திரு.டேவிட் மார்ஷல் மாணவர்களுடனும்,தொழிலாளிகளுடனும் ஏற்பட்ட முரண்பாடுகளால் மட்டும் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகவில்லை. காலனி ஆட்சியாளர்களுடன் எப்போதும் முரண்பட்டு நின்றார். ஆங்கிலேய ஆளுநரால் தான் கட்டுப்பட்டு இருப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க முயன்றார். தன்னுடைய தனித்தன்மையால் சிறந்த ஆட்சியாளர் என்ற பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பல திட்டங்களைச் செயலாக்க முயன்றார்.
அப்போதைய ஆளுநர் சர் ராபர்ட் பிளாக், டேவிட்மார்ஷல் இன்னும் கூடுதலாக நான்கு உதவி அமைச்சர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தார். இந்த நிராகரிப்பைக் காரணம் காட்டி, சிங்கப்பூருக்கு புதிய அரசியலமைப்புச் சட்டங்களுடன் தன்னாட்சி வழங்க வேண்டும். இல்லையென்றால் தான் உடனே பதவி விலகுவதாக அச்சுறுத்தத் தொடங்கினார்.
ஆங்கில அரசாங்கம் புதிய அரசு மற்றும் அரசியலமைப்புச் சட்டங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டேவிட் மார்ஷலை லண்டனுக்கு அழைத்தது. இந்தப் பேச்சு வார்த்தையின் மூலம் தாங்கள் விரும்பும் தன்னாட்சி அமைத்திட முடியும் என்று இந்தப் பேச்சுவார்த்தையை மெர்டெகா (மலாய் மொழியில் விடுதலை என்ற பொருள்) என்று அழைத்தனர். மார்ஷலைத் தலைவராகக் கொண்ட பதின்மூன்று பேர் கொண்ட குழு லண்டனுக்குப் புறப்பட்டது. அந்தக் குழுவில் அனைத்துக் கட்சிகளிலிருந்தும் பிரதிநிதிகள் இருந்தனர்.
குறிப்பாக, திரு லீ மற்றும் லிம் சின் சியாங் போன்றோர் இருந்தனர். பிரிட்டிஷ் அரசாங்கம் சிங்கப்பூருக்கு முழுமையான தன்னாட்சி வழங்க ஒப்புக் கொண்டது. ஆனால் உள் நாட்டுப் பாதுகாப்பு, வெளியுறவு போன்றவற்றைத் தங்கள் அதிகாரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தன் முடிவைக் கூறியது.
ஆனால் நாட்டுப் பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு இந்த இரண்டு துறைகளுக்கும் ஒரு குழு உருவாக்கி அதில் பிரிட்டனிலிருந்து மூன்று பேராளர்கள், மற்றும் சிங்கப்பூரிலிருந்து மூன்று பேர் இந்தக் குழுவில் பிரதிநிதிகளாக நியமிக்கப்படுவர். இதற்கு சிங்கப்பூரில் உள்ள பிரிட்டன் நாட்டுத் தூதர் அறுதி வாக்கெடுப்பு நடத்துவார் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டால் சிங்கப்பூர் முழுமையான விடுதலை பெற்று தன்னாட்சி அமைக்க முடியாது என்று டேவிட் மார்ஷல் இந்த முடிவுக்கு உடன்படவில்லை.
ஏற்கனவே இந்தப் பேச்சு வார்த்தையின் முடிவில் சிங்கப்பூருக்கு தன்னாட்சி கிடைக்கவில்லையென்றால் தான் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார். எனவே இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவு தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த திரு டேவிட் மார்ஷல் தன்னுடைய முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். துணை முதலமைச்சராக இருந்த லிம் இயூ ஹாக் முதலமைச்சராக பதவி ஏற்றார்.
1956 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சீன நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக்க் குழப்பம் விளைவிக்கத் தீர்மானித்தனர். லிம் இயூ ஹாக் அரசாங்கம் இதற்கெல்லாம் அஞ்சாமல் ஏழு கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கலைத்தது. இதில் சில மாணவர்கள் சங்கமும் இருந்தன. இரண்டு சீனப்பள்ளிகளையும் மூடியது.
சீனப்பள்ளிகளின் வாசலில் அமர்ந்து அரசாங்கத்துக்கு எதிராக கலகம் செய்தனர். இதற்குத் தலைவராக லிம் சின் சியாங் இருந்தார். ஐந்து நாட்கள் தொடர்ந்த இந்தக் கலவரத்தின் முடிவில் பதின்மூன்று பேர் கொல்லப்பட்டனர். கலவரத்தை அடக்க ஜோகூரிலிருந்து ராணுவம் கொண்டு வரப்பட்டது. 900 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் தேவன் நாயர், லிம் சின் சியாங், ஃபோங் சுவீ சுவான் போன்றோரும் அடங்குவர். கலவரக்காரர்களுக்கு எதிராக சிங்கப்பூர் அரசாங்கம் எடுத்த இந்தக் கடுமையான நடவடிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் ஆதரித்தது. சிங்கப்பூர் அரசு சரியான நேரத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்து கம்யூனிஸ ஆதரவாளர்களை ஒடுக்கியது என்று ஆங்கில அரசு பாராட்டியது.
1957 ஆம் ஆண்டு லிம் இயூ ஹாக் மீண்டும் ஒரு குழுவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவர்த்தைக்கு லண்டன் புறப்பட்டார். உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஒரு குழு அமைப்பது குறித்து ஒரு இணக்கமான முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி உள்நாட்டுப் பாதுகாப்புக் குழுவில் மூன்று சிங்கப்பூரர்கள், மூன்று ஆங்கிலேயர்கள் இடம் பெறுவர்.
இதற்கான தேர்தலில் விரைவில் விடுதலை பெறவிருக்கும் மலேயாவைச் சேர்ந்த பேராளர் ஒருவர் அறுதி வாக்கெடுப்பு நடத்துவார் என்ற முடிவு அனைவருக்கும் நல்ல முடிவாக இருந்தது. இந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையின் முடிவில் சிங்கப்பூர் விடுதலை பெற்று தன்னாட்சி அமைப்பதற்கான சாதகமான சூழல் உருவானதை உணர்ந்த சிங்கப்பூர் மக்கள் இந்தக் குழு பெற்ற வெற்றிக்கு அவர்கள் லண்டனில் இருந்து திரும்பி வந்தபோது ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.
சட்டசபையும் இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. 1958 ஆம் ஆண்டு இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தைக்கு இந்தக் குழு லண்டன் செல்ல ஆயத்தமானது. இந்த இறுதி கட்ட பேச்சு வார்த்தை மூலம் புதிய அரசு அமைக்கப்படலாம் என்ற நம்பிக்கையுடன் லண்டனுக்குப் புறப்பட்டனர்.
லிம் இயூ ஹாக் மூன்றாம் முறையாக லண்டன் புறப்படுவதற்கு முன்னால் சிங்கப்பூரில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன?
மக்கள் செயல் கட்சி தீவிரவாதக் கொள்கைகளோடு கூடிய கம்யூனிஸ சிந்தனைகளுக்கு மாறான மிதவாதக் கொள்கைகளோடு செயலாற்றத் தொடங்கியது. லீ குவான் இயூ மக்கள் செயல்கட்சியின் செயலவை உறுப்பினர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இருந்தார். ஆனால் 1956 ஆம் ஆண்டு பல பொதுமக்கள், மற்றும் கம்யூனிஸ ஆதரவாளர்கள் மக்கள் செயல் கட்சியில் பெரிய எண்ணிக்கையில் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். இதனால் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுச் செயலவை உறுப்பினர் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு செயலவை உறுப்பினர்களில் ஆறு பேர் கம்யூனிஸ ஆதரவாளர்கள்.
இத்தகைய சூழலில் லீ குவான் இயூ மற்றும் இதர மிதவாத உறுப்பினர்களும் செயலவையில் உறுப்பினர்களாகச் செயல்பட விருப்பமில்லாமல் சற்று ஒதுங்கினர். கம்யூனிஸக் கட்சியின் கோட்பாடுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் தாங்கள் ஆதரவு கொடுப்பதாக மக்கள் நினைத்து விடக்கூடாது என்பதால் இந்த தயக்கம். ஆனால் ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி லிம் இயூ ஹாக் அரசாங்கம் மக்கள் செயலவைக்கட்சியின் இத்தகைய போக்கை கவனித்து முப்பத்தைந்து கம்யூனிஸ ஆதரவாளர்களைக் கைது செய்தது.
இதில் ஐந்து பேர் மக்கள் செயல் கட்சியில் புதிதாகச் சேர்ந்த பொதுச் செயலவை உறுப்பினர்கள். இவர்கள் நீங்கலாகப் பல கட்சி கிளை அலுவலகங்களில் மக்கள் செயல் கட்சியின் பிரதி நிதிகளாகச் செயலாற்றிக் கொண்டிருந்த கம்யூனிஸ ஆதரவாளர்கள், தொழிலாளிகள் மற்றும் மாணவர் தலைவர்களையும் கைது செய்தனர். இந்த நடவடிக்கையால் திரு லீ மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் மேல் நம்பிக்கையில்லாத மிதவாத உறுப்பினர்களும் மக்கள் செயல் கட்சியை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அந்த ஆண்டு நவம்பர் மாதம் மக்கள் செயல் கட்சி எப்போதும் மிதவாதிகளின் கையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுப்பினர்களாக சேர்பவர்களுக்கும் கட்சியின் பொதுச் செயலவையில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் உள்ள சட்டங்களை சற்றே மாற்றி அமைத்தனர். நன்கு படித்த, இருபத்த்தோரு வயதைத் தாண்டிய சிங்கப்பூரர்கள் மட்டுமே முழு உறுப்பினர்களாக பதிவு செய்யப்படுவர்.
இப்படிப்பட்ட உறுப்பினர்களைப் பொதுச் செயலவை தேர்ந்தெடுத்து அங்கீகரிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கும் அப்படிப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே செயலவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்று கட்சியின் செயலவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டங்களை மாற்றினார். இதனால் வருங்காலத்தில் தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்பட்டு விடும் என்று நம்பினார்.
இதற்கிடையில் லிம் இயூ ஹாக் அரசாங்கம் சிங்கப்பூர் தன்னாட்சி பெற வேண்டும் என்ற முயற்சியில் மேலும் பல முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தி வெற்றி கண்டது. 1957 ஆம் ஆண்டு குடியுரிமை வழங்கும் சட்டத்தின்படி சிங்கப்பூரில் அல்லது மலேயாவில் பிறந்தவர்களுக்கு சிங்கப்பூர் குடியுரிமை வழங்கப்பட்டது. இரண்டு வருடங்களாக சிங்கப்பூரில் வசித்த ஆங்கிலேயர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.
சிங்கப்பூரில் பத்தாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தவர்கள் சிங்கப்பூர் அரசுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட பிறகு குடியுரிமை வழங்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகளி்ல் மலாயாவைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளிலும் அரசுப் பணிகளிலும் நியமிக்கப்படுவர் என்று சட்டசபை வாக்கெடுத்து தீர்மானம் கொண்டு வந்தது.
1957 ஆம் ஆண்டு பெருவாரியான மக்கள் பேசும் மொழிகளுக்குக் கல்வியிலும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பதால் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. புதிய கல்வி அமைச்சில் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகள் அங்கீகாரம் பெற்றன. 1958 ஆம் ஆண்டு கல்வி அமைச்சு 100 புதிய தொடக்கப்பள்ளிகள், 11 புதிய உயர்நிலைப் பள்ளிகள், ஒரு பலதுறை தொழில் நுட்ப பள்ளி போன்றவற்றைத் திறந்தது. தமிழ் மற்றும் மலாய் ஆசிரியப் பயிற்சிப் பள்ளியையும் நிறுவியது.
1958 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூன்றாம் கட்டப் பேச்சு வார்த்தைக்கு லிம் இயூ ஹாக் தலைமையில் சிங்கப்பூர் பிரதிநிதிகளைக் கொண்ட குழு லண்டனுக்குப் புறப்பட்டது. முழுமையான அதிகாரங்களோடு கூடிய தன்னாட்சி, அதனால் சிங்கப்பூருக்குக் காலனி ஆட்சியிலிருந்து முழுமையான விடுதலை என்ற முடிவுக்குக் காத்திருந்தனர் சிங்கப்பூர் மக்கள்!!!
தொடரும்…