7. கி. மு. 206 முதல் கி.பி. 220 வரை – ஹான் வம்ச (Han Dynasty) ஆட்சிக் காலம்
ஹான் ஆட்சிக் காலத்தில் சீனாவின் பொருளாதாரமும் நாகரிகமும் மாபெரும் வளர்ச்சிகள் கண்டன. அவற்றில் சில முக்கிய மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் பார்ப்போம்.
அரசு விவசாயத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. பெரிய நிலச்சுவான்தாரர்களின் நிலங்களை அரசுடைமையாக்கி, ஏழைகளுக்குப் பங்கிட்டுக்கொடுத்தது. ஒரே ஒரு நிபந்தனை – அவர்களேதான் அந்த நிலங்களை உழுது பயிரிடவேண்டும், வேறு யாருக்கும் நிலத்தை விற்க முடியாது. விவசாயிகள், பயிர்ச் சுழற்சி, உரங்கள் பயன்படுத்துதல் ஆகிய முறைகளைப் பயன்படுத்தத் தூண்டப்பட்டார்கள். இவற்றால், உற்பத்தி பெருகியது. ஏரோட்டுபவர்கள் கையில் பணம் புழங்கியது. நெசவு, பட்டுத் தொழில் போன்ற உபதொழில்களில் பணத்தை முதலீடு செய்தார்கள். சிறு தொழில்கள் வளர்ந்தன.
பட்டுத் தொழிலில் சீனர்கள் முன்னோடிகளாக இருந்தார்கள். கி.மு. 3630 லேயே, பட்டுப் புழுக்கள் வளர்க்கவும், நூல் எடுக்கவும், துணி நெய்து சாயம் பூசவும் அவர்கள் தெரிந்துகொண்டிருந்தார்கள். காலப்போக்கில், பட்டுத் தொழில் பெண்களின் ஏகபோகமானது. இது வெறும் தொழில் மாற்றமாக இருக்காமல், ஆண்களும், பெண்களும் சரி நிகர் சமானமாகும் சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டது.
பட்டு தங்களுடைய தனித்திறமைகளுள் ஒன்று என்பதைச் சீனர்கள் உணர்ந்தார்கள். இந்தப் பலத்தை, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டார்கள். சீனாவுக்கும், ஆப்கனிஸ்தானுக்கும் வியாபாரத் தொடர்புகள் இருந்தன. நீலக்கல், சிவப்புக் கல் ஆகியவற்றைச் சீனர்கள் ஆப்கானியர்களிடம் வாங்கினார்கள்: மாற்றாகப் பட்டு நூலும், ஆடைகளும் தந்தார்கள்.
உலக வியாபார சரித்திரத்தில், முக்கிய இடம் பிடிக்கிறது பட்டுச் சாலை (Silk Route). கி.மு. 190ல் ஹூயி (Hui) சக்கரவர்த்தியின் தொலைநோக்குப் பார்வையில் இது உருவாக்கப்பட்டது. சாதாரணமாக, பொதுமக்களின் போக்குவரத்துக்கும், ராணுவக் காரணங்களுக்காகவும்தான் அன்றைய அரசர்கள் சாலைகள் அமைப்பார்கள். இந்த இலக்கணங்களை மீறிய வணிகப் பாதை பட்டுச் சாலை. இது 6400 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. சீனாவின் சியானில் தொடங்கி, வடமேற்குத் திசையில் சீனப் பெரும் சுவர் வழியாகச் சென்று, பாமீர் மலைகளின் வழியாக ஆப்கனிஸ்தானைக் கடந்து மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் முடிவடைகிறது. முதலில், சீன ஆப்கானிஸ்தான் வணிகப் பொருட்கள் ஒட்டகங்கள் மூலமாகப் பரிவர்த்தனம் செய்யப்பட்டன.
ஹான் மன்னர்கள் பட்டுக்குப் புதிய சந்தை கண்டார்கள். ரோம சாம்ராஜ்ஜியத்துடன் மிகப் பெரிய அளவில் வியாபாரத்தை வளர்த்தார்கள். ரோமாபுரி ஆண்களும், பெண்களும் சுகபோகப் பிரியர்கள். தங்களைச் சிங்காரித்துக்கொள்வதில் ஒருவரோடு ஒருவர் போட்டி போடுபவர்கள். இவர்களுக்குச் சீனப் பட்டின்மீது மோகம் வந்தது. ரோமாபுரி ஆப்கானிஸ்தானைப் பின் தள்ளி, சீனாவின் முக்கிய வணிகச் சந்தையானது. இதனால், இந்தப் பாதைக்கே பட்டுச் சாலை என்னும் பெயர் வந்தது.
கி.மு. 139 ல் வூ (Wu) சக்கரவர்த்தியாக இருந்தார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியது 1921ல் தான். ஆனால், இவர் பொதுவுடைமைக் கருத்துகளை கி.மு. 139ல் விதைத்துவிட்டார். அண்டைய பிரதேசங்களோடு வூ பல போர்கள் நடத்தினார். எக்கச்சக்கச் செலவு. கஜானா காலியாகிவிட்டது. நாட்டு மக்கள்மேல் வரிகளைச் சுமத்தி அவர்களுடைய வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. நாட்டில் பல வியாபாரிகள் செல்வத்தில் கொழித்தார்கள். சக்கரவர்த்தி அந்த வியாபாரங்களை அரசுடைமையாக்கினார்.
வூ சக்கரவர்த்தி, சீனாவின் வெளிநாட்டு உறவுகளிலும், புதிய அணுகுமுறையைக் கொண்டு வந்தார். அதுவரை, சீனாவின் வெளியுலகத் தொடர்புகள் வெறும் வியாபார உறவுகள்தாம். இவற்றைத் தாண்டி, பிற நாடுகளின் ஆட்சி முறை, கலாசாரம் ஆகியவற்றைச் சீனாவின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த விரும்பினார். ஜாங் சியன் (Zhang Chien) என்னும் தம் நம்பிக்கைக்குப் பாத்திரமான அறிஞரை இதற்காகத் தேர்ந்தெடுத்தார். இவர் சீனாவின் அண்டைப் பிரதேசங்களுக்குப் பயணம் செய்தார். இவருடைய உதவியாளர் உஸ்பெக்கிஸ்தான், ஆப்கனிஸ்தான் நாடுகளுக்கு விஜயம் செய்தார். இந்தத் தேடல்களில் கிடைத்த விவரங்களையும், அனுபவங்களையும், சக்கரவர்த்திக்கு அறிக்கையாகச் சமர்ப்பித்தார். ஒவ்வொரு பிரதேசத்தைப் பற்றியும், இந்த அறிக்கை ஆழப்பார்வை பார்க்கிறது.
இவரோ, இவர் உதவியாளரோ, இந்தியாவுக்கு வரவில்லை. ஆனால், பல இடங்களில் இந்தியா பற்றிக் கேள்விப்பட்டார்கள். அதன் அடிப்படையில். இந்தியாவின் தட்ப வெட்ப நிலை, இந்தியப் போர் யானைகள் போன்றவை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவை மிகச் சரியான விவரங்கள்.
பட்டுத் தொழிலில் பெண்கள் முக்கிய இடம் வகித்ததைப் பார்த்தோம். மெள்ள, மெள்ள, சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் பெண்கள் முத்திரை பதிக்கத் தொடங்கினார்கள். கி.மு. 48 – இல், பான் (Ban) என்னும் கவிதாயினி இருந்தார். லியூ ஸியாங் (Liu Xiang) என்னும் அறிஞர், சக்கரவர்த்தியின் வழிகாட்டலில், சீன வரலாற்றில் சிகரங்கள் தொட்ட 125 பெண்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளைத் தொகுத்தார்.
எட்டு அத்தியாங்களாகப் பட்டுத் துணிகளில் எழுதப்பட்டுள்ள இந்தத் தொகுப்பின் பெயர், தலை சிறந்த பெண்மணிகளின் வரலாறுகள் (Biographies of exemplary women). சிறந்த தாய்மார்கள், கற்புத் திலகங்கள், உயர்ந்த கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள், சொல்லின் செல்வர்களான பேச்சாளர்கள் என்று பல அத்தியாயங்கள். இந்தச் சாதனையாளர்களில் பலர் சாமானியர்கள். அன்றைய நாட்களிலேயே, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அந்தஸ்து, குடும்பப் பின்னணியைவிடத் திறமைக்கு அதிக மதிப்பு!
கி.மு. 124 லேயே, அரசுப் பதவிகளுக்குத் திறமைசாலிகளைத் தெர்ந்தெடுக்க, நாடு தழுவிய தேர்வுகள் நடத்தப்பட்டன. திறமையை மதித்த பண்டைய சீனா, நாட்டு முன்னேற்றத்துக்குக் கல்வி அறிவு அவசியம், எல்லோருக்கும் கல்வி அறிவு வழங்கவேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தது. கி.பி. 3 – இல் பிங் (Ping) சக்கரவர்த்தி நாடு தழுவிய கல்வித் திட்டம், பாட முறை, அரசுக் கல்விச் சாலைகள் ஆகியவற்றை அறிமுகம் செய்தார். சீனாவின் பிற்கால வளர்ச்சிகளுக்கு உறுதியான அடித்தளம் தந்தது இந்தக் கல்வி முறைதான்.
ஹான் ஆட்சியில் சீனா, அறிவியல், தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளிலும், பல உச்சங்கள் தொட்டது. கி.மு. 30 – இல் அவர்கள் சக்கரத் தள்ளுவண்டிகள் பயன்படுத்தினார்கள். கி.பி . 8 – ம் ஆண்டில், லியூ ஷீன் (Liu Xin) என்னும் வானியல் அறிஞர் நட்சத்திரங்களின் பட்டியல் தயாரித்தார். இவர் பட்டியலில் இருந்த விண்மீன்களின் எண்ணிக்கை 1080. ஒரு வருடத்தில் 365.25016 நாட்கள் என்று இவர் கணக்கிட்டார். 365.14016 என்று இன்றைய அறிவியல் சொல்கிறது. நவீன உபகரணங்கள் இல்லாமலே, இத்தனை துல்லியமாகக் கணக்கிட்ட சீனர்களின் திறமை பிரமிக்கவைக்கிறது.
சீனர்களின் பல்லாயிரம் கண்டுபிடிப்புகளில், உலக அறிவியலைப் பெருமளவில் பாதித்தவையாகக் கருதப்படும் நான்கு கண்டுபிடிப்புகள், திசைகாட்டி, வெடி மருந்து, காகிதத் தயாரிப்பு, அச்சுத்தொழில் என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம், திசைகாட்டி சின் ஆட்சிக் காலத்தில் வந்தது. வெடி மருந்தும், காகிதத் தயாரிப்பும், ஹான் ஆட்சிக்காலத்தின் அறிவியல் பெருமைகள்.
சீனச் சக்கரவர்த்திகளும், மக்களும் மரணமே இல்லாத வாழ்க்கைக்கு ஆசைப்பட்டார்கள். அரச ஆதரவில், ஏராளமானவர்கள், சாவை வெல்லும் மருந்துகள் செய்யும் ஆராய்ச்சிகள் செய்துவந்தார்கள். கைகளில் கிடைக்கும் விநோதப் பொருட்களையெல்லாம் கலப்பார்கள். ஏதாவது மேஜிக் நடக்குமா என்று காத்திருப்பார்கள்.
கி.மு. 9 – ம் நூற்றாண்டில், அப்படிப்பட்ட ஒரு குழுவினர், வெடியுப்பு, கந்தகம், கரி ஆகிய மூன்றையும் ஏதோ விகிதத்தில் கலந்தார்கள். அதைப் பொடித்து, தேனில் குழைத்து வரும் லேகியம் தங்களை அமரர்கள் ஆக்கும் என்று அவர்கள் நம்பி பொடிக்கத் தொடங்கினார்கள். பொடி வெடித்தது. அமரர்கள் ஆக ஆசைப்பட்டவர்கள் இறந்துபோனார்கள். ஆனால், போர்க்க்கால ஆயுதமாக, அழிவின் மூலப்பொருளாக, வெடிமருந்தின் விபரீதக் கதை ஆரம்பமானது.
வெடிமருந்தை இப்படியொரு விபத்தில்தான் கண்டுபிடித்தார்கள். ஆனால், காகிதத் தயாரிப்பு திட்டமிட்ட அறிவியல் முன்னேற்றம். கி.பி. 100 வாக்கில் பட்டுத் துணிகளிலும், மூங்கில் தட்டிகளிலும் மக்கள் எழுதிவந்தார்கள். பட்டு அதிக விலை: மூங்கில் எடை அதிகமானது. இதற்கு ஒரு தீர்வு கண்டுபிடிக்கும் வேலையைச் சக்கரவர்த்தி, கே லுன் (Cai Lun) என்ற தன் ஆலோசகரிடம் ஒப்படைத்தார். சகலகலாவல்லவர் கே லுன், சணல், துணி, மீன் பிடிக்கும் வலைகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கூழாக்கினார். இந்தக் கூழை மெல்லிய பாளங்களாக்கினார். கி.பி. 105ல் காகிதம் பிறந்தது. மனித குலத்தின் அறிவுத் தேடலை ராஜபாட்டை ஆக்கிய மகா கண்டுபிடிப்பு!
கே லுன் ஒரு திருநங்கை. அன்று திருநங்கைகள் சக்கரவர்த்திகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாக இருந்தார்கள். அதிலும், குறிப்பாக, கி.பி. 75 முதல் கி.பி. 88 வரை சீனாவை ஆண்ட ஜாங் (Zhang) சக்கரவர்த்தி காலம் முதல், திருநங்கைகள் அரசுப் பதவிகள் வகிக்கவும், நிர்வாகத்தில் ஈடுபடவும் ஆரம்பித்தார்கள். பல நூற்றாண்டுகளுக்கு இந்தப் பாணி தொடர்ந்தது. இதன் ஒரு வெளிப்பாடுதான் கே லுன்!
கி.பி. 6 – ம் ஆண்டில், சில அரசியல் சதிராட்டங்கள் நடந்தன. ரூஸி யிங் (Ruzi Ying) என்பவர் சக்கரவர்த்தியானார். அப்போது அவர் வயது ஒன்று! ஆமாம், ஒரு சதிகாரக் கும்பல் தொட்டில் குழந்தையை டம்மி ராஜாவாக்கினார்கள். இரண்டே ஆண்டுகளில், ரூஸி யிங் ஆட்சி கவிழ்ந்தது. ஷின் வம்சாவளியினர் (Xin Dynasty) ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆனால், வெறும் 15 ஆண்டுகள் மட்டுமே ஷின் ஆட்சி நீடித்தது. கி.பி. 23 – இல் ஹான் வம்சத்தார் அரியணையை மறுபடியும் கைப்பற்றினார்கள்.
ஹான் வம்ச ஆட்சியில் சீனா அமைதிப் பிரதேசமாக இருந்தது, வியத்தகு முன்னேற்றங்கள் கண்டது. காரணம் – தொலைநோக்குப் பார்வை கொண்ட மன்னர்கள். கி.பி. 168 க்குப் பின் வந்த சக்கரவர்த்திகள் பரம்பரைக்குத் திருஷ்டி பரிகாரமானார்கள். நாடு மூன்று பகுதிகளாகப் பிரிந்தது. தொடர்ந்த ஆட்சி, கி.பி. 221 முதல் கி.பி. 280 வரை நீடித்தது: மூன்று அரசுகள் ஆட்சிக் காலம் (Three Kingdoms) என்று இது அழைக்கப்படுகிறது.
தொடர்ந்த 300 ஆண்டுகள் நிலையில்லா ஆட்சிகள். கி.பி. 580 – இல், வென் டீ (Wen Di) என்னும் குறுநில அரசர் உள்நாட்டுக் குழப்பங்களை அடக்கி, சீனாவை மறுபடியும் ஒருங்கிணைத்தார். ஆனால், அவர் நிறுவிய ஸ்வீ வம்ச ஆட்சி (Sui Dynasty) கி. பி. 580 முதல் கி.பி. 618 வரை, ஆண்டுகள் மட்டுமே நீடித்தது, சீனாவில் மறுபடி வசந்தம் வந்தது கி.பி. 618 – இல் தொடங்கிய டாங் வம்ச ஆட்சியில்தான்.
தொடரும்…