சர் ஆர்தர் யங் நிர்வாகத்தில் மக்கள் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்பட்டது. நகரத்தில் கழிவு நீர்க் குழாய்கள் அமைக்கப்பட்டன. சர் லாரன்ஸ் கில்லமர்ட் 1919 ஆம் ஆண்டிலிருந்து 1927 ஆம் ஆண்டு வரை ஆளுநராகப் பதவி ஏற்றார். நகர நிர்வாகத்தில் பல புத்தாக்கங்களையும், புதிய முறைகளையும் துடிப்புடன் உருவாக்கிச் செயல்படுத்தியவர்.
பொது மக்கள் அரசியலில் ஈடுபட ஊக்கப்படுத்தினார். ஸ்ட்ரெயிட்ஸ் செட்டில்மெண்ட் அஸோஸியேஷன், யுரேஷியன் அஸோஸியேஷன் போன்ற அமைப்புகள் மூலம் நகர நிர்வாக அதிகாரியைத் தேர்ந்த்தெடுத்தார். (முனிசிபல் கமிஷனர்). சிங்கப்பூரையும் ஜோஹொரையும் இணைக்கும் பாலம் 1923 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதனால் சிங்கப்பூருக்கும் மலாயாவுக்கும் இடையே வர்த்தகம் அதிகரித்தது.
1927 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரை சர் ஹூ சார்லஸ் க்ளிஃபோர்ட் ஆளுநராகப் பதவி ஏற்றார். அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர் நைஜீரியாவில் ஆளுநராகப் பணியாற்றியவர். நிர்வாகத்தில் பல குழப்பங்கள் ஏற்படுத்தினார். பல விசித்திர நடவடிக்கைகள் கொண்ட ஆளுநராக அறியப்பட்டார். மூன்றே வருடங்களில் பதவி விலக வற்புறுத்தப்பட்டு பின்னர் விலகினார்.
இவர் பெயரில் க்ளிஃபோர்ட் பியர் என்ற துறைமுக மேடை கட்டப்பட்டது. சிங்கப்பூருக்கு வரும் புதிய குடியேறிகளும் மற்ற கப்பல் பயணிகளும் வந்து இறங்கும் இடமாக க்ளிஃபோர்ட் பியர் பயன்பட்டது. சிவப்பு நிற எண்ணெய் விளக்கு ஒன்று ஏற்றப்பட்டு அந்த விளக்கு கப்பலுக்கு வழிகாட்டியாக இருந்தபடியால் ரெட் லேம்ப் பியர் என்ற பெயரால் சீனர்கள் அழைத்தனர்.
சர் சிசில் கிளமெண்டி 1930ஆம் ஆண்டிலிருந்து 1933ஆம் ஆண்டு வரை ஆளுநராக இருந்தார். சீன விவகாரங்களையும் சீன நாட்டையும் பற்றி நன்கு அறிந்தவர் என்ற பெயர் பெற்றவர். மாண்டரின் மொழி, மற்றும் கன்டுனிஸ் மொழியை நன்கு கற்றவர். பல்வேறு இனங்களாகப் பிரிந்து வாழும் சிங்கப்பூர் மக்களை மேலும் மொழி வாரியாக சீனவழிக் கல்வி நிலையங்களுக்கும், தமிழ்வழிக் கல்வி நிலையங்களுக்கும் பிரிக்கின்றன என்று நினைத்து அப்பள்ளிகளுக்கு கொடுக்கும் உதவித் தொகையை நிறுத்தினார்.
இந்த நடவடிக்கையினால் பொதுமக்களிடையே இவருக்கு இருந்த செல்வாக்கு சரிந்தது. ஆங்கிலக் காலனிக்கு எதிராக நடைபெற்ற பிரசாரங்களைத் தடை செய்தார். சீனாவின் மிகப் பிரபலமான கட்சியான கொமின்டாங் கட்சியை முழுமையாகத் தடை செய்தார். அந்தக் கட்சிக்காக சிங்கப்பூரில் இருந்த சீனர்கள் நிதியுதவி செய்து கொண்டிருந்தனர். அதையும் கட்டுப்படுத்தினார். இதனால் இவர் ஆளுநராக தலைமைப் பதவியில் இருந்து எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. ஆளுநர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.
1934 ஆம் ஆண்டிலிருந்து 1946 ஆம் ஆண்டு வரை சர் ஷெண்டன் தாமஸ் ஆளு நராகப் பதவி ஏற்றார். 1934 ஆம் ஆண்டு ரப்பர் வர்த்தகத்தில் பெருத்த தேக்கம் ஏற்பட்டது. இதனால் மலாயா, சிங்கப்பூர் என இரண்டு நாடுகளிலும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டது. ஷெண்டன் ஐரோப்பிய மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தார். வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க நிறைய நிதியுதவி செய்தார். மொழிவாரியாக நடத்தப்பட்ட பள்ளிகளுக்கு மீண்டும் நிதியதவி செய்யத் தொடங்கினார். பொதுப்பணித் துறைக்கு பெருமளவில் நிதி ஒதுக்கி பொதுப்பணித்துறையை மேலும் மேம்படுத்தினார்.
இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பானியர்கள் சிங்கப்பூரைக் கைப்பற்றிய போது போர்க் கைதியாக பிடிபட்டு தைவானுக்கு அனுப்பப்பட்டார். நூற்றுக்கணக்கான அரசாங்க அதிகாரிகளும், இராணுவ அதிகாரிகளும் இவருடன் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு தைவானுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் ஜப்பானிய ஆட்சி முடிந்ததும் 1946 ஆம் ஆண்டு ஷெண்டன் பதவி ஓய்வு பெற்றார்.
இத்துடன் ஆளுநர்கள் ஆட்சி செய்த சிங்கப்பூரின் கதை முடிவடைந்தது. இந்த ஆளுநர்களின் பெயர்களைத் தாங்கி நவீன சிங்கப்பூரில் சாலைகள், குடியிருப்பு வட்டாரங்கள், கடைத் தொகுதிகள், ஆற்றங்கரைக் பகுதிகள், துறைமுகங்கள், துறைமுக மேடைகள், சந்தைகள் என பலவகைகளிலும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
1824 ஆம் ஆண்டு கர்னல் நஹுஜியாஸ் என்ற டச்சுக்காரர் சிங்கப்பூருக்கு வருகையளித்தார். அவர் ” நிறைய குன்றுகளும், அதைச் சுற்றி அடர்த்தியான மரங்களுமாக சிங்கப்பூர் காணப்படுகிறது. கடற்கரை அருகே காணப்படும் குன்றுகள் அனைத்திலும் ஐரோப்பியர்கள் தாங்கள் குடியிருக்கும் மாளிகைகளை அமைத்துக் கொண்டிருந்தனர். சோஃபியா குன்று, ஸ்காட்ஸ் குன்று போன்ற குன்றுகளில் நகரின் முக்கிய பிரமுகர்கள் வசிக்க ஆரம்பித்தனர்.
புக்கிட் லொரொங்கன் என்று அழைக்கப்பட்ட ஃபோர்ட் கேனிங் குன்றின் மேல் ஆளுநர் மாளிகை அமைந்திருந்தது. அதன் மேல் ஏறிப் பார்த்தால் சிங்கப்பூர், அதன் அருகில் அமைந்திருந்த தீவுகள், மலாக்கா துறைமுகம் எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது”, என்று குறிப்பிட்டார். இன்று ஸ்காட்ஸ் ஹில், மௌண்ட் சோபியா, ஃபோர்ட் கேனிங் என்ற பெயர்கள் மட்டும் இருக்கிறது. குன்றுகள், மலைகள் இருந்த இடங்கள் அனைத்தும் சமதளமாக்கப்பட்டு விட்டன.
சதுப்பு நிலங்களாக இருந்த பகுதிகளை சீரமைக்கவும், நில சீரமைப்புச் செய்வதற்கும் குன்றுகளை வெட்டிப் பயன்படுத்திக் கொண்டனர். இன்று ராஃபிள்ஸ் பிளேஸ் , டோபி காட் , ஆர்ச்சர்ட் சாலை போன்ற இடங்களில் குன்றுகள் இருந்தன என்பதைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவிற்கு பிரமாண்ட கட்டடங்கள், வர்த்தக மையங்கள் நிறைந்திருக்கின்றன. பீச் ரோட் என்ற சாலை கடற்கரை ஓரமாக 19ஆம் நூற்றாண்டில் மட்டுமே இருந்தது. நிலச் சீரமைப்பு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருந்ததால் பீச் ரோட் அதே இடத்தில் இருக்கிறது. ஆனால் கடல் மட்டும் விலகிப் போய்விட்டது.
1819 ஆம் ஆண்டு ராஃபிள்ஸ் வந்து இறங்கிய சிங்கப்பூர் ஆற்றங்கரை இன்று நாம் பார்க்கும் சிங்கப்பூர் ஆற்றைப் போல் இல்லை. ஆற்றங்கரையை யாரும் எளிதில் அடைந்து விட முடியாதபடி பாறைகளும், சதுப்பு நிலச் சேறுமாக இருந்தது. கடல் கொள்ளைக்காரர்கள் தங்கள் எதிரிகளை கொன்று ஆற்றில் போடுவதற்கு மட்டும் வசதியாக இருந்தது. ஆற்றங்கரையைச் சுத்தம் செய்த போது கிடைத்த மண்டையோடுகளின் கதை இது.
ராஃபிள்ஸ் பிளேஸ் இருந்த இடத்தில் ஒரு குன்று இருந்தது. அதை வெட்டி அந்த மண்ணைக் கொண்டு சிங்கப்பூர் ஆற்றங்கரையைச் சீர் செய்ய நான்கு மாதங்கள் எடுத்தன. சிங்கப்பூருக்கு முதன் முதலில் வந்த தமிழர் என்று நாரயணப் பிள்ளையைச் சொல்லலாம். ராஃபிள்ஸ் பினாங்கிலிருந்து நாராயணப் பிள்ளையை சிங்கப்பூரில் வேலை செய்ய வரவழைத்தார். இவர் ஒரு சாதாரண எழுத்தர் வேலைக்கு வந்தாலும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி செய்தார்.
பினாங்கிலிருந்து தச்சர்கள், செங்கல் சூளை அமைத்து வேலை செய்பவர்கள் போன்ற தொழிலாளிகளை வரவழைத்தார். தஞ்சோங் பாகர் பகுதியில் ஒரு பெரிய செங்கல் சூளை அமைத்தார். கிராஸ் ஸ்ட்ரீட்டில் துணிக் கடை ஒன்றைத் தொடங்கினார். பென்கூலன் டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதும், அங்கிருந்த 2,000 இந்தியக் கைதிகள் சிங்கப்பூர் அனுப்பப்பட்டனர்.
அவர்கள் சிங்கப்பூரில் பல புதிய கட்டடங்களைக் கட்டுவதற்கும், சாலைகள் அமைப்பதற்கும் பொதுப்பணித்துறை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் பலர் தண்டனை காலம் முடிந்ததும் சிங்கப்பூரிலேயெ வாழ முற்பட்டனர். இந்த இந்தியத் தொழிலாளிகளுக்காக நாரயணப் பிள்ளை சௌத் பிரிட்ஜ் சாலையில் 1827 ஆம் ஆண்டு மாரியம்மன் கோவில் கட்டினார்.
சிங்கப்பூர் ஆற்றைச் சுற்றி பேட்டரி ரோட், சர்க்குலர் ரோட், கமர்ஷியல் ஸ்கொயர் போன்றவை உருவாகின. கமர்ஷியல் ஸ்கொயர் என்பது தான் பின்னாளில் ராஃபிள்ஸ் பிளேஸ் ஆனது. ஆற்றின் தெற்கு கரையோரம் சீனர்கள் குடியிருக்கத் தொடங்கினர்.
சிங்கப்பூர் ஆற்றின் வடக்குக் கரைப்பகுதியில் அரசாங்க அலுவலகங்களும் முக்கியமான வர்த்தக மையங்களும், கட்டடங்களும் கட்டப்பட்டன. சிங்கப்பூர் ஆற்றின் கரை ஓரமாகப் படகுகள் கட்டும் தளமும், படகுகள் பழுது பார்க்கும் இடங்களும் கட்டப்பட்டன. மேலும் கிடங்குகள், அரிசி ஆலைகள், மரம் அறுக்கும் ஆலைகள், இயந்திரப் பட்டறைகள் என பலவும் கட்டப்பட்டன.
‘போட் கீ’ என்று அழைக்கப்படும் படகுத் துறைகள் சிறிய படகுகளால் நிரம்பி வழிந்தது. சிங்கப்பூர் துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் சிங்கப்பூர் ஆற்றுக்குள் வர முடியாது. கப்பல்கள் வரும் அளவிற்கு ஆற்றின் ஆழம் இல்லை. எனவே கப்பல்களில் இருந்து பொருள்கள் சிறிய படகுகள் மூலம் ஆற்றங்கரைக்குக் கொண்டு வரப்படும்.
தெற்கு ஆற்றங்கரை கூலித் தொழிலாளிகள், வணிகர்கள், இடைத் தரகர்கள் என்று பலதரப்பட்ட மக்களால் நிரம்பியிருந்தது. பின்னாள் பளு தூக்கும் இயந்திரங்கள், இயந்திரப் படகுகள், துறைமுக வளர்ச்சி இவற்றால் படகுத் துறைகள் ஹோட்டல்கள், வங்கிகள் கொண்ட இடங்களாக மாறின. போட் கீ என்பது இன்று சுற்றுலாப் பயணிகள் உல்லாசமாகப் பொழுதுபோக்கும் இடமாக்க் காட்சியளிக்கிறது.
இரண்டாம் உலகப்போரின்போது சிங்கப்பூர் சிங்கப்பூராக இல்லை. என்னவாக இருந்தது???
தொடரும்…