சிங்கப்பூரில் மிகப்பெரிய இனக்கலவரம் நடப்பதற்குக் காரணமான பெண் மரியா என்ற நதிரா இந்தக் கலவரங்கள் நடந்தபோது எங்குஇருந்தாள்? என்ன ஆனாள்? கலவரங்கள் தொடங்கியவுடன் பெரிய கூட்டம் மரியா இருந்த கன்யாஸ்திரிகள் மடத்திற்குள் நுழைய முயற்சித்தது. ஆனால் காவலர்கள் தடுத்து நிறுத்தி உள்ளே நுழைய விடவில்லை. யார்க்ஹில்லில் இருந்த பெண்கள் காப்பகத்திற்கு மரியாவை அனுப்ப முயற்சித்தனர். அதுவும் நடக்காமல் சிங்கப்பூரில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருந்த செயிண்ட் ஜான்ஸ்தீவுக்கு அனுப்பினர்.
பின்னர் மறுநாளே அடிலைனுடன் மரியா நெதர்லாண்ட்ஸுக்கு விமானம் ஏறினாள். ஷீபோல் விமானநிலையத்தில் இறங்கியவுடன் மரியாவைத் தங்கள் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அதன்பின் நாதிரா என்ற பெண் ஆசியாவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் தன் பதினைந்து வருட வாழ்க்கையை மறந்து மரியாவாக ஒரு ஐரோப்பியப் பெண்ணாக வாழத் தொடங்கினாள் என்று இந்தக் கதையை முடிக்கலாம்.
மரியாவுக்கு மலாய் மொழி மட்டும் சரளமாகப் பேசத்தெரிந்ததால் மலாய்மொழி தெரிந்ததன் சொந்த அம்மா அடிலைனுடன் மட்டும்தான் பேசமுடிந்தது. மேற்கத்திய உணவு வகைகளை சாப்பிட மறுத்து தான் சாப்பிட்டுப் பழகிய சோறு வேண்டும் என்று அடம் பிடித்தாள். ஒரு உண்மையான முஸ்லிமாக ஐந்துவேளைகள் தொழுவதை நிறுத்தவில்லை. மரியாவை யாராவது சிங்கப்பூருக்குக் கடத்திக் கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சத்தில் அவளை சாதாரண உடையில் ஒரு காவலர் நிழல்போல் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார்.
அவர்கள் இருந்த ஊரில் எங்காவது ஒரு ஆசியர் தென்பட்டால் அவர் மரியாவைக் கடத்திச் செல்ல வந்திருப்பாரோ என்ற அச்சத்தில் விசாரிக்கப்பட்டார். மரியாவின் வீடு எப்போதும் காவல் துறையின் கண்காணிப்பில் இருந்தது.
மரியா மெல்ல தன் புதுவாழ்க்கையோடு ஒத்துபோகத் தொடங்கினாள். டச்சுமொழி கற்றுக்கொடுக்க ஒரு கன்யாஸ்த்ரீ நியமிக்கப்பட்டாள். வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொண்டாள். பின்னர் உள்ளூர் கான்வெண்ட் பள்ளியில் சேர்க்கப்பட்டாள். தன் குடும்பத்தினருடன் தேவாலயத்திற்குச் செல்ல ஆரம்பித்தாள்.
சிங்கப்பூரில் இருந்த அமீனாவும் மன்சூரும் நாதிரா திரும்பி வருவாள் எனக் காத்திருந்தனர். நீதிமன்றத்தில் மறுவிசாரணை நடக்கும் என எண்ணி யிருந்தவர்களுக்கு வழக்குதள்ளுபடி செய்யப்பட்டது எனத் தெரிந்ததும் நம்பிக்கை யிழந்தனர். அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் குழுக்களும் மெல்ல இந்த வழக்கைப் பற்றி மறந்துவிட்டுத் தங்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பினர்.
1956 ஆம் ஆண்டு ஏப்ரல்மாதம் 20 ஆம்தேதி மரியா ஜோஹன் ஜெரார்டஸ் என்ற டச்சு கத்தோலிக்க இளைஞனை திருமணம் செய்து கொண்டாள். மறுவருடமே ஒரு ஆண் குழந்தைக்குத் தாயானாள். பிறகு அவளுக்குப் பல குழந்தைகள் பிறந்து பத்துக் குழந்தைகளுக்குத் தாயானாள். ஆனால் அவள் தன் சொந்த அம்மாவான அடிலைனைத் தன் அம்மாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிலைனுடன் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே யிருந்தாள்.
அவளால் அமீனாவையும் மன்சூரையும் மறக்க முடியவில்லை. மரியாவின் கணவனான ஜோஹனும், நாதிராவின் கணவனான மன்சூரும் அடிக்கடி கடிதம் எழுதிக்கொண்டு தொடர்பில் இருந்தனர் என்பது ஒரு ஆச்சரியமான உண்மை! மரியாவை அழைத்துக்கொண்டு மலேயா வரவேண்டும் என்று மன்சூர் அழைத்தான். அமீனாவும் மரியாவைப் பார்க்க ஆவலாக காத்திருந்தாள். ஆனால் அப்படி போக முடியாதபடி குடும்பச்சூழல். மரியா ஜோஹன் தம்பதியினருக்கு அந்தப்பயணத்திற்குப் போதுமான பணம் சேர்க்க முடியவில்லை. மரியாவை மீண்டும் சந்திக்காமலேயே 1976 ஆம்வருடம் அமீனா மரணமடைந்தாள்.
1976 ஆம்வருடம் ஆகஸ்ட் மாதம் 16 ஆம்தேதி மரியாவின் வாழ்க்கையில் மீண்டும் ஒரு குழப்பம். மரியாவின் கணவனான ஜோஹனை மரியா கொலை செய்ய முயற்சித்தாள் என்று குற்றம் சாட்டப்பட்டு டச்சு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாள். நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது அவள் கதையில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. தன் கணவனை விட்டுப் பிரிய வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் இருந்தது. ஆனால் விவாகரத்து என்று கேட்டால் தன் குழந்தைகள் தன்னை விட்டுப்பிரிந்து தன் கணவனிடம் போய் விடுவார்களோ என்ற பயத்தில் விவாகரத்து செய்யும் எண்ணத்தைக் கைவிட்டாள்.
ஆனால் எப்படியாவது தன் கணவனை விட்டுப் பிரிந்துவிட வேண்டும் என்பதால் தங்கள் உணவு விடுதிக்கு அடிக்கடி வந்துபோகும் வாடிக்கையாளர்கள் இருவருடன் இணைந்து தன் கணவனைக் கொல்லத் திட்டமிட்டாள். இந்த மூவரும் சேர்ந்து ஒரு கைத் துப்பாக்கி வாங்கினர். நான்காவதாக ஒரு ஆளைச் சேர்த்துக்கொண்டு அவன் மூலம் ஜோஹனை கொலை செய்ய திட்டமிட்டனர். ஆனால் இந்த் நான்காவது ஆள் பயந்து போய் தங்கள் திட்டத்தை உளறிவிட போலீஸ் இந்த நால்வரையும் கைதுசெய்தது.
மரியாவின் தரப்பு வழக்கறிஞர்கள் மரியாவின் கடந்தகால வாழ்க்கையை எடுத்துக்கூறி மரியாவின் மனநிலையை விவரித்தனர். இதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. கொலை செய்யதிட்டமிட்டது மட்டும்தான் நடந்தது.கொலை எதுவும் நடக்கவில்லை. மேலும் மரியாவின் கூட்டாளி களுக்கு மரியா தன் கணவனைக் கொலை செய்தால் பணம் தருவதாகக் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே மரியா குற்றவாளி இல்லை என்று மரியாவை விடுவித்தனர். இந்தச் சூழலில் மரியாதை ரியமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்து மணவிலக்கும் பெற்றுவிட்டாள்.
2009 ஆம்ஆண்டு ஜூலைமாதம் 8 ஆம்தேதி மரியா தன்னுடைய ஹூஜ் பெர்ஜன் என்ற இடத்தில் அமைந்திருந்த தன்னுடைய வீட்டில் ரத்தப்புற்று நோயால் இறந்தாள். மலேயாவுக்கு ஒருமுறையாவது வரவேண்டும் என்று ஆசைப்பட்ட மரியா 1998 ஆம்ஆண்டு தன்னுடைய வளர்ப்புச் சகோதரியான கமாரியாவை கெமாமம் என்றதான் இளம் வயதில் வளர்ந்த அமீனாவின் சொந்த ஊருக்கு வந்து பார்த்தாள். அதுதான் கடைசிச்சந்திப்பு. அதன்பிறகு கமாரியாவும் ரத்தப்புற்று நோய்வந்துஇறந்தாள். அதே ரத்தப்புற்றுநோய் வந்து மரியாவும் இறந்தது அமீனா என்ற அம்மா வளர்த்த இரண்டு குழந்தைகளுக்கும் அமீனாதான் உண்மையானதாய் என்று நிரூபிப்பதுபோல் இருந்தது.
1950 ஆம்ஆண்டு சிங்கப்பூரை விட்டுப் போன மரியா 1998 ஆம்ஆண்டு திரும்பி வந்தபோது என்ன நினைத்திருப்பாள்? முழுவதுமாக மாறிவிட்ட சிங்கப்பூரைப் பார்த்து பிரமித்து இருப்பாளோ? அல்லது மாறி வரும் சமூகச் சூழலில் இதைப் போன்ற ஒரு இனப்போராட்டமும், பாசப்போராட்டமும் நடைபெறக்கூடாது என்று நினைத்திருப்பாளோ? மரியா தன் வளர்ப்பு அம்மா அமீனாவுடன் தங்கியிருந்த சையத் ஆல்வி தெரு இன்று செராங்கூன் சாலையின் ஒரு பிரபலமான முஸ்தபா சென்டர் என்று அழைக்கப்படும் பிரமாண்டமான கடைத் தொகுதி அமைந்திருக்கும் முக்கியப் பகுதியாக இருக்கிறது.
மன்சூர் மீண்டும் திருமணம் செய்து கொண்டு அவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. அவர் குழந்தைகள் பேரப்பிள்ளைகள் அனைவரும் சிங்கப்பூரில் இன்று நிம்மதியாக வாழ்கின்றனர்.
மரியா ஹெர்டோக் இனக்கலவரம் எதனால் நடந்து? உண்மையிலே இஸ்லாமியப் பெண்ணாக வளர்க்கப்பட்ட நாதிராவை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றி ஐரோப்பாவுக்கு அழைத்துச்செல்ல முயற்சித்ததால் மட்டும் ஏற்பட்டக் கலவரமா?
இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி உள்ளூர் மக்கள் முதலாளிகளாகத் தங்களை ஆண்டு கொண்டிருந்த ஐரோப்பியர்கள், மற்றும் யுரேசியர்களின் மீது தங்கள் காழ்ப்புணர்வைக் காட்டுவதற்கும் அவர்களைப் பழிவாங்குவதற்கும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் என்று சில சரித்திர ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தொடரும்…