எதிரிகளால் நுழைய முடியாத கோட்டை சிங்கப்பூர் என்று ஆங்கிலேயர்கள் பெருமையாக நினைத்திருந்த சிங்கப்பூர் 1942 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி ஜப்பானியர்களின் நகரம் ஆயிற்று. சிங்கப்பூர் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆங்கிலேயர்கள் தங்கள் ராணுவ வீரர்கள் ஜப்பானிய ராணுவத்தினரை விட தொழில்நுட்பத்திலும், போர் செய்வதிலும் வல்லவர்கள் என நினைத்திருந்தார்கள். ஜப்பானிய இராணுவ வீரர்களை விட அதிக எண்ணிக்கையில் பிரிட்டிஷ் இராணுவத்தினர் இருந்தும் அதைப் பற்றி சரியான தகவல் தெரியாததால் ஜப்பானிய ராணுவத்தினரின் வேகத்தைக் கண்டு மிரண்டு பின் வாங்கினர்.
பிரிட்டிஷ் படை வீரர்களில் பாதிப் பேருக்கு மேல் நேரிடையாகப் போரில் ஈடுபட்ட அனுபவமும் பயிற்சிகளும் கிடையாது. அதே சமயம் ஜப்பானிய இராணுவத்தினருக்கு சீனா, மஞ்சூரியா படையெடுப்பில் ஈடுபட்டு நேரிடையாகப் போரிட்ட அனுபவம் இருந்தது. ஜப்பானிய ஒற்றர்கள் மலேயா, சிங்கப்பூர், இந்தோனேசியாப் பகுதிகளில் மீனவர்களைப் போல் வேலை செய்து கப்பல் படைகளைப் பற்றி தகவல்கள் சேகரித்தனர்.
சாதாரண குடிமக்கள் போல் பல நாள்கள் மலேயா, சிங்கப்பூர் பகுதிகளில் குடியேறி புகைப்படக் கலைஞர்கள் போல் ஸ்டூடியோ வைத்து மலேயா, சிங்கப்பூரில் நகரங்கள், காடுகள், சாலைகள், பாலங்கள் இவற்றைப் புகைப்படங்கள் எடுத்து, பல தகவல்களைத் திரட்டினர். இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு மலேயாவைக் கைப்பற்றுவது மிக எளிதாயிற்று. மலேயாக் காடுகள் கடக்க முடியாதவை. அவற்றைக் கடந்து ஜப்பானியர்கள் சிங்கப்பூரின் வடக்கு எல்லையில் நுழைவது கடினம் என்று பிரிட்டிஷ்காரர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர்.
சீனப்படைகளை வெல்வது மிக எளிது. அதனால் ஜப்பானியர்கள் சீனாவை எளிதாக தாக்கி வெற்றி கொண்டனர். ஆனால் பிரிட்டிஷ் படையை அவ்வளவு எளிதாக யாரும் வெற்றி கொள்ள முடியாது என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கியது ஜப்பானியரின் தொழில் நுட்பம் மற்றும் போர்த் திட்டங்கள்! பொதுமக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக மிதிவண்டிகளைப் கைப்பற்றி அதில் பயணம் செய்து மலேயாக் காடுகளை எளிதாகக் கடந்தனர்.
தொழில் நுட்பத்திலும் ஐரோப்பியர்களை விட மேம்பட்டிருந்தனர். போர் விமானங்கள், போர்க்கப்பல்கள், வெடிகுண்டுகள், ராணுவ உபகரணங்கள், டாங்கர்கள், ராணுவ வாகனங்கள் இவை எதிலுமே ஆங்கிலேயர்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என்று நிரூபித்தனர். பிரிட்டன் அரசாங்கம் முதல் உலகப் போரினால் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியவுடன் ஜெர்மானியர்களிடமிருந்து இங்கிலாந்தைக் காப்பாற்றுவதை முதல் நோக்கமாகக் கொண்டு இராணுவத் தளவாடங்களையும், வாகனங்களையும் தங்கள் சொந்த நாட்டுப் பாதுகாப்புக்குப் பயன்படுத்திக் கொண்டனர்.
தாங்கள் ஆட்சி செய்து வந்த நாடுகளின் பாதுகாப்பை இரண்டாம் பட்சமாகக் கருதினர். இரண்டாம் உலகப் போர் ஆசிய நாடுகளில் பரவியதும் நிதிப் பற்றாக்குறையால் ஆசிய நாடுகளுக்கு போர்த் தளவாடங்கள் அனுப்புவதில் தேக்க நிலை ஏற்பட்டிருந்தது. ஜப்பான் 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வான் வழித் தாக்குதலை சிங்கப்பூர் மீது தொடங்கியதும் அதற்குப் பதிலடி கொடுக்க போதிய போர் விமானங்கள் இல்லை.
கடல் வழித் தாக்குதலுக்கும், நில வழித் தாக்குதலுக்கும் தயாரானார்கள். ஆனால் ஜப்பானியப் படையினரின் போர்த் திறமைகளையும், அவர்கள் பயன்படுத்திய போர்த்தளவாடங்களைப் பற்றியும் சரியான தகவல்கள் இல்லாததால் தங்கள் படையை ஜப்பானியர்களால் வீழ்த்த முடியாது என்ற இறுமாப்பில் இருந்தனர். அதனால் சிங்கப்பூர் முழுமைக்கும் சரியான பாதுகாப்புத் தர தவறி விட்டனர். வடகிழக்குப் பகுதியின் சதுப்பு நிலக் காடுகளைக் கடந்து ஜப்பானியர் சிங்கப்பூரை அடைந்தனர்.
மிதவைப் படகுகள் மூலம் ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே இருந்த சிறிய கடல் எல்லையை எளிதாகக் கடக்க முடிந்தது. முக்கிய கடல் எல்லைப் பகுதிகளில் பிரிட்டிஷ் ராணுவத் தளபதி ஆர்தர் பெர்சிவல் சரிவர திட்டமிடாமல் படைகளை எல்லைப்புறப் பாதுகாப்புக்கு அனுப்பினார். ஜப்பானியர்கள் வருகிறார்கள் என்று தெரிந்தும் மேலதிகாரி உத்தரவிற்காக பிரிட்டிஷ் படைகள் காத்திருந்தனர்.
இராணுவத்தினர் மட்டுமல்லாது சாதாரண குடிமக்களிடமும் அவசர காலத்தில் எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி முறையாக எடுத்துச் சொல்லாததால் பல பொதுமக்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜப்பானியர்களைப் பொறுத்தவரை எதிரிகளைப் பார்த்தால் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற ஒரே ஒரு உத்தரவை மட்டும் அவர்கள் மேலதிகாரிகளிடமிருந்து பெற்றிருந்தனர்.
போர்க் கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டு பின்னர் விடுவிக்கலாம் என்ற சட்டமெல்லாம் அவர்களுக்குக் கிடையாது. மலேயா முழுவதும் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளினர். சுட முடியாதவர்களை பெட்ரோல் வைத்துக் கொளுத்தினர். பிரிட்டிஷ் படையினருக்கு யாராவது உதவி செய்கின்றனர் என்பது தெரிந்தால் சித்ரவதைச செய்து நடு வீதியில் கொன்றனர். ஜப்பானியரின் இந்தக் கொடூரத் தாக்குதலைப் பற்றி கேள்விப்பட்ட பொது மக்களுக்கு சிங்கப்பூருக்குள் நுழைந்து விட்டனர் என்ற செய்தியே பீதியைக் கிளப்பியது.
ஆனால் இராவணுவத் தளபதி பெர்சிவல் தங்களிடமிருக்கும் படைகளை மீறி ஜப்பானியர்களால் ஒன்றும் செய்து விட முடியாது என்ற இறுமாப்பில், முறையான உத்தரவுகள் அனுப்பவதில் சற்று தடுமாறி விட்டார். இதனால் ஜப்பானியர் 1942 ஆம் வருடம் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி கோலாலம்பூரைக் கைப்பற்றியதும், அடுத்த கட்ட நடவடிக்கை சிங்கப்பூரைக் கைப்பற்றுவது என்பது தெரிந்தும் முறையாகத் திட்டமிடவில்லை. பிரிட்டிஷ் படையினருக்கு வந்து சேர வேண்டிய போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், தொலைத் தொடர்புச் சாதனங்கள் போன்றவை சரியான நேரத்தில் வந்து சேரவில்லை.
ஃபிப்ரவரி 8ஆம்தேதி 1942 ஆம் ஆண்டு இரவு சிங்கப்பூரின் வடமேற்குப்பகுதியில் கடல்வழித்தாக்குதல் தொடங்கியது. அதேசமயம் வான் வழித்தாக்குதலும் தொடர்ந்தது. ஒரேநாளில் பிரிட்டனின் போர்விமானங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. கல்லாங்ராணுவ விமானதளத்தில் ஒரு போர் விமானம் இல்லாமல் ஜப்பானியர்கள் அழித்தனர்.
பெர்சிவல் இனி வடகிழக்குப்பகுதிகளில் ஜப்பானியர்கள் நுழைவார்கள் என்றுஅந்தப்பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்தினார். ஆனால் ஜப்பான் படையினர் தென்மேற்கு எல்லையில் நுழைந்தனர். இவ்வாறு மேற்கு கடற்கரைப்பகுதிகளின் கட்டுப்பாட்டை இழந்தனர்.
வடக்குப்பகுதி, வடகிழக்குப்பகுதி, தென்மேற்குப்பகுதி, கிழக்குப்பகுதி என்று பல்வேறு முனைகளிலிருந்து தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. படைத்தளபதிகளிடையே சரியான தொலைத்தொடர்புவசதிகள் இல்லாதகாரணத்தால் எந்தப்பகுதியில் என்னநடக்கிறது? அங்கிருக்கும் படைகளின் நிலைமை என்ன என்பது சரியாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு படைப்பிரிவின் தளபதிகளும் முழுமையான தாக்குதலைத் தொடர முடியாமல், சரியான ராணுவ உத்தரவு கிடைக்காமல் செயல்பட்டனர். எல்லைப்பகுதிகளில் மட்டுமே தொடர்ந்து தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஜப்பானியப்படைகள் நகரத்தின் மத்திய வட்டாரத்துக்குள்தைரியமாக நுழையமுற்படவில்லை.
ஃபிப்ரவரி 10 ஆம்தேதிமாலை இங்கிலாந்து பிரதமமந்திரி வின்ஸ்டன்சர்ச்சில்” சிங்கப்பூர் போர் நிலைமையைக் கவனிக்கும்போது, படைத் தளபதி பெர்சிவலிடம் 100,000 ராணுவப் படைவீரர்கள் உள்ளனர். கிட்ட்த்தட்ட 33,000 பிரிட்டன் வீர்ர்கள், 17,000 ஆஸ்திரேலிய வீர்ர்கள் மற்றும் இந்திய, சீன, மலாய் படையினரும் உள்ளனர். இந்த எண்ணிகை மலேயா முழுவதிலும் உள்ள ஜப்பானியப் படையினரை விட அதிகம்தான். எனவே சிங்கப்பூரை அவர்கள் தொடர்ந்து தாக்கினாலும் உங்கள் முயற்சியைக் கைவிடாமல் சிங்கப்பூரைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை.
படையினரைக் காப்பாற்றுவதோ அல்லது பொதுமக்களைக் காப்பாற்றுவதையோ பற்றிக் கவலைப்படாமல் உங்கள் தாக்குதல்களைத் தொடரவும். இறுதிவரை போராடுவதே உங்கள் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். நமது 18 ஆவது படைப் பிரிவின் வீரம் சரித்திரத்தில் என்றும் பேசப்படவிருக்கிறது. இதற்காக நம் படை வீர்ர்க்கள், படைத் தளபதிகள், மூத்த ராணுவ அதிகாரிகள் அனைவரும் தங்கள் உயிரையும் விட தயாராக வேண்டும். ரஷ்யர்கள் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்கர்களும் ஜப்பானியப் படைகளுக்கு எதிராக லுசானில் (Luzon: largest island in Philipines) விடாப்பிடியாக தங்கள் தாக்குதல்களைத் தொடர்கிறார்கள். இந் நிலையில் நம் நாட்டின் பெருமையைக் கட்டிக் காக்க நாம் போரைத் தொடர வேண்டும். ஒவ்வொரு படைப் பிரிவும் ஜப்பானியப் படையினருடன் நேருக்கு நேர் மோத வேண்டும்.
இந்தப் போரின் முடிவு அழிவாக இருந்தாலும் வெற்றி நமதாக இருக்க வேண்டும்”, என்று ஜெனரல் ஆர்கிபால்ட் வீவலுக்கு ஒரு அவசர செய்தி அனுப்பினார். இதைப் படித்த வீவல் ராணுவத் தளபதி பெர்சிவலிடம் இறுதிவரை போராட வேண்டும். சரணடைவதைப் பற்றி யோசிக்கவே கூடாது என்று கூறி விட்டார்.
ஆனால் மறு நாள் அவர்கள் விதி எப்படி மாறப் போகிறது என்பதைப் பற்றி இரண்டு ராணுவத் தளபதிகளும் அறியவில்லை. ஜப்பானிய ராணுவத் தளபதி யமஷிடா என்ன செய்து சிங்கப்பூரைப் பிடிக்கலாம் என்றும், பெர்சிவல் என்ன செய்து சிங்கப்பூரைக் காப்பாற்றலாம் என்று யோசித்துக் கொண்டே அந்த இரவைக் கழித்தனர்.
தொடரும்…