Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » பண்டைய நாகரிகங்கள் – 18

பண்டைய நாகரிகங்கள் – 18

 எகிப்தின் நாகரிகம் பற்றிய அறிவுத் தேடல் எகிப்தியல் (Egyptology) என்று அழைக்கப்படுகிறது. இதைத் தொடங்கிவைத்தவர் ஹொவார்டு கார்ட்டர்  (Howard Carter) என்கிற பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர். சிறு வயது முதலே, எகிப்துக்குப் போக வேண்டும் என்று அவருக்கு வெறித்தனமான ஆசை.

பதினேழாம் வயதில், தன் கனவு தேசத்துக்குப் புறப்பட்டார். பதினான்கு ஆண்டுகள் பழங்கால நினைவுச் சின்னங்களைப் பராமரிக்கும் அரசாங்க வேலையில் ஈடுபட்டார். பிரெஞ்சு நாட்டிலிருந்து வந்த சுற்றுலாப் பயணிகளோடு சின்னச் சண்டை ஏற்பட்டு வேலை பறிபோனது. அடுத்த நான்கு வருடங்கள் ஓவியம், பழங்கால சாமான்களை விற்பது என வயிற்றை நிறைத்து, மனத்தை நிறைக்காத பல வேலைகள் செய்தார்.

king-tut-mummy-1068400-sw

ஒரு கட்டத்தில் கார்ட்டருக்கு நல்ல காலம் பிறந்தது.  கார்னர்வான் பிரபு (Lord Carnarvon) கார்ட்டரின் அகழ்வாராய்ச்சிக்கு முழுப் பண உதவி செய்ய முன் வந்தார். கார்ட்டர் தன் முயற்சியை 1909ல் தொடங்கினார். எகிப்து நாட்டின் பல பாகங்களில், பல  ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி நடத்தினார். தோண்டிய இடங்களில் எல்லாம் ஒன்றுமே கிடைக்கவில்லை. தோல்வி, தோல்வி, தோல்வி.   ஆனாலும், கார்ட்டர் அயராமல்  தன் முயற்சிகளைத் தொடர்ந்தார்.

பன்னிரெண்டு ஆண்டுகள் ஓடின. கார்னர்வான் பிரபுவின் பொறுமை எல்லையை எட்டியது. ஒரு நாள் கார்ட்டரைக் கூப்பிட்டு கெடு கொடுத்தார். அடுத்த சில மாதங்களுக்கு மட்டுமே இந்த ஆராய்ச்சிக்குப் பணம் தருவதாக இருக்கிறேன். அதற்குள் ஆராயச்சிக்குப் பலன் கிடைக்கவேண்டும்.

கார்ட்டர் பயந்து நடுங்கினார். அவருக்குத் திருமணம் ஆகவில்லை. வீட்டின் தனிமை இந்த பயத்தை அதிகமாக்கியது. கார்ட்டர் ஒரு நாள் கடைக்குப் போனார். வழியில் ஒருவன் கானரி என்ற ஒரு வகைப் பறவையை விற்றுக் கொண்டிருந்தான். அந்தப் பறவை கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது. கானரிப் பறவைகள் நம் ஊர்க் குயில்கள் மாதிரி. இனிமையாகப் பாடும். ஆனால், குயில் மாதிரிக் கறுப்பு நிறமல்ல. மஞ்சள் நிறமாக அழகாக இருக்கும்.

வேலையின் பயத்திலிருந்து விடுபட, தன் தனிமையில் துணை தர கானரியின் பாட்டு உதவும் எனக் கார்ட்டர் நினைத்தார். கூண்டோடு கானரியை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.

அவருடைய வேலைக்காரன் எஜமானரின் கையில் இருந்த கானரியைப் பார்த்தான்.
அவன் சொன்னான், “கானரி அதிர்ஷ்டம் தரும் பறவை, தங்கப் பறவை. கடவுள் அருளால், நீங்கள் இந்த வருடம் தங்கம் கொட்டும் ஒரு கல்லறையைக் கண்டு பிடிப்பீர்கள்.”

அவன் வாக்கு பலிக்க வேண்டும் என்று கார்ட்டர் பிரார்த்தித்தார்.  வீட்டில் இருக்கும்போதெல்லாம் கார்ட்டர் கானரியைக் கொஞ்சிக் கொண்டிருப்பார், அதன் இனிமையான குரலைக் கேட்டு ரசித்துக் கொண்டிருப்பார்.  மற்ற வேளைகளில் அவருக்கு ஒரே கவலைதான். முப்பது வருடங்கள் கழிந்துவிட்டன. எப்படியாவது ஜெயிக்க வேண்டுமே!

தனக்குத் தெரிந்த கடவுள்கள், தேவதைகள், குட்டி தேவதைகள், எல்லோரிடமும் வேண்டினார். அவருடைய வேண்டுதல் பலித்தது. நவம்பர் 4, 1922. கி .மு. 1332 முதல் கி.மு. 1323 வரை ஆண்ட அரசர்.  துட்டன் காமுன் (Tutankhamun) என்ற மன்னனின் கல்லறையைக் கார்ட்டர் தோண்டினார். ஒரு படிக்கட்டு தெரிந்தது. கார்ட்டர் கீழே இறங்கினார்.

கார்ட்டர் சொல்கிறார், “படிக்கட்டில் இறங்கும்போது ஒரே இருட்டு. என் கையில் இருந்த மெழுகுவர்த்தி மட்டுமே வெளிச்சம், அதன் சுடர் காற்றில் ஆடியது. திடீரென, அறை முழுவதும் வெளிச்சம், அங்கே கொட்டிக் கிடந்த தங்க சாமான்களில் இருந்து வந்த வெளிச்சம்!”

வேலைக்காரனின் வார்த்தை பலித்துவிட்டது, அவருடைய கானரிப் பறவை வந்த நேரம், தங்கம் கொட்டும் கல்லறையைக் கார்ட்டர் கண்டுபிடித்துவிட்டார். மரத்தால் செய்யப்பட்ட கோவில். அதன்மேல் முழுக்கத் தங்கத் தகடுகள். கூரையில்  பிரதானமாய் இரண்டு பாம்புச் சிற்பங்கள்.   துட்டன் காமுனின் தங்க சிம்மாசனம் பளபளத்தது. தன் கைப் பிடிகளில் இரண்டு நல்ல பாம்புகள் செதுக்கப்படிருந்தன. ஃபாரோ மன்னர்களைப் பாதுகாக்க அவர்கள் அருகே விஷப் பாம்புகள் இருக்கும் என்பது புராணக் கதை. அதன் அடிப்படையில் இருந்தன இந்தப் பாம்புகள்.

துட்டன் காமுனின் மம்மி (பதம் செய்யப்பட்ட உடல்) கிடைத்தது. தங்கத்தால் செய்யப்பட்ட முக, உடல் கவசங்கள் மம்மியைப் பாதுகாத்தன. தங்க நகைகள், அற்புதக் கலை நயம் கொண்ட சிலைகள், மன்னரின் லினன் ஆடைகள், முகம் பார்க்கும் கண்ணாடி, மதுக் கோப்பைகள், எழுதுகோல், என ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள்!

கார்ட்டருக்கு எக்கச்சக்க சந்தோஷம், பதின்மூன்று வருட உழைப்புக்குப் பலன் கிடைத்துவிட்டது.   உலக அகழ்வு ஆராய்ச்சியில் கார்ட்டரின் இந்தக் கண்டுபிடிப்பை மிஞ்ச, இதற்கு முன்னும் பின்னும் யாருமே இல்லை.

எகிப்தில் கார்ட்டருக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஏனென்றால், எகிப்திய மத நம்பிக்கைகளின்படி, ஆராய்ச்சி என்ற பெயரில் மம்மிகளைத் தோண்டுதல், மிகப் பெரிய பாவ காரியம். அப்படிப் பாவம் செய்தவர்களைக் கடவுள் தண்டிப்பார் என்று அவர்கள் நம்பினார்கள். இந்தத் தண்டனைக்கு அவர்கள் வைத்த பெயர் மம்மியின் சாபம்.

பல ஆராய்ச்சியாளர்கள், மம்மியின் சாபம் தங்கள் மேல் விழுந்துவிடக் கூடாது என்று பயந்தார்கள். மம்மிகளைத் தொடுவது தவிரப் பிற ஆராய்ச்சிகள் செய்தார்கள். கார்ட்டருக்கு இந்த மூட நம்பிக்கை கிடையாது. தைரியமாக, துட்டன் காமுனின் மம்மியைப் பரிசோதித்தார்.

அன்று மாலை கார்ட்டர் வீடு திரும்பினார். வேலைக்காரர் அவசரமாக அவரிடம் ஓடிவந்தார். அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் கார்ட்டரின் அன்புக்குரிய கானரிப் பறவை சிதறிக் கிடந்தது.
“ஐயா, ஒரு நல்ல பாம்பு எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை. திடீரென அதைக் கானரியின் கூண்டுப் பக்கத்தில் பார்த்தேன். கூண்டுக்குல் நுழைந்தது. கானரியை ரண களமாக்கிவிட்டுத் தோட்டப் பக்கமாகக் காணாமல் போய்விட்டது.”

பாம்பா? கல்லறையில், துட்டன் காமுனின் சிம்மாசனத்தில், பார்த்த பாம்பா? மம்மியின் சாபம் பொய்யல்ல, நிஜம் என்று எனக்கு எச்சரிக்கப் பாம்பு வந்ததா? இனிமேல் மம்மிகளைச் சீண்டாதே. சீண்டினால் உனக்கும் கானரி கதைதான் என்று  சொல்ல வந்ததா?

கார்ட்டருக்குப் புரியவில்லை. இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்த சில மாதங்களில், ஆராய்ச்சிக்குப் பண உதவி செய்த கார்னர்வான் பிரபு மரணம் அடைந்தார். மம்மியின் சாபம் அவரைக் கொன்றது என்றார்கள் மத நம்பிக்கைவாதிகள்.

இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு கார்ட்டர் ஆராய்சிகளில் இருந்து ஓய்வு எடுத்தார். இங்கிலாந்துக்குத் திரும்பினார். பழங்காலப் பொருட்களை சேமிக்கத் தொடங்கினார்.  பதினேழு ஆண்டுகள், தம் 65ம் வயதுவரை வாழ்ந்தார். மம்மியின் சாபம் உண்மையானது என்றால், கார்ட்டர் உடல் நலமாக வாழ்ந்தது எப்படி என்று கேட்கிறார்கள் பகுத்தறிவாளர்கள்.

மம்மியின் சாபம் உண்மையா, பொய்யா? மர்மங்கள் நிறைந்த எகிப்து நாகரிகத்தில் விடை காண முடியாத புதிர்!

கார்ட்டர் ஒய்வு பெற்றபோதும் அவருடைய கண்டுபிடிப்பு, நூற்றுக்கணக்கான அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு மாபெரும் உந்து சக்தியானது.

பிற நாகரிகங்களோடு ஒப்பிடும்போது எகிப்தியல் எளிதானது. பிற நாகரிகங்களில் எங்கே தோண்ட வேண்டும் என்று நிர்ணயிப்பதே  மிகக் கடினமான வேலை. பொக்கிஷங்கள் நாட்டில் எங்கேயும் புதைந்து கிடக்கலாம். எகிப்தில் பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் பிரமிட்கள் ஆராய்ச்சியாளர்களின் கலங்கரை விளக்கங்களாக இருந்தன. அப்புறம், பண்டைய தலைநகரங்கள் எல்லாமே நைல் நதிக்கரை ஓரமாக வரிசையாக இருந்தன. எனவே தேடுதல் கொஞ்சம் சுலபம்.

எகிப்தின் பண்டைய தலைநகரான தீப்ஸ் அருகே நடந்த அகழ்வுகள் நிஜப் புதையல்கள். அந்த ஏரியா முழுக்க, தோண்ட தோண்ட, அற்புதமான பழங்காலப் பொருட்கள் கிடைத்தன. அரச குடும்பத்தைச் சேர்ந்த அறுபத்தி இரண்டு பேரின் கல்லறைகள் இங்கே கண்டெடுக்கப்பட்டன. அதனால், இந்த இந்தச் சுற்றுப்புறத்துக்கே “சக்கரவர்த்திகளின் சமவெளி” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பெயர் வைத்து விட்டார்கள்.

indexகல்லறைகளுக்குள் இத்தனை நகைகள், வைடூர்யங்கள் எனச் செல்வங்களைப் புதைத்து விட்டு செக்யூரிட்டியா போட முடியும்? கி. மு. 1200 – ல் இருந்து கி. மு. 20 வரையிலான கால கட்டத்தில் பல கொள்ளைக்காரர்கள் இவற்றைச் சூறையாடி இருக்கிறார்கள். இவர்களின் கொள்ளைகளுக்குப் பிறகு மிஞ்சிய தடயங்களே எகிப்தின் நாகரிக அடையாளங்கள்.

இந்த அடையாளங்கள் காட்டும் நாகரிகம்,  ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், இப்படி ஒரு சமுதாயம் வாழ்ந்திருக்க முடியுமா? வாழ்க்கை முறை, அரசாட்சி, நிர்வாகம், கட்டடக் கலை, கணிதம், மருத்துவம், விவசாயம் ஆகிய பல்வேறு துறைகளில் இத்தனை சாதனைகளா?

 

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top