Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » ஒரு நகரத்தின் கதை – 9
ஒரு நகரத்தின் கதை – 9

ஒரு நகரத்தின் கதை – 9

சர் ஸ்டாம்ஃபோர்ட் ராபிள்ஸும் அவர் மனைவி சோஃபியாவும் மீண்டும் சிங்கப்பூருக்கு 1822 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி வந்து சேர்ந்தனர். சிங்கப்பூர் துறைமுகம் வணிகக் கப்பல்களால் நிறைந்திருந்தது. மிக பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. சயாம்(இன்றைய தாய்லாந்து) இந்தியா, அரேபியா, ஐரோப்பா, அரேபியா போன்ற நாடுகளிலிருந்து வந்த வணிகர்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்தனர்.

அன்றிலிருந்து கிட்டத்தட்ட மூன்று நான்கு ஆண்டுகள் முன்பு வரை சிறு கடற்கரை கிராமமாக எந்தவித சந்தடியும் இல்லாமல் அவ்வப்போது கடற்கொள்ளையர்கள் மட்டும் வந்து தங்கிச் சென்ற இடம் நகரத்துச் சந்தடிகளுடன் மிக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருந்தது.

நகரின் தெருக்கள் அரேபிய மாலுமிகள், ஐரோப்பிய கனவான்கள், சீன வணிகர்கள், மலாய்க்காரர்கள், இந்தியத் தொழிலாளிகள், வர்த்தகர்கள் என பல இன மக்களால் நிரம்பியிருந்தது. ராஃபிள்ஸ் இவற்றையெல்லாம் கண்டு மனம் மகிழ்ந்து உலகிலேயே இவ்வளவு உயிர்ப்புடனும், இனிமையுடனும் வேறு எந்த இடமும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டார். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் ராஃபிள்ஸும் அவர் மனைவி சோஃபியாவும் சிங்கப்பூரில் தங்கியிருந்தனர்.
அந்த வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் அவர் ஆக்கபூர்வமாகச் செலவழித்தார்.

அவர் தீராத அறிவுப்பசி, அதற்குத் தீனி போடுவது போல் அவர் மேற்கொண்ட வேலை, அவர் வேலை செய்த இடங்கள் அமைந்திருந்தன. ஆகக் கடைசியாக அவர் மேற்கொண்ட வேலை சிங்கப்பூரின் நகர வடிவமைப்புத் திட்டம். தான் முதலில் வந்து இறங்கிய போது பார்த்த இடங்கள், அவற்றின் வளர்ச்சி ராஃபிள்ஸுக்கு சற்று ஏமாற்றம் அளித்தது.

ராஃபிள்ஸ் தான் கற்பனை செய்த திட்டமிட்ட நகராக சிங்கப்பூர் வளராமல் ராஃபிள்ஸ் கற்பனைக்கு நேர்மாறாக நகரம் அவரவர்கள் வசதிக்கேற்ப எந்த திட்டத்துக்கும் கட்டுப்படாமல் வளர்ந்து கொண்டிருந்தது. வில்லியம் ஃபர்குவார் தன்னுடைய ஆணைப்படி நிலப் பங்கீட்டு முறைகளை பின்பற்றவில்லை என்பதை உணர்ந்தார். தான் சிங்கப்பூரில் தங்கியிருந்த வரை நகர வடிவமைப்பில் தன் முழு கவனத்தையும் செலுத்தினார்.

கட்டடக் கலை நிபுணரான கோல்மென் உதவியுடன் பல நில சீர்திருத்தச் சட்டங்கள் இயற்றினார். நகரமைப்புக் குழு ஒன்று அமைத்தார். இதன் மூலம் சிங்கப்பூருக்கு பல நாடுகளிலிருந்து வரும் பலதரப்புக் குடியேறிகள் எந்தக் குழப்பங்களும், சச்சரவுகளும் இல்லாமல் வசதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ வழி வகுக்கும் என்று நினைத்தார்.

நகரமைப்புக் குழுவின் செயல்பாடுகளைக் கண்காணிக்கவும் மேலும் மேம்படுத்தவும் நில பங்கீட்டுக் குழுவையும் அமைத்தார். ராஃபிள்ஸின் பல சட்டங்களும், நகர வடிவமைப்புத் திட்டங்களும் நகரமைப்புக் குழுவிடமும், நில பங்கீட்டுக் குழுவிடமும் சமர்ப்பிக்கப்பட்டன. அவை அங்கீகரிக்கப்பட கோல்மென் ஆலோசனைகள் தேவைப்பட்டன.

நகரம் எப்படி விரிவுபடுத்தப் படலாம், அதில் அரசாங்கத் தேவைகளுக்கு எவ்வளவு நிலம் தேவைப்படும், இராணுவம், ஐரோப்பியக் குடியிருப்புகளை எங்கே அமைக்கலாம், நகர மையம் எங்கே அமைக்கப்படலாம் என்று பலவித திட்டங்கள் தீட்டப்பட்டன. கோல்மெனின் ஆலோசனைப்படி சிங்கப்பூர் ஆற்றின் தெற்குப் பகுதி சதுப்பு நிலமாக சேறும் சகதியுமாக இருந்தது.

அதை சரி செய்து அங்கே வர்த்தக மையம் அமைக்கப்படலாம் என்று கோல்மென் பரிந்துரைத்த இடம் ராஃபிள்ஸ் பிளேஸ் என்ற பெயரில் இன்றும் நகர மையமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தெருக்கள் குறைந்த பட்சம் 66 அடிகள் அகலம் கொண்டிருக்க வேண்டும் என்பது ராஃபிள்ஸின் திட்டம். கோல்மென் அதைச் செயல்படுத்தி விசாலமானப் பல சாலைகளை அமைத்தார்.

அவர் அமைத்த பல சாலைகள் இன்றும் அப்படியே சிங்கப்பூரில் இருக்கின்றன. நார்த் பிரிட்ஜ் சாலை, சௌத் பிரிட்ஜ் சாலை, ஹில் ஸ்டீரீட், பீச் ரோட் போன்றவை இன்றும் கிட்டத்தட்ட அதே அளவுகளோடு இருக்கின்றன. சில சாலைகள் பெருகி வரும் போக்குவரத்துக்காக விரிவுபடுத்தப்பட்டன. ஆனால் முதன் முதலில் 66 அடி அகலமுள்ள சாலை திட்டமிட்டார். இது எதற்கு என்பது ஒரு பெரிய ஆச்சரியம் தான்!!! வெறும் மாட்டு வண்டிகளும் மனிதர்களும் சென்று கொண்டிருந்த்த அந்தக் காலத்துக்குச் சற்றுப் பெரிய அளவுதான்.

மோட்டார் வாகனங்கள் எதுவும் இல்லாத காலத்தில் ஆகப் பெரிய வாகனம் மாட்டு வண்டி, பல்லக்கு இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் தான் கற்பனை கண்ட நகரம் கண்டிப்பாகப் பெரிதாக வளரும் என்ற எதிர்பார்ப்புடன் இப்படி செய்திருக்கலாம். ஒவ்வொரு இன மக்களுக்கும் தனித் தனியே இட ஒதுக்கீடு செய்தார்.

சிங்கப்பூரில் இந்த ஒதுக்கீட்டைப் பின்பற்றி கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி, சீனர்கள் குடியிருப்பு, மலாய்க்காரர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி என்று சிங்கப்பூரில் குடியிருப்புப் பகுதிகள் இருந்தன.பினாங்கில் ஐரோப்பியக் குடியிருப்புப் பகுதியான ஜார்ஜ் டவுன் மட்டும் நாகரிகமாகவும் வசதியாகவும் அமைந்திருந்து. ஆனால் மற்ற பகுதிகள் வசதிக் குறைவானதாக சுகாதாரமற்ற முறையில் இருந்தன. இதைப் பார்த்த ராஃபிள்ஸ் தான் புதிதாக உருவாக்கும் நகரத்தை அவ்வாறு இல்லாமல் நகரம் முழுவதும் சுத்தமாகவும், சுகாதாரமானதாகவும் நிறைய மரங்கள், பூங்காக்களோடு உருவாக்க விரும்பினார். இன்றைய சிங்கப்பூர் தூய்மை, பசுமையோடு இருப்பதற்கு முதல் விதை அன்றே கிட்டத்தட்ட நூற்றுத் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே போடப்பட்டது. இந்தியாவில் ஆங்கிலேயக் காலனிகள் அமைந்த நகரங்கள் ஒரு கோட்டையைச் சுற்றி அமைக்கப்பட்டன. நகரத்தின் முக்கிய இடங்களை நன்றாகப் பராமரித்தனர். கோட்டையில் அவர்கள் தலைமைச் செயலகம் அமைந்திருக்கும். அதற்கு அருகாமையில் இராணுவ முகாம் (cantonment), ஆங்கிலேய அதிகாரிகள் குடியிருப்புப் பகுதிகள் போன்றவை இருக்கும்.

மற்ற குடியுருப்புப் பகுதிகளைப் பற்றிக் பெரிதாக கவலைப்பட்டதில்லை. இந்தியாவில் இதைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு நிறையக் காரணங்கள் இருந்தன. இந்தியாவில் இருந்த ஜாதிவாரியான பிரிவுகளினால் அக்ரஹாரம், செட்டியார் தெரு, குடியானவப் பகுதி, முதலியார்ப் பேட்டை என்று அவர்களாகவே பிரிவினைச் செய்துகொண்டு வாழ்ந்தனர்.

கிட்டத்தட்ட இதைப் போன்ற ஒரு அமைப்பில் ராஃபிள்ஸ் சிங்கப்பூரையும் வடிவமைக்கத் திட்டமிட்டார். அவர் கல்கத்தாவிற்கு இரண்டு முறை சென்றிருக்கிறார். எனவே கல்கத்தாவின் வடிவமைப்பும் ஓரளவிற்குப் பின்பற்றப்பட்டது. ஃபோர்ட் கேனிங், சிங்கப்பூர் ஆற்றை ஒட்டிய பகுதிகள் அரசாங்க அலுவலகங்கள், அதிகாரிகள், இராணுவத்தினர் போன்றவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஆற்றுக்கு எதிரே இருந்த நிலம் வர்த்தகங்கள், வங்கிகளுக்காக ஒதுக்கப்பட்டது கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து சிங்கப்பூர் ஆற்றின் தென்மேற்குப் பகுதி வரை ஐரோப்பியர்களுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் உயர்மட்ட மக்களின் குடியிருப்புப் பகுதியாகவும் இருந்து. சிங்கப்பூர் ஆற்றின் தென்மேற்குக் கரையில் ஐரோப்பிய குடியிருப்புப் பகுதிகளை ஒட்டி சீனர்கள் குடியுருப்புப் பகுதியாக இருந்தது. மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள் தெமெங்காங் வாழ்ந்த பங்லிமா பராங் என்ற இடத்தில் இருந்தனர்.

சுல்தான் குடியிருந்த கம்போங் கிளாம் பகுதியில் பூகிஸ் இனத்தவரும், அரேபிய வணிகர்களும் குடியிருந்தனர். இந்தியர்களுக்கு சிங்கப்பூர் ஆற்றின் வடக்குப் பகுதியில் குடியிருப்புப் பகுதி ஒதுக்கப்பட்டது. தெற்குக் கடல் பகுதியை ஒட்டி தெலோக் ஆயர் சந்தை, நகரத்தில் மையப் பகுதியில் ஒரு தேவாலயம் போன்றவற்றை அமைக்கவும் திட்டமிட்டார். இவற்றைப் பற்றி விரிவாக நாம் பின்னர் பார்க்கலாம்.

ராஃபிள்ஸ் தன்னுடைய வழக்கமான மனிதாபிமானத்தால் சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தார். கற்றலின் மேன்மையை உணர்ந்து சிங்கப்பூர் கல்வி நிலையம் என்ற கல்லூரி அமைத்தார். இதில் உள்ளூர் மொழிகள், பழக்க வழக்கங்கள் போன்றவையும் கற்பிக்கப்பட்டன.

முதன் முதலில் ராஃபிள்ஸ் வந்த போது பார்த்த சிங்கப்பூருக்கும் நாம் இன்று பார்க்கும் சிங்கப்பூருக்கும் கால ஓட்டத்தில் நிறைய மாற்றங்கள் இருக்கும். சிங்கப்பூர் ஆற்றை ஒட்டிய சதுப்பு நிலங்கள், பாழடைந்த கோட்டை, ஆளரவமற்ற கடற்கரை, சுற்றிலும் வெப்ப மண்டலக் காடுகள், காடுகளை ஒட்டி கடற்கரைகள். கடற்கரையை ஒட்டி இருந்த நிலப்பகுதிகள் அனைத்தும் சேறும் சகதியுமான சதுப்பு நிலங்கள்.

இப்படிப்பட்ட ஒரு இடத்தில் ஒரு நகரம் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றால் உழைப்பதற்கு நிறைய தொழிலாளிகள் தேவைப்பட்டார்கள். அதற்காக இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து பல கூலித் தொழிலாளிகள் வரவழைக்கப்பட்டனர்.
இன்றைய சிங்கப்பூரில் கிழக்குக் கடற்கரைப் பகுதி உயர்மட்ட மக்கள் அதிகமாக வாழும் தனியார் வீடுகளைக் கொண்ட விலை உயர்ந்த பகுதியாக இருக்கிறது. காலப் போக்கில் சைனாடவுன், கம்போங் கிளாம், சூலியா தெரு, என்று மட்டுமில்லாது சிங்கப்பூரின் எல்லாப் பகுதிகளிலும் சீனர்கள், மலாய் இனத்தவர், இந்தியர்கள், மேலும் பல நாட்டினர் என்று வாழ்ந்தாலும் இந்த இடங்கள் பழைய வரலாற்றைச் சொல்லுகின்றன. பிறகு சுதந்திரம் பெற்ற சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (HDB: HOUSING DEVELOPMENT BOARD) அனைத்து வட்டாரங்களிலும் அடுக்கு மாடி வீடுகள் கட்டி அதைக் குறைந்த விலையில் ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் வழங்கிய போது ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தில் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் பெருமளவில் வசிக்கும் முறையை மாற்றி சீனர்கள், இந்தியர்கள், மலாய்க்காரர்கள் என்று அனைவரும் இணைந்து வாழும் ஒரு சூழலை உருவாக்கியது.

இப்படிப்பட்ட சூழலை மட்டும் உருவாக்கியது வீடமைப்பு வளர்ச்சிக் கழகம். ஆனால் வீடுகளைப் பூட்டிக் கொண்டு அக்கம்பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை அறியாத ஒரு கலாச்சாரத்தையும் உடன் உருவாக்கிக் கொண்டிருக்கிறது இன்றைய படித்த அறிவுபூர்வமாகச் சிந்திக்கத் தெரிந்த தலைமுறை. பழைய சிங்கப்பூரில் வாழ்ந்தவர்கள் இன்றும் அக்கம் பக்கத்தில் வாழ்ந்த பல இன மக்களோடு கலந்து பழகி உறவாடி அவர்கள் மொழியைக் கற்றுக் கொண்டு வாழ்ந்த கம்பத்து வாழ்க்கையை (கம்போங்: கிராமம்) மன மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

ராஃபிள்ஸ் உருவாக்கிய நகர மையம் இன்றும் வர்த்தக மையமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர் உருவாக்கிய சிங்கப்பூர் கல்வி நிலையம் ராஃபிள்ஸ் கல்வி நிலையமாக உருமாறி சிங்கப்பூரின் அறிவுபூர்வ வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றுகின்றது.

நவீன சிங்கப்பூரை உருவாக்கிய பல தலைவர்களின் கல்விக் கூடமாக ராஃபிள்ஸ் கல்வி நிலையம் இருக்கின்றது. சிங்கப்பூரைத் தன் திட்டத்தின்படி வளர்ச்சியடைய தான் மேற்கொண்ட முயற்சிகள் தொடரும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் பென்கூலன் திரும்பினார். பென்கூலனில் தாங்கள் இங்கிலாந்து திரும்பிப் போவதற்குக் கப்பல் எப்போது வரும் காத்திருந்தனர். 1823 ஆம் ஆண்டு சோஃபியாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைப் பிறப்பினால் அவர் உடல் மேலும் தளர்வடைந்தது. அந்தப் பெண் குழந்தையும் பிறந்து சில மாதங்களிலேயே இறந்து போனது. ராஃபிள்ஸின் உடல் நிலையிலும் எந்த மாற்றமும் இல்லை. கடுமையான தலைவலியால் அவதிப்பட்டார். பாதி நேரம் படுக்கையிலேயே இருந்தார். மிக பலவீனப்பட்டு தன் அன்றாட அலுவல்களைக் கவனித்தார்.

அவரைச் சுற்றியிருந்த பல அலுவலர்களும் நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள். பல மாதங்கள் கடந்தும் அவர் திரும்புவதற்கான கப்பல் வரும் அறிகுறி இல்லை. சோஃபியா தான் எழுதிய வாழ்க்கைக் குறிப்புகளில் இந்தக் காத்திருத்தலைப் பற்றி எழுதும் போது, ” இந்தக் காத்திருத்தலைப் பற்றி எழுத வார்த்தைகள் இல்லை. கவலையுடனும் களைப்புடனும் ஒவ்வொரு மணித் துளியையும் கழிக்கிறோம். இங்கிருந்து தப்பிக்க வழியும் இல்லை.

மறு நாள் வாழப் போகிறோமா என்ற நம்பிக்கையும் இல்லை”, என்று விரக்தியுடன் குறிப்பிடுகிறார். இறுதியில், 1824 ஆண்டு ‘ஃபேம்’ (fame) என்ற கப்பல் பென்கூலன் துறைமுகத்துக்கு வந்தது. ராஃபிள்ஸ், சோஃபியா மற்றும் அவரது அலுவலகர்கள் அனைவரும் ஒரு வழியாகத் தப்பித்தோம் என்ற மன நிலையில் கப்பல் ஏறினர். ஒரு நாள் பயணத்தின் முடிவில் அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அது…

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top