முட்டைக்குள்ளிருந்து பிரபஞ்சம் பிறந்த கதைகளைப் பார்த்தோம். கிரேக்கம், எகிப்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் புராதனக் கதைகள் ஆண் – பெண் தேவதைகளின் சேர்க்கையால் பிரபஞ்சம் பிறந்ததாகச் சொல்கின்றன.
கிரேக்கம்
கிரேக்கம் சொல்லும் கதை இது. முதலில் எங்கும் வெட்ட வெளி. அதைச் சுற்றிப் பெருவெள்ளம். அந்த வெள்ளத்தில் வாழ்ந்தாள் ஓஷனஸ் (Oceanus) என்னும் கடல் தேவதை. அவளுக்கும், வடக்குக் காற்றுக்கும் காதல் வந்தது. இணந்தார்கள். ஈரினோம் (Eurynome) என்னும் பெண் குழந்தை பிறந்தது. ஈரினோம் காதல் கடவுள். தன் ஆசை மகளுக்காக ஓஷனஸ் பேரலைகளை உருவாக்கினாள். ஈரினோம் அவற்றின்மேல் ஏறி விளையாடினாள். அந்த ஆட்டத்தில் விண்ணுலகம், மண்ணுலகம், வானம், கடல், மிருகங்கள், பறவைகள், நீர்வாழ் இனங்கள் ஆகியவை பிறந்தன.
எகிப்து
எகிப்தியப் பழங்கதைகள் என்ன சொல்கின்றன? எங்கும் தண்ணீர். அங்கே ஆண் – பெண் ஜோடிகளாக எட்டுக் கடவுள்கள். இவர்கள் சேர்க்கை, முதலில் சூரியனையும் அடுத்து, பிற உயிரினங்களையும் படைக்கிறது.
ரோம்
கேலஸ் (Caelus) ரோமர்களின் வானக் கடவுள். அவருக்கும், உலகத்தின் கடவுள் கெயாவுக்கும் (Gaia) நெருக்கம் ஏற்படுகிறது. பிரபஞ்சத்தில் இருப்பவை அனைத்தும் இந்த ஜோடிகளின் வாரிசுகள்.
இந்தியா
இனி, முழுமுதற் கடவுள் பிரபஞ்சத்தை சிருஷ்டித்த கதைகளைப் பார்ப்போமா? சிவபெருமான் முட்டை மூலமாக பிரம்மாவைப் படைத்து, சிருஷ்டியைத் தொடங்கிவைத்ததைப் பார்த்தோம். இன்னொரு கதையில், முட்டை இல்லை. சிவபெருமான் தன் இடப்புறத்தை வருடுகிறார். விஷ்ணு அவதரிக்கிறார். அவர் காக்கும் கடவுள். அதுசரி, பிரபஞ்சமே இல்லையே, யாருமே இல்லையே, விஷ்ணு யாரைக் காப்பாற்றப் போகிறார்? என்றால், காக்கும் வேலை தொடங்கும் முன், ஒரு படைப்பு வேலையை சிவன் விஷ்ணுவுக்குக் கொடுத்திருக்கிறார். விஷ்ணு படைக்கவேண்டியது அந்தப் படைப்புக் கடவுளையே!
சிவபெருமானின் அடுத்த லீலை ஊழிப் பிரளயம். விஷ்ணு வெள்ளத்தில் மிதக்கிறார். ஆதிசேஷன் என்னும் பாம்பு அவருக்குப் படுக்கையாக விரிகிறது. பெருமாள் இப்போது வெள்ளத்தில், ஆதிசேஷன்மேல் ஆனந்தமான அனந்த சயனத்தில். அவர் நாபி திறக்கிறது, அதிலிருந்து ஆயிரம் இதழ்களோடு தெய்வீகத் தாமரை மலர் விரிகிறது. வெளியே வருகிறார் படைப்புக் கடவுள் பிரம்மா!
வெள்ளம் வடிகிறது. பிரம்மா தன் கடமையைத் தொடங்குகிறார். தாமரை மலரில் மூன்று இதழ்களைப் பிய்க்கிறார். முதல் இதழை மேலே வீசுகிறார்: சொர்க்கலோகம் பிறக்கிறது. இரண்டாம் இதழை பிரம்மா வீசுகிறார். பரந்த நீலவானம் படர்கிறது. இப்போது மூன்றாம் இதழைக் கீழே நழுவவிடுகிறார். உலகம், நம் உலகம் பிறக்கிறது.
நியூசிலாந்து
வெட்ட வெளியில், முழுமுதற் கடவுள் மட்டுமே இருக்கிறார். ரங்கினுயி (Ranginui) என்னும் வானக் கடவுள், பாப்பாட்டுவானுக்கு (Papatuanuku) என்னும் பூமித்தாய். இவர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள். இவர்களுக்கு ஏராளமான குழந்தைகள் பிறக்கின்றன. இந்த வம்சாவளிப் பெருக்கம்தான் நம் பிரபஞ்சம்.
பைபிள்
பைபிள்படி, நம் பிரபஞ்சம் முழுமுதற் கடவுளால் படைக்கப்பட்டது. அவர் ஆறு நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிருஷ்டி செய்தார்.
முதல் நாள்: வெளிச்சம் படைத்தார். அதை இருட்டிலிருந்து பிரித்தார். வெளிச்சத்தை நாள் என்றும், இருட்டை இரவு என்றும் அழைத்தார். இரண்டாம் நாள்: வானத்தை உருவாக்கினார். மூன்றாம் நாள்: பூமி, கடல்கள், மரங்கள், செடி கொடிகள். நான்காம் நாள்: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள். ஐந்தாம் நாள்: மீன்கள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள், பறவைகள்.
(கடவுளின் நாள் நம்முடைய இன்றைய 24 மணிநேர நாள் அல்ல. ஏனென்றால், இதிகாசங்களின்படி, மத நம்பிக்கைகளின்படி, கடவுள் நம்முடைய காலக் கணக்குகளைத்
தாண்டியவர். உதாரணமாக, இந்து மத நம்பிக்கைகளின்படி, படைப்புக் கடவுள் பிரம்மாவின் ஒரு நாள் என்பது 864 கோடி வருடங்கள். பைபிள் சொல்லும் நாள் கணக்கையும், இந்த அடிப்படையில்தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.)
ஆறாம் நாள்: வகை வகையாய் மிருகங்கள். இதுவரை செய்த படைப்புகளின் உச்சமாயக ஆதாம், ஏவாள் முதல் ஆண், பெண்! ஏழாம் நாள்: தன் பணியைக் கச்சிதமாகச் செய்து முடித்த கடவுள் ஓய்வு எடுத்துக்கொண்டார்.
பைபிள் சொல்லும் இன்னொரு சிருஷ்டி ரகசியக் கதை நோவாவின் மரக்கலம்.
இந்துமத சிவபெருமானைப் போலவே, பைபிள் காட்டும் முழுமுதற் கடவுளின் வேலையும், அழிப்பதும், மறுபடி படைப்பைத் தொடங்குவதும்தாம். பிரபஞ்சத்தில் அதர்மம் பெருகிவிட்டது. கெட்டனவற்றை அழித்து, நல்லன காக்க ஆண்டவன் முடிவெடுத்துவிட்டார். நோவா என்னும் தர்மத்தின் தலைவனை அழைக்கிறார். அவனை ஒரு மரக்கலம் தயரிக்கச் சொல்கிறார். நீளம், அகலம், உயரம், உள் வெளி அமைப்பு, பயன்படுத்தவேண்டிய மரம் என அவன் பின்பற்றவேண்டிய அத்தனை வடிவமைப்பு விவரங்களையும் தருகிறார். மரக்கலம் தயார்.
கடவுளின் அடுத்த கட்டளை – பிரபஞ்சத்தில் இருக்கும் எல்ல வகை ஜீவராசிகளிலும், ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு உயிரினங்களை கொண்டு வா. அவர்கள் எல்லோரையும் மரக்கலத்தில் பத்திரமாகத் தங்க வை.
சுமார் 45,000 வகை உயிரினங்கள் இப்போது மரக்கலத்தில் அடைக்கலம்.
அடுத்த கட்டளை – மரக்கலத்தில் இருக்கும் உயிரினங்களுக்குப் பல மாதங்கள் தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டு வா.
கடைசிக் கட்டளை – நீயும் மரக்கலத்தில் ஏறு. உள்ளே உட்கார்ந்துகொள். என்ன நடந்தாலும் பயப்படாதே. உங்கள் எல்லோரையும் காப்பாற்ற நான் இருக்கிறேன். நான் வெளியே வரச்சொல்லும்போது மட்டுமே, நீயும் உன்னோடு இருக்கும் ஜீவராசிகளும் வெளியே வரவேண்டும்.
நோவா மரக்கலத்தின் உள்ளே போனான். வெளியே, அண்டசராசரமே அதிரும் ஒலியோடு இடி. கண்பார்வையைப் பறித்திவிடும் பளிச் மின்னல். ஆனால், மரக்கலம் அமைதியின் உறைவிடமாக இருந்தது. நாற்பது நாட்கள் தொடர்ந்து மழை கொட்டியது. அடுத்த நூறு நாட்கள் ஊழி வெள்ளம். உலகம் மூழ்கியது. அங்கே வாழ்ந்த அத்தனை உயிரினங்களும் அழிந்தன.
வெள்ளத்தால் அடிக்கப்பட்ட மரக்கலம், அராரத் (Ararat) என்னும் மலையருகே ஒதுங்கியது. மழை நின்றது. ஒரு வருடத்துக்குப் பிறகு வெள்ளம் வடிந்தது. நோவாவையும், அவனோடு இருந்த அத்தனை உயிர்களையும் ஆண்டவன் வெளியே வரச் சொன்னார். தர்ம பூமியாக, நல்லவர்கள் வாழும் இடமாக, மறுபடியும் உலகம் தன் சுழற்சியைத் தொடங்கியது.
குர் ஆன்
தொடக்கத்தில் வானமும், பூமியும் சேர்ந்து ஒரே அமைப்பாக இருந்தன. அல்லா ஆணையின்படி, இவை இரண்டாகப் பிரிந்தன: ஆனால், ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழ சம்மதித்தன. சொர்க்கம், உலகம், இவற்றுக்கு நடுவே இருப்பவை என அனைத்தையும் அல்லா படைத்தார். இந்தப் படைப்புக்கு அல்லா ஆறு நாட்கள் எடுத்துக்கொண்டார் என்று சில குறிப்புகள் சொல்கின்றன. இல்லை, உலகத்துக்கு இரண்டு நாட்கள், மலைகள், ஜீவராசிகள் ஆகியவற்றுக்கு நான்கு நாட்கள், வனம், சொர்க்கம் ஆகியவற்றுக்கு இரண்டு நாட்கள் என்று மொத்தம் எட்டு நாட்கள் என்கின்றன பிற சில குறிப்புகள்.
இந்தப் பழங்கதைகள் வெறும் கட்டுக்கதைகள் என்று பலர் நினைக்கிறோம். இந்தக் கதைகள் , பல்லாயிரம் மைல்கள் தூரத்தில் இருந்த எகிப்து, கிரேக்கம், ரோம், சீனா, நியூசிலாந்து, இந்தியா
போன்ற நாடுகளில் உருவானவை. பல்வேறு காலகட்டங்களின் கர்ணபரம்பரைக் கதைகள். அறிவியலும், தகவல் தொடர்புகளும், விண்வெளி ஆராய்ச்சிகளும், இருந்திருக்கவே முடியாது என்று நாம் நம்புகிற காலங்களின் கதைகள். ஆனால், ஒரு ஆச்சரியம், இந்தக் கதைகளுக்குள் பல பொதுத் தன்மைகள் இருக்கின்றன:
- பிரபஞ்சத்தைப் படைத்த முழுமுதல் சக்தி நெருப்பாய்த் தகிக்கும் ஒரு சக்தி.
- பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னால், அற்புதமான ஒரு ஒலி (ஓம் ) எங்கும் நிறைந்திருந்தது.
- சிருஷ்டியின் தொடக்கம் ஊழிப் பெருவெள்ளம்.
- பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனையும், அந்த முழுமுதல் சக்தியிலிருந்து தோன்றியவை. ஆகவே, ஜடம், ஜீவன் ஆகிய எல்லாமே முழுமுதல் சக்தியின் பல்வேறு வடிவங்கள்தாம்.
- புல் அடுத்து பூக்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள், மீன்கள், கடைசியாக ஆண், பெண் என்று ஜனனம் வரிசைக் கிரமத்தில் நடக்கிறது. அதாவது, படைப்பில் ஒரு பரிணாம வளர்ச்சி இருக்கிறது.
மெய்ஞ்ஞானம் சொல்லும் பழங்காலப் பிரபஞ்சப் படைப்புத் தத்துவங்கள் இவை. பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன. விஞ்ஞானம், வானியல் போன்ற துறைகளில் நாம் அபார வளர்ச்சி அடைந்துவிட்டோம். இயற்கைக் கோள்களோடு மனிதர் படைக்கும் செயற்கைக் கோள்களும் போட்டிப் போட்டு, பிரபஞ்ச வெளியில் உலா வருகின்றன. இந்தப் புதிய அளவுகோல்களுக்குப் புராணக் கதைகள் ஒத்துவருமா?
தொடரும்…