நாதிரா என்பது மரியாவுக்கு அமீனா வைத்தபெயர். அடிலைன் ஹெர்டோக் ஜப்பானியப் படைகளால் பிடிக்கப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த போது தன் குழந்தைகளையும் தன்னுடன் அனுப்பும்படி அம்மாவிடம் சொன்னாள். அவள் அம்மா மற்ற எல்லாக் குழந்தைகளையும் கூப்பிட்டுக் கொண்டு வந்து விட்டாள்.
ஆனால் மரியா அமீனாவுடன் இன்னும் சிறிது நாள்கள் இருந்து விட்டு வருவாள் என்று சொன்னதை நம்பினாள். ஆனால் அவள் அதன் பிறகு விடுதலை ஆகி வெளியே வரும் வரை மரியா வரவில்லை. விடுதலை ஆகி வெளியே வந்ததும் மரியாவையும் அமீனாவையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்பதும் தெரியவில்லை என்பது திருமதி அடிலைன் ஹெர்டோக் கூறிய கதை.
இதற்கு நேர் மாறான ஒரு கதையை அமீனா கூறினாள். 1942 ஆம் வருட இறுதியில் மரியாவை அமீனாவிடம் தத்துப் பிள்ளையாக அடிலைன் கொடுத்து விட்டாள். தனக்கென்று ஒரு குழந்தை இல்லாத அமீனா மரியாவைத் தன் சொந்த மகள் போல் வளர்ப்பதாகக் கூறி, மேலும் அவளை முஸ்லிம் பெண்ணாக வளர்க்கப்போவதாகக் கூறியதைக் கேட்டு திருமதி அடிலைன் மகிழ்ச்சியடைந்தாள்.
திருமதி அடிலைன் ஒரு முஸ்லிமாகத்தான் வளர்ந்தவள். எனவே அவளுக்குத் தன் மகள் இஸ்லாமிய சமய நம்பிக்கைகளோடு வளர்வதில் எந்த ஆட்சேபணையும் இருக்கவில்லை. இந்த சம்பவத்திற்குப் பிறகு அமீனாவும் அடிலைனும் அடிக்கடி சந்தித்துக் கொண்டிருந்தனர். 1943 ஆம் ஆண்டு வரை தொடர்பில் இருந்தனர். 1944 ஆம் ஆண்டு அடிலைன் வேலை தேடும் பொருட்டு சுரபையாவுக்குச் சென்ற பின்னர் தொடர்பு விட்டுப் போனது.
அடிலைன் மரியாவை, மட்டுமில்லை, அவள் தம்பி பென்னியையும் அமீனாவிடம் வளர்க்கக் கொடுத்து விட்டு சிறிது காலம் கழித்து அவனைத் திருப்பி அழைத்துக் சென்று விட்டாள். மரியாவைத் தன் மகள் போலவே வளர்க்க விரும்பி அவளுக்கு சுன்னத் செய்து மரியா என்ற பெயரை நாதிரா பிண்டே மாரூஃப் என்று மாற்றி வைத்தாள். 1943 ஆம் ஆண்டு நாதிராவை அழைத்துக் கொண்டு ஜாகர்த்தா சென்றாள். பிறகு மீண்டும் பாண்டுங் சென்று ஜப்பானியக் காவல்துறையில் வேலை செய்தாள். மொழி பெயர்ப்பாளராகப் போர் முடியும் வரை வேலை செய்தாள்.
1947 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் மக்கள் எழுச்சியால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. அப்போது வெள்ளைக்காரக் குழந்தையுடன் அங்கே தங்கியிருந்தால் ஏதாவது பிரச்சினை ஏற்படலாம் என நினைத்து சிங்கப்பூர் வழியாக மலேயாவுக்குச் சென்றாள். அங்கே தன் சொந்த ஊரான தெரங்கானு மாநிலத்தில் உள்ள கெமாமன் என்ற ஊரில் சென்று தங்கினாள். இதற்குள் நாதிரா ஒரு மலாய் முஸ்லிம் பெண் குழந்தையாகவே மாறி இருந்தாள். மலாய் மொழி பேசினாள். மலாய் ஆடைகள் அணிந்தாள். உண்மையான முஸ்லிமாக இஸ்லாமியப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றினாள்.
இதுதான் உண்மையாக நடந்த கதை என்று நாதிராவின் வளர்ப்பு அம்மாவான அமீனா சொன்னதை நீதிமன்றம் ஏற்கவில்லை. அதன் பின்னர் நாதிராவைத் தன்னுடன் வைத்துக் கொள்ள அமீனாவின் போராட்டங்களை ஏற்கனவே படித்தோம்.
மரியா வழக்கின் மறு விசாரணை 1950 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி தொடங்கியது. மரியா கன்யாஸ்திரீகள் மடத்தில் தங்கினாள். அவள் விசாரணைக்கு வரவில்லை. அன்று விடியற்காலையிலிருந்து இஸ்லாமிய மதச் சின்னமான நட்சத்திரம், பிறைச் சந்திரன் வரையப்பட்ட கொடிகளோடும், மரியாவை விடுவிக்கக் கோரி எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளோடும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயர்நீதி மன்றத்தின் வாசலில் குழுமத் தொடங்கினர். மதியத்திற்குள் மூவாயிரம் பேர் நின்று கொண்டிருந்தனர்.
விசாரணை ஐந்தே நிமிடங்களில் முடிவடைந்து விட்டது. அமீனா செய்த மேல் முறையீட்டை ரத்து செய்து விட்டது. வழக்கு முடிந்து விட்டது. இதைக் கேட்டதும் ஆங்கிலேயர்களின் சட்டங்கள் மூலம் நல்ல முடிவு கிடைக்காது. முஸ்லிம்களின் உணர்ச்சிகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் பாரபட்சமாகத் தீர்ப்பை வழங்கியுள்ளது என்ற செய்தி பரவியதும் பெரிய இனக் கலவரம் பரவத் தொடங்கியது. மலேயா, இந்தோனேசியாவைச் சேர்ந்த் முஸ்லிம்கள் மற்றும் உள்ளூர் சீனர்களும் இந்தக் கலவரத்தில் ஈடுபட்டனர்.
ஐரோப்பியர்கள், யூரேசியர்கள் என்று யாரைப் பார்த்தாலும் தாக்கத் தொடங்கினர். கார்களைத் தலைகீழாக்க் கவிழ்த்து தீ வைத்தனர். காவல்துறையைச் சேர்ந்த பாதிக்கும் மேற்பட்ட காவலர்கள் மலாய்க்காரர்கள். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது இரக்கம் காட்டினர். அவர்கள் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவர்களை அடக்காமல் விட்டு விட்டனர்.
இதனால் மாலைக்குள் கலவரம் தீவின் எல்லா மூலைகளுக்கும் பரவியது. கலவரத்தை அடக்க ஜெனரல் டன்லப் இராணுவத்தின் உதவியை நாடினார். உள்நாட்டுப் பாதுக்காப்புப் படையிலிருந்து இரண்டு குழுக்கள் அழைக்கப்பட்டன. மலேயாவிலிருந்து மேலும் உதவிப் படைகள் அழைக்கப்பட்டன. முஸ்லீம் மதத் தலைவர்கள் மேலும் கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என்று வானொலி மூலம் கோரிக்கை விடுத்தனர்.
மறுநாள் டிசம்பர் 12ஆம் தேதியும் கலவரங்கள் கட்டுக்கு அடங்காமல் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இராணுவப் படைகளும் காவல் துறையும் இணைந்து டிசம்பர் 13 ஆம் தேதி மதியம் கலவரங்களை ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டு வந்தன. ஏழு ஐரோப்பியர்கள், இரண்டு காவல் துறை அதிகாரிகள், கலவரத்தில் ஈடுபட்ட ஒன்பது பேர் என கிட்டத்தட்ட 18 பேர் கலவரங்களை அடக்கும் முயற்சியில் காவலர்களால் சுடப்பட்டு இறந்தனர்.
119 வண்டிகள் சேதமடைந்தன. இரண்டு கட்டடங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. 173 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் இருந்தனர். இதன் பிறகு இரண்டு வாரங்கள் 24 மணி நேரம் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டது. மீண்டும் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் வர நெடு நாள்கள் ஆனது.
கலவரங்களுக்குப் பிறகு, சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஒன்றை உருவாக்கி கலவரங்களில் ஈடுபட்ட 778 பேரைப் பிடித்தனர். இதில் முதன்மையானவர் கரீம் கனி. 403 பேர் நிபந்தனைகளற்ற விடுதலை பெற்றனர். 106 பேர் மாதம் ஒரு முறை காவல் நிலையத்திற்கு வந்து கையெழுத்திட வேண்டும். இரவு ஆறு மணிக்கு மேல் வெளியில் செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகளோடு விடுவிக்கப்பட்டனர்.
200 பேர் கலவரங்களில் நேரிடையாக ஈடுபட்டனர் என்று குற்றம் சாட்டப்பட்டனர். இதில் 25 பேர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 100 பேர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டனர். 62 பேர் ஆலோசனைக் குழுவினரால் விசாரிக்கப்பட்டு ஏழு பேர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டனர். பருவ நீதிமன்றத்தின் விசாரணையில் (ASSIZE COURT) வெறித்தனமாக செய்த கொலைகளுக்கு குற்றம் சாட்டப்பட்டனர்.
ஐவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. கொலைக்குற்றம் சாட்டப்பட்டு தூக்குதண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் எ. கெ. எஸ். ஒத்மான்கனி என்பவர் சிங்கப்பூரில் பெரும் மதிப்புப் பெற்ற வர்த்தகர்களில் ஒருவர். மெட்ராஸைச் சேர்ந்தவர். ஜூப்னி உணவகம் என்ற உணவகத்தின் உரிமையாளர்.
1951 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி துங்கு அப்துல் ரஹ்மான் என்பவர் உம்னோ என்ற கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உம்னோ என்ற இந்தக் கட்சிதான் இன்று வரை மலேசியாவில் மிகப் பிரபலமான கட்சியாகவும் ஆளும் கட்சியாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவர் உம்னோ அமைப்பில் தலைவராகப் பதவி ஏற்றதும் தூக்கு தண்டனை பெற்ற ஐவருக்கும் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். இப்படிச் செய்வதன் மூலம் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெற முயன்றார். அரசாங்க உயர் அதிகாரிகளிடம் தொடர்ந்து தன் செல்வாக்கினால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க முயன்றார்.
பிரிட்டிஷ் அரசாங்கமும் தன்னுடைய காலனிய ஆட்சியை இவர்கள் பொறுப்பில் விட்டு விட்டு மெல்ல தாங்கள் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டு விடலாம் என்ற முடிவில் இருந்தது. அப்படி விலகிச் செல்லும்போது மக்கள் மனதில் ஒரு கசப்பான உணர்வை விட்டுச் செல்ல வேண்டாம் என்று நினைத்து இந்த ஐவருக்கும் தூக்குத் தண்டனையை ரத்து செய்து அதை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இந்த உம்னோ கட்சியின் தலைவரான துங்கு அப்துல் ரஹ்மான் என்பவர்தான் பின்னர் சுதந்திர மலேசியாவின் முதல் பிரதமர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனக் கலவரம் நடந்து முடிந்த பின்னர் அதைப் பற்றி விசாரிக்க ஆளுநர் ஃபிராங்க்ளின் கிம்சன் ஒரு ஆணக்குழுவை நியமித்தார். அந்தரங்க நீதிக்குழுவின் செயலவை உறுப்பினராக இருந்த சர் லயோனல் லீச் என்பவர் தலைவராக இருந்து இனக்கலவரங்களின் காரணங்களைக் கண்டறிந்தார். டிசம்பர் 2 ஆம் தேதியிலிருந்து 11 ஆம் தேதி வரை நடந்த சம்பவங்களின் அடிப்படையில் பார்க்கும் பொழுது பெரிய இனக் கலவரம் ஏற்படலாம் என்பது தெளிவாகத் தெரிந்தும் காவல்துறை போதிய முன்னேற்பாடுகள் செய்யாமல் இருந்தது.
நீதிமன்றத்தின் வாசலில் கலவரம் தொடங்கியதும் காவல் துறை அங்கே இருந்த கூட்டத்தைக் கலைக்க எந்த முயற்சியும் செய்யாமல் விட்டு விட்டது. அங்கே இருந்த கூர்க்காப் படையினருக்கு கூட்டத்தைக் கலைக்கச் சொல்லி எந்த ஆணையும் தரப்படவில்லை. அங்கே இருந்த மலாய் காவலர்களை மட்டும் நம்பினர். அவர்கள் கூடியிருந்த கூட்டத்தை உடனே கலைக்கத் தயங்கினர். தங்கள் வேலையைச் செய்ய முன் வரவில்லை. சிங்கப்பூரில் இருக்கும் காலனி அரசாங்கம் இந்தப் பிரச்சினையை சரியான முறையில் கையாளவில்லை என்று இங்கிலாந்து சட்டசபை (house of com mon) விமர்சித்தது.
மரியா ஹெர்டோக் என்ற பெண்ணால் ஏற்பட்ட இனக்கலவரம் காலனிய அரசாங்கம் உள்ளூர் மக்களின் சமயம் சார்ந்த நம்பிக்கைகளையும், அவர்கள் உணர்ச்சிகளையும் புரிந்து கொள்ளாமல் செயல்பட்ட ஒரு சம்பவம். அனைவரின் மதம் மற்றும் இனம் இவற்றைப் புரிந்துணர்வோடு அணுகி ஒற்றுமையோடு வாழ வழி செய்ய வேண்டும். ஒரு பெரிய கலவரத்தினால் பல இன மக்கள் வாழும் சிங்கப்பூரை எப்படி ஆள வேண்டும் என்பது அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடம்.
இதைப் போன்ற கலவரங்கள் தொடங்குவதற்கு முன்னால் பத்திரிகைகள் போன்ற ஊடகங்களை அரசாங்கம் எந்த அளவு கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் புரிந்தது.
இதன் பிறகு பெரிய இனக் கலவரம் 1964 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் பிறந்த நாள் அன்று நடைபெற்றது. 1969 ஆம் ஆண்டு மேலும் ஒரு இனக் கலவரம் நடைபெற்றது. இந்த இரண்டுமே சிங்கப்பூர் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பிறகு நடைபெற்றது. இன்று பல இன மக்கள் ஒன்றிணைந்து வாழும் நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கிறது.
அவ்வப்போது சிறு சிறு பூசல்கள் வராமல் இல்லை. சமீபத்தில் இந்தியர்கள் சமைக்கும் மசாலாவின் நாற்றம் எங்களுக்கு தலைவலி தருகிறது என்று சீனக் குடும்பம் தன் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் இந்தியக் குடும்பத்தினர் மீது குறை கூறியது.
அடுக்கு மாடிக் கட்டடங்களில் ஒரு வீட்டிற்கும் அடுத்த வீட்டிற்கும் இடையே ஒரு சிறிய சுவர்தான் இடைவெளி. சமையல் வாடை எப்படி அடுத்த வீட்டிற்குப் போகாமல் சமைப்பது? அதிக மணத்தைத் தரும் மசாலா, பூண்டு சேர்த்த உணவு வகைகள் சமைப்பதை இந்தியர்கள் எப்படி நிறுத்த முடியும்? கடைசியில் இரு வீட்டினரும் ஒற்றுமையாகப் பேசி ஒரு முடிவு எடுத்தனர்.
சீனக்குடும்பம் வெளியில் போகும்போது இந்தியக் குடும்பம் சமையல் செய்து முடித்து விடுவது என்ற சமரசத்திற்கு வந்தனர். அவ்வப்போது அக்கம் பக்கத்தினரோடு இதைப் போன்ற சச்சரவுகள் வரும்போது அதை இனச்சண்டை ஆக்காமல் பக்கத்து வீட்டுக்காரரோடு சண்டை என்று அளவில் நிறுத்திக் கொண்டால் இனக் கலவரம் எப்படி இருக்கும்?
மரியா என்ற நாதிரா இந்தக் கலவரத்தில் என்ன ஆனாள்?
தொடரும்…