1942 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி ஜப்பானியர்கள் சிங்கப்பூரைக் கைப்பற்றினார்கள். 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி சிங்கப்பூர் மீண்டும் பிரிட்டிஷ் காலனி நாடுகளில் ஒன்றாக ஆனது. கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் ஷோனன்தோ என்ற பெயரில் அழைக்கப்பட்ட சிங்கப்பூரில் பல இன மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். இதில் பலர் சிங்கப்பூரைத் தன் தாய் நாடாக நினைக்கவில்லை.
சீனர்கள் சீனாவைத் தங்கள் சொந்த நாடாகவும், இந்தியர்கள் இந்தியாவைத் தங்கள் தாய் நாடாகவும் நினைத்து சிங்கப்பூரை பிழைப்பை நாடி வந்த ஒரு இடமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் பெரும்பாலானவர்கள் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமாக நடந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆட்சி மாற்றம். ஆங்கிலேயர்களிடம் இருந்தும், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்தும் விடுதலை கொடுக்க வந்திருப்பதாக ஜப்பானியர்கள் அறிவித்தனர். அந்த ஆட்சி மக்களுக்கு எந்த வகையிலும் விடுதலை தரவில்லை. எப்போதும் ஒரு அச்சத்துடன், எந்த நேரமும் தாங்கள் தண்டிக்கப்பட்டு விடலாம் என்ற பீதியிலும் வாழ்ந்தனர்.
தெற்கின் ஒளி என்று அழைக்கப்பட்ட நகரம் யாருடைய வாழ்க்கைக்கும் ஒளி தரவில்லை. ஜப்பானியர் முதலில் சிங்கப்பூர் முழுவதும் இருந்த ஐரோப்பியர்கள் அனைவரையும் கைது செய்தனர். போர்க்கைதிகளாகப் பிடிபட்டவர்களை சாங்கி சிறைச்சாலை, சிலாராங்க் பாரக்ஸ், சீமைச் சாலையிலிருந்த ராணுவ முகாம் போன்ற இடங்களில் அடைக்கப்பட்டனர்.
இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் விசாரணை என்ற பெயரில் சுடப்பட்டனர். நிறைய பேர் சயாம் மரண ரயில் என்று அழைக்கப்பட்ட ரயில் பாதை போட தாய்லாந்துக்கு அனுப்பப்பட்டனர். மலேயாவிலிருந்து தாய்லாந்து வழியாக பர்மா வரை செல்லும் இந்த ரயில் பாதை போடப்பட்ட கதைகள் இன்றும் பலராலும் நடுக்கத்துடனும் கூறப்பட்டு கண்களில் நீருடனும் நினைவுகளில் அமிழ்ந்திருக்கிறது. இந்த ரயில் பாதை மூலம் ஜப்பானியப் படைகள் பர்மாவை அடைவது எளிதாயிற்று. இதன் மூலம் அப்படியே இந்தியாவை அடைந்து விடலாம் என்று திட்டமிட்டனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ற இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் இந்திய தேசியப் படை என்ற ஒரு படைக் குழுவை அமைத்து இவர்களைக் கொண்டு ஆங்கிலேயர்களுடன் போராடி சுதந்திரம் அடைந்து விட வேண்டும் என்று தீவிரமாக முயன்று கொண்டிருந்தார். இதற்கு ஜப்பானியர் ஆதரவு கொடுத்தனர்.
சிங்கப்பூரில் ஒரு ராணுவத் தளம் அமைத்து அதில் பல இந்தியர்களைப் படை வீரர்களாகச் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு ராணுவப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். முதன் முதலாக ராணுவத்தில் இந்தியப் பெண்கள் பங்கெடுத்து ராணுவப் பயிற்சி பெற்றனர். மலேயா, சிங்கப்பூர், பர்மா போன்ற இடங்களில் வாழ்ந்த இந்தியர்கள் இந்திய தேசிய ராணுவப் படையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
ஜப்பானியர்கள் ஆங்கிலேயர்கள், ஆஸ்திரேலியர்கள், டச்சுக்காரர்கள், ஃபிரெஞ்சு நாட்டினர், போன்ற ஐரோப்பியர்கள், சீனர்கள் இவர்களைக் கொடுமைப்படுத்திய அளவு இந்தியர்களை கொடுமைப்படுத்தாததற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவர் உருவாக்கிய இந்திய தேசியப் படையும் ஒரு முக்கியக் காரணம் ஆகும். ஆனால் ஆங்கிலேய விசுவாசிகளாகத் தங்களைக் காட்டிக் கொண்டு இந்திய தேசியப் படைக்கு ஆதரவு தராத இந்தியர்களைப் பிடித்து சயாம் மரண ரயில் பாதை போட அனுப்பி வைக்கப்பட்டனர்.
சயாமிலிருந்து பர்மாவுக்குக் கடுமையான காடுகளையும் ஆறுகளையும் தாண்டி ரயில் பாதை போட கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் ஆகலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால் போர்க் கைதிகளை வைத்து ஜப்பானியர்களின் ஈவு இரக்கமற்ற வேலை வாங்கும் திறமையால் பதினாறு மாதங்களில் ரயில் பாதை போடப்பட்டது.
இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஆசியத் தொழிலாளிகள், அறுபத்தி ஐந்தாயிரம் ஐரோப்பிய போர்க் கைதிகள் இவர்களைக் கொண்டு ரயில் பாதை போடப்பட்டது. இதில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இறந்தனர். ஒவ்வொரு ரயில் கட்டைக்கும் ஒரு தொழிலாளி இறந்தார் என்ற கணக்கை வைத்துப் பார்த்தால் இந்த ரயில் பாதை ஏன் மரண ரயில் பாதை என்று அழைக்கப்பட்டது என்பது புரியும்.
தி பிரிட்ஜ் ஆன் தி ரிவெர் குவாய் (The Bridge on the river kwai) என்ற ஆங்கிலத் திரைப்படம் பார்த்தவர்களுக்கு இந்த ரயில் பாதையின் கதை ஓரளவிற்குப் புரியும். டேவிட் லீன் என்ற இயக்குனர் அற்புதமாகப் படமாக்கியிருப்பார். அடர்த்தியான காடுகள், பெரும் வெள்ளத்தில் காட்டாறுகள், இடைவிடாத மழை, மலேரியா குளிர்காய்ச்சல் பரப்பும் கொசுக்கள், பூச்சிக்கடிகள் இவற்றுக்கு இடையே சரியான உணவு இல்லாமல் ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் வேலை.
வேலை என்றால் இடைவிடாமல் மரங்களை வெட்டுவது, அவற்றை ரயில் பாதைக்குப் போடப்படும் கட்டைகளாக வெட்டுவது போன்ற கடுமையான வேலைகள். ஐரோப்பியர்கள் கனவான்களாக வாழ்ந்தவர்கள். அவர்களால் இந்தக் கடுமையான வேலைகளைச் செய்ய முடியவில்லை. இறந்தவர்களை வழியில் எதிர்ப்படும் வயல் வெளிகளிலும், ஆறுகளிலும் வீசி எறிந்தனர். மலேரியா காய்ச்சல், உணவுப் பற்றாக்குறை, இடைவிடாத கடுமையான வேலைகள், சுகாதாரமற்றச் சூழலினால் காலரா, பேதி போன்றவற்றால் லட்சக்கணக்கானோர் இறந்தனர். இறப்பின் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது.
ஐரோப்பியர்களின் நிலை இப்படி என்றால், மலாய்க்காரர்களில் யாரையாவது உளவாளி என்ற சந்தேகம் வந்தால் உடனே அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு விடும். நகரின் முக்கிய வீதிகளின் நடுவில் கம்பி வேலிகள் போடப்பட்டிருக்கும். கம்பி வேலிகளின் பக்கம் ஜப்பானிய ராணுவ வீரர் காவல் காத்துக் கொண்டிருப்பார். நடுத் தெருவில் அவருக்கு அப்படியே முட்டிக்காலிட்டு வணக்கம் செலுத்த வேண்டும்.
அப்படிச் செய்யத் தவறினால் அந்த ராணுவ வீரரின் மனநிலையைப் பொறுத்து தண்டனை வழங்கப்பட்டு விடும். சந்தேகத்துக்குரிய நபர் என்று சிறைச்சாலைக்குச் கொண்டு செல்லப்படுவார். சிறைச்சாலைக்குச் செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்படலாம். இல்லை, தலை வெட்டப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு விடும். இன்று கெத்தே திரையரங்கம் இருக்கும் டோபி காட் பகுதியில் பொதுமக்கள் பார்வைக்குத் தினமும் ஒரு தலை வைக்கப்பட்டிருக்கும் என்று அந்தப் பகுதியில் வசித்த ஒரு சீன முதியவர் நினைவு கூர்கிறார்.
ஐரோப்பியர்கள் கனவான்களாக வலம் வந்த வீதிகளைச் சுத்தம் செய்யும் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இறந்த உடல்களைப் புதைப்பதற்கு உதவி செய்தனர். பொதுப்பணித் துறை வேலைகளைச் செய்தனர். உணவுப் பற்றாக்குறையால் அவர்களே காய் கறிகளைப் பயிரிட்டு தங்களுக்குத் தேவையான உணவைப் பெற்றனர். சீமைச் சிறையில் இருந்த சில ஐரோப்பியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கஞ்சியில் டால்கம் பவுடரைச் சேர்த்தால் வயிறு நிறைகிறது எனக்கண்டு பிடித்து டால்கம் பவுடரைச் சேர்த்து உண்டனர்.
யுரேஷியர்கள் என்று அழைக்கப்பட்ட ஐரோப்பிய, ஆசிய கலப்பில் பிறந்தவர்களையும் அவர்கள் பெரும்பாலும் பார்ப்பதற்கு ஐரோப்பியர்கள் போல இருந்ததால் அவர்களையும் விடவில்லை. அவர்களையும் போர்க்கைதிகளைப் போலவே நடத்தி சிறைக்கு அனுப்பினர்.
மற்ற இனத்தவரை விட அதிக அளவு கொடுமைகளை அனுபவித்தது சீனர்கள் தான்!!!!! சீனர்கள் ஜப்பானுக்கும் சீனாவுக்கும் போர் நடந்தபோது தாய்நாட்டுக்கு விசுவாசமாகப் பல உதவிகள் செய்தனர். இதை அறிந்த ஜப்பானியப் படையினர் சீனர்களுக்குப் பல விதங்களிலும் துன்பம் செய்தனர். பதினெட்டு வயதுக்கும் ஐம்பது வயதுக்கு இடைப்பட்ட சீனர்கள் அனைவரையும் நகரில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து நிற்கும்படி கட்டளையிடுவர். அங்கே அவர்கள் சோதிக்கப்படுவார்கள்.
சிலர் ஜப்பானிய எதிரிகள் என்று அடையாளம் காணப்படுவர். முகமூடி அணிந்த மனிதர்கள் இவர்கள் என்று கைக்காட்டியவர்களையும் ஜப்பானிய எதிரிகள் என்று சொல்லப்பட்டு, சந்தேகத்துக் குரியர்வர்களை சாங்கி கடற்கரைபகுதிக்கும், கிழக்கு கடற்கரைப் பகுதிக்கும் அழைத்துச் செல்லப்படுவர். சிலருக்கு சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என்று அவர்கள் சட்டைகளிலோ அல்லது கைகளிலோ முத்திரை குத்தி விட்டு விட்டு விடுவார்கள்.
இதைப் போன்ற சோதனைகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் இந்த முத்திரை அழியாமல் வைத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய சோதனைகளுக்கு ஆண்கள் மட்டும் அல்லாமல் சில சமயம் பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் அழைக்கப்படுவர். ஆயிரக்கணக்கான சீன இளைஞர்கள் ஜப்பானிய எதிரிகள் என்று அடையாளம் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உணவுப் பொருள் பற்றாக்குறை, குறைவான சம்பளம், வேலையின்மை, தப்பித்து எங்கே செல்வது, அப்படியே தாய்நாடு திரும்பினாலும் அங்கும் இரண்டாம் உலகப் போரினால் தொடரும் துன்பங்கள், துரத்தும் யுத்தம் என்ற அசுரன், அதனால் ஏற்பட்ட நிலையற்ற தன்மை இப்படி ஒரு அவல நிலையில் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
பல இலட்சம் பேரைப் பலி வாங்கிய சயாம் மரண ரயில் பாதை கட்டி முடிக்கப்பட்டவுடன் ஒரு முறைதான் ரயில் ஓடியது. அதற்குள் இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம் வந்து குவாய் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ரயில் பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. ஒரு யுத்தம் என்று வந்தால், அதில் நேரிடையாகத் தொடர்பு கொண்ட ராணுவத்தினர், அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் மட்டுமல்லாது போருக்கும் தனக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒரு சாதாரணனும் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படுகிறார்கள். யுத்தம் என்பது ஒரு கொடுமைதான்!!!!!!
தொடரும்…