எகிப்திய நாகரிகம் ( கி.மு 3150 – கி.மு. 332 )
ஆரம்ப நாள்கள்
கரை புரண்டு ஓடி வரும் உலகின் மிக நீளமான நைல் நதி. ஒட்டகங்கள் கம்பீர பவனிவரும் பரந்து விரிந்த சஹாரா பாலைவனம். உயர்ந்து நிற்கும் பிரம்மாண்ட பிரமிட்கள். சிங்க உடலும், மனித முகமுமாகப் பிரமிக்க வைக்கும் ஸ்ஃபிங்க்ஸ் (Sphinx) சிலைகள். தன் சுட்டுவிரல் அசைவில் சாம்ராஜ்ஜியங்களைச் சுழலவைத்த பேரழகி கிளியோபாட்ரா… எகிப்தின் வரலாற்றுக்கும் நாகரிகத்துக்கும் பல்வேறு முகங்கள் உள்ளன. இவை நமக்குத் தெரிந்த முகங்கள். இவை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்தான். எகிப்தின் நாகரிக வளர்ச்சி சரித்திர சமுத்திரம்.
நில அமைப்பு
ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய மூன்று கண்டங்களும் சந்திக்கும் இடத்தில் எகிப்து அமைந்துள்ளது. இஸ்ரேல், ஜோர்டான், லிபியா, சவுதி அரேபியா, சூடான் ஆகியவை எகிப்தின் அண்டை நாடுகள். மூன்று பக்கங்களில் கடல் – வடக்கில் மத்தியதரைக் கடல், தெற்கிலும் கிழக்கிலும் செங்கடல், தெற்கில் லிபியப் பாலைவனம். இந்தப் பூகோள அமைப்பு, பக்கத்து நாடுகளிலிருந்து இயற்கை தந்த பாதுகாப்பு. இதனால், எகிப்தின் நாகரிகமும், தனித்துவத்தோடு வளர முடிந்தது.
எகிப்தின் இன்றைய அதிகாரபூர்வமான பெயர் எகிப்திய அரபுக் குடியரசு. இந்தப் பெயர்தான் எப்படியெல்லாம் மாறி வந்திருக்கிறது தெரியுமா? நாகரிக ஆரம்ப காலங்களில், கெமெட் (Kemet) என்று பெயர். கறுப்பு நிலம் என்பது இதன் பொருள். நைல் நதி அடிக்கடி வெள்ளப் பெருக்கெடுத்துப் பாய்ந்துவரும். பெருவெள்ளம் ஓயும்போது, கறுப்பு நிறக் கரிசல் மண்னை விட்டுச் செல்லும், அதனால், இந்தப் பெயர். சிவப்பு நிலம் என்று பொருள்படும் டெஷ்ரெட் (Deshret) என்றும் பலர் அழைத்தார்கள். எகிப்தின் நிலப்பரப்பில் 94.5 சதவிகிதம் பாலைவனம். இந்த நிலப்பரப்பு சிவப்பு மண் கொண்டது. அடுத்து வந்த பெயர் Hwt-ka-Ptah. நம் ஊர் கலைமகள்போல், எகிப்தியக் கலைஞர்களின் தெய்வம் Ptah. தங்கள் நாட்டுக் கலைகளிலும், கைவினைத் திறமைகளிலும் பெருமைகொண்ட குடிமக்கள் வைத்த பெயர். எகிப்துக்குப் பெருமளவில் கிரேக்கர்கள் வந்தார்கள். அவர்களுக்கு இந்தப் பெயர் வாயில் நுழையவில்லை. Aegyptus என்று உச்சரித்தார்கள். இதுவே மருவி, Egypt என்றாகிவிட்டது.
இதிகாச ரகசியம்
எகிப்து “ரகசியங்கள் நிறைந்த நாடு” என்று வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள். அப்படி என்ன த்ரில்லர் ஸ்டோரி எகிப்துக்கு? “இயற்கை பாதுகாக்கிற நாடு மட்டுமல்ல, இறைவன் விரும்புகிற நாடும் எகிப்துதான், கடவுள் முதலில் படைத்ததும் எகிப்துதான்” என்று பெருமையோடு அந்த மண்ணின் மைந்தர்கள் மார் தட்டுகிறார்கள். தங்களுடைய சுவாரஸ்யமான புராணக் கதைகளை அவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள்.
எகிப்து தோன்றுவதற்கு முன்னால், பிரபஞ்சம் எங்கும் ஒரே இருட்டு. நன் (Nun) என்கிற தண்ணீர்ப் பரப்பு மட்டுமே இருந்தது. நன் மிக சக்தி கொண்ட தண்ணீர். அது இருட்டிலிருந்து பளபளக்கும் ஒரு முட்டையை உருவாக்கியது. அந்த முட்டையின் பெயர் ரே (Re).
ரே மந்திர சக்தி கொண்ட முட்டை. ரேயால் எந்த சக்தியையும் படைக்க முடியும், எந்த மனித, மிருக உருவத்தையும் எடுக்க முடியும். அந்த சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு ரேயின் பெயர் மாறும். ரே தன் உண்மைப் பெயரை மட்டும் யாரிடமும் சொல்லக்கூடாது. ரேதான் முழு முதற் கடவுள், சூரியக் கடவுள்.
ரே முதலில் படைத்தது இரட்டைக் குழந்தைகள். ஷூ (Shu) என்கிற ஆண் குழந்தைதான் காற்றுக் கடவுள். அடுத்து வந்த டெஃப்னட் (Tefnut) என்ற பெண் குழந்தை மழைக் கடவுள். இவர்கள் இருவருக்கும் கெப் (Geb), நட் (Nut) என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தன.
கெப் பூமிக் கடவுள். நட் வானத்தின் கடவுள். இவர்களுக்கு ஐஸிஸ் (Isis), ஓஸிரிஸ்
(Osiris), நெப்திஸ் (Nephthys), ஸெட் (Set) என்ற நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.
இந்தக் கடவுள்கள் அத்தனை பேரும் சேர்ந்து நைல் நதி எப்போதும் தண்ணீர் வரும்
ஜீவ நதியாக இருக்க வரம் கொடுத்தார்கள். எகிப்து நாடு வளங்கள் நிறைந்த பூமியானது. இந்தப் பொன் விளையும் பூமியில் வாழும் ஆண்கள், பெண்கள், மிருகங்கள். பறவைகள், மீன்கள் ஆகிய எல்லா ஜீவராசிகளையும் ரே படைத்தார்.
நாடு, மக்கள், மற்ற உயிரினங்கள், அத்தனையும் தயார். அவர்கள் நல்லவர்களாக, தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒற்றுமையோடு, வாழ்ந்தால்தானே எகிப்து நாட்டின் வருங்காலம் சிறப்பாக இருக்க முடியும்? அதற்கு அவர்களுக்கு வழி காட்ட நல்ல அரசர் தேவை. தானே அந்த அரசராக ரே முடிவு செய்தார்.
ரே மனித வடிவம் எடுத்தார். எகிப்து நாட்டின் முதல் அரசர் ஆனார். இந்த ராஜா அவதாரத்தில் அவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர் ஃபாரோ (Pharaoh). ரே ஆயிரம் ஆயிரம், பல்லாயிரம் ஆண்டுகள் எகிப்தை ஆண்டார். கடவுள்களின் நேரக் கணக்கு நம்மிடமிருந்து வித்தியாசமானது. நம் ஒரு வருடம் அவர்களுடைய ஒரு மணி நேரம், ஒரு நிமிட நேரமாகக்கூட இருக்கலாம்.
பல்லாயிரம் ஆண்டுகள் ஒடியபின் மெள்ள மெள்ள ரேக்கு முதுமை வரத் தொடங்கியது. வயதான அவருடைய கட்டளைகளை மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். எகிப்து நாடு அழிவுப் பாதையில் நடை எடுத்து வைத்தது.
ரே கவலைப்பட்டார். மற்றக் கடவுள்களிடம் ஆலோசனை கேட்டார்.
அவர்கள் சொன்னார்கள்.
‘உங்கள் கண் பார்வை மிக சக்தி கொண்டது. அயோக்கியர்கள் பக்கம் உங்கள் கண்களைக் காட்டுங்கள். அப்போது ஷெக்மத் என்று ஒரு பெண் தோன்றுவாள். அவள் அதர்மங்களை அழித்து தர்மத்தை நிலை நாட்டுவாள்.’
ரே தன் கண்களைக் கூர்மையாக்கினார். நம் ஊர்க் காளி சிலையோ, படமோ நினைவிருக்கிறதா? முகத்தில் ஆக்ரோஷம், நெருப்பாய்ச் சிவந்த கண்கள், கையில் ஒரு சூலாயுதம்!
ஷெக்மத் புறப்பட்டாள். ஈவு இரக்கம் இல்லாமல். அத்தனை அயோக்கியர்களையும் கொன்று தீர்த்தாள். எகிப்து மறுபடியும் நல்லவர்களின் நாடாயிற்று.
ரே தன் முடிவு நெருங்குகிறது என்பதை உணர்ந்தார். எகிப்தின் வருங்காலம் பாதுகாப்பாக இருக்க ஆட்சியை யாரிடம் நம்பிக்கையாக ஒப்படைக்கலாம் என்று சிந்தித்தார்.
ரேயின் பேத்தி ஐஸிஸ் மிக புத்திசாலி. தன் ரகசிய சக்திகளை ஐஸிஸுக்குக் கற்றுக் கொடுத்தார். அவள் கணவர் ஓஸிரிஸ் எகிப்தின் மன்னரானார். அவர்தான் இரண்டாவது ஃபாரோ.
சில ஆண்டுகளில் ரே மறைந்தார். அவர் வகுத்த பாதையில், ஓஸிரிஸின் நல்லாட்சி
தொடர்ந்தது. இதற்குப் பிறகு வந்த அரசர்கள் எல்லோருமே ஃபாரோக்கள் என்றுதான் அழைக்கப்பட்டார்கள். தாங்கள் ரே கடவுளின் அவதாரங்கள், தங்கள் எல்லோருள்ளும் கடவுளின் சக்தி இருக்கிறது என்பதற்காக இந்த அடைமொழியை அவர்கள் வைத்துக்கொண்டிருக்கலாம். ரே, ஓஸிரஸ் இருவர்தான் கடவுள்கள். பிறகு வந்த அரசர்கள் அத்தனைபேரும் மனிதர்கள்தாம். ஆனாலும், மக்கள் அவர்களைக் கடவுளின் அவதாரங்களாகக் கருதினார்கள், மதித்தார்கள், வணங்கினார்கள்.
இது இதிகாசம் சொல்லும் கதை. வரலாறு என்ன சொல்கிறது?
பழைய கற்காலத்தின் பிற்பகுதியில், அதாவது, சுமார் இரண்டரை அல்லது ஒன்றரை லட்சம் வருடங்களுக்கு முன்னால். ஆப்பிரிக்காவின் தென் பகுதியில் முதல் பெண் தோன்றினாள். ஆண் உதவி இல்லாமலே, வம்ச விருத்தி செய்யும் சக்தி இவர்களுக்கு இருந்தது. மனித இனம் பெருகியது. பழைய கற்காலத்தின் பிற்பகுதியில், பெரும்பாலும் பாலைவனமான ஆப்பிரிக்காவில் வெப்பம் அதிகமானது. காய்கறி, பழச் செடிகள் வாடின, வதங்கின, மறையத் தொடங்கின. பசுமை மறையும்போது, அவற்றை உணவாக நம்பி வாழ்ந்த விலங்குகள், பறவைகள் வேறு இடங்களுக்குப் போயின. மனிதர்களும் உணவு கிடைக்கும் இடங்களைத் தேடிப் போவார்கள். அவர்கள் பயணம், எகிப்து நாட்டின் செழிப்பு நிறைந்த நைல் நதிக் கரையில் சங்கமித்தது. இதுதான் எகிப்தின் சரித்திர, நாகரிக வளர்ச்சி ஆரம்பம்.
தொடரும்…