8. கி. பி. 618 முதல் கி.பி. 906 வரை – டாங் வம்ச (Tang dynasty) ஆட்சிக் காலம்
சீன வரலாற்றிலும், நாகரிக வளர்ச்சியிலும் டாங் ஆட்சியின் 288 வருடங்கள் பொற்காலம். பல்வேறு துறைகளில் நாடு முன்னேற்றம் கண்டது. குறிப்பாக, எழுத்து, இசை ஆகிய படைப்புக் கலைகளில் சீனா புதிய அடித்தடங்கள் பதித்தது.
கி.பி. 624. ஒயாங் ஜுன் (Ouyang Xun) என்னும் அறிஞர் யிவென் லெஜ்ஜூ* (Yiwen Leiju) என்னும் நூலை எழுதினார். அந்நாள்வரை சீனாவில் இருந்த முக்கிய இலக்கியங்களை 47 வரிசைகளாகத் தொகுத்துத் தரும் இந்தப் புத்தகம், இலக்கிய ரசிகர்களின் ரசனைக்கு மட்டுமல்ல, அன்றைய சீன வாழ்க்கைமுறையைத் தெரிந்துகொள்ள ஆசைப்படும் அனைவருக்கும் ஒரு பொக்கிஷம்.
(*வரிசைப்படுத்தப்பட்ட இலக்கியத் தொகுப்பு என்று பொருள்).
நம் எல்லோருக்கும் பரிச்சயமான ஒரு மனிதர் இதோ வருகிறார். அவர்தான் சுவான்ஸாங் எனப்படும் யுவான் சுவாங் (Xuanzang). இந்தியாவோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். யுவான் சுவாங். சீன நாட்டுப் புத்தத் துறவி. புத்த மதத்தைப் பற்றி, அவருக்குள் பல கேள்விகள். தன் அறிவுத் தாகத்தை, இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் நாலந்தா மடாலயத் துறவிகள்தாம் தணிக்கமுடியும் என்று நினைத்தார். கி.பி. 629 – இல் சீனாவிலிருந்து கால்நடையாகப் புறப்பட்டார். நான்கு வருட நீண்ட நெடும் பயணம். புத்த மதத்தின் நடமாடும் பல்கலைக்கழகமாக அவர் தாயகம் திரும்பியபோது, சீனா பெருமித வரவேற்பளித்தது. கி.பி. 650 – இல், பியான்ஜி (Bianji) என்னும் புத்த பிட்சு, யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளைப் புத்தகமாகத் தொகுத்து எழுதினார்.
எழுத்து உலகில் வகை வகையான படைப்புகள் வந்தன. (இவற்றைப் புத்தகங்கள் என்று குறிப்பிட்டாலும், அச்சடிக்கும் கலை அப்போது கண்டுபிடிக்கப்படாததால், இவை காகிதம், மூங்கில் தகடுகள், பட்டுத் துணி போன்றவற்றில் எழுதப்பட்டன).
கி.பி. 648 – ஜின் வம்ச ஆட்சியை விவரிக்கும் புத்தகம் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. கி.பி. 265 முதல் கி.பி. 420 வரையிலான காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளின் அற்புத ஆணவம் இந்தப் புத்தகம்,
கி.பி. 657 – 833 வகை இயற்கை மருந்துகள் / மூலிகைகள் பற்றியப் புத்தகம் வெளியாகிறது.
கி.பி. 710 – 52 அத்தியாயங்கள் கொண்ட ஷிட்டாங் (Shitong) என்னும் வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பு நூல் அரசால் கொண்டுவரப்படுகிறது.
கி.பி. 713 – கையுவான் (Kaiyuan) என்னும் பட்டுத் துணியில் எழுதப்படும் நாளிதழ் அரசால் வெளியிடப்படுகிறது. அரசியல் அறிவிப்புகள், நாட்டு நடப்புகள் ஆகியவை முக்கிய அம்சங்கள்.
கி.பி. 719 – கௌதம சித்தா எழுதிய ஜோசியப் புத்தகம். இந்த வானியல் அறிஞர் இந்தியாவிலிருந்து சீனா சென்று குடியேறியவர்.
கி.பி. 785 – உலகின் பல நாடுகளைப் பூகோள ரீதியாக அறிமுகம் செய்யும் பிரம்மாண்ட ஆராய்ச்சிப் புத்தகம் எழுதத் தொடங்குகிறார், ஜியா டான் (Jia Dan). இவர் பூகோள மேதை, அரசு அதிகாரி. ஜப்பான், கொரியா, இந்தியா, ஸ்ரீலங்கா, ஈராக் ஆகிய நாடுகள்பற்றி, இவர் தந்திருக்கும் விவரங்கள் வியக்கவைக்கின்றன.
கொஞ்சம் பொறுங்கள். இன்னும் சில வியப்புகள் காத்திருக்கின்றன. கி.பி. 868 – இல், ஒரு பக்க புத்தமத ஞான நூலான வைர சூத்திரம் உலகத்திலேயே முதன் முறையாகக் காகிதத்தில் அச்சடிக்கப்பட்டது. இந்திய சம்ஸ்கிருத நூலின் மொழிபெயர்ப்பு இது என்பது நாம் பெருமைப்படக்கூடிய சமாச்சாரம்.
Woodblock Printing என்னும் அச்சுமுறை இதற்குப் பயன்படுத்தப்பட்டது. மரக்கட்டைகளில், அச்சிடப்படவேண்டிய விஷயங்களைச் செதுக்குவார்கள். கட்டையில் இவை மட்டும் பொருமி நிற்கும். மை போட்டுக் காகிதத்தில் அழுத்தும்போது, பொருமிய எழுத்துகள் காகிதத்தில் பதியும்.
கி.பி. 712 – ல் லியுயான் (லியுயான் என்றால், பேரிக்காய்த் தோட்டம் என்று அர்த்தம்) என்னும் பெயரில் இசை, நாடகம் ஆகியவற்றுக்காக அரசாங்கம் பயிற்சிக்கூடம் நிறுவியது. மக்களின் அமோக ஆதரவால், விரைவிலேயே நாடெங்கும் இதன் கிளைகள் திறந்தன.
செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று நாம் பொன்மொழி உதிர்க்கலாம். ஆனால், ஒரு நாட்டில் கலைகள் வளர வேண்டுமானால், அங்கே மக்கள் பஞ்சம், பசி, பட்டினி என்னும் அன்றாடக் கவலைகள் இல்லாமல் சுக வாழ்க்கை வாழ வேண்டும். படைப்புக் கலைகள் செழித்து வளர்ந்ததால், டாங் ஆட்சியில் சீனர்கள் வளமாக, நலமாக இருந்தார்கள் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பு. பிற சான்றுகளும், ஆவணங்களும், இந்தக் கணிப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.
பெண்களுக்கு சமுதாயம் சம அந்தஸ்து அளித்தது. சீன வரலாற்றில் ஒரே ஒரு பெண்தான் சக்கரவர்த்தியாக நாட்டை வெற்றிகரமாக ஆட்சி செய்திருக்கிறார். அவர் கி.பி. 690 முதல் கி.பி. 701 வரை ஆண்ட வூ ஜேஷியன் (Wu Zetian). பலமான பணபுலம், அரசியல் தொடர்பு கொண்டவர்களாக இருந்தாலும், நுழைவுத் தேர்வில் தேறாவிட்டால், அவர்களுக்கு அரசுப் பதவிகள் கொடுக்கக்கூடாது என்னும் கொள்கையைக் கறாராக நிறைவேற்றினார் இந்தப் பெண் சிங்கம்.
பீங்கான் தொழில் அமோக வளர்ச்சி கண்டிருந்தது. சமையலறைப் பாத்திரங்கள், அழகு கொஞ்சும் பொம்மைகள் தயாரிக்கப்பட்டன. இவை சீனர்கள் வீடுகளை மட்டுமல்லாமல் கடல் தாண்டிய பல நாடுகளையும் அலங்கரித்தன. குவான்ஜோ நகரத்தில் இருக்கும் துறைமுகம் முக்கிய அந்நிய வியாபாரக் கேந்திரமாக விளங்கியது. அந்நியர்களுக்காகத் திறக்கப்பட்ட முதல் சீனத் துறைமுகம் இது. இந்திய, பாரசீக வியாபாரிகள் அடிக்கடி குவான்ஜோ வந்து போனார்கள்.
கி.பி. 758 – இல் பாரசீகக் கடல் கொள்ளைக்காரர்கள் குவான்ஜோ துறைமுகத்தைத் தாக்கி சூறையாடினார்கள். முக்கியப் பகுதிகளைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள். எக்கச்சக்கச் சேதம். சீன அரசு துறைமுகத்தை மூடவேண்டிய கட்டாயம். சேதங்களைச் சீர்படுத்தவும், மறுபடி வாணிப மையமாக்கவும் ஐம்பது வருடங்களாயின.
கி.பி. 635 – சீனர்களின் சமுதாய வாழ்வில் முக்கிய வருடம். நாட்டின் மத நம்பிக்கைக் கதவுகள் புதிய கருத்துகளுக்குத் திறக்கத் தொடங்கின. ஆரம்ப நாட்களில் மக்கள் இதிகாசங்களில் குறிப்பிடப்படும் பல தெய்வங்களை வணங்கினார்கள். இவை பெரும்பாலும், இடி, மின்னல், மழை போன்ற இயற்கை சக்திகளின் வடிவங்கள். கி.மு. 265 காலகட்டத்தில் மாமன்னர் அசோகர் புத்த பிட்சுக்களை நேபாளம், பூடான், சீனா ஆகிய நாடுகளுக்கு அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. விரைவில், புத்த மதம் சீனாவின் பெரும்பகுதி மக்களை ஈர்த்துக்கொண்டது. பின்னாள்களில், கன்ஃபூஷியனிஸம், தாவோயிஸம் ஆகிய கொள்கைகளைப் பலர் பின்பற்றத் தொடங்கினார்கள்.
பாரசீகத்திலிருந்து நான்கு கிருஸ்தவப் பாதிரிமார்கள் கி.பி.635 – இல் சீனா வந்தார்கள், தங்கள் மத நம்பிக்கைகளுக்கு வித்திட்டார்கள். கி.பி.650- ல் அரேபியாவிலிருந்து இஸ்லாமிய மதகுருக்கள் சீனா வந்தார்கள். இந்த வருகை, சீனாவில் இஸ்லாமியத்தின் ஆரம்பம்.
இன்றைய சீனாவில் மத நம்பிக்கை எப்படி இருக்கிறது? எந்த மதக்கொள்கையையும் நம்பாத நாத்திகர்கள் – 42% பழங்கால மதங்கள் + தாவோயிஸம் – 30% புத்த மதம் – 18% கிறிஸ்தவ மதம் – 4 % இஸ்லாமியர் – 2% பிறர் – 4%.
பல்வேறு மதங்களும் ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இந்தச் சூழல் கி.பி. 845 – இல் கெட்டது. உபயம், கி.பி. 840 முதல் கி.பி. 846 வரை சக்கரவர்த்தியாக இருந்த வூ ஜாங் (Wuzong). மண்ணாசை கொண்ட மாமன்னர் பல போர்கள் நடத்தினார். கஜானா காலியானது. எங்கே கை வைக்கலாம் என்று மன அரிப்பு. அவர் கண்களில் புத்தக் கோவில்கள் பட்டன. இன்றைய திருப்பதிபோல், அன்றைய புத்தக் கோவில்களில் பக்தர்கள் காணிக்கை மழை பொழிந்துகொண்டிருந்தனர். வூ ஜாங் 46,000 கோவில்களை அரசுடமையாக்கினார், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மத குருக்களை நடுத்தெருவில் நிற்கவைத்தார்.
அறிவுகெட்ட அரசர்கள் மட்டுமல்ல,இயற்கையும் தன் சோதனைகளைத் தொடங்கியது. சாங்கான் (Changan – இன்று Xian என்று அழைக்கப்படுகிறது) நகரம் டாங் ஆட்சியில் சீனாவின் தலைநகரம், இங்கே, கி.பி. 843- இல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 4000 வீடுகள், நூற்றுக் கணக்கான சரக்குக் கிடங்குகள், ஏராளம் கட்டடங்கள் அழிந்தன.
பதினைந்து வருடங்கள் ஓடின. அக்னிக்கு நான் என்ன இளைத்தவனா என்று போட்டிப் போட்டுக்கொண்டு வந்தது பெருவெள்ளம். பல்லாயிரம் வீடுகளையும் உயிர்களையும் பலிகொண்டு திருப்தி அடைந்தது.
சக்கரவர்த்திகளுக்கு நாட்டின் மீதிருந்த பிடியும் தளரத் தொடங்கியது. கி.பி. 874 – ல் மக்கள் அதிருப்தி வெடிக்கத் தயாராக இருக்கும் எரிமலையானது. இந்த எரிமலைக்கு வத்திக் குச்சி வைத்துப் பற்றி எரியவிட்டார் ஹூவாங் சாவோ (Huang Chao). அன்றைய சீனாவில், அத்தியாவசியப் பொருளான உப்பு விநியோகம் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் கையில் இருந்தது. அரசாங்க வருமானத்தில் பெரும்பகுதியை உப்பு வியாபாரம் தந்தது. பணம் கொட்டும் இடங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடவேண்டாமா? ஆடியது. ஏராளமானோர் உப்புக் கடத்தலிலும், கறுப்புச் சந்தையிலும் ஈடுபட்டனர்.
ஹூவாங் சாவோ அப்படிப்பட்ட உப்புக் கடத்தல்காரர். கை நிறையப் பணம் வந்தவுடன், அவர் அரசாங்கத்தை எதிர்த்தார். அரசுக்கு எதிரானவர்களும், அதிருப்தி கொண்டவர்களும் ஹூவாங் சாவோ பின்னால் அணி திரண்டார்கள். கலவரம் வெடித்தது. வீதிகள் எங்கும் அரசுப் படைகளும், கலவரக்காரர்களும் மோதினார்கள். ஹூவாங் சாவோ பல ஆரம்ப வெற்றிகள் கண்டார். தலைநகர் சாங்கான் அவர் கை வசமானது. அடுத்து அவர் கைப்பற்றியது வணிகத் தலைநகரான குவான்ஜோ. தன்னைச் சீனச் சக்கரவர்த்தியாக ஹூவாங் ஜோ அறிவித்துக்கொண்டார். ஆனால், பாவம் அவர் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. சீன அரசுப் படைகள் அவரைத் தோற்கடித்தன. அவர் முடிவு? மருமகனால் படுகொலை செய்யப்பட்டார் என்கிறார்கள் சிலர்: இல்லை, தோல்வியைத் தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்டார் என்கிறார்கள் சிலர். எப்படி என்பது தெரியவில்லை. ஆனால், அவர் மரணமடைந்தது நிஜம்,
நிறைவேறாத ஆசைகளோடு மரணமடைந்த அவர் ஆத்மா, எட்டு வருடங்களுக்குப் பின் சாந்தி அடந்திருக்கும். கி.பி. 907 – இல் ஜூ வென் (Zhu Wen), ஐ (Ai) சக்கரவர்த்தியைப் போரில் வென்றார், அவரை அரியணையிலிருந்து கீழே இறக்கினார். டாங் வம்சம் முடிந்தது. சீன வரலாற்றில், நாகரிகத்தில் புதிய பக்கங்கள் விரியத் தொடங்கின.
தொடரும்…