1893 ஆம் ஆண்டிலிருந்து 1894 ஆம் ஆண்டு வரை சர் வில்லியம் எட்வர்ட் மாக்ஸ்வெல் என்ற ஆளுநர் ஆட்சியில் இருந்தார். இவர் ஒரு வருட காலமே ஆளுநராக இருந்ததால் குறிப்பிடத்தக்க எந்த மாற்றங்களும் இல்லாமல் ஆங்கிலேய ஆட்சி தொடர்ந்தது.
1894 ஆம் ஆண்டிலிருந்து 1899 ஆண்டு வரை சர் சார்லஸ் ஹுஜ் மிட்சல் ஆளுநராகப் பணியாற்றினார். 1896 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மலாய் ஃபெடரேட்டட் ஸ்டேட்ஸ் என்று ஒரு தலைமையின்கீழ் ஆளப்பட்ட பெராக், பஹாங், நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களுக்கும் தலைமை வகித்தார்.
சர் ஃபிராங்க் ஸ்வீட்டஹாம் 1901ஆம் ஆண்டிலிருந்து 1903ஆம் ஆண்டு வரை ஆளுநராக இருந்தார். இவர் எடுத்த முயற்சியின் பலனாக சிங்கப்பூரையும் ஜோஹூரையும் இணைக்கும் பாலம் ஒன்றைக் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது. விக்டோரியா மெமோரியல் ஹால் என்ற அரங்கத்தை உருவாக்க நிதி திரட்டத் தொடங்கினார். விக்டோரியா அரசி 1901 ஆம் ஆண்டு இறந்தவுடன் அவர் நினைவாக ஒரு அரங்கம் அமைக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஏற்கனவே இருந்த டவுன் ஹால் என்ற நகர அரங்கம், வளர்ந்து வரும் நகரத்திற்கும் பெருகிவரும் மக்கள் தொகைக்கும் போதுமானதாக இல்லை. எனவே ஒரு புதிய அரங்கம் நிர்மாணிப்பதற்கு முழு முயற்சியும் ஸ்வீட்ஹாம் எடுத்துக் கொண்டார். விக்டோரியா மெமோரியல் ஹால் என்பது விக்டோரியா தியேட்டர், விக்டோரியா கன்ஸர்ட் ஹால் என்று இரண்டு கட்டடங்களைக் கொண்டது. இரண்டையும் இணைப்பதற்கு நடுவில் 54 மீட்டர் உயரம் கொண்ட ஒரு மணிக்கூண்டு அமைக்கப்பட்டது.
ஏற்கனவே இருந்த டவுன் ஹால் சில மாற்றங்களுடன் விக்டோரியா தியேட்டர் ஆனது. அதன் பக்கத்தில் விக்டோரியா கன்ஸர்ட் ஹால். இவை இரண்டுமே சிங்கப்பூரின் பெருமைக்கும் பாரம்பரியத்துக்கும் உரிய கட்டடங்கள். பல சரித்திரப் புகழ்பெற்ற நிகழ்வுகளும் சிறப்பான நாடகங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடந்த இடங்கள். இவை இரண்டுமே இப்போது தற்காலிகமாக மூடப்பட்டு மீண்டும் புதிய வடிவத்துடன் நவீன ஊடக வசதிகளுடனும் 2013 ஆம் ஆண்டு திறக்கப்படவிருக்கின்றது.
அடுத்த ஆளுநர் சர் ஜான் ஆண்டர்சன் 1904 ஆம் ஆண்டிலிருந்து 1911 ஆம் ஆண்டு வரை இருந்தார். இவர் வழக்கறிஞராகப் பணிபுரிய பயிற்சி பெற்றவர். இருபத்தைந்து ஆண்டுகள் லண்டனில் காலனிய அலுவலகத்தில் வேலை செய்தவர். பொதுப்பணித்துறையினரால் திட்டமிடப்பட்ட பல வேலைகள் நீண்ட நாள்களாக இருந்த பொருளாதாரச் சரிவினால் தாமதமடைந்திருந்தன.
ஆண்டர்சன் ஆட்சி செய்த காலகட்டத்தில் பொருளாதாரம் சற்று முன்னேற்றமடைந்து பொதுப்பணித்துறையினரால் திட்டமிடப்பட்ட பல பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. விக்டோரியா மெமோரியல் ஹால் ஆண்டர்சன் ஆளுநராக இருந்தபோது 1905 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி திறக்கப்பட்டது.
1911 ஆம் ஆண்டிலிருந்து 1914ஆம் ஆண்டு வரை சர் ஆர்தர் யங் ஆளுநராகப் பதவி வகித்தார். 1914 ஆம் ஆண்டு முதல் உலகப் போர் துவங்கியது. முதல் உலகப் போர் ஆசிய நாடுகளுக்குப் பரவாததால் சிங்கப்பூரில் முதல் உலகப் போரின்போது அமைதி நிலவி வந்தது. இரண்டாம் உலகப் போரின்போது இதற்கும் சேர்த்து சிங்கப்பூர் களமிறங்கியது!
சிறிய அளவில் இந்தியச் சிப்பாய்கள் சிலர் அரசாங்கத்தை எதிர்த்துக் கலகம் செய்தனர். முதல் உலகப் போரில் பங்கெடுக்க ஆங்கிலச் சிப்பாய்கள் இருந்த யார்க் ஷயர் லைட் இன்ஃபான்ட்ரி என்ற படை இங்கிலாந்துக்குத் திரும்பி அனுப்பப்பட்டது. அந்த இடத்தை நிரப்புவதற்காக இந்தியாவிலிருந்து ஐந்தாவது நேடிவ் லைட் இன் ஃ பான்ட்ரி குழு என்ற இந்தியச் சிப்பாய்கள் நிறைந்த காலாட்படைக் குழு சிங்கப்பூர் வந்து சேர்ந்தது.
இதில் சிப்பாய்களாக இருந்தவர்கள் வீரமும் வலிமையும் நிறைந்த ராஜபுதனத்தைச் சேர்ந்த பதான்கள். இவர்களை சிங்கப்பூரிலிருந்து முதல் உலகப் போரில் துருக்கியுடன் எதிர்த்துப் போரிட அனுப்பப் போகிறார்கள் என்ற செய்தி பரவியது. இந்தியாவில் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகள் தீவிரமாகப் பரவிக் கொண்டிருந்த காலம் அது. எனவே ஆங்கில அரசை எதிர்க்கும் ஒரு மனநிலையில் பெரும்பாலான இந்தியர்கள் இருந்து வந்தனர்.
படைத் தளபதியாக லெப்ஃடினண்ட் கர்னல் இ வி மார்ட்டின் என்பவரை நியமித்தது, ஆங்கிலேய அதிகாரிகள் மற்றும் இந்திய அதிகாரிகளுக்கும் அதிருப்தி அளித்தது. அவர் ஆணவம் மிக்க அதிகாரியாக நடந்துகொண்டு அனைவரின் நன்மதிப்பையும் இழந்தவர். இப்போது சிங்கப்பூரில் அவருக்குக் கிடைத்த பதவியும் யாருக்கும் மகிழ்ச்சியளிக்கவில்லை. இதனால் படைவீரர்கள் ஒரு குழப்பமான மன நிலையில் இருந்தனர்.
துருக்கியையும் துருக்கி சுல்தானையும் பெரிதும் மதித்து உலகத்தில் இருக்கும் அனைத்து முஸ்லிம்களும் துருக்கி சுல்தானைத் தலைவராக நினைக்கத் தொடங்கினர். எனவே துருக்கியை எதிர்த்துப் போரிட பதான்களும் மலாய் சிப்பாய்களும் தயாராக இல்லை. இந்தப் படை வீரர்களை ஹாங்காங் அழைத்துச் செல்வதற்காக வந்த கப்பலை துருக்கிக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கும் கப்பல் என்று நினைத்து குழப்பமான மன நிலையில் எதிர்க்கத் தொடங்கினர்.
அப்போது ஜெர்மனியைச் சேர்ந்த எம்டன் கப்பலிலிருந்தும் பல படை வீரர்கள் இவர்களோடு இணைந்து கொண்டனர். பலர் இந்த கலகத்தில் நேரிடையாகக் கலந்து கொள்ளவில்லை என்றாலும் நடந்த சிறு சண்டையைக் கூட தடுத்து நிறுத்த முடியாதபடி ஆங்கிலேயர்களுக்குப் படை பலம் அப்போது இல்லை. சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் சீனர்கள் விடுமுறையில் இருந்ததால் அவர்கள் உதவி கிடைக்கவில்லை. கெப்பல் துறைமுகம், பாசிர் பாஞ்சங் போன்ற இடங்களில் 18 ஐரோப்பியர்களும், உள்ளூர் மக்களும் மாண்டனர்.
இறுதியில் சிப்பாய்க் கலகம் தோல்வியில் முடிந்தது. 1915 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 23 ஆம் தேதி 200 சிப்பாய்கள் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் 47 பேரின் குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களைப் பொதுமக்கள் முன்னிலையில் ஊட்ரம் சிறைச்சாலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். 64 பேர் நாடு கடத்தப்பட்டனர். 73 பேருக்கு 7 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இது முக்கியமான சரித்திர நிகழ்வு இல்லையென்றாலும் ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்று மக்கள் மனதில் ஒரு எதிர்ப்பு உணர்வை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. இதைப் போன்ற அவசர காலங்களில் கைகொடுக்கத் தேவையான படை பலம் தங்களிடம் இல்லை என்பதை உணர்ந்த ஆங்கில அரசு கட்டாய ராணுவப் பயிற்சியைக் கொண்டு வந்தது.
‘ரிஸர்வ் ஃபோர்ஸ் அண்ட் சிவில் கார்ட் ஆர்டினன்ஸ்’ என்ற புதிய சட்டத்தின்படி பதினைந்து வயதிலிருந்து ஐம்பத்தைந்து வயது வரை இருக்கும் அனைத்து ஆண்களும் கட்டாய இராணுவப் பயிற்சி பெற வேண்டும். இப்போதும் சிங்கப்பூரில் 18 வயது நிரம்பிய நிரந்தரவாசம் பெற்ற ஆண்களும், குடியுரிமை பெற்ற ஆண்களும் கட்டாய இராணுவப் பயிற்சி பெற வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. தனியாகப் பெரிய அளவில் படை பலம் இல்லாததால் அவசரக் காலங்களில் நாட்டில் இருக்கும் அனைத்து ஆண்களும் முறையான பயிற்சி பெற்ற இராணுவத்தினராகப் பணியாற்றுவார்கள்.
இதற்குப் பிறகு இந்தியர்கள் மீது ஆங்கிலேயர்கள் வைத்த நம்பிக்கை சற்றுக் குறைந்தது. இந்தியர்கள் தங்கள் பெயர்களை அரசாங்கத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற புதிய சட்டம் ஆங்கில அரசுக்கு விசுவாசமாக இருந்த பல இந்தியர்களுக்கு சற்று அதிருப்தியளித்தது. இந்தக் கலகத்தை தடுக்க பிரெஞ்சுக்காரர்கள், ஜப்பானியர்கள், ரஷ்யர்கள் என்று பல நாட்டினரும் உதவி செய்தாலும் ஆங்கில அரசுக்கு இந்தக் கலகம் வேறு பல கோணங்களில் இந்தியாவையும் இந்தியர்களையும் பார்க்க வைத்தது.
இதற்குப் பிறகு இந்தியத் தேச தலைவர்களுக்கு வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களையும் தேச விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வேர் விட்டது. இது நடந்து பல வருடங்கள் கழித்து கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு இந்திய தேசியப் படை என்ற படையை உருவாக்கினார். அது ஆளுநர்களின் கதைக்குப் பிறகு…
தொடரும்…