ஷோனன்தோ நகர வாழ்க்கை அங்கு வாழ்ந்த மக்களுக்கு எப்படியிருந்தது? தொடர்ந்து பல வருடங்களாக நடந்து கொண்டிருந்த உலகப் போரினால் உலகமே பொருளாதாரச் சீர் கேட்டினால் நிலை குலைந்து போயிருந்தது. போரை நேரிடையாக சந்தித்து தோல்வி அடைந்து எதிரிகளின் வசம் பிடிபட்ட நாடு எப்படிப்பட்ட வறுமையில் வாடியிருக்கும்? உணவுப் பற்றாக்குறையினால் பட்டினிச் சாவுகள்! உணவுப் பங்கீட்டு முறையில் வழங்கப்பட்ட அரிசி, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் எந்தக் குடும்பத்திற்கும் போதுமான அளவு கொடுக்கப்படவில்லை.
மரவள்ளிக் கிழங்கை சுட்டுத் தின்றனர். அரிசியைக் கஞ்சியாக்கிக் உண்டனர். வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்குதான் மாலை நேர தின்பண்டம். தேங்காய்ப் பாலில் பனை வெல்லத்தை சேர்த்து குழந்தைகளுக்கு பாலுக்குப் பதிலாகக் கொடுத்தனர். உணவுப் பங்கீட்டு அட்டை இருந்தால் தான் கடைகளில் பொருள்கள் வாங்க முடியும். எல்லாக் கடைகளிலும் நீண்ட வரிசை. கால் கடுக்க நின்று அவர்கள் விநியோகம் செய்யும் அரை கிலோ, ஒரு கிலோ அரிசியை வாங்கிச் செல்ல வேண்டிய நிலை.
எல்லோரும் சொந்தமாக காய்கறிகள் தோட்டம் போட்டு தங்களுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிட்டுக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் தங்கள் பள்ளி நேரம் முடிந்து பள்ளியில் காய்கறித் தோட்டம் அமைக்க பாடுபட்டனர். காய்கறிகள் மட்டுமல்லாமல் கோழிகள், ஆடுகள், பன்றிகள் போன்ற பண்ணை விலங்குகள் வளர்த்து தங்கள் உணவுத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.
பாடுபட்டால்தான் அடுத்த வேளை உணவு!!! ஆனால் இந்த நிலைமை எல்லோருக்கும் இல்லை. ஜப்பானியர்கள் தங்கள் நாட்டு நாணயத்தை புழங்க விட்டனர். ஆனால் ஸ்ட்ரெயிட்ஸ் நாணயம் என்று அழைக்கப்பட்ட சிங்கப்பூர் நாணயம்தான் அதிகமாக மதிக்கப்பட்டது. காரணம், அந்த வாழைமர நாணயம் (BANANA NOTE) என்று அழைக்கப்பட்ட அந்த நாணயம் மிக மலிவான காகிதத்தில் அச்சடிக்கப்பட்டது. தேவைப்படும் போதெல்லாம் ஜப்பானியர்கள் அச்சடித்துக் கொண்டனர். இதனால் அந்த நாணயத்தை யாரும் மதிக்கவில்லை.
ஸ்ட்ரெயிட்ஸ் நாணயம் ரகசியமாக புழக்கத்தில் இருந்தது. விலை உயர்ந்த வெள்ளிப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள் வைத்திருந்தவர்களுக்கு பண்டமாற்று முறையில் வேண்டிய உணவுப் பண்டங்கள் கிடைத்தன. கறுப்புச் சந்தையில் என்ன வேண்டுமானாலும் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது. ஒரு நாள் முடிந்து இரவு உணவாக ஒரு குவளை அரிசிக் கஞ்சியை குடும்பத்தினருடன் சேர்ந்து உண்ண வாய்ப்பு கிடைத்தால் அந்த நாள் மிக அதிர்ஷ்டமான நாள்!!!!!
ஜப்பானியர்கள் அப்போது வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகள், நாளிதழ்கள் எல்லாவற்றையும் புதிய பெயர்களில் நடத்தினார்கள். இவற்றில் என்ன இருந்திருக்க முடியும்? ஜப்பானிய மன்னரின் புகழ்! ஜப்பானிய நாட்டின் மகிமைகள்! ஜப்பானியர்களின் வெற்றிகள்! ஜப்பானியர்களின் நற்குணங்கள்! இதைத் தவிர அப்போது மக்களுக்கு வேறு எந்த செய்திகளும் கிடைக்காது. ‘ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ அப்போது ‘ஷொனன் டைம்ஸ்’ என்று வெளி வந்தது. பின்னர் பெயர் மாறி சையனான் ஷிம்புன் என்று வெளியிடப்பட்டது.
கெம்பிதாய் என்று அழைக்கப்பட்ட ஜப்பானிய காவல் துறையைக் கண்டு மக்கள் நடுங்கினர். போர் முடிந்த சமயம் நிலவிய குழப்பமான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பலர் கடைகளில் புகுந்து கொள்ளையடிக்கத் தொடங்கினர். அவர்களைக் கண்டு பிடித்து அவர்களைச் சுட்டுக் கொன்று தலையை வெட்டி பொது மக்கள் பார்வைக்கு வைத்தனர். இந்தக் குரூரத் தண்டனைகள் மூலம் மக்களைக் கதி கலங்க வைத்துக் கொண்டிருந்தனர்.
நகரமெங்கும் உளவாளிகளை உருவாக்கினர். ஜப்பானியர்களுக்குத் தேவைப்படும் தகவல்கள் கொடுப்பவர்களை ரகசிய உளவாளிகளாக வேலை கொடுத்தனர். இதனால் பொது மக்கள் யாரை நம்பி என்ன சொல்வது என்பது தெரியாது அச்சத்துடன் வாழ்ந்தனர். சந்தேகத்துக்கு உரியவர்கள் என்று யாரையாவது சந்தேகித்து காவல் நிலையம் அழைத்து வந்தால் சித்ரவதைகள் செய்து தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவர்.
கல்வி நிலையங்களையும் ஜப்பானியர் விடவில்லை. ஆங்கில வழிக் கல்வி, தாய் மொழிக் கல்வி இரண்டையும் மாற்றி பள்ளிகளில் ஜப்பானிய மொழியைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். காலையில் ஜப்பான் இருக்கும் திசை நோக்கி ஜப்பானிய தேசிய கீதம் பாட வேண்டும்.
திரை அரங்கில் ஜப்பானியத் திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டன. அதில் ஜப்பானியர்களின் பெருமைகள், அவர்களைப் பற்றிய பிரச்சாரப் படங்கள் காட்டப்பட்டன. திரைப்படங்களில் ஆங்கிலேயர்களை இழிவுபடுத்தியும், கேலி செய்தும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அவற்றைப் பார்த்து யாராவது சிரிக்காவிட்டால் ஜப்பானியர்களின் எதிரிகள் என்று சந்தேகப்படுவர். திரை அரங்கில் பொதுமக்களோடு ஜப்பானிய ராணுவத்தினர், ஜப்பானிய உளவாளிகள் என்று பலரும் கலந்து இவற்றைக் கவனித்துக் கொண்டிருப்பர். திடீரென்று விளக்குகளைப் போட்டு அங்கிருக்கும் இளைஞர்களை சையாம் மரண ரயில் பாதை வேலைக்கு அழைத்துச் சென்று விடுவார்கள்.
செய்தித் தாள், வானொலி ஒலிபரப்பு இவற்றில் ஜப்பானியர்களின் வெற்றிகளைப் பற்றி மட்டுமே செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டு வானொலி நிலையங்கள் ஒலிபரப்பும் செய்திகளை யாராவது கேட்க முயற்சித்து பிடிபட்டு விட்டால் அன்று முதல் எந்தச் செய்தியும் அவர்களால் கேட்க முடியாது.
இந்தச் சூழலில் ஜப்பானியர்களுக்கு எதிராகப் பல ரகசியக் குழுக்கள் செயல்படத் தொடங்கின. இவற்றில் M.P.A.J.A. என்ற மலேயன் பீப்பிள் ஆன்டி ஜப்பானிஸ் ஆர்மி என்ற குழு தீவிரமாகச் செயல்பட்டது. பல ஜப்பானிய ராணுவ அதிகாரிகளைத் திடீரென்று தாக்கிக் கொன்றனர். மலேயாக் காடுகளில் மறைந்து வாழ்ந்தனர். தங்கள் உணவுத் தேவைகளுக்கு காட்டில் பயிரிட்டு அதை வைத்துக் கொண்டு சமாளித்தனர். ஜப்பானியர்களுக்கு எதிரான செய்திகளை பொதுமக்களுக்கு செய்தித்தாள்கள் மூலம் பரப்பினர்.
மலேயா, சிங்கப்பூரில் ஜப்பானிய ஆக்கிரமிப்பை அடக்க வேண்டும் என்று போராடிய குழுக்களில் ஃபோர்ஸ் 136 (F O R C E 136) என்ற குழு M.P.A.J.A வுடன் இணைந்து செயலாற்றியது. பிரிட்டிஷ்கார்ர்களால் உருவாக்கப்பட்ட ரகசியக் குழு இது.இதில் பல உள்ளூர் மக்கள் சேர்ந்து இந்தியாவில் ராணுவப் பயிற்சி பெற்றனர். ஜப்பானியர்களைப் பற்றி தகவல்கள் சேகரிக்க உருவாக்கப்பட்டது. இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள் நீர் மூழ்கிக் கப்பல்கள் மூலம் மலேயாவுக்கு கொண்டு வரப்பட்டு மலேயன் பீப்பிள் ஆன்டி ஜப்பானிஸ் ஆர்மியுடன் இணைந்து செயல்பட்டனர். ஃபோர்ஸ் 136 என்ற இந்தக் குழுவுக்கு சிங்கப்பூரிலிருந்த பலரும் உதவி செய்தனர். இதில் முக்கியமானவர் தொழிலதிபர் லிம் போ செங் என்பவர்.
லிம்போசெங் ஜப்பானியர்களால் பிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு 1944 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறந்தார். ஆனால் இறுதிவரை ஜப்பானியர்களால் அவரிடமிருந்து எந்த உண்மைகளையும் பெறமுடியவில்லை. ஜப்பானியர்களின் வெறித்தனமான ஆட்டம் ஒரு ஆட்டம்பாம் என்று அழைக்கப்பட்ட அணுகுண்டுகள் மூலம் ஒரு முடிவுக்கு வந்தது.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி நாகசாகி என்ற ஜப்பான்நகரில் முதல் அணுகுண்டு வீசப்பட்டது. மூன்று நாள்கள் கழித்து ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஹிரோஷிமா என்ற நகரில் இரண்டாம் குண்டு வீசப்பட்டது. ஃபாட்மென், லிட்டில்பாய் என்ற இரண்டு அணுகுண்டுகளும் இரண்டாம் உலகப்போரை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தன.
1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி எந்த நிபந்தனைகளும் இன்றி தோல்வியை ஒப்புக்கொண்டு பிரிட்டனிடம் ஜப்பான் சரணடைந்தது. இனி சிங்கப்பூர்????
தொடரும்…