனையில் உருவானவை. ஆனால், இவற்றின் மூலம், அந்தக் கால நாகரிகம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை நம்மால் அறிந்துகொள்ளமுடியும். உதாரணத்துக்கு ஓர் கதையைப் பார்க்கலாம்.
பலப் பல ஆண்டுகளுக்கு முன்னால், எகிப்து நாட்டை அமாஸிஸ் என்ற ஃபாரோ மன்னர் ஆண்டு வந்தார். பாரசீக நாட்டு மன்னர்கள் அண்டை நாடுகள் மீது படையெடுத்து அவற்றைக் கைப்பற்றி வந்த காலம்.
பாரசீகர்களிடமிருந்து எகிப்தைப் பாதுகாக்க அமாஸிஸ் ஒரு திட்டம் போட்டார். கிரேக்க நாட்டோடு வாணிபத்தை வளர்த்துக் கொண்டால், அந்த வியாபாரிகளும், கிரேக்க அரசும் தன் ஆட்சி நீடிக்க உதவுவார்கள் என்பது அவர் திட்டம்.
நூற்றுக்கணக்காக கிரேக்க வியாபாரிகள் எகிப்துக்குள் வந்தார்கள். அவர்கள் வாணிபம் அமோகமாக நடந்தது. அவர்களுள் ஒரு பெரிய வியாபாரி சாராக்ஸஸ். நைல் நதிக் கரையில் கானோப்பஸ் என்ற ஊரில் அவர் கடை இருந்தது. அவர் தங்கை ஸாஃபோ புகழ் பெற்ற கவிதாயினி.
ஒரு நாள், சந்தையில் சாராக்ஸஸ் பெரிய கூட்டம் கூடியிருப்பதைப் பார்த்தார். அங்கே போனார். மிக அழகான பெண் நின்றுகொண்டிருந்தாள். சுண்டினால் ரத்தம் வரும் நிறம். ரோஜாக் கன்னங்கள். இத்தனை அழகான பெண்ணை இதுவரை சாராக்ஸஸ் பார்த்ததேயில்லை.
அவள் கிரேக்க நாட்டுப் பெண். அவளை ஏலம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் தனக்குத்தான் என்று அவர் முடிவு செய்தார். பெரும் பணக்காரர் சாராக்ஸஸோடு போட்டி போட முடியுமா? மற்றவர்கள் விலகினார்கள். அந்தப் பெண் அவருக்கு சொந்தமானாள்.
அந்தப் பெண்ணைத் தன் மாளிகைக்கு அழைத்து வந்தார். அவள் பெயர் ரோடோப்பிஸ். மிக இனிமையாகப் பழகினாள். சாராக்ஸஸுக்கு அவளை மிகவும் பிடித்தது. அவளுக்குப் பெரிய மாளிகை வாங்கி அங்கே தங்கவைத்தார். வீட்டைச் சுற்றிப் பெரிய பூந்தோட்டம். வீட்டின் பின்புறம் நீச்சல் குளம். ரோடோப்பஸுக்கு சேவை செய்யப் பல அடிமைப் பெண்கள் அவள் மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால், இத்தனை இருந்தும், அவள் மனம் எதற்கோ ஏங்கியது. தன் மனம் எதைக் கேட்கிறது என்று அவளுக்கும் புரியவில்லை.
ஒரு நாள் சாராக்ஸஸோடு போகும்போது, ரோடோப்பிஸ் சந்தையில் சிவப்பு செருப்பைப் பார்த்தாள். அவளுக்கு மிகவும் பிடித்தது. உடனேயே அவர் அதை அவளுக்கு வாங்கிக் கொடுத்தார். ரோடோப்பிஸ் எப்போதும் அதை அணிந்தாள். தூங்கும்போதும் பக்கத்தில் வைத்துக்கொண்டாள்.
ஒரு நாள் நீச்சல் குளத்தில் அடிமைகள் புடை சூழக் குளிக்க வந்தாள். அவளுடைய உடை, நகைகள், சிவப்புச் செருப்புகள் ஆகியவற்றை அடிமைப் பெண்கள் வாங்கி, தங்கள் கைகளில் வைத்துக் கொண்டார்கள். ரோடோப்பிஸ் குளிக்கத் தொடங்கினாள்.
“ஐயோ, ஐயோ….”
அடிமைப் பெண்கள் பயத்தில் அலறினார்கள். என்ன காரணம் என்று ரோடோப்பிஸ்
பார்த்தாள்.
ஒரு பெரிய கழுகு வானத்தில் இருந்து சடாரெனக் கீழே இறங்கி, அவர்கள்மேல் பாய்ந்து கொண்டிருந்தது. அடிமைப் பெண்கள் பயந்து ஓடினார்கள். அவர்கள் கைகளில் இருந்த துணிகள், நகைகள், செருப்பு, அத்தனையும் கீழே விழுந்து சிதறின.
கழுகு என்ன செய்தது? ரோடோப்பிஸின் இரண்டு சிவப்புச் செருப்புகளில் ஒன்றை மட்டும் கவ்வியது. பறந்து மறைந்தது. ரோடோப்பிஸ் வெளியே வந்தாள். அழுதாள். அவளுடைய அருமைச் செருப்பு தொலைந்துபோய் விட்டதே?
சாராக்ஸஸ் தன் வேலைக்காரர்களைச் சந்தைக்கு அனுப்பினார். அதே போல் சிவப்புச் செருப்புகள் வாங்கி வரச் சொன்னார். அந்த ஊரில் கிடைக்கவில்லை. தேடினார்கள், தேடினார்கள். எகிப்தின் ஒரு ஊரிலும் கிடைக்கவில்லை. பக்கத்து நாடுகள் ஒன்றிலும் கிடைக்கவில்லை. ரோடோப்பிஸ் அழுதுகொண்டேயிருந்தாள். அவளை சாராக்ஸஸால் சமாதானப்படுத்தவே முடியவில்லை.
அந்தக் கழுகு சாதாரணக் கழுகு அல்ல. ஹோரஸ் என்கிற கடவுள். நம் ஊர் கருட பகவான்போல் இவருக்குக் கழுகு முகம். இவருடைய ஒரு கண் சூரியன், இன்னொரு கண் சந்திரன் என்பது ஐதீகம். ஹோரஸ்தான் கழுகு உருவத்தில் வந்திருந்தார்.ஹோரஸ் நேராக அமாஸிஸ் மன்னனின் அரண்மனைக்குப் பறந்தார். அந்தச் சிவப்புச் செருப்பை, மன்னர் மடியில் போட்டார். என்ன நடக்கிறது என அவர் உணருமுன் மாயமாய்ப் பறந்து மறைந்தார்.
அமோஸிஸ் செருப்பைக் கையில் எடுத்தார், பார்த்தார். செருப்பின் அழகான வேலைப்பாடு அவரைக் கவர்ந்தது.
“இவ்வளவு அழகான செருப்பை அணியும் பெண் நிச்சயமாக உலகப் பேரழகியாகத்தான் இருக்க வேண்டும். அவளை நான் சந்தித்தேயாக வேண்டும்.”
நாடு முழுக்க டமாரம் அடிக்கச் சொன்னார்.
“இதனால் எல்லோருக்கும் தெரிவிப்பது என்னவென்றால், ஹோரஸ் கடவுள் நம் மன்னரிடம் ஒரு செருப்பைக் கொடுத்திருக்கிறார். அது பெண்கள் அணியும் செருப்பு. அந்தச் செருப்பு ஜோடியின் இன்னொரு செருப்பை யார் கொண்டு வருகிறார்களோ, அவர்களுக்கு ஃபாரோ பெரும் பரிசு கொடுப்பார்.”
பரிசுக்கு ஆசைப்பட்டுப் பல பெண்கள் தங்களுடைய சிவப்புச் செருப்புகளோடு வந்தார்கள். அவர்கள் பித்தலாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. துரத்தப்பட்டார்கள். செருப்புச் சொந்தக்காரிக்கான தேடல் தொடர்ந்தது.
சாராக்ஸஸ் அழகான கிரேக்க அடிமையை விலைக்கு வாங்கியிருப்பது அரசரின் உதவியாளர்களுக்குத் தெரிந்தது.
“நாம் தேடும் அழகி இந்தப் பெண்ணாக இருக்கலாமோ?”
அவர்கள் ரோடோப்பிஸ் வீட்டுக்கு வந்தார்கள். பூந்தோட்டத்தில் அழுதவாறு அவள் உட்கார்ந்திருந்தாள். அவள் கையில் ஒரு சிவப்புச் செருப்பு!
மன்னரின் உதவியாளர்களுக்கு மனம் நிறைய மகிழ்ச்சி.
ரோடோப்பிஸ் அருகே போனார்கள்
“நீ ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?”
“என் ஒரு செருப்பைக் கழுகு தூக்கிக் கொண்டு போய்விட்டது.”
“அந்த உன் செருப்பு நம் நாட்டு மன்னரிடம்தான் இருக்கிறது. எங்களோடு அரண்மனைக்கு வா. அதை மன்னர் தருவார்.
அவர்களோடு ரோடோப்பஸ் அரண்மனைக்குப் போனாள். செருப்பின் சொந்தக்காரி அவள்தான் என மன்னர் உணர்ந்தார். அவள் அழகில் மயங்கினார்.
“பேரழகியே, நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன். நீ தான் இனிமேல் எகிப்து ராணி.”
மன்னர் கட்டளையை ரோடோப்பஸ் ஏற்றாள். மன்னர் சொல்லி, சாராக்ஸஸ் மறுக்க முடியுமா? அவரும் ஒத்துக் கொண்டார்.
ரோடோப்பஸ் எகிது ராணியானாள். அவளும், மன்னர் அமாஸஸூம் பல நூறு ஆண்டுகள் ஆனந்தமாக வாழ்ந்தார்கள். (ரோடோப்பஸ் நைல் நதியின் ராணியாக,தெய்வமாகக் கருதப்படுகிறார்.)
இந்தக் கதை சொல்லும் சேதிகள் என்ன?
- பாரசீகம் தம் மீது படை எடுக்கும் அபாயத்தை எகிப்து அரசர்கள் உணர்ந்திருந்தார்கள். அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தார்கள்.
- எகிப்துக்கும் கிரேக்கத்துக்கும் நடுவே வலுவான வாணிபத் தொடர்புகள் இருந்தன.
- எகிப்து கிரேக்கத்தை விடப் பொருளாதாரத்தில் முன்னேறியிருந்தது. இதனால். கிரேக்க ஆண்களும் பெண்களும் வேலைகளுக்காக எகிப்து வந்தார்கள்.
- அடிமைகளை வேலைக்கு வைப்பதும், அவர்களை விற்பதும், வாங்குவதும் நடைமுறையில் இருந்த பழக்கங்கள்
- எகிப்து நாட்டு வீடுகள் பெரியவையாக, பூந்தோட்டம், நீச்சல் குளம், ஆகிய வசதிகளோடு இருந்தன.
- அரசர் சொல்லை யாரும் தட்டுவதில்லை.
- எகிப்தியருக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம்.
இத்தனை சின்னக் கதைக்குள் இத்தனை வரலாற்றுச் சேதிகளா?
தொடரும்…