Home » அதிசயம் ஆனால் உண்மை » தொடர் கதை » ஒரு நகரத்தின் கதை – 24
ஒரு நகரத்தின் கதை – 24

ஒரு நகரத்தின் கதை – 24

ஜூலை 8 ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு ‘தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ என்ற சிங்கப்பூர் நாளிதழில் நெதர்லாண்ட்ஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ஹெர்டோக் என்ற 72 வயதுப் பெண்மணி இரத்தப்புற்று நோயால் இறந்து போனதாக ஒரு செய்தி வந்தது. ஹியுமெர்கன் என்ற ஊரில் வாழ்ந்து வந்த மரியா ஹெர்டோக் என்ற பெண்மணிக்கும் சிங்கப்பூருக்கும் என்ன தொடர்பு? சிங்கப்பூர் வரலாற்றில் இடம் பெறுமளவிற்கு அந்தப் பெண்மணி என்ன செய்தார்?…………….

1942 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி அடிலைன் ஹெர்டோக்குக்கு ஆறாவது குழந்தையாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இந்தோனேசியாவில் டச்சுப் படையில் படைத் தலைவனாக இருந்தவ அவள் கணவன் எட்ரியனஸ் ஹெர்டோக் இம்பீரியல் ஜப்பானியப் படையினரால் போர்க் கைதியாகப் பிடிபட்டு விட்டார். இந்த நிலையில் ஆறாவது குழந்தைப் பிறப்பு அவளுக்கு சலிப்பை ஏற்படுத்தியது. அவள் தாய் நோர் லூயிஸ் அவளது மூன்றாவது குழந்தையான மரியாவை அமீனாவுடன் அனுப்ப முடிவு செய்தாள். அமீனா பின்டே முகமது மலாயாவின் தெரங்கானு மாகாணத்தைச் சேர்ந்த கெமாமன் பகுதியைச் சேர்ந்த 42 வயதுப் பெண்மணி.

நோர் லூயிஸின் நெருங்கிய தோழி. நோர் லூயிஸ் 1943 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதி அமீனாவிடம் தன் பேத்தி மரியாவைக் கொடுத்து சிறிது நாட்கள் பாண்டுங்கில் அவளுடன் வைத்துக் கொள்ளும்படி கூறினாள். நான்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு மரியாவை தாங்கள் அழைத்துக் கொள்வதாகவும் கூறினாள். அடிலைன் ஹெர்டோக்குக்கு மரியாவை அமீனாவுடன் அனுப்பும் அந்தக் கணம் பின்னாளில் சரித்திரத்தில் இடம் பெறும் என்பது சற்றும் உணரவில்லை.

ஜனவரி மாதம் 6 ஆம் தேதி மரியாவைத் திரும்பவும் அழைத்துக் கொண்டு வந்து விடலாம் என்று சைக்கிளில் கிளம்பினாள். ஜப்பானியக் காவல் வீரர்கள் அடிலைனுக்கு பாண்டுங் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் இல்லை என்று அவளைப் பிடித்துக் காவலில் வைத்தனர். காவலில் இருந்த அடிலைன் தன் குழந்தைகளைத் தன்னுடன் அனுப்பிவிடுமாறு அம்மா நோர் லூயிஸுக்கு கடிதம் எழுதினாள். அவள் அம்மா அவள் குழந்தைகளை அவள் காவலில் இருந்த இடத்திற்கு கூட்டிக் கொண்டு வந்தபோது மரியா அவர்களுடன் இல்லை.

அமீனா இன்னும் சிறிது நாட்கள் தன்னுடன் வைத்துக் கொண்டு பின்னர் அவளே அடிலைனிடம் கொண்டு வந்து விடுவாள் என்று அம்மா கூறியதை நம்பினாள். ஆனால் அதன் பிறகு அந்தப் பெண் குழந்தையை அவளால் பார்க்க முடியவில்லை!!!!!!
ஹாவாயில் இருந்த பெர்ல் ஹார்பர் டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி 1941 ஆம் வருடம் (ஜப்பானில் அது 8 ஆம் தேதி) ஜப்பானியப் போர் விமானங்களால் தாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் அந்த நாள் வரை அமெரிக்கா எந்தப் பக்கமும் சேராமல் நடு நிலைமை வகித்து வந்தது. ஜப்பானுடன் எந்தவித பகைமையையும் வெளிப்படையாக்க் காட்டவில்லை. இந்த நிலையில் ஜப்பான் பேரரசு எதற்காக பெர்ல் துறைமுகத்தை யாரும் எதிர்பாராத விதமாகத் தாக்கி சின்னாபின்னமாக்கியது? அந்த்த் தாக்குலுக்கும் சிங்கப்பூருக்கும் என்ன தொடர்பு? துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எட்டு அமெரிக்க போர்க்கப்பல்களின் மேல் குண்டு வீசி தகர்த்தது. 188 அமெரிக்க போர் விமானங்களும் சின்னாபின்னப்படுத்தப்பட்ட. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர் வீரர்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கான வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். போர் என்று எந்தவித முன்னறிப்பும் இல்லாமல் ஜப்பான் இப்படி நடந்து கொண்டதற்கு என்ன காரணம்?

பசிபிக் பெருங்கடலில் இப்படி போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் நிறைந்த ஒரு வலுவான கடற்படை இருந்தது ஜப்பானுக்கு ஒரு சவாலாக இருந்தது. இரண்டாம் உலகப்போரில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஜப்பானியப் பேரரசு சீனா, இந்தோனேசியா, மலேயா, சிங்கப்பூர் போன்ற ஆசியா நாடுகளை, தன் வசம் கொண்டு வர திட்டம் தீட்டியது.

ஆனால் பசிபிக் பெருங்கடலில் இருந்த பெர்ல் துறைமுகம், கடல் வழியே சென்று தாக்கலாம் என்று ஜப்பான் போட்ட போர்த்திட்டத்திற்கு சற்று இடையூறாக இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு உதவி செய்ய எந்த நேரத்திலும் அமெரிக்கா நேரிடையாகப் போரில் ஈடுபட்டால் பெர்ல் துறைமுகத்திலிருந்து போர்க்கப்பல்கள் அனுப்பப்படலாம் என்று கணக்கு போட்ட ஜப்பான் மலேயா, இந்தோனேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளைத் தாக்குவதற்கு முன்பு பெர்ல் துறைமுகத்திலிருந்த கடற்படையை அழித்து விட முடிவு செய்தது.

பெர்ல் துறைமுகத்தின் மேல் குண்டு வீசி அழித்தது. இதன் தொடர்ச்சியாக ஜப்பான் மலேயா மற்றும் சிங்கப்பூர் இரண்டு நாடுகளிலும் தன் ஆக்கிரமிப்பைத் தொடங்கியது.

இரண்டாம் உலகப்போரில் சிங்கப்பூர், ஆங்கில அரசாங்கத்துக்குத் தெற்கு ஆசியாவில் ஒரு முக்கிய ராணுவ மையமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. சிங்கப்பூர், கிழக்குப் பகுதியின் ஜிப்ரால்ட்டர் என்று பெயர் பெற்றது. பிரிட்டிஷ் சரித்திரத்தில் பிரிட்டனுக்கு ஏற்பட்ட ஆகப் பெரிய தோல்வியாக சிங்கப்பூரை ஜப்பானியர்கள் கைப்பற்றியதைக் குறிப்பிடுகிறார்கள். எவராலும் வெல்ல முடியாத படைகளையும் எதிரிப்படைகள் உள்ளே நுழைய முடியாத கடற்படையும் இராணுவப்படையும் கொண்டதாக நம்பிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு பெரிய அதிர்ச்சி! 80,000 ஆங்கிலேய, இந்திய- ஆஸ்திரேலியப் படை வீரர்கள் போர்க்கைதிகளாகப் பிடிபட்டனர். 50,000 பேர் மலாயாவில் அடிமைகள் போல் வேலை செய்ய கொண்டு செல்லப்பட்டனர்.
1942 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 8 ஆம் தேதி தொடங்கிய தாக்குதல் ஃபிப்ரவரி 15 ஆம் தேதி ஒரு முடிவுக்கு வந்தது. டிசம்பர் 8 ஆம் தேதி 1941 ஆம் ஆண்டு பெர்ல் துறைமுகத்தைத் தாக்கிய அதே நாள் , வட மலேயா, தாய்லாந்து பகுதிகளில் ஜப்பான் தன்னுடைய தாக்குதலைத் தொடங்கியது. கடல் வழியாகவும் தரை வழியாகவும் ஜப்பான் தாக்குதலைத் தொடங்கியது. தாய்லாந்து இராணுவம், மலேயா இராணுவம் இவை இரண்டிலும் அதிக எண்ணிக்கையில் படை வீரர்கள் இருந்தாலும் ஜப்பானியர்களின் போர்த் திறமைக்கு முன்னால் நிலை குலைந்து போயினர். காடுகளில் எளிதில் புகுந்து மலேயாவின் மற்ற பகுதிகளுக்கு முன்னேறினர். ஆகாயப்படைத் தாக்குதலில் முக்கியமாக தரைக்கு வெகு அருகில் விமானங்களைச் செலுத்தி குறி பார்த்து ஆயுதக் கிடங்குகளைத் தகர்ப்பதில் வெகு வல்லமை படைத்தவர்கள் ஜப்பானியர்கள். பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த வீரர்கள் வெறும் தற்காப்பிற்காகச் சண்டையிட்டனர். ஆனால் ஜப்பானியப் படை வீரர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடனும், எதிரிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற வெறியுடனும் போரிட்டனர். டாங்கர்கள், ராணுவ ஜீப்கள் போன்ற பெரிய வாகனங்களைப் பயன்படுத்தாமல் பொதுமக்களிடமிருந்து சைக்கிள்களைப் பறித்து படை வீரர்கள் மிதிவண்டிகளில் பயணம் செய்து சிங்கப்பூரை நெருங்கினர்.

போரில் பயன்படுத்தப்படும் டாங்கர்கள் அதிக எடையுடன் மெதுவாகச் செல்லும். ஆனால் ஜப்பானியர்கள் அதிக எடையற்ற டாங்கர்களைக் கொண்டு வந்து அதன் மூலம் விரைவாகவும் எளிதாகவும் காடுகளைக் கடந்தனர். கொரில்லாப் போர்முறைகளை நன்கு அறிந்த ஜப்பானியப் படையினர் எளிதாக மலேயாப் படையின் தாக்குதலைச் சமாளித்தனர். சாலைகள், பாலங்கள் இவற்றை பிரிட்டிஷ் படை வீரர்கள் அழித்த போதும் இந்த சைக்கிள் பயணங்கள் மூலம் ஜப்பானிய படையினர் ஜோகூரை அடைந்தனர். கடல் வழியாகவும் தரை வழியாகவும் மலேயாவை அடைந்த ஜப்பானியப் படைகள் ஜோகூரிலிருந்து சிங்கப்பூர் போவதற்கு இருந்த ஒரே வழியான ஜோகூர் சிங்கப்பூர் பாலத்தை பிரிட்டிஷ் படையினர் தகர்த்தனர்.

இதன் மூலம் ஜப்பானியர்கள் சிங்கப்பூர் வருவதைத் தடை செய்ய முடியும் என்று நினைத்தனர். சிங்கப்பூரின் தெற்குப் பகுதியை அதிக பாதுகாப்புடன் பலப்படுத்தினர். அங்குதான் நகரத்தின் துறைமுகம் மற்றும் வர்த்தகப் பகுதிகள் இருந்தன ஜப்பானியர்கள் 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சிங்கப்பூரின் மீது வான்வழித் தாக்குதலை ஆரம்பித்து விட்டனர். ஆயுதங்கள் சேகரித்து வைத்த ஆயுதக் கிடங்குகள், நகரின் மத்திய வர்த்தகப் பகுதிகள், சிங்கப்பூரின் வடக்குப் பகுதியான செம்பவாங்கில் இருந்த கப்பல் படை என்று அனைத்திலும் குண்டுகள் வீசினர். ஜப்பானியப் படைகள் சிங்கப்பூரை நெருங்க நெருங்க வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்து பொதுமக்கள் பலரும் ஜப்பானியப் படைகளின் தாக்குதல்களால் காயம் அடைந்தனர். பலர் உயிர் இழந்தனர். இதனால் பொதுமக்கள் பலர் மனதளவில் விரக்தி அடைந்தனர்.

ஜப்பானியப் படைத் தளபதி யமஷிடா கிட்டத்தட்ட 30,000 படை வீரர்கள் வைத்திருந்தார். லெஃப்டினன்ட் ஜெனரல் டாக்குமா நிஷிமுரா, டக்குரா மட்ஷு, ரென்யா முடாகுச்சி என்ற மூவர் தலைமையில் இந்த 30,000 படை வீரர்கள் செயல்பட்டனர். ஜோகூர் சிங்கப்பூரை இணைக்கும் பாலத்தைத் தகர்த்ததால் சிறிய கப்பல்கள், படகுகள் மூலம் சிங்கப்பூரை அடைய முயற்சி செய்தனர். யமஷிடா ஜோகூர் சுல்தான் இருக்கும் மாளிகையில் தங்கினார்.

அங்கிருந்து சிங்கப்பூரை வீழ்த்துவதற்குத் திட்டமிட்டார். சிங்கப்பூரிலிருந்து எந்தப் படையும் ஜோகூர் சுல்தானின் மாளிகையைத் தகர்க்க மாட்டார்கள் என்ற அவரது கணிப்பு பொய்யாகவில்லை. சிங்கப்பூரின் வட கிழக்குப் பகுதி வழியாக ஜப்பானியப் படைகள் நுழையலாம் என்று பிரிட்டிஷ் படையினர் நினைத்து அந்தப் பகுதியில் படைகளைக் குவித்து தாக்குதலுக்குத் தயாரானார்கள்? ஆனால்……

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top