Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » பண்டைய நாகரிகங்கள் – 20

பண்டைய நாகரிகங்கள் – 20

 நைல் நதி 

எகிப்து நாகரிகமும் நைல் நதியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணந்தவை. எகிப்தை இரண்டாகப் பிரித்தவாறு நைல் நதி ஓடுகிறது. உலகின் மிகப் பெரிய நதியான நைல் நதி மத்திய ஆப்பிரிக்காவில் தொடங்கி,  உகண்டா, சூடான், எகிப்து, ஆகிய நாடுகள் வழியாகப் பாய்கிறது, கெய்ரோவுக்கு அருகில் மத்திய தரைக் கடலில் சங்கமமாகிறது. மக்கள் நைல் நதிக் கரைகளில்தான்  குடியேறினார்கள். எகிப்து மக்களின் வாழ்க்கை, நாகரிகம், எல்லாமே நைல் நதியைச் சுற்றித்தான் சுழல்கின்றன.

நைல் நதி பாலைவன எகிப்து நாட்டின் ஜீவ நதி. எகிப்தின் பழைய பாடல் ஒன்று சொல்கிறது.

Egypt, Africa tourism destinations

மண்ணின் ஆனந்த ஊற்றாம் நைல் நதி போற்றி
எகிப்தைச் செழிப்பாக்க வந்தாய் நீ
உணவுகள் தருவது நீ, வாரி வழங்கும் வள்ளல் நீ
நல்லவை எல்லாம் படைப்பது நீ
எகிப்திய இரு நிலப் பாகங்களின் தலைமை நீ
எங்கள் களஞ்சியங்களை நிறைப்பது நீ
ஏழைகளுக்கு வளம் தருவது நீ.

ஹெரோடோட்டஸ் (Hertodotus) என்கிற கிரேக்கத் தத்துவ மேதை “எகிப்து நைல் நதியின் பரிசு” என்று குறிப்பிட்டார்.    ஏன் தெரியுமா? எகிப்து மேற்கு மற்றும் கிழக்குப் பாலைவனங்களில் அமைந்திருக்கிறது. இவை மழையைப் பார்க்காத வறண்ட பிரதேசங்கள். நாட்டின் பெரும்பகுதி  பாலைவனமாக இருந்தபோதிலும், டெல்ட்டா பகுதிகளில், மழை  கொட்டும். வெயில் காலங்களில் எத்தியோப்பிய மலைகளின் பனி உருகி, நைல் நதியில் தண்ணீர் பெருகும். இதனால், நைல் நதியில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு வரும். வெள்ளம் வடியும். அப்போது நைல் நதி விட்டுச் செல்லும் மணலும், வண்டலும், களிமண்ணும் வேளாண்மைக்குப் பெரிதும் உரம் ஊட்டுபவை. நதிக்கரைப் பகுதிகளைச் செழிப்பாக்கும். விவசாயம் அமோகமாக நடக்க இயற்கை எகிப்துக்குக் கொடுத்த மாபெரும் வரம் இது.

விவசாயம்

நைல் நதியில் ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அக்டோபர் மாதத்தில் வெள்ளம் வடியும். எனவே, அக்டோபரில் விவசாயம் தொடங்குவார்கள். மார்ச், மே மாதங்களில் அறுவடை நடக்கும், நைல் உபயத்தால், விவசாய காலத்தில் ஒரு ஒழுங்குமுறை இருந்தது. விவசாயம் அமோகமாக நடந்தது.  கோதுமை. பார்லி ஆகியவை முக்கியப் பயிர்கள்.

திராட்சை, வெங்காயம், பூண்டு, மாதுளம் பழம், வெள்ளரிக்காய், பீன்ஸ், பட்டாணி, முட்டைக்கோஸ், கீரை வகைகள், ஆகியவையும் பயிரானதாகச் சான்றுகள் சொல்கின்றன. பெரிய தொட்டிகள் கட்டி, திராட்சை ஒயின் தயாரிக்கும் வேலையும் அமோகமாக நடந்தது.

ஃப்ளாக்ஸ் (Flax) என்ற செடிகள் பரவலாக வளர்ந்தன. இந்தச் செடிகளின் தண்டுப் பாகத்தில் இருந்து இழை எடுக்கலாம். இந்த இழை பருத்தி போன்ற நூல். லினன் என்ற பெயர் கொண்டது. பருத்தியைப் போலவே, இந்த நூலையும் பயன்படுத்தி ஆடைகள் நெய்யலாம்.

வெள்ளக்காலத்தில் வரும் உபரி நீரைச் சேமித்தார்கள். இது நீர்ப்பாசனம், குடிநீர்  தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. தண்ணீர் சேமிப்பு, விநியோகம் ஆகியவற்றில் நாடாண்ட மன்னர்களே நேரடிக் கவனம் செலுத்தியதாக ஆதாரங்கள் சொல்கின்றன. பாசன வசதியால், பொதுமக்கள் உபயோகத்துக்கான பூங்காக்களையும் அரசர்கள் நிறுவினார்கள், பராமரிப்பு ஏற்பாடுகள் செய்தார்கள். பூச் சொரியும் மரங்கள், இன்சுவைப் பழ மரங்கள், காய்கறிச் செடிகள், திராட்சைக் கொடிகள் ஆகியவை இந்தப் பூங்காக்களில் இருந்தன.

மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
ஏர், மண்வெட்டி ஆகிய கருவிகளைப் பயன்படுத்தினார்கள். ஆடுகள், மாடுகள், கழுதைகள் போன்ற மிருகங்களின் உழைப்பு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டது.

உணவு

உலகிலேயே முதன் முதலில் கி. மு. 2600- ல் எகிப்தில் ரொட்டி தயாரிக்கப்பட்டது. கோதுமை ரொட்டியும் பார்லியில் தயாராகும் பீரும் அவர்களுடைய முக்கிய உணவுப் பொருட்களாயின. நைல் நதியில் மீன் பிடித்தார்கள். அன்றாட  சாப்பாட்டில் மீன் தனி இடம் பிடித்தது.

திராட்சை ஒயின் தயாரித்தார்கள். பீர் முக்கிய பானம், தண்ணீரைவிட அதிகமாகப் பருகப்பட்ட பானம். பரலோகத்திலும் பீர் அத்தியாவசியத் தேவை என்பது எகிப்தியர் நம்பிக்கை. கல்லறைகளில் உடலோடு, பீர்க் குடுவைகளையும் சேர்த்துப் புதைப்பார்கள். இன்னொரு முக்கிய பானம் ஒயின். பெரிய தொட்டிகள் கட்டி, திராட்சை ஒயின் தயாரித்தார்கள்.

உடை

பருத்தி, லினன் ஆடைகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தயாரிக்கப்பட்டன. எகிப்து சமுதாயத்தில், சமூக அந்தஸ்துப்படி ஆடைகள் மாறுபட்டன. சாதாரண மனிதர்கள் நம் ஊர் வேஷ்டி போன்ற ஆடையை இடுப்பில் கட்டுவார்கள். உடலுக்கு மேல் சட்டை போல் ஒரு ஆடை. இது பெல்ட் போல் கச்சையால் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும். அவர்கள் வீட்டுப் பெண்கள் கவுன் போன்ற உடை அணிவார்கள். இது கவுன் போல் லூஸாக இருக்காது. உடலை இறுக்கிப் பிடிக்கும் மேக்ஸி உடை.

பணக்காரர்களும், பிரபுக்களும், முட்டிவரை தொடும் சட்டை போடுவார்கள். அவர்கள் வீட்டுப் பெண்களின் உடை உழைக்கும் வர்க்கப் பெண்களுடையதுபோல்தான் இருக்கும். அரசர்கள் சேலை போன்ற உடலைச் சுற்றும் போர்வை அணிந்தார்கள். அதன்மேல் தோள் பட்டிகள். லினன் நாரால் நெய்யப்பட்ட இந்த உடைகளில் தங்க வேலைப்பாடுகள், கலர் டிசைன்கள் ஆகியவையும் இருக்கும்.

நகைகள்

அரசர்கள், பணக்காரர்கள், பிரபுக்கள் ஆகியோரின் அன்றாட அலங்காரத்தில் நகைகள் அத்தியாவசிய அம்சம். ஆண்கள், பெண்கள் இருபாலரும் நகைகள் அணிவார்கள். மோதிரம், தாயத்து, காதணி, வளையல், நெக்லஸ் போன்றவை பிரபலம். இவை தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. நகைகளில் அமெதிஸ்ட் (Amathyst) என்ற வயலெட் நிற ரத்தினம்,  லாப்பிஸ் (Lapis) என்கிற வைடூரியம், நீலம், பச்சை, சாம்பல் எனப் பல வண்ணங்களில் ஒளி விடும் டர்க்வா (Turquoise) என்கிற வைர வைடூரியங்களும் பொருத்தப்பட்டன.

எகிப்தியர்களுக்கு ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை உண்டு. இந்தப் பக்தி, நகைகளின் டிஸைன்களிலும் பிரதிபலித்தது.  முழு முதற் கடவுள் ரே, அவர் படைத்த மிருகங்கள், பறவைகள், மீன்கள், தாமரைப் பூ, காகிதம் தயாரிக்கும் பாப்பிரஸ் புல் செடி ஆகியவை பெரும்பாலும் இந்த நகைகளில் காட்சி அளித்தன.

நகைகளுக்கும் அவர்களுக்கும் எவ்வளவு நெருங்கிய தொடர்பு தெரியுமா? மரணம் அடையும்போது அவர்களுக்குப் பிடித்த அத்தனை நகைகளையும் அணிவித்துத்தான் கல்லறைக்குள் அடக்கம் செய்வார்கள்.

ஒப்பனை

ஆண்களும், பெண்களும், வாசனை எண்ணெய்கள், நறுமணப் பொருட்கள், முகப் பெயிண்டுகள் போன்ற அழகுப் பொருட்களை உபயோகித்தார்கள். ஆண்களும், பெண்களும் கண்களுக்கு மை தீட்டினார்கள். புகைக் கரி, ஈயத்தின் தாதுக் கனிமமான கலீனா (Galena) ஆகிய இரண்டையும் கலந்து வீடுகளில் மை செய்தார்கள். இந்த மை கண் பார்வையைக் கூர்மையாக்கும் என்ற ஆழ்ந்த மருத்துவ நம்பிக்கை நிலவியது. முகம் பார்க்கும் கண்ணாடியும் அவர்களிடம் இருந்தது. ஆண்கள் தலைமுடியை அடிக்கடி தண்ணீரால் கழுவுவார்கள். தலையில் வாசனைப் பொருட்கள் தேய்ப்பார்கள். தலைமுடியில் மருதாணி தடவுவார்கள்.

சிகை அலங்காரம்

பண்டைய எகிப்தில் பேன் தொல்லை அதிகமாக இருந்தது. இதிலிருந்து தப்பிக்க, ஆண்கள்,. பெண்கள் அனைவரும் மொட்டை அடித்துக்கொண்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்குத் தலையில் முடி வளரவிடுவதே இல்லை. மத குருக்களுக்கும் மொட்டைத் தலைதான். ஆண்களும், பெண்களும் வகை வகையாக விக் அணிந்தார்கள். மனித முடியால் செய்யப்பட்ட இந்தச் செயற்கை கேசங்கள் இயல்பாகப் புழங்கின.

பொழுதுபோக்குகள்

அடிக்கடி பண்டிகைகள், கொண்டாட்டங்கள் நடந்தன. அந்த சமயங்களில் விருந்து, பாட்டு, இசை, நடனம் என்று உல்லாச மழைதான். புல்லாங்குழல், டிரம்ஃபெட் உள்ளிட்ட ஊதுகுழல்கள், வீணை போன்ற நரம்பிசைக் கருவிகள், முரசுகள்  ஆகியவை அவர்களுடைய வாத்தியங்கள்.

செஸ் போன்ற விளையாட்டும் அவர்களுடைய பொழுதுபோக்காக இருந்தது. மற்போர் பிரபலமான விளையாட்டாக இருந்தது. வேட்டையாடுவது பணக்காரர்களின் முக்கிய பொழுதுபோக்கு. முயல், மான், எருது, யானை, சிங்கம், ஆகிய மிருகங்கள் அவர்களின் வேட்டைக் குறிகள். மீன் பிடிப்பதும் அவர்களுக்குப் பிடித்தமான காரியம்.  மாஜிக் செய்வது குழந்தைகளுக்குப் பிடித்த விளையாட்டு. அவர்கள் பந்துகளை வைத்தும் பல ஆட்டங்கள் விளையாடினார்கள்.

வீட்டு மிருகங்கள்

வீடுகளில் ஆடுகள், மாடுகள், கழுதைகள், பன்றிகள், வாத்துகள், புறாக்கள் ஆகியவை பல வீடுகளில் இருந்தன. ஏராளமான வீடுகளில் தேனீக்கள் வளர்த்தார்கள். தேன் உணவாகவும், மருந்தாகவும் பயன்பட்டது. தேன்கூட்டு மெழுகு மருந்தாகவும், மம்மிகளைப் பதப்படுத்தவும் உபயோகமானது.

போக்குவரத்து வசதிகள்

ஊர் விட்டு ஊர் போக எகிப்தியர்கள் என்ன செய்தார்கள்? நைல் நதியை நம்பியே வாழ்க்கை சுழன்றதால், நீர் வழிப் போக்குவரத்துத்தான் முக்கியத்துவம் பெற்றது. படகுகளும், சிறிய கப்பல்களும் புழக்கத்தில் இருந்தன. இந்தப் படகுகளில், நம் ஊர்த் தெப்பத் திருவிழாபோல் கடவுள் சிலைகள் ஊர்வலம் வருவதும் உண்டு.

சமுதாயத்தில் பெண்கள்

பெண்கள் கூடை பின்னுதல், வாசனைப் பொருட்கள் தயாரித்தல், ஆடைகள் தைத்தல், நகைகள் செய்தல் ஆகிய பணிகளைச் செய்தார்கள். பெண்களுக்குச் சமுதாயத்தில் நிறைய உரிமைகள் இருந்தன. அவர்கள் வேலை பார்க்கலாம், சம்பாதிக்கலாம், சொத்துக்கள் வாங்கலாம். சட்டத்தின் முன்னால் அவர்களுக்கு ஆண்களோடு சம உரிமை இருந்தது.

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top