Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » ஒரு நகரத்தின் கதை – 6
ஒரு நகரத்தின் கதை – 6

ஒரு நகரத்தின் கதை – 6

இன்றைய சிங்கப்பூரில் வெளிநாட்டிலிருந்து வந்து வேலை பார்ப்பவர்களை மூன்று வகைப்படுத்தி அவர்கள் இங்கே தங்கியிருந்து வேலை  பார்ப்பதற்கு பலவகையான அனுமதி சீட்டுகளை வழங்குகிறது சிங்கப்பூர் அரசாங்கம்.

வேலை அனுமதிச் சீட்டுப் பெற்று சிங்கப்பூரில் குடும்பத்துடன் தங்கி நிரந்தரவாசியாகி பின்னர் குடியுரிமை பெற்று வாழ்பவர்கள்  ஒருபுறம் இருக்க, கட்டுமானப் பணியில் இருக்கும் தொழிலாளிகள், வீட்டு வேலைக்கு வரும் பணிப்பெண்கள், உணவகங்களில் சமையல் வேலை செய்பவர்கள், துப்புரவுத் தொழிலாளிகள், வேலையாட்கள் போன்றவர்களும் வெளிநாட்டிலிருந்து வருபவர்களே! ஆனால் இவர்களுக்குக் குறைந்த ஊதியம், நிரந்தரமற்ற வேலை, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு சிங்கப்பூரில் வேலையைத் தொடர முடியாத நிலை! இதைப் போன்ற உடலுழைப்பு அதிகமாகத் தேவைப்படும் வேலைகள் செய்ய  பொருளாதாரத்தில் முன்னேறிய முதல் தர நாடுகளில் உள்ளூர் மக்கள் அதிகம் முன் வர மாட்டார்கள்.

எனவே வெளி நாட்டிலிருந்து  முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளான, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா,இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து கட்டுமானத் தொழிலாளிகள், பணிப்பெண்கள் என்று கிட்டத்தட்ட 2,00,000 பேர் சிங்கப்பூரில் இருக்கிறார்கள்.

இன்றைய சிங்கப்பூரர்கள் வேலை செய்யத் தயங்கும் வேலைகளுக்கு வரும் தொழிலாளிகளுக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இருந்தால் அவர்களும் சிங்கப்பூரில் உரிமையோடு வாழ்ந்திருக்கலாம். இன்றைய முன்னேறிய சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று உரிமையோடு வாழ்பவர்களின் மூதாதையர்கள்  பெரும்பாலோர் இதைப் போன்ற வேலைகள் செய்து பிழைப்பதற்கு கப்பலேறி வந்தவர்கள்தான்.

வெளி நாட்டுத் திறனாளர்கள் என்று அழைக்கப்படுவர்களுக்கு அதிக சம்பளம், சலுகைகள். தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் துறையில் மேற்படிப்பு, மென் பொறியாளர்கள், ஆசிரியர்கள், கலைத் துறையினர், பத்திரிகையாளர்கள் என்று பல்வேறு துறைகளில் வெளி நாட்டில் இருக்கும் திறமைசாலிகளுக்குக் கதவுகள் திறக்கப்படுகின்றன.

இவர்கள் வெளி நாட்டுத் திறனாளர்கள்(expatriate) என்று மதிக்கப்பட்டு அவர்களுக்கு தனி மரியாதை. வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இவர்களை சிங்கப்பூர் வரவழைத்து அவர்களுக்கு அதிக ஊதியம், வீடு, வாகனம் போன்ற பல சலுகைகள் கொடுப்பது என்பது யானையைக் கட்டித் தீனி போடுவது போன்றது தான்.

அவர்களை இந்த நாட்டுக்கு வரவழைத்து வேலை செய்ய வைப்பதை விட அவர்கள் இருக்கும் ஊரிலிருந்தே அவர்கள் செய்யும் வேலையை இப்போது இருக்கும் தொலைத் தொடர்பு வசதிகள் மூலம் செய்ய வைப்பது என்ற புத்திசாலித்தனமான செயல்பாடு,  இப்போது கண்டு பிடித்த யுக்தி என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் (Outsourcing) அல்லது அவர்கள் செய்யும் அதே  வேலையை அதை விடக் குறைந்த ஊதியத்துக்கு மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஆட்களை வரவழைத்து செய்து கொள்வது. ஆனால் இதைப் போன்ற ஒரு யுக்தியை ராஃபிள்ஸ் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார்.

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜாவா பிரெஞ்சு- டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. ராஃபிள்ஸ் பிரிட்டிஷ் இராணுவத்தின் மூலம் பட்டாவியாவைக் கைப்பற்றி ஜாவாவின் ஆளுனர் ஆனதை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். ராஃபிள்ஸ் ஆளுனராகப் பணியாற்றத் தொடங்கியதும் ஆட்சி நிர்வாகம், சட்டம்- ஒழுங்கு,  மனித உரிமை மீறல்,  நிலவுடைமை  போன்ற பல துறைகளில் உள்ளூர் மக்களுக்குச் சாதகமாகப் பல சீர்திருத்தங்கள்  செய்தார். இச்சீர்திருத்தங்களால் உள்ளூர் மக்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

தாங்கள் காலனி அமைத்து ஆட்சி செய்யும் நாடுகளிலிருந்து வளங்களைச் சுரண்டி அதன் மூலம் தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்வதே அன்றைய ஐரோப்பிய நாடுகளின் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. ஆனால் ராஃபிள்ஸ் செய்த புதிய சீர்திருத்தங்களால் அரசாங்க வருவாய்  குறைந்தது.   அவர் ஆளுனராகப் பதவி ஏற்று ஒரு  வருட காலத்திற்குள் நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டது.

இதை ஈடு கட்டச் செலவைக் குறைத்து வரவை அதிகமாக்க மேலும் பல புதிய திட்டங்கள் கொண்டு வந்தார். அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்கள் ஏல விற்பனை செய்யப்பட்டது. இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்குப் பதிலாக, இந்திய சிப்பாய்களை நியமித்தார். இங்கிலாந்து ராணுவ வீரர்களின் பராமரிப்புச் செலவு அதிகம். இந்திய சிப்பாய்கள் குறைந்த சம்பளத்திற்கு அதே வேலையைச் செய்தனர். அவர்களின் பராமரிப்புச் செலவும் குறைவு.

ஆனால் ராஃபிள்ஸின் நடவடிக்கைகள் ராணுவப் படைத் தலைவர் ராபர்ட் ரொல்லோ கில்லஸ்பிக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. ராஃபிள்ஸ் எல்லையற்ற அதிகாரத்தை அத்துமீறி பயன்படுத்துவதாக நினைத்தார். தன் ராணுவப் பொறுப்பில் இருக்கும் ஆங்கிலேய வீரர்களின் எண்ணிக்கையைத் தன்னிடம் ஆலோசனை கேட்காமல் குறைத்தது அவரது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. அவர் ராஃபிள்ஸை  நிர்வாகத் திறமையற்றவர்.

அரசாங்க  நிலங்களை விற்றுப் பணம் சம்பாதித்தார் என்று குற்றம் சாட்டினார். இந்தக் குற்றங்களைப் பட்டியலிட்டு இங்கிலாந்து அரசாங்கத்துக்குக்  கடிதம் அனுப்பினார் கில்லஸ்பி.
இந் நிலையில், 1814 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி  ராஃபிள்ஸ் காதல் மனைவி ஒலிவியா இறந்தார். மனம் உடைந்து தனிமையில் உழன்றார்.

ஒலிவியா இறந்து ஐந்து ஆண்டுகள் கழித்துதான் அவருக்கு ஒலிவியாவையும் ராம்சேவையும் இணைத்துப் பேசப்பட்ட வதந்தியையும் அறிந்தார். இங்கிலாந்தில் இருந்து முதன்முதல் பினாங்கில் வேலை செய்யப் புறப்பட்டது ராம்சே என்ற மேலதிகாரி பரிந்துரைத்ததால் தான்! ஒலிவியாவோடு கொண்ட   இருந்த கள்ளத் தொடர்பை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ராம்சே  ராஃபிள்ஸைப் பயன்படுத்திக் கொண்டார்.

ஒலிவியாவைத்  திருமணம் செய்து கொண்டதால்தான் அவருக்கு பினாங்கு செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தது என்று தன்னைச் சுற்றியிருந்தவர்கள் புரளி பேசியதையும் உணர்ந்தார். இதில் கண்டிப்பாக எந்தவித உண்மையும் இருக்க முடியாது. ஒலிவியாவும் ராம்சேயும் ஒருவரை ஒருவர் சந்தித்தது கூட இல்லை.

என் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் பட்ட யாரோ ஒருவன் கிளப்பி விட்ட கட்டுக் கதை என்று தன் உறவினருக்குக் கடிதம் எழுதியது, அவர் ஒலிவியாவின் மீது வைத்திருந்த அளவற்ற காதலைக் காட்டுகிறது. ஒலிவியாவின் இறப்பிற்குப் பிறகு ராஃபிள்ஸின் உடல் நலம் சீர் குலைந்தது. மனதளவிலும் வாழ்க்கையில் பிடிப்பிழந்தவராக மரணத்தை எதிர் நோக்கும் மன நிலையில் இருந்தார்.

கில்லஸ்பி ராஃபிள்ஸ் மீது சுமத்திய குற்றங் களுக்கு லண்டனிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. மீண்டும் வாழ்வில் எதையாவது செய்து சாதித்து ஒரு அர்த்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று தன் தேடலைத் தொடர்ந்தார். தாவரவியல், விலங்கியல், தொல்லியல் போன்ற துறைகளில் தன் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

தன் அதிகாரத்துக்குட்பட்ட சுல்தான்களிடம் அவர்கள்  ஆண்டு கொண்டிருந்த நாடுகளின் வரலாற்றை எழுத வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். அவற்றைத் தொகுத்து இந்தோனேசியாவின் சரித்திரத்தை  ஆவணப்படுத்தினார்.  அவர் உயிரியல் ஆர்வத்துக்குத் தீனி போடுவதற்கு அவருக்குச் சுற்றிலும் இந்தோனேசியா மழைக் காடுகள் அதில் எண்ணற்ற தாவரங்கள், விலங்குகள். உலகத்திலேயே மிகப் பெரிய பூவைக் கண்டுபிடித்து அதற்கு அவர் பெயரையே வைத்தார். அது…

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top