‘தி சிராங்கூன் டைம்ஸ்’ என்ற மாத இதழ் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அதன் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகர் என்னிடம் சிங்கப்பூர் தொடர்பாக ஏதாவது தொடர் வந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னதும் சிங்கப்பூரில் இருக்கும் கட்டடங்களைப் பற்றி எழுதுகிறேன் என்று சற்றும் யோசிக்காமல் சொல்லி விட்டேன். சிங்கப்பூரின் கட்டுமானத் தொழில், சிங்கப்பூரில் இருக்கும் கட்டடங்களைப் பற்றிய பிரமிப்பு குறையாமல் இருந்தபடியால் அப்படிச் சொல்லிவிட்டேன்.
அவர் சற்றுத் தயங்கி சிங்கப்பூரில் இருக்கும் சாலைகளில் சில தமிழ்ப் பெயர்களோடு இருக்கின்றன.அந்தப் பெயர் எப்படி வந்தது என்பதைப் பற்றி எழுதுங்களேன் என்று யோசனை கூறினார்.முதலில் வீராசாமி சாலை, மெய்யப்பன் சாலை, கடையநல்லூர் சாலை போன்ற சாலைகளின் பெயர்களுக்கான காரணங்களைத் தேடும்போது சிங்கப்பூரை உருவாக்கிய ராஃபிள்ஸின் வாழ்க்கையைப் படிக்க நேர்ந்தது. சிங்கப்பூரை உருவாக்கியவரின் கதையை எழுதலாம் என்று தொடங்கியது நகரத்தின் கதை
‘தி சிராங்கூன் டைம்ஸ்’ தொடங்கிய ஓராண்டுகளில் அச்சிதழாக வெளி வருவது நிறுத்தப்பட்டு இணயத்தில் வெளிவரும் என்று திரு. சந்திரசேகர் சொன்னார். அதுவும் தொடர முடியாமல் முற்றிலுமாக நின்று போன பிறகு நகரத்தின் கதைக்கும் ஒரு முற்றுப்புள்ளி என்று நினைத்தபோது மனுஷ்ய புத்திரன் ‘உயிரோசை’யில் எழுதுங்கள் என்று சொன்னர்.
அவர் ‘உயிர்மை’யில் எழுத வேண்டாம். ‘உயிரோசை என்றால்’ வாராவாரம் வரும் என்று சொன்னதும் வாரம் ஒரு முறை நான்கு பக்கங்கள் எழுதுவதற்கு என்ன கஷ்டம் என்று ஒத்துக்கொண்டு விட்டுப் பிறகுதான் எவ்வளவு பெரிய அபாயத்தை எதிர்நோக்கியிருக்கிறேன் என்பது புரிந்தது. சனிக்கிழமை ஏன் இவ்வளவு சீக்கிரம் வருகிறது என்று படபடப்புடன் வார இறுதி நாள்கள் கழிந்தன. நான்கு பக்கங்கள் எழுத நாற்பது பக்கங்கள் படிக்க வேண்டும் என்ற கணக்குப் பிடிபடாமல் வார நாள்கள் நழுவி வார இறுதி நாள் வந்து விடும்.
சில சிங்கப்பூர் நண்பர்கள் சிங்கப்பூர் இந்தியர்கள் பற்றி இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம் என்று குறிப்பிட்டனர்.சிங்கப்பூர் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் பற்றி நிறைய புத்தகங்கள் ஏற்கனவே வந்து விட்டன. சிங்கப்பூரில் குடியுரிமை வழங்கப்பட்ட 50களில் தமிழவேள் கோ. சாரங்கபாணி சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுக் கொள்ளச் சொல்லி அப்போது வாழ்ந்த தமிழர்களிடையே போய் பிரச்சாரம் செய்திருக்கிறார். இதைப் போல் பலர் சிங்கப்பூரின் மேல் நம்பிக்கை வைத்து சிங்கப்பூரைத் தன் தாயகமாக நினைத்து வாழ்ந்திருக்கின்றனர்.
நகரத்தின் கதை ராஃபிள்ஸின் கதையோடு முடிந்து விடும் என்று நினைத்தேன்.ராஃபிள்ஸுக்குப் பிறகு கோல்மென், வில்லியம் ஃபர்குவார் இவர்களுக்கு சிங்கப்பூர் உருவானதில் பெரும் பங்கு உண்டு.இவர்களைப் பற்றி எழுதியதும் முடிந்து விடும் என்று நினைத்தேன். இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூர் ஜப்பானிய ஆட்சியில் துன்பப்பட்டதைப் படித்துவிட்டு இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூர் பற்றி எழுதியதும் நகரத்தின் கதை முடிந்து விடும் என்று எழுதத் தொடங்கி சிங்கப்பூர் ஒரு தனி நாடாக, திரு லீ மீண்டும் பிரதம மந்திரி ஆனதுடன் முடிந்திருக்கிறது. ராஃபிள்ஸ் கதை, கோல்மென், வில்லியம் ஃபர்குவார் கதை, இரண்டாம் உலகப்போரில் நடந்த அவலங்கள், கடைசியில் சிங்கப்பூர் மலேசியாவிடமிருந்து பிரிந்து இனி தனி நாடாக சிங்கப்பூர் இருக்கும் என்று திரு லீ சொல்லும் அந்தக் கணம்வரை பல துயரங்களுடன் கதை தொடர்ந்தது.
திரு லீ சிங்கப்பூர் இனி தனித்து இயங்கும் என்று அறிவித்த அந்த நாள், ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதியை சிங்கப்பூர் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது.நகரமே விழாக்கோலம் பூண்டு தேசிய தினத்தைக் கொண்டாட ஆயத்தம் ஆகும்.சிறிய நாடு.அதிக நிலப் பகுதிகள் கிடையாது. மேலும் புதியதாக ஒரு தொழிற்சாலையோ வர்த்தக நிறுவனங்களோ தொடங்குவதற்கு அடிப்படைத் தேவைகள் எதுவும் இல்லாத இந்த சிறிய நகரத்தில் மனித வளத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு முன்னேறிய பல தலைமுறைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
சிறிய கிராம வாழ்க்கையை விட்டு அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு குடியேறிய 1960களில் வாழ்ந்த எளிய மக்களுக்கு வாழ்க்கையைப் பற்றி பல அவநம்பிக்கைகளோடு எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக இருந்தது. சிறிய குடிசை வீடுகளில் தங்களுக்குத் தெரிந்த தொழில் செய்துகொண்டு வாழ்ந்த மக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குப் போனதும் என்ன வேலை செய்து பிழைக்கப்போகிறோம் என்ற அச்சம்.
ஆடு, மாடுகள், பன்றிகள், கோழிகள் வளர்த்துக் கொண்டும் காய்கறித் தோட்டம், ரப்பர் தோட்டம் போன்றவற்றில் தோட்ட வேலைகள் செய்துகொண்டும், குளம் குட்டைகளிலும் கடலோரப் பகுதிகளில் மீனவர்களாக வாழ்ந்தவர்களையும் அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருக்க வைத்தால் அவர்கள் என்ன வேலை செய்ய முடியும்?ஆனால் அந்த அவநம்பிக்கைகள் பொய்த்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி பாதுகாப்பான எதிர்காலத்தையும் அவர்களின் அடுத்த தலைமுறையினரை அறிவு சார்ந்த வளர்ச்சிபெற்றதையும் பார்க்க முடிந்தது.
திரு லீயின் தலைமையில் அவர் அமைச்சர் குழு தொழில் துறை, கல்வி, வாழ்க்கைத் தரம், தொழில்நுட்ப வளர்ச்சி, நகர வளர்ச்சி, நகர மேம்பாடு, நகர உள்கட்டமைப்பு, போக்குவரத்து வசதி, வீட்டு வசதிகள், பெருகி வரும் மக்கள் தொகை, வேலையில்லாத் திண்டாட்டம், முறையான பயிற்சி பெறாத தொழிலாளிகள், படிப்பறிவு அற்ற பாமர மக்கள், வெறும் உடலுழைப்பை மட்டும் நம்பி வாழ்ந்த தொழிலாளிகள், மக்கள் தொகைப் பெருக்கம் என்று பல பிரச்சினைகளைச் சந்தித்தனர்.
அனைத்துக்கும் கடும் உழைப்பு மட்டுமே தீர்வு என்பதை உணர்ந்து அனைவரும் கடுமையாக உழைத்தனர்.இன்று உலகில் முன்னேறிய நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கிறது.வாழ்க்கைச் சூழல், கல்வி, தொழில்நுட்பம், வாழ்க்கைத் தரம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து இவற்றில் மற்ற நாடுகளுக்கு முன் மாதிரியாக இருக்கிறது.சிங்கப்பூர் பல்கலைக்கழகம் உலகத் தர வரிசையில் 25 ஆவது இடமும், ஆசிய நாடுகள் தர வரிசையில் மூன்றாவது இடமும் பெற்றுள்ளது. தொலைநோக்குடன் திட்டமிட்டுச் செயலாற்றுவதில் முன்மாதிரியாக சிங்கப்பூர் விளங்குகிறது.
இன்னும் இருபது ஆண்டுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் எப்படியிருக்கும்?அப்போது வாழும் மக்களின் தேவைகள் என்ன?அப்போது பொதுப்போக்குவரத்து எப்படியிருக்க வேண்டும் என்பதைத் தொலைநோக்கோடு திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.குழந்தைப் பிறப்பு சதவீதம் குறைந்து மூப்படையும் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டிருப்பது இப்போதையப் பிரச்சினை.இளம் தம்பதியினர் அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்கப்படுத்துகிறார்கள்.முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கும் மக்களுக்கு அதிக மருத்துவ வசதிகள், தாதிமை இல்லங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
உலகில் வாழ்வதற்கு சிறப்பான மற்றும் பாதுகாப்பான இடம் என்ற வரிசையில் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.சிங்கப்பூர் என்றாலே சுத்தம் மற்றும் பசுமை நகரம் என்ற பெயர் பெற்றுள்ளது.தொழில் மற்றும் வர்த்தகம் செய்வதற்கு முதலீடு செய்ய மிக பாதுகாப்பான இடம் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.சட்ட திட்டங்களைப் பின்பற்றுவதில் யாருக்கும் எந்தவிதச் சலுகைகளும் காட்டப்படுவதில்லை.பதினெட்டு வயதான சிங்கப்பூர் ஆண்மகன் தேசிய சேவையில் சேர்ந்து கட்டாய இராணுவப் பயிற்சி பெற வேண்டும்.
இந்த சட்டத்தை மதித்து அப்போது பிரதமரின் புதல்வராக இருந்த இப்போதைய பிரதமர் திரு லீ சியான் லூங் தேசிய சேவையில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றார். சிங்கப்பூர் சட்டப்படி கொடுக்கப்படும் தண்டனைகளில் பிரம்படி கொடுப்பதும் ஒரு தண்டனை. இது இன்றும் சில குற்றங்களுக்குத் தண்டனையாக வழங்கப்படுகிறது.பிரம்படி என்பது அடித்த இடத்தில் அழிக்க முடியாத வடுவாக வாழ்நாள் முழுவதும் இருக்கும்.
பிரம்பைத் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் பயன்படுத்துவார்கள்.இதற்குப் பயன்படுத்தப்படும் பிரம்பின் நீளம் 1.27 மீட்டர், 1.27 செ மீ சுற்றளவுகொண்டிருக்க வேண்டும்.அதிகபட்சத் தண்டனையாக 24 பிரம்படிகள் வரை கொடுக்கப்படலாம்.அடிப்பவர் தன் முழு பலத்தையும் பயன்படுத்தி அடிப்பார். அடி விழுந்ததும் சில நிமிடங்கள் வலி தெரியாது. ஆனால் பிறகு வலியால் துவண்டு விடுவர்.ஒரே சமயத்தில் பல பிரம்படிகள் கொடுக்கப்படலாம்.அப்படிப் பிரம்படிகள் வாங்கியவர்கள் வலியால் பல நாட்கள் துடிப்பர்.பிறகு காயம் ஆறியதும் வடு நிரந்தரமாக அடிபட்ட புட்டப்பகுதியில் தங்கி விடும்.
1994 ஆம் ஆண்டு மைக்கேல் ஃபே என்ற பதினெட்டு வயது அமெரிக்க மாணவன் பொது இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் சாயங்கள் பூசி, கூர்மையான பொருள்களால் கீறி நாச வேலைகளில் ஈடுபட்டது, பொது அறிவிப்புப் பலகைகளைத் திருடியது போன்ற குற்றங்களுக்காக ஆறு பிரம்படிகள் தண்டனையாகப் பெற்றான்.
ஆனால் இந்த தண்டனை அமெரிக்கர்களுக்கு கேள்விப்படாத கொடூரத் தண்டனையாக இருந்தது.அப்போது அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டன் இப்படிப்பட்ட தண்டனை வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.ஆனால் சிங்கப்பூர் அரசு இந்த தண்டனையை மாற்ற முடியாது என்று அமெரிக்க தூதரகத்தில் இருந்து வந்த வேண்டுகோளை நிராகரித்தது.இதனால் அமெரிக்காவுடன் இருந்து வந்த நல்லுறவு கெட்டாலும் எங்கள் நாட்டுச் சட்டப்படிதான் தண்டனை வழங்கப்படும்.இதில் சலுகைகள் காட்ட முடியாது என்று கூறியது.அப்போது சிங்கப்பூர் அதிபராக இருந்த ஆங் டெங் சோங் ஆறு பிரம்படிகளை நான்கு பிரம்படிகளாகக் குறைத்தார்.
சிங்கப்பூரின் அடையாளங்களாக ஆர்ச்சர்ட் சாலை, சைனா டவுன், குட்டி இந்தியா, கேலாங் சிராய் போன்ற இடங்களோடு ஆர்க்கிட் மலர், மெர்லயன் சிலை, வானுயர்ந்த கட்டடங்கள் நிறைந்த மத்திய வர்த்தகப் பகுதி இவற்றோடு பல வகையான உணவுகள்! பல வகையான உணவுகளின் சொர்க்கலோகம் என்று சிங்கப்பூர் அழைக்கப்படுகிறது.துரியான் பழ வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எஸ்பிளனேட் அரங்கம், செந்தோசா, மரீனா பே சாண்ட்ஸ் இவற்றில் அமைந்திருக்கும் ஒருங்கிணைந்த உல்லாசத் தளங்கள் இவையோடு இப்போது சிங்கப்பூர் அடையாளமாக பெருமிதத்தோடு தேசிய சேவையைப் பற்றி சொல்கிறார்கள்.
திரு லீ தொடர்ந்து 32 ஆண்டுகள் பிரதம மந்திரியாக (1959 – 1990) இருந்து பிறகு திரு கோ செக் டோங் பிரதம மந்திரியாக 14 ஆண்டுகள் 1990 – 2004) பதவி வகித்தார்.அதற்குப் பிறகு இப்போது கடந்த எட்டாண்டுகளாக திரு லீ சியான் லூங், திரு லீயின் மூத்த புதல்வர் பிரதம மந்திரியாக இருந்து வருகிறார்.