1823 ஆம் ஆண்டு ராஃபிள்ஸ் இங்கிலாந்து திரும்பிய பின்னர் ஜான் கிராஃபோர்ட் சிங்கப்பூரின் ஆளுனராகச் செயல்படத் தொடங்கினார். கிராஃபோர்ட் நிர்வாகக்தின்கீழ் சிங்கப்பூர் மேலும் வளர்ச்சியடைந்தது. மக்கள் தொகை பெருகியது. இதனால் வர்த்தகம் வளர்ந்து அரசாங்கத்துக்கு அதிக வருமானம் கிடைத்தது. கிராஃபோர்ட் வருமானத்தைப் பெருக்குவதற்குப் பெரும் முயற்சிகள் எடுத்தார். சிங்கப்பூர் துறைமுகத்தையும், அதனை ஒட்டி வளர்ந்து வரும் நகரத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்தார்.
கப்பல்களைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலையை மாற்றினார். சிங்கப்பூர் துறைமுகத்தை முழுக்க முழுக்க இலவசம் ஆக்கினார். இதைக் கேள்விப்பட்ட பல நாட்டு வணிகர்களும் சிங்கப்பூருக்குக் கப்பல்களைக் கொண்டு வந்து பலவகைப்பட்டப் பொருள்களை விற்பதற்கு முற்பட்டனர். அனைத்துலக நிலையில் ஒரு வர்த்தக மையமாக சிங்கப்பூர் உருவானதும் இந்தக் காலகட்டத்தில் தான்.
வர்த்தகர்கள் பொருள்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு பல கிடங்குகள் கட்டப்பட்டன. வர்த்தகர்கள் சிங்கப்பூரில் தங்குவதற்கும் அவர்கள் வீடுகள் கட்டிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. துறைமுகங்களில் வேலை செய்வதற்கும், புதிய நகரத்தை விரிவுபடுத்தவும், புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு கட்டுமானத் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்தும், சீனாவிலிருந்தும் வந்த வண்ணம் இருந்தனர்.
தீவாந்திரச் சிறைத் தண்டனைப் பெற்ற இந்தியக் கைதிகள் குறிப்பாக அந்தமான் சிறையிலிருந்த பல ஆயுள் தண்டனைக் கைதிகள் சிங்கப்பூருக்கு சாலைகள் போடுவதற்கும், சதுப்பு நிலப் பகுதிகளை சீரமைத்து நகரத்தை விரிவுபடுத்தவும் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் பலருக்கு தண்டனைக் காலம் முடிந்ததும் சுதந்திரமாகச் சிங்கப்பூரில் தங்க அனுமதி வழங்கப்பட்டது. அவர்கள் வண்டியோட்டிகளாகவும், குத்தகைத் தொழிலாளிகளாகவும், விவசாயம் செய்துகொண்டும் வாழத் தொடங்கினர்.
ஜான் கிராஃபோர்ட் சூதாடுவதை சட்டபூர்வமாக ஆக்கினார். அதிக லாபம் தரும் சூதாட்ட விடுதிகளைக் கட்டினார். வட்டித் தொழிலுக்கும் சட்டபூர்வமாக அனுமதி அளித்தார். துப்பாக்கி மருந்துகள் தயாரிப்பதற்கும், அதை விற்பதற்கும் அனுமதி அளித்தார். கிராஃபோர்ட் ஆளுநராக இருந்தபோது சிங்கப்பூரும் ஒரு பெரிய நகரமாக வளர்ச்சியடைந்தது. பல சாலைகள் போடப்பட்டன. ஆறுகளின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டன. தெரு விளக்குகள் போடப்பட்டன. தெருக்களில் சாலைக் குறியீடுகள் அறிமுகப்படுத்தின.
சமயம் சார்ந்த கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டன. இதனால் பல தேவாலயங்கள், மசூதிகள், சீனக் கோவில்கள், இந்துக் கோவில்கள் கட்டப்பட்டன. சிங்கப்பூரின் ஆகப் பழமையான சௌத் பிரிட்ஜ் சாலை மாரியம்மன் கோவில் இந்தக் காலகட்டத்தில் கட்டப்பட்டது. நகர மையத்தில் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருந்த காவல் நிலையம் வடகிழக்குப் பகுதியிலும் செயல்படத் தொடங்கியது.
ஜோகூர் சுல்தான் ஹுசேன் ஷா, சிங்கப்பூர் தெமெங்காங் அப்துல் ரெஹ்மான் இவர்களுடன் கிழக்கிந்தியக் கம்பெனி நட்பு முறையில் ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்கியது. இதற்கு முக்கிய காரணம் ஜான் கிராஃபோர்ட். இந்தப் புதிய ஒப்பந்தப்படி சிங்கப்பூர் முழுமையாக கிழக்கிந்தியக் கம்பெனிக்கு சொந்தம் ஆனது. சிங்கப்பூரைச் சுற்றி பத்து மைல் தொலைவு வரை இருந்த அனைத்து தீவுகளும், சிங்கப்பூரும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்டதாயிற்று.
சுல்தான் ஹுசேன் ஷாவுக்கும், தெமெங்காங் அப்துல் ரஹ்மானுக்கும் சிங்கப்பூரில் வசிப்பதற்கு நிலங்கள் வழங்கப்பட்டன. சிங்கப்பூரை விட்டு வெளியேறுவதற்கு அவர்கள் முடிவெடுத்தால் அவர்களுக்குப் பெரிய அளவில் நிதியுதவி செய்வதாகவும் ஒப்பந்தம் எழுதப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் சிங்கப்பூர் மலாயாவைச் சார்ந்த ஒரு பகுதியாக இல்லாமல் தனித்து இயங்கத் தொடங்கியது.
1824 ஆம் ஆண்டு லண்டனில் ஆங்கில- டச்சு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் நெப்போலியன் படையெடுப்பின் போது ஏற்பட்ட பகைமையால் டச்சு அரசாங்கத்துக்குச் சொந்தமான பல இடங்களைக் கைப்பற்றியது. ராஃபிள்ஸ் சிங்கப்பூர் தீவில் வர்த்தகம் செய்வதற்கு 1819 ஆம் ஆண்டு ஜோகூர் சுல்தானுடன் செய்த உடன்படிக்கையும் ஒப்பந்தமும் செல்லாது. முறைப்படி ஜோகூர் மற்றும் சிங்கப்பூர் இரண்டுமே டச்சு அரசாங்கத்துக்குச் சொந்தமானது. எனவே ராஃபிள்ஸ் டச்சுக்கார்ர்களிடம் முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று சிங்கப்பூருக்கு டச்சு அரசாங்கம் உரிமை கொண்டாடி வந்தது.
இந்த உடன்படிக்கை மூலம் ஆங்கிலேயர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் இருந்த பகைமை நீங்கி நட்பு வளர்ந்தது. மலாக்கா, ஜோகூர், சிங்கப்பூர் ஆகிய இடங்களை தங்களுடையது என்று உரிமை கொண்டாடி வந்த டச்சு அரசாங்கம் மலாயா தீபகற்பத்தில் மலாக்கா, சிங்கப்பூர் இரண்டையுமே ஆங்கிலேயர்களுக்கு விட்டுக் கொடுத்தது.
அதற்கு ஆங்கில அரசாங்கம் பதிலுக்கு இந்தோனேசியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளில் தங்கள் வசம் இருந்த இடங்களை, பென்கூலன், ஜாகார்த்தா போன்ற இடங்களை டச்சு அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. இவ்வாறு 1824 ஆம் ஆண்டு ஜான் கிராஃபோர்ட் ஆட்சிப் பொறுப்பை எடுத்த ஆண்டில் சிங்கப்பூர் முழுமையாக கிழக்கிந்தியக் கம்பெனி வசம் வந்த்தால் ஜான் கிராஃபோர்டுக்கு சிங்கப்பூரை உருவாக்கியவர் என்ற பெயரைத் தரலாம் என சில சரித்திர ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நிர்வாகத்திறன் கொண்ட ஜான் கிராஃபோர்ட் தனிப்பட்ட முறையில் மக்களின் நன்மதிப்பைப் பெறவில்லை. ராஃபிள்ஸ், ஃபர்குவார், கோல்மென் போன்றவர்கள் உள்ளூர் மக்களிடம் அவர்கள் மொழியில் பேசி நெருங்கிப் பழகி வந்தனர். ஆனால் ஜான் கிராஃபோர்ட் அதிக பணம் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவராகவும், பணத்தைச் செலவழிப்பதில் கருமியாகவும் இருந்தார் என்று முன்ஷி அப்துல்லா எழுதிய குறிப்புகளில் குறிப்பிட்டிருந்தார். முன்ஷி அப்துல்லா ராஃபிள்ஸ் சிங்கப்பூர் வந்தபோது அவருடன் மொழிபெயர்ப்பாளராக வந்தவர்.
ராஃபிள்ஸுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு பெற்றவர். ராஃபிள்ஸுக்கு மலாய் மொழியைக் கற்பித்தவர். 1819 ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூரில் தங்கி அங்கே ஆளுநர்களாக வந்த ஆங்கிலேய அதிகாரிகளிடம் நெருங்கிப் பழகினார். அவர் தான் கண்டவற்றை குறிப்புகளாக எழுதி வைத்திருந்தார். அவர் குறிப்புகளைக் கொண்டு இன்று சிங்கப்பூர் சரித்திரம் மட்டுமில்லை. மலேயா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஐரோப்பிய நாடுகள் தங்கள் காலனிகளை அமைத்தபோது நடந்த பல சம்பவங்களும் அரசியல் விளையாட்டுகளும் அவர் குறிப்பில் காணப்படுகிறது.
ஜான் கிராஃபோர்ட் ஆணவம் கொண்டவராகவும், மக்களை அலட்சியப் போக்குடனும் நடத்தினார். இதனால் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது ஐரோப்பியர்களும் ஜான் கிராஃபோர்ட் நடத்தையினால் அதிருப்தி அடைந்தனர். ஆனால் ஒரு திறமை மிக்க ஆட்சியாளராகச் செயல்பட்டு சிங்கப்பூரை கிழக்குப் பகுதியில் ஒரு மாபெரும் வர்த்தக மையமாக உருவாக்கினார் என்பதை மறுக்க முடியாது. 1826 ஆம் ஆண்டு சிங்கப்பூரை விட்டு இங்கிலாந்து திரும்பினார்.
இங்கிலாந்து அரசியலில் ஈடுபட்டார். இங்கிலாந்தில் இருந்தபடியே சிங்கப்பூர் வர்த்தகர்களுக்கு பலவகைகளில் உதவிகள் செய்து கொண்டிருந்தார். 1868 ஆம் ஆண்டு தான் இறப்பதற்கு சில காலத்துக்கு முன்னால் லண்டனில் உருவாக்கப்பட்ட ஸ்ட்ரெயிட்ஸ் செட்டில்மெண்ட் அசோசியேஷன் என்ற கழகத்தின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது.
இன்று கிராஃபோர்ட் சாலை, கிராஃபோர்ட் மார்க்கெட், கிராஃபோர்ட் பூங்கா, கிராஃபோர்ட் பாலம் போன்றவை டாக்டர் ஜான் கிராஃபோர்ட் பெயரை சிங்கப்பூரர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டு இருக்கிறது.
தொடரும்…