இனி சிங்கப்பூரை நிர்வகிக்க வந்த அடுத்த ஆளுநரைப் பற்றிப் பார்ப்போம். இவரையும் ராஃபிள்ஸ்தான் தேர்ந்தெடுத்தார். அவர் டாக்டர் ஜான் கிராஃபோர்ட்.
1783 ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தவர். இவர் அப்பா ஒரு மருத்துவர். எனவே இவரும் தம் இருபதாவது வயதில் எடின்பர்க் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துப் பட்டம் பெற்றார். கிழக்கிந்தியக் கம்பெனியில் இந்த மூன்று பேரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில்தான் வேலைக்குச் சேர்ந்தனர். ஃபர்குவார் இராணுவப் பிரிவில், ராஃபிள்ஸ் நிர்வாகப் பிரிவில், கிராஃபோர்ட் மருத்துவப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தனர்.
மூவரும் தென் கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கு வேலை செய்ய அனுப்பப்பட்டனர். 1803-1808 ஆண்டுகளில் இந்தியாவின் வடமேற்கு மாகாணமான உத்தரப் பிரதேசத்திற்கு மருத்துவத் துறை வேலைக்கு அனுப்பப்பட்டார். பிறகு 1808 ஆம் ஆண்டு பினாங்கு நகரத்திற்கு மாற்றப்பட்டார். முதன் முதலாக தென் கிழக்கு ஆசியாவுக்குப் பயணம். மலாய் கலாச்சாரத்தையும், மலாய் மொழியையும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார்.
ஆளுநர் மிண்டோவின் ஆணைப்படி 1811 ஆம் ஆண்டு ராஃபிள்ஸுடன் இணைந்து டச்சுக்காரர்களிடமிருந்து ஜாவாவை அடையும் போரில் இவரும் பங்கு பெற்றார். ஒரு துணிகரமான போர்த்திட்டத்துடன் ஜாவாவை பிரிட்டிஷ் படைகள் வெற்றி கொண்டன. அந்த வெற்றிக்கு அடையாளமாக ராஃபிள்ஸ் ஜாவாவின் லெஃப்டினன்ட் ஜெனரலாகப பதவி ஏற்றார். யொக்ககர்தாவின் (ஜாவா) முதல் ஆளுநர் என்ற பதவி முதலில் ஃபர்குவாருக்கு வழங்கப்பட்டது.
ஆனால் அவருக்கு மலாக்காவுக்குத் திரும்பிச் செல்வதில் அதிக விருப்பம் இருந்ததால் அந்தப் பதவி டாக்டர் ஜான் கிராஃபோர்டுக்குக் கிடைத்தது. கிராஃபோர்ட் நன்கு கற்றறிந்தவர். மருத்துவர். அறிவுப்பசியில் ராஃபிள்ஸஸுக்கு சற்றும் குறைந்தவரல்ல. ஜாவானிய மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டினார். ஜாவானிய அரசப் பரம்பரையினரோடும், இலக்கியங்கள் கற்றறிந்த சான்றோர்களிடமும் தனிப்பட்ட முறையில் நட்பு கொண்டு நெருங்கிப் பழகினார். அரசியல் நோக்கங்களுக்காக பாலி, சுலவேசி போன்ற இடங்களுக்குத் தூதராக அனுப்பப்பட்டார்.
செரிபான் என்ற இடத்தில் நிலச் சீரமைப்புத் திட்டத்தைச் செயலாக்கும்போது ராஃபிள்ஸுக்கும் கிராஃபோர்டுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தியாவில் ஐந்து வருடங்கள் இருந்தபோது அங்கு பின்பற்றப்பட்ட கிராம நிர்வாகத் திட்டம் கிராஃபோர்டுக்கு ஒப்புமை உடையதாக இருந்தது. அதன்படி கிராமம் முழுவதுமாக கிடைத்த வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வரி செலுத்தினால் போதும்.
இந்தச் சட்டத்தையே ஜாவாவிலும் பின்பற்றலாம் என்று கிராஃபோர்ட் பரிந்துரைத்தார். ஆனால் ராஃபிள்ஸ் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு விவசாயியும் தனிப்பட்ட முறையில் வரி செலுத்த வேண்டும் என்று சட்டம் இயற்றினார். இதனால் இருவருக்கும் இடையில் தனிப்பட்ட விரோதம் ஏற்பட்டது. ராஃபிள்ஸ் போட்ட சட்டத்தின்படி வரி வசூலிக்கப்பட்ட்து. கிராஃபோர்டின் பரிந்துரைகளையும் மற்ற யோசனைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.
1815 ஆம் ஆண்டு ஜாவா மீண்டும் டச்சுக்காரர்கள் வசம் திருப்பிக் கொடுக்கப்பட்டது. இப்போது ராஃபிள்ஸ், கிராஃபோர்ட் இருவருக்கும் வேலை இல்லை. மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பினர். மீண்டும் இங்கிலாந்தில் தங்கியிருந்த இரண்டு வருடங்களை வீணாக்காமல் ராஃபிள்ஸ் ஜாவாவின் சரித்திரத்தை எழுதி அதை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார்.
டாக்டர் ஜான் கிராஃபோர்ட் தான் தென் கிழக்கு ஆசியாவில் தங்கியிருந்தபோது கிடைத்த செய்திகளையும், தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு ” தி ஹிஸ்டரி ஆஃப் இந்தியன் ஆர்கிபெலகோ (இந்தியப் பெருங்கடலில் அமைந்திருக்கும் நாடுகளின் சரித்திரம்-. history of Indian archipelago) என்று ஜாவா, சுமத்ரா தீவுகளின் சரித்திரத்தை மூன்று தொகுதிகளாக எழுதி 1820 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
ஆனால் இந்த தொகுப்பில் பல தவறான செய்திகள் இடம் பெற்றுள்ளன என்று ராஃபிள்ஸ் குறிப்பிட்டார். ஆனால் இன்று வரை அதில் படிக்கப்பட வேண்டிய பல அரிய தகவல்கள் இருப்பதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர் திட்டப்படி ஈஸ்ட் இன்டீஸ் தீவுகளில் ஆங்கிலேயர்களைக் குடியேற்றி அந்த்த் தீவுகளை ஆங்கிலேயர்கள் வசம் கொண்டு வந்தனர்.
கிழக்கிந்தியக் கம்பெனி மட்டுமே தென் கிழக்கு ஆசியா முழுவதும் பரவ வேண்டும் என்ற ஆர்வத்தினால், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிபந்தனைகள் அற்ற துறைமுகங்களை நிறுவினால் பல வணிகத் தொடர்புகள் பெற முடியும். அதன் மூலம் கிழக்கிந்தியக் கம்பெனி மேலும் வளர்ந்து லாபம் பெற முடியும் என்ற யோசனையை முதன் முதலில் சொன்னதும் கிராஃபோர்ட்.
கிராஃபோர்ட்1821 ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். ஹேஸ்டிங்ஸ் பிரபு கிராஃபோர்டின் பரந்த அனுபவத்தையும், அறிவுத் திறனையும் கண்டு அவரை சயாம் நாட்டிற்கும் (இன்றைய தாய்லாந்து) சீனாவுக்கும் தூதுவராக அனுப்பினார். 1827 ஆம் ஆண்டு மியான்மாருக்கு அனுப்பப்பட்டார்.
இவர் எந்தக் காரணங்களுக்காக அனுப்ப்ப்பட்டாரோ அவை போதுமான வெற்றியைத் தராவிட்டாலும் இந்த்த் தூது முறைகள் சரித்திரத்தில் இடம் பெற்றன.அவர் கைப்பட எழுதிய நாட்குறிப்புகள் பின்னாளில் பெரிதும் பயனுள்ளதாக இருந்தன. அவர் நடைமுறைகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தன.
1821 முதல் 1827 ஆம் ஆண்டுகளில் அவர் தூதராய் செயல்பட்ட வருடங்களில் இடையில் மூன்று வருடங்கள் 1823 ஆண்டிலிருந்து 1826ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் ஆளுநராக இருந்த மூன்று ஆண்டுகளில் சிங்கப்பூர் பெரிய மாற்றங்கள் கண்டது. சிங்கப்பூர் முழுமையாக பிரிட்டிஷ் காலனி நாடுகளில் ஒன்றாக ஆனதும் இந்தக் காலகட்டத்தில்தான்! டச்சு ஆங்கிலேய உடன்படிக்கையில் கையெழுத்து இட்டு அதிகாரபூர்வமாக்கினார்.
அந்த டச்சு ஆங்கிலேய உடன்படிக்கையில் என்ன இருந்தது? அதனால் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு என்ன கிடைத்தது? ஜான் கிராஃபோர்ட் சிங்கப்பூரின் வருமானத்தை அதிகரிக்க வில்லியம் ஃபர்குவாரின் திட்டத்தைப் பின் பற்றினார் ஆனால் ராஃபிள்ஸ் தலையிட முடியவில்லை. அது ஏன்?
தொடரும்…