12. கி. பி. 1644 முதல் கி.பி. 1911 வரை – கிங் வம்ச (Qing Dynasty) ஆட்சிக் காலம்
சீனாவின் முதல் மன்னராட்சி கி. மு. 1600 முதல் கி. மு 1046 வரை தொடர்ந்த ஷாங் வம்ச (Shang Dynasty) ஆட்சி. 3511 ஆண்டுகளுக்குப் பின், இந்தச் சகாப்தம் முடிந்தது. சீனாவின் கடைசி மன்னராட்சி தந்தவர்கள் என்னும் பெருமை இவர்ளைச் சாரும்.
சீனா இன்று உலகச் சந்தையில் வகை வகையான பொருள்களைக் கொண்டுவந்து குவிக்கிறது. இதற்கு முதல் புள்ளி வைத்தவர்கள் கிங் சக்கரவர்த்திகள். கி.பி. 1700-ல், வெளிநாட்டவர் சீனாவில் தொழிற்சாலைகள் தொடங்க அரசாங்கம் அனுமதி கொடுத்தது. அமெரிக்கா, இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் போன்ற பல
நாடுகள் 13 தொழிற்சாலைகள் ஆரம்பித்தார்கள். சீன வணிக வரலாற்றில், இது ஒரு முக்கிய ஆரம்பம். இதன் அடுத்த கட்டமாக, கிழக்கு இந்திய கம்பெனி, குவான் ஜோ(Guangzhou) என்னும் துறைமுக நகரத்தில் கிளை திறந்தார்கள். ஏற்றுமதி, இறக்குமதி அமோகமாக வளரத் தொடங்கியது.
மஞ்சூ சக்கரவர்த்திகளில், சீனாவை உச்சத்துக்குக் கொண்டு போனவர்கள் இருவர். அவர்கள் ஒரு தாத்தாவும் அவர் பேரனும், தாத்தா – காங்ஸி பேரரசர் (Kangxi Emperor).இவர் கி.பி. 1667 முதல் கி.பி. 1722 வரை 55 ஆண்டுகள் நல்லாட்சி செய்தார். எதிரிகளிடமிருந்து சீனாவைப் பாதுகாக்க, எல்லைகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தினார். இலக்கிய வளர்ச்சியில் காங்ஸி பங்கு மகத்தானது. அறிஞர்கள் குழு அமைத்தார். சீன வரலாற்றையும், புராதனப் பெருமை கொண்ட இலக்கியங்களையும் புதிப்பித்து வெளியிடுவது இவர்கள் பணி. பழம்பெருமை போற்றியவர், சீனாவின்
கலாசார ஜன்னல்களையும் விசாலமாகத் திறந்தார். இங்கிலாந்து, ஸ்வீடன், டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகளின் கல்விமுறைகளை அறிமுகம் செய்தார். 18 , 19 நூற்றாண்டுகளில், அற்புதமான புதினங்களும், நாடகங்களும் படைக்கப்பட்டன. காங்ஸி விதைத்த ஐரோப்பியத் தாக்கம் இதற்கு முக்கிய காரணம். சீனக் கதவுகள் வெளிநாட்டவர்களுக்காக அகலத் திறந்தன. 1793- ல், இங்கிலாந்தோடு அரசு முறையிலான உறவு தொடங்கியது, இங்கிலாந்து நாட்டுத் தூதர் சீனா வந்தார். ராஜாங்க மரியாதைகளோடு வரவேற்கப்பட்டார்.
பேரர் – கியன்லங் பேரரசர் (Qianlong Emperor). 1735 முதல் 1796 வரை 61 ஆண்டுகள் இவர் செங்கோல்தான் சீனாவின் தலைவிதியை நிர்ணயித்தது. ராணுவ யுக்திகளில் வித்தகரான இவர், பத்து முக்கியப் போர்கள் நடத்தினார், அனைத்திலும் வெற்றி. மங்கோலியா, திபெத், நேபாளம், மத்திய ஆசியப் பகுதிகள் எனப் பல நாடுகளை வென்று சீனாவை விரிந்த சாம்ராஜ்ஜியமாக்கினார்.
கியன்லங் போர்களில் மட்டும் தன் திறமையைக் காட்டவில்லை. இவர் மாபெரும் கலாரசிகர், இலக்கிய ஆர்வலர். ஓவியங்கள், பித்தளை, பீங்கான், இனாமல், அரக்குக் (lacquer) கலைப்பொருட்கள் என இவர் சேமித்துவைத்த பொக்கிஷங்கள் இன்றும் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.
கியன்லங் ஒரு கவிஞர், எழுத்தாளர். 40,000 கவிதைகளும், 1300 கட்டுரைகளும் படைத்திருக்கிறார். இந்த ஆர்வம், மற்றொரு மாபெரும் சாதனை படைக்க அவரைத் தூண்டியது. சீனாவில் அதுவரை வெளியாகியிருந்த அத்தனை தத்துவ, வரலாற்று, இலக்கியப் படைப்புகளையும் தொகுப்புகளாக்கி வருங்கால சந்ததியினருக்கு அழியாச் சொத்துகளாக விட்டுப்போகவேண்டும் என்னும் பேராசை கியன்லங்குக்கு வந்தது. இதை நிறைவேற்றியும் காட்டினார்.
361 அறிஞர்கள் 1773 முதல் 1782 வரை ஒன்பது வருடங்கள் அயராது உழைத்து, இந்தத் தொகுப்பை உருவாக்கினார்கள். இதற்காக அவர்கள் 10,000 நூல்களைப் படித்தார்கள், அவற்றுள் 3461 நூல்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஸிக்கு க்வான்ஷூ (இந்தச் சீன வார்த்தைக்கு, இலக்கியத்தின் நான்கு பகுதிகளின் மொத்த நூலகம் என்று பொருள்) என்ற தலைப்பில் அறிஞர் குழு தயாரித்த தொகுப்பு, 36,381 அத்தியாயங்களும், 23
லட்சம் பக்கங்களும் கொண்ட மாபெரும் நூல்! இதை வார்த்தைகளில் வடிக்க 15,000 எழுத்தர்கள் தேவைப்பட்டார்கள். இந்தத் தொகுப்புக்கு மட்டுமல்ல, பேரரசர் கியன்லங் அவர்களுக்கும் வரலாற்றில் அழியாத இடம் கிடைத்தது.
கலை, இலக்கிய தாகங்களும், தேடல்களும் அபாயகரமானவை. கட்டுப்பாட்டுக்குள் வைத்திராவிட்டால், இவை ஆள்களை விழுங்கிவிடும். பேரரசர் கியன்லங் விஷயத்திலும் இதுதான் நடந்தது. எழுத்தையும், கலைகளையும் பின் தொடர்ந்த சக்கரவர்த்தி ஆட்சியை, மக்களை மறந்தார். நாடு கை நழுவத் தொடங்கியது. சீனாவின் பல்வேறு பாகங்களில் உள்நாட்டுக் கலவரங்கள் ஆரம்பித்தன. இதன் வெளிப்பாடு, 1794-ல் தொடங்கி, பத்து வருடங்கள் நீடித்த வெள்ளைத் தாமரைக் கிளர்ச்சி (White Lotus Rebellion).
பேரரசர் தொடங்கியதால், தடி எடுத்தவர்கள் எலோரும் தண்டல்காரர்கள் ஆனார்கள். பொதுமக்களிடம் வரி என்ற பெயரில் பணம் வசூலித்தார்கள், கட்டைப் பஞ்சாயத்து நடத்தினார்கள். இதற்கு எதிராகப் பொதுமக்கள் வெள்ளைத் தாமரைச் சங்கம் என்னும் அமைப்பைத் தொடங்கினார்கள். நாட்டின் பல பாகங்களில் போராட்டங்கள் எழுந்தன.
அரசின் ராணுவம் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. அடக்கப் பத்து வருடங்கள் எடுத்தது. ஜெயித்தாலும், எப்போது எரிமலை குமுறுமோ என்னும் பயம்! என்றும் கவிழ்ந்துவிடலாம் என்னும் கலக்கம் பேரரசர்கள் மனங்களில் முளைவிடத் தொடங்கிவிட்டது.
கிங் வம்ச ஆட்சியிலும், சீன வரலாற்றிலும், அபினிப் போர்கள் (Opium Wars) மிக முக்கியமானவை. இவை வர்த்தகப் போர்கள். முதல் அபினிப் போர் (1839 – 1842), சீனாவுக்கும், இங்கிலாந்துக்குமிடையே நடந்தது: இரண்டாம் அபினிப் போரில் (1856 – 1860), ஓரணியில் சீனா, மறு அணியில், பிரிட்டிஷ், பிரெஞ்சு நாட்டுப் படைகள் கை கோர்த்து நின்றன.
பிரிட்டிஷாரின் வியாபாரம் எப்போதுமே அவர்கள் அரசியல் ஆசைகளின் நுழைவாயிலாக இருந்தது. இந்தியாவில் வியாபாரிகளாகப் புகுந்த கிழக்கு இந்தியக் நாட்டையே அடிமைப்படுத்தவில்லையா? சீனாவிலும், இதே நாடகம் நடத்த முனைந்தார்கள்.
இங்கிலாந்தில், சீனப் பட்டுக்கு ஏகக் கிராக்கி. இங்கிலாந்தின் இறக்குமதி எக்கச்சக்கம். சீனர்களுக்கு இங்கிலாந்துத் தயாரிப்புகளில் அத்தனை மோகம் இருக்கவில்லை. சீனா தன் ஏற்றுமதிக்கு வெள்ளியைப் பண்டமாற்றாகக் கேட்டது. இந்த நிலை தொடர்ந்தால், தன் வெள்ளிக் கையிருப்பு சரியும் என இங்கிலாந்து பயந்தது. இதைச் சரிக்கட்ட, அவர்கள் கண்டுபிடித்த குறுக்கு வழி – அபினி.
சீனாவில், கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதலாகவே அபினி வீடுகளில் சர்வ சாதாரணமாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்து. பதினேழாம் நூற்றாண்டில், சீனா வந்த ஐரோப்பியர்கள், புகையிலையோடு அபினியைச் சேர்த்துப் புகைப்பதையும், சுகபோக மயக்கத்தில் புரள்வதையும் சீனர்கள் பார்த்தார்கள். அபினி மருந்து மட்டுமல்ல, போதைப் பொருளும்கூட, என்னும் பாலபாடம் ஆரம்பமானது. இந்த போதை ஆசையை பிரிட்டிஷார் தங்கள் வளர்ச்சிக்குப் பகடைக்காயாக்கினார்கள்.
இந்தியாவின் வங்காளத்திலும், காசியிலும் அபினித் தொழிற்சாலைகள் தொடங்கினார்கள். பிரிட்டீஷார் உபயத்தில், சீனக் கடைத்தெருக்களில், இந்திய அபினி குவிந்தது. சீனா அபினியைத் தடை செய்ய முயற்சித்தது. இந்தச் சலசலப்புக்கா இங்கிலாந்துக் குள்ளநரி பயப்படும்? நேர் வழிகளிலும், கடத்தல் மார்க்கங்களிலும், பிரிட்டிஷார் சீனாவில் போதைப்பொருளைக் கொண்டுவந்து கொட்டினார்கள்.
சீனாவின் சமுதாய வாழ்க்கையும், பொருளாதாரமும் சின்னாபின்னமாகத் தொடங்கின. நாட்டின் வருங்காலமே கேள்விக்குறியாவதைப் புரிந்துகொண்ட சீன அரசு, அபினி வர்த்தகத்தை நிறுத்துமாறும், கையிருப்பை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறும், இங்கிலாந்து வியாபாரிகளுக்கு ஆணையிட்டது. அவர்கள் மறுத்தார்கள், அரசுத் தடையை மீறினார்கள். வியாபாரிகள் கைது செய்யப்பட்டார்கள், சீனச் சிறைகளுக்குள் தள்ளப்பட்டார்கள். சீனாவுக்கும், இங்கிலாந்துக்குமிடையே நடந்த பேச்சு வார்த்தைகள்
முறிந்தன. இதற்குத்தானே இங்கிலாந்து காத்திருந்தது? பெரும் கப்பற்படையை இந்தியாவிலிருந்து அனுப்பியது. சீனத் துறைமுகங்களைத் தாக்கியது. ஏராளமான சீனக் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தியது. கியன்லங் ஆட்சிக்கால முடிவிலிருந்தே, சீனா பலவீன தேசமாக இருந்தது. ஆகவே, இங்கிலாந்திடம் தோற்றது, மண்டியிட்டது,
1842. பிரிட்டீஷார் கட்டளையிட்ட இடத்தில் சீனப் பேரரசர் கையெழுத்திட்டார். சீனா முழுக்க,தடைகளே இல்லாமல் அபினி வியாபாரம் நடத்தும் உரிமையைத் தந்தார். பதினான்கு வருடங்கள். தன்மானம் பறிபோய்விட்டதே என்று நாடு குமுறிக்கொண்டிருந்தது. 1856 – இல் இந்த ஆதங்கம் வெடித்தது. அபினி தாங்கிவந்த இங்கிலாந்துச் சரக்குக் கப்பலைச் சீன அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். இப்போது இங்கிலாந்தோடு பிரெஞ்சுப் படைகளும் கை சேர்ந்தன. இரண்டாம் அபினிப் போர் நான்கு ஆண்டுகள் நடந்தது. சீனாவுக்குப் படு தோல்வி. அபினி வியாபாரம் அரசு ஒப்புதல் பெற்றது. சீனாவின் பல முக்கிய துறைமுகங்கள் அபினி மற்றும் பிற பொருட்களின் இறக்குமதிக்காக ஐரோப்பிய வியாபாரிகளுக்குத் திறந்துவிடப்பட்டன.
அடுத்த ஐம்பது வருடங்கள். ஐரோப்பியர்களின் தெனாவெட்டும், தாய்நாட்டின் கையலாகாத்தனமும், மக்களிடையே எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டிவிட்டன. நாட்டின் பல்வேறு பாகங்களில் கலவரங்கள் வெடித்தன. விரைவில் அக்னிக் குஞ்சுகள் கொழுந்துவிடும் நெருப்பாயின. பேரசரசருக்கு எதிரான இயக்கங்கள் தோன்றின.
விரக்திக்குத் தீர்வுகாணும் நம்பிக்கை நட்சத்திரமாய் இப்போது தோன்றினார், சன் யாட்-சென் (Sun Yat-Sen). மருத்துவரான இவர் நாடு படும் அவமானங்களுக்கு முடிவுகட்ட விரும்பி, அரசியலில் நுழைந்தார். 1905 – இல், புரட்சி அணிகள் சன் யாட்-சென்னைத் தலைவராக ஏற்றுக்கொண்டன. ஒவ்வொரு மாகாணமாக, புரட்சியாளர்கள் கைகளில் விழுந்தது.
ஏழே வருடங்கள். 1912. கி.மு. 2852 -இல் ஃப்யூ க்ஸீ (Fu X) தொடங்கிவைத்த
மன்னராட்சியை, கி.பி. 1912 – இல், பேரரசர் புயி (Puyi) முடித்துவைத்தார். மக்கள் பிரதிநிதியான சன் யாட்-சென்னிடம் ஆட்சியை ஒப்படைத்தார். மன்னராட்சி முடிந்தது, மக்களாட்சி மலர்ந்தது, சீன நாட்டின் வரலாற்றில் புத்தம் புதிய பாதை தொடங்கியது.
தொடரும்…