ராஃபிள்ஸ் ஃபர்குவாரின் நெருங்கிய நண்பர். ஒன்றாக வேலை செய்தவர்கள் என்ற உறவுக்கு அப்பாற்பட்டு இருவரும் செயல்பட்டனர். வில்லியம் ஃபர்குவார் மட்டுமில்லை, ராஃபிள்ஸும் உள்ளூர் மலாய் மக்களிடம் பெரிய மதிப்பும் அன்பும் கொண்டவர். ஆனால் இப்படிப் பட்ட கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டபோது, ராஃபிள்ஸ் ஃபர்குவாருக்குக் கிடைத்த மலாய் உறவுகளைப் பற்றி சற்று ஏளனமாகப் பேசினார்.
மலாய் மனைவி, அவர் குழந்தைகள் இவர்களைப் பற்றியும் மலாய் தொடர்பினால் கிடைத்தவை என்று சற்று கிண்டலுடன் குறிப்பிட்டார். மேலும் வில்லியம் ஃபர்குவாரைத் தான் நிர்வாக அதிகாரி மற்றும் இராணுவத் தலைமை அதிகாரியாக நியமித்த போதும் அவர் இராணுவ சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையான இராணுவச் சீருடை அணியாமல் உள்ளூர் மலாய் மக்களைப் போல் சரோங் அணிந்து நடமாடியதைக் கண்டு பிரிட்டிஷ் கலாச்சாரத்தைப் பின்பற்றாமல் இருந்தவர் என்று ஏளனத்துடன் குறிப்பிட்டார்.
நிர்வாக அதிகாரி, இராணுவ அதிகாரி என்ற இரண்டு பதவிகளையும் ஒரே மாதத்தில் இழந்தார். 1823 ஆம் ஆண்டு இறுதி வரை சிங்கப்பூரில் இருந்தார். அவருக்கு ஒரு பெரிய பிரிவு உபசார விருந்து நடந்தது. உள்ளூர் மக்கள் அவருக்கு வெள்ளியில் செய்யப்பட்ட விலை உயர்ந்த பொருள் ஒன்றைப் பரிசளித்தனர். கூடை வடிவில் இருக்கும் வெள்ளி அடுக்குப் பேழை. சாப்பிடும் மேசை மேல் வைத்து இதில் பழங்கள், இனிப்பு வகைகள், சாக்லேட் போன்றவற்றை அடுக்கி வைக்கலாம்.
மேலே மெழுகுவத்திகள் ஏற்றி வைப்பதற்கு இடம் இருக்கும் (silver epergne) சிங்கப்பூரில் வசித்த மலாய், சீன மக்கள் மட்டுமல்லாது ஐரோப்பியர்களும் கலந்து கொண்ட அந்த விருந்து ஃபர்குவார் சாகும் வரை மறக்க முடியாத ஒரு விருந்தாக அமைந்தது. மக்கள் அவர் மேல் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது அந்த விருந்து. அவர் ஸ்காட்லாந்துக்குக் கிளம்பும் நாளன்று அவரை வழி அனுப்ப பெருந்திரளான மக்கள் கூட்டம் கடற்கரையில் அவருக்காகக் காத்திருந்தது.
அவர் வீட்டிலிருந்து கடற்கரை வரை இராணுவம் அணிவகுத்து அவருக்கு மரியாதை அளித்தது. அனைவரும் இராணுவ முறைப்படி சல்யூட் அடித்து அவருக்கு விடை கொடுத்தனர். அவரை அலெக்ஸாந்தர் என்ற கப்பலில் ஏற்றுவதற்கு ஒர் படகு. அந்தப் படகைச் சுற்றி பல படகுகள் அவரைத் தொடர்ந்து வந்தன. அவர் கப்பல் கிளம்பியதும் பக்கத்தில் இருந்த சயாமியக் கப்பல்கள் பீரங்கிகளை முழங்கி தன் மரியாதையைத் தெரிவித்தது. கப்பல் மலாக்காவையும், பினாங்கையும் கடந்து சென்ற போது இதைப் போல பீரங்கிகள் முழங்க அவருக்கு மரியாதை செலுத்தினர்.
வில்லியம் ஃபர்குவார்முறையாக நிர்வாகம் செய்யவில்லைஎன்ற குற்றச்சாட்டுடன் பதவிநீக்கம் செய்யப்பட்டார். இராணுவத்தலைமைப் பொறுப்பிலிருந்துநீக்கப்பட்டதற்கான சரியானகாரணம் சொல்லப்படவில்லை. ஆனாலும்உள்ளூர் மக்கள் அவரைத் தங்கள்மதிப்பிற்கும், பிரியத்திற்கும்உரிய ஒரு தலைவராகவே கருதினர்என்பதற்கு இந்தப் பிரிவுக் காட்சிசாட்சி! அவர் கப்பல் ஏறியகாட்சியை கல்கத்தாவிலிருந்துவெளிவந்த ஒரு நாளேடு இவ்வாறுபதிவு செய்திருக்கிறது.
காலங்கள் செல்லச் செல்ல இந்தக் குற்றச்சாட்டுகள் தவறு, அவர் ஏன் அவ்வாறு நடந்து கொண்டார் என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்பினார். அவர் ராஃபிள்ஸ்ஸுக்குத் தன் நிலைமையை விளக்கி எழுதிய கடிதம் அவர் கைக்குக் கிடைத்ததும் தன்னுடைய நிலையில் ஏதாவது மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்தில் காத்திருந்தார். ஆனால் அந்தக் கடிதம் ராஃபிள்ஸிடம் போய்ச் சேர்ந்தும் எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்ததிலிருந்து அவர் வாழ்க்கை மாறியது.
கிழக்கிந்தியக் கம்பெனியின் நிர்வாக இயக்குனர்கள் முன்னிலையில் தன்னுடைய பக்கம் இருந்த நியாயத்தை எடுத்துரைத்தார். சிங்கப்பூர் வளர வேண்டுமென்றால் அதற்கு நிதி உதவி தேவை. ஆனால் இவர் கேட்ட நிதி உதவியை கல்கத்தாவில் இருந்த கிழக்கிந்தியக் கம்பெனி கவர்னர் கொடுக்க விரும்பவில்லை. சிங்கப்பூர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தது. துறைமுகத்திற்குப் பொருள்கள் ஏற்றிக் கொண்டு வந்த பல நாட்டுக் கப்பல்களில் இருந்த வணிகர்கள், புதிய துறைமுகத்தைப் பற்றி மட்டும் கேள்விப்பட்டு வரவில்லை.
அதை நிர்வகித்து வந்த வில்லியம் ஃபர்குவாரைப் பற்றி அறிந்து அவர் மீது நம்பிக்கை வைத்து வந்தனர். எனவே வருமானத்தைப் பெருக்க அவ்வாறு செய்ய வேண்டியதாக இருந்தது என்று அவர் சொன்ன விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மீண்டும் சிங்கப்பூர் நிர்வாகத்திற்கும், இராணுவத்திற்கும் பொறுப்பு எடுத்துக் கொள்ளச் சொல்வார்கள் என நினைத்தார்.
சிங்கப்பூரை உருவாக்கியதில் அவருக்கும் பெரும் பங்கு இருக்கிறது என்று சரித்திரம் சொல்லும் என்று நினைத்தார். கிழக்கிந்தியக் கம்பெனி சிங்கப்பூரை உருவாக்கியவர் என்ற பெருமையைத் தரும் என்றும் நினைத்தார். ஆனால் அவருக்கு மேஜர் ஜெனரல் என்ற பதவி உயர்வு மட்டும் கிடைத்தது. அதுவும் ஒரு நீண்ட காலக் காத்திருப்புக்குப் பிறகு!
ராஃபிள்ஸ் சிங்கப்பூரைக் கண்டுபிடித்து அதன் வளமையானஎதிர்காலத்தைக் பற்றி கனவுகண்டார். ஆனால் அந்தக் கனவைநனவாக்க அவரோடு இணைந்து பணியாற்றி, சிங்கப்பூரைச் சீராட்டி தாலாட்டிவளர்த்த இன்னொரு தாயாகத் தன்னைஎண்ணிக் கொண்டிருந்தவருக்குகிழக்கிந்தியக் கம்பெனி கொடுத்தபதவி உயர்வு பெரிய பொருட்டாகஇல்லை. ராஃபிள்ஸ் தனக்கு இழைத்தஅநீதியைத் தன் வாழ்நாள் இறுதிவரை அவர் மறக்கவில்லை.
மலாக்காவையும்சிங்கப்பூரையும் மறக்கவில்லை.பருவ நிலை மாற்றங்களே இல்லாதவெப்ப மண்டலக் காடுகள் அவர்நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருந்தன.ஸ்காட்லாந்தில் பெர்த் நகரத்தில்இர்லி பாங்க் வில்லா (early bank villa) என்ற இடத்தில் வாழ்ந்தார். 1828 ஆம் ஆண்டு மார்கெரெட் லோபான்என்று பெண்மணியைத் திருமணம்செய்து கொண்டார்.
அந்த மனைவிமூலம் ஆறு குழந்தைகள் பிறந்தன.ஸ்காட்லாந்து அவர் பிறந்தநாடாக இருந்தாலும் அந்த நாட்டின் பருவ நிலை மாறுபாடுகள், அங்கே வசந்த காலத்தில் பூத்துக்குலுங்கிய பூக்கள் எதுவுமேஅவரைக் கவரவில்லை. ராஃபிள்ஸ்ஃபர்குவாரை வேலையை விட்டுநீக்கிய மூன்றே ஆண்டுகளில்உயிர் இழந்தார். 1839 ஆம் ஆண்டுமே மாதம் 11 ஆம் தேதி வில்லியம்ஃபர்குவார் ஸ்காட்லாந்தில்அவரது இல்லத்தில் இறந்தார்.தான் இறக்கும் வரை சிங்கப்பூரைஉருவாக்கிய ராஃபிள்ஸ்ஸுக்குஉதவியாக இருந்தவர் என்று மட்டும்குறிப்பிடப்பட்டதை அவரால்ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சிங்கப்பூரில் வில்லியம் ஃபர்குவாருக்கு எந்தவித நினைவுச் சின்னங்களும் இன்று வரை கிடையாது. ஃபர்குவார் சாலை என்ற ஒரு சிறிய சாலை 1994 ஆம் ஆண்டு வரை கம்போங் கிளாம் பகுதியில் பீச் ரோட்டிற்கும் நார்த் பிரிட்ஜ் சாலைக்கும் இடையில் இருந்தது. அதுவும் நகர வளர்ச்சியில் மூடப்பட்டு விட்டது. மற்றபடி தேசிய அருங்காட்சியகத்தில் அவர் உருவாக்கிய உயிரியல் வரைபடங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
இதைத் தவிர அவருக்கு சரித்திரப் புத்தகங்களிலும், பாடப் புத்தகங்களிலும் சிங்கப்பூர் உருவானதில் இவருக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்ற குறிப்புகள் உள்ளன. ஆனால் இப்போது வில்லியம் ஃபர்குவாரின் பங்களிப்பைப் பற்றிப் பரவலாகப் பேசப்படுகிறது. இப்படி சிங்கப்பூரில் முதன் முதலில் காலடி வைத்த இரு ஆங்கிலேய துரைகளும் தங்கள் இறுதிக் காலத்தை எதையோ இழந்த ஒரு வித ஏக்கத்துடனும், மன வருத்தத்துடனும் கழித்தனர் என்பது சரித்திரம் சொல்லும் ஒற்றுமை. இவர்கள் இரண்டு பேரின் மன நிலையில் இருந்து பார்க்கும்போது இந்த இருவருமே சிங்கப்பூரை உருவாக்கியவர்கள் என்ற பெருமைக்கு உரியவர்கள் தான்!!
இன்றைய சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூரில் சூதாட்டக் கூடங்கள் தேவைதானா? என்று பொது மக்களிடம் கருத்துக் கணிப்பு நடைபெற்றது. பாதிக்கும் மேற்பட்டோர் ஆமாம் தேவைதான்! நம் ஊரில் இல்லையென்றால் பக்கத்து ஊருக்குச் சென்று (மலேசியா, மக்காவ்) சூதாடப் போகிறார்கள். அதற்குப் பதிலாக அந்த வருமானம் நம் நாட்டிற்குக் கிடைக்கட்டுமே என்று பதிலளித்தனர். எனவே சிங்கப்பூரில் இப்போது இரண்டு சூதாட்டக் கூடங்கள் (மரினா பே சாண்ட்ஸ் ரிசார்ட்ஸ், செந்தோசா ரிசார்ட்ஸ்) உள்ளன.
ஆனால் இதற்கு சிங்கப்பூரர்கள் செல்வதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. வீட்டில் உள்ளவர்கள் யாராவது ஒருவர் பெயரையும், அடையாள அட்டை எண்ணையும் காவல் நிலையத்தில் கொடுத்து இவர் சூதாட்டக் கூடங்களுக்குச் செல்லக் கூடாது என்று சொல்லி விட்டால் அவர்களை உள்ளே விட மாட்டார்கள். மற்ற நாட்டினர் தங்கள் கடவுச் சீட்டைக் காட்டினால் உள்ளே அனுமதி உண்டு. ஆனால் சிங்கப்பூரர்களுக்கு உள்ளே செல்ல நூறு வெள்ளி கட்டணம்! ராஃபிள்ஸ் உருவாக்கிய சிங்கப்பூர் பல மாற்றங்களுடன் வளர்ந்து இன்று 113 ஆண்டுகள் ஆகி விட்டன!!!! அப்போது அவர் உருவாக்கிய சட்டங்களும் மாறுதலுக்கு உட்பட்டதுதானே!
தொடரும்…