Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » ஒரு நகரத்தின் கதை – 3
ஒரு நகரத்தின் கதை – 3

ஒரு நகரத்தின் கதை – 3

சிங்கப்பூரைக் குத்தகைக்கு வாங்குவதற்கு முன்னால் சிங்கப்பூர் டச்சு காலனியாக இருக்கிறதா என்று விசாரித்து விட்டுப் பின்னர்தான் வாங்கினார். ஹாலந்து என்று அழைக்கப்படும் நெதர்லாண்ட் நாட்டைச் சேர்ந்தவர்கள் டச்சுக்காரர்கள். ஐரோப்பாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு, குறிப்பாக ஆசிய நாடுகளில் தங்கள் வர்த்தகம் மற்றும் அரசியல் ஆளுமைகளை நிறுவியவர்கள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமில்லை.

பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், நெதர்லாண்ட்ஸ், இத்தாலி  போன்ற நாடுகளும் தங்கள்  காலனிகளை உலகமெங்கும் நிறுவினார்கள். இதில் யார் எந்த  நாட்டில்  காலனி அமைத்தாலும் ஐரோப்பாவில் அந்த இரு நாடுகளுக்கும் இடையில் எப்படிப்பட்ட உறவு நிலவி வந்ததோ அதே பகையை அல்லது நட்பைத் தொடர்வார்கள்.

இந்தியா முழுக்க கிட்டத்தட்ட பிரிட்டிஷ் அரசின்கீழ் இருந்தாலும், பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹே,யேனாம் போன்ற இடங்கள் பிரெஞ்சுக் காரர்கள் வசம் இருந்தது. கோவா, டையூ, டாமன் இந்தப் பகுதிகள் போர்ச்சுக்கல் அரசின்கீழ் இருந்தது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் பல போராட்டங்களும் புரட்சிகளும் நடை பெற்றன.

அதில் கலந்துகொண்டு ஆங்கிலேய அரசால் தேடப்பட்ட பல போராட்ட வீரர்கள் பாண்டிச்சேரியில் அடைக்கலம் பெற்றார்கள். பிரான்ஸும், இங்கிலாந்தும் பகைமை நாடுகள். அதனால் அரவிந்தர், பாரதியார் போன்றோரை ஆங்கிலேய அரசு தன்னிடம் ஒப்படைக்கச் சொல்லியும் பிரெஞ்சு அரசாங்கம் அவர்களை ஒப்படைக்கவில்லை.

இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களையும் போர்ச்சுக்கீசியர்களையும் எதிர்த்துப் பெரிதாக எந்தப் போராட்டங்களும் நடைபெறவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றபோது இந்தப் பகுதிகள் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த போதிலும் இவை சுதந்திரம் பெறவில்லை.

பின்னர் 1954 ஆம் ஆண்டு இந்தியா பிரெஞ்சு அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து 1962ஆம் ஆண்டுதான் பாண்டிச்சேரி இந்தியாவின் ஒரு பகுதியாக, ஒரு தனி மாநிலமாக அங்கீகாரம் பெற்றது. போர்ச்சுக்கல் அரசு கோவா பகுதியை இந்திய அரசுக்குத் தர விரும்பவில்லை. இந்திய இராணுவத்தில் ‘ஆப்ரேஷன் விஜய்’ என்ற படையெடுப்பு மூலம் வலுக்கட்டாயமாக இந்தியாவின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது.

இப்படி ஒரே நாட்டில் பல ஐரோப்பியக் காலனிகள் அமைந்தபோது அவை ஐரோப்பியர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் ஒரு சவாலாக இருந்தது.

முதல் அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தது போல் ராஃபிள்ஸ் பினாங்கில் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியபோது உடல் நலம் குன்றி மலாக்காவில் சிறிது காலம் தங்கியிருந்தார். அப்போது மலாக்கா அமைந்திருந்த இடம், மலேயா தீபகற்பத்தின் தெற்குப் பகுதி. அதன் மிதமான தட்ப வெப்பச் சூழல் இவற்றால் கவரப்பட்டு மலாக்கா கிழக்கிந்திய கம்பெனிக்குச் சொந்தமானால் நம் வர்த்தகத்திற்குப் பெரிதும் வசதியாக இருக்கும் என்று பரிந்துரைத்தார்.

அப்போது மலாக்கா டச்சுக்காரர்கள் காலனியாக இருந்தது. பரமேஸ்வரா என்ற இஸ்கந்தர் ஷா சுல்தான் உருவாக்கிய மலாக்காவை 1500களில் போர்ச்சுக்கல் கைப்பற்றியது. போர்ச்சுக் கலோடு போர் செய்து நெதர்லாண்ட் மலாக்காவில் டச்சு கிழக் கிந்தியக் கம்பெனியை நிறுவியது. இதே போல் இராணுவத்தின் உதவியுடன் இங்கி லாந்து வெகு எளிதாக மலாக்காவை டச்சுக்காரர்களிடமிருந்து பிடுங்கி யிருக்கலாம். போரில் டச்சுக்காரர்களை வெல்வது என்பது இங்கிலாந்திற்குப் பெரிய விஷயமில்லை.  ஆனால் அதை நடத்த விடாமல் தடுத்தது அந்தக் காலகட்டம்.

1700ஆம் ஆண்டு இறுதியிலும், 1800ஆம் தொடக்கங்களிலும்  நெப்போலியன் போனபார்ட் என்ற பிரெஞ்சு மன்னன் தன்னுடைய போர் வெறியால் ஐரோப்பாவைக் கதி கலங்க வைத்துக் கொண்டிருந்தான். ஐரோப்பாவில் இருக்கும் எல்லா நாடுகளையும் நெப்போலியன் வெற்றி கொண்டு தன் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்தான். இங்கிலாந்து இங்கிலிஷ் கால்வாய், மெடிட்டரேனியன் கடல் பகுதியைச் சுற்றி இருக்கும் நாடுகள் தங்கள் ஆட்சியின் கீழ் இருப்பது தங்கள் கடல் பயணத்திற்கு வசதியாக இருக்கும் என்று போட்ட கணக்கு மாவீரன் நெப்போலியனால் தவிடு பொடியாயிற்று.

மெடிட்டரேனிய நாடுகளை வென்று பிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வந்தான். இந்த்த் தொடர் போரினால் பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. படை வீரர்களும் மனதளவிலும், உடலாலும் களைப்படைந்தனர். இந்தச் சூழ்நிலையில் நெதர்லாண்டைப் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினார்கள். நெதர்லாண்ட் அமைந்திருந்த இடம் இரு பகை நாடுகளுக்கும் இடையில், பிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் நடுவில் ஒரு இடிதாங்கி போல் அமைந்திருந்தது.(BUFFER STATE).

இந்நிலையில் நெதர்லாண்டைப் பகைத்துக் கொண்டு ஐரோப்பாவில் தனக்கு மேலும் ஒரு பகையைத் தேடிக் கொள்ள இங்கிலாந்து விரும்பவில்லை. நெதர்லாண்டுடன் நட்புறவோடு இருப்பதுதான் ஐரோப்பாவில் போரைத் தடுக்க ஒரே வழி என்று உணர்ந்து டச்சுக்காரர்களுக்கு நேசக்கரம் நீட்டியது இங்கிலாந்து.

இந்தச் சூழலில் டச்சுக்காரர்களுடன் நட்புடன் இருந்து சமாதான ஒப்பந்தம் உருவாக்கி மலாக்காவை அடையலாம் என்று  மலாக்காவைப் பற்றி ராஃபிள்ஸ் எழுதிய பரிந்துரை அப்போதைக்குச் சாத்தியம் இல்லை என்று அந்தப் பரிந்துரை மூலையில் போடப்பட்டது.

இந்தச் சூழலில் சிங்கப்பூர் டச்சுக்காரர்களுக்குச் சொந்தமாக இருந்தால் அதை வாங்குவது மீண்டும் வம்பை விலை கொடுத்து வாங்குவது போல் என்று உணர்ந்தார் ராஃபிள்ஸ். மலேயாவின் தெற்குப் பகுதியில் ஒரு குடியிருப்பைத் தேடி அலைந்தபோது பல தீவுகளைப் பார்த்தார். சில தீவுகள் இயற்கையாக அமைந்த துறைமுகத்துடன் இருந்தன.

ஆனால் டச்சுக்காரர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது, சில இடங்கள் துறைமுகம் அமைக்க வசதியில்லாமல் இருந்தன. தேடலின் இறுதிக் கட்டத்தில் கரீமூன் தீவு அல்லது சிங்கப்பூர் என்ற இரு இடங்களில் சிங்கப்பூர் இன்னும் சிறப்பான தேர்வு என்று ராஃபிள்ஸ் கரீமூன் தீவை நிராகரித்தார்.

சிங்கப்பூர் ஜோஹோர் சுல்தானுக்குச் சொந்தமானது என்று தெரிந்ததும் சுல்தான்  அப்துல் ரஹ்மான் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட மாட்டார் என்பதைப் புரிந்து கொண்டார் ராஃபிள்ஸ். சிங்கப்பூரை அவ்வளவு எளிதாக விட்டுவிட விரும்பாத ராஃபிள்ஸ் தன் ராஜதந்திரத்தை சமயோசிதமாகப் பயன்படுத்தினார். அப்துல் ரஹ்மானின் மூத்த சகோதரர் துங்கு ஹுசேனுக்கும் அப்துல் ரஹ்மானுக்கும் வாரிசுச் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்துல் ரஹ்மானுக்கு ஆதரவாக பூகிஸ் இன மக்களும், டச்சு அரசாங்கமும் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் அப்துல் ரஹ்மானை ஜொஹோர் சுல்தானாக அங்கீகரித்தார்கள். பூகிஸை சேர்ந்த்த முரட்டுத்தனமும், வீரமும் நிறைந்த வீரர்களை எதிர்த்தும் டச்சுக்காரர்களைப் பகைத்துக் கொண்டும் மலாயா தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் தங்களுக்கென்று ஒரு துறைமுகத்தை அமைத்துக் கொள்வது என்பது இயலாத காரியம் என்பதை நன்கு அறிந்த ராஃபிள்ஸ் ஜோஹோர் யாருக்கு முறையாகச் சேர வேண்டுமோ அவரை, அதாவது துங்கு ஹுசேனைப் பிடித்து வந்தார்.

ரியாவ் தீவில் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த ஹுசேனைப் பிடித்து வந்து துங்கு ஹுசேனை ஜோஹோர் சுல்தானாக ஆங்கிலேய அரசாங்கம் அங்கீகரித்து அவருக்கு வருடந்தோரும் மான்யமும், தேவையான பாதுகாப்பும் அளிப்பதாக வாக்களித்தார். சிங்கப்பூர் தீவை முறைப்படி விலை கொடுத்து  வாங்கியதாக ஆவணங்கள் எழுதி அதில் உள்ளூர் தலைவனும், ஜோஹோர் சுல்தான் துங்கு ஹுசேனும் கையெழுத்திட்டார்கள்.

இப்படிப் பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு இடையில் சிங்கப்பூரை விலை கொடுத்து வாங்கியதாக ராஃபிள்ஸ் கையில் வைத்திருந்த ஆவணம் செல்லுபடி ஆனதா?

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top