கோல்மென் கட்டடக் கலைஞராக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மேலும் பல வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தது. மேக்ஸ்வெல் ஹவுஸ் கட்டி முடித்த பிறகு அதன் அருகில் மூன்று மாளிகைகள் கட்டினார். எஸ்பிளனேடை நோக்கி அமைக்கப்பட்ட தோட்டத்துடன் கட்டிய மாளிகைகள் பிற்காலத்தில் ஹோட்டல் டி யூரோப் என்ற புகழ் பெற்ற விடுதியாக மாற்றம் கண்டது.
1936 ஆம் வருடம் அந்த விடுதியை இடித்து விட்டு உயர் நீதிமன்றம் கட்டப்பட்டது. பழைய நாடாளுமன்றக் கட்டிடத்தின் அருகே கம்பீரமாக நிற்கும் உயர் நீதிமன்றம் இருந்த இடத்தில் கோல்மென் வடிவமைத்த மூன்று தோட்டத்துடன் கூடிய மாளிகைகள் இருந்தன என்பது வெறும் சரித்திரமாக மட்டும் பேசப்படுகின்றது.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் சிங்கப்பூரில் இருந்து சமூகத்தில் ஒரு உயர்ந்த நிலையை அடைந்த பிறகு கோல்மென் தனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொள்ள விரும்பினார். 14,500 அடி சதுர நிலப்பரப்பைக் குத்தகைக்கு எடுத்தார். அவர் நிலம் வாங்கிய அந்த சாலை அவர் பெயராலே கோல்மென் தெரு என்று பெயர் பெற்றது. இந்த நிலப்பரப்பும் எஸ்பிளனேடை நோக்கி அமைந்திருந்தது. அங்கே மூன்று படுக்கையறைகள் கொண்ட பிரமாண்ட மாளிகை ஒன்றைக் கட்டினார். அவர் சிங்கப்பூரை விட்டுக் கிளம்பும் வரை அந்த வீட்டில்தான் தங்கினார்.
எண் 3, கோல்மென் தெரு என்ற முகவரி கொண்ட அந்த வீடு இன்று பெனின்சுலா ஹோட்டலாக இருக்கிறது. அவர் கட்டிய பல கட்டடங்கள் இன்று இடிக்கப்பட்டு விட்டன. பல வேறு வடிவங்கள் பெற்று இருக்கின்றன. பழைய நாடாளுமன்றக் கட்டடம் அவர் கட்டிய வடிவத்திலிருந்து பல மாற்றங்கள் கண்டிருக்கிறது. தேவைகளுக்கு ஏற்ப பல இடங்களில் விரிவாக்கம் செய்யப்படிருக்கின்றது.
புதிய பலாடியன் கட்டட அமைப்பில் அமைந்த மாக்ஸ்வெல் ஹவுஸ் கட்டி முடிக்கப்பட்டவுடன் அரசாங்கம் அதை 999 வருட குத்தகைக்கு எடுத்தது. இது தான் இன்று ‘ஆர்ட்ஸ் ஹவுஸ்’ என்று அழைக்கப்படுகிறது. தேசியக் கலைகள் மன்றத்தின் ஒரு பகுதியாக பல கண்காட்சிகள், நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஐரோப்பாவில் தனிச் சிறப்பு மிக்க முதல் தரமான பல கட்டடங்கள் பலாடிய முறைப்படி கட்டப்பட்டவை. பலாடியன் வகைக் கட்டடக்கலை 1508 ஆம் ஆண்டு முதல் 1580 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த ஆன்டிரியா பாலாடியோ என்ற வெனிஸ் நாட்டு கட்டடக்கலை நிபுணரால் உருவாக்கப்பட்டது. பழங்காலத்து ரோமானிய மற்றும் வெனிஸ் நாட்டுக் கோவில்கள் கட்டிய முறையை அடிப்படையாகக் கொண்டு அதில் மேலும் சில மாற்றங்களைச் செய்து உருவாக்கிய கட்டடங்கள் பலாடியன் முறை என்று பெயர் பெற்றன.
பாலாடியோ தன்னுடைய திட்டத்திற்கு ஏற்றாற் போல் பழங்காலத்திய கோவில்களில் அமைந்திருந்த ஒத்த பரிமாண அமைப்பு, செம்மையாக அமைக்கப்பட்ட விதம் போன்றவற்றை அப்படியே பின்பற்றினார்.
இந்த முறையில் ஐரோப்பா முழுவதும் அவரவர்கள் நாடுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப பலாடியன் முறையில் பல கோவில்கள், அரண்மனைகள், மாளிகைகள், கோட்டைகள் கட்டப்பட்டன. 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை பலாடியன் கட்டடக்கலை ஐரோப்பா முழுவதும் பெருத்த வரவேற்பைப் பெற்றிருந்தது. பல ஐரோப்பிய நாடுகள் உலகமெங்கும் தங்கள் காலனிகளை அமைக்க முற்பட்டபோது கட்டப்பட்ட பல கட்டடங்களும் இந்த முறையில் கட்டப்பட்டன.
பொதுமக்கள் கூடும் இடங்கள், அரங்கங்கள், நகராட்சி அலுவலகங்கள், அரசாங்கத்துக்குச் சொந்தமான மாளிகைகள் போன்றவை பலாடியன் முறையில் கட்டப்பட்டவை. அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகை பலாடியன் முறையில் அமைந்த ஒரு கட்டடம்.
கட்டடங்களுக்கு முன்னால் அமைந்த முன் தாழ்வாரம்,(portico) சுற்றிலும் இருக்கும் நடைபாதைகள்,(corridor) வீட்டினுள் அறைகளுக்குச் செல்லுவதற்கு தாழ்வாரங்கள், அரை வட்ட வடிவத்தில் அமைந்திருந்த ஜன்னல்கள், சற்றே பெரிய அளவில் அமைக்கப்பட்ட சாளரங்கள், சதுர வடிவத்தில் அமைந்திருக்கும் அறைகள், உயரமான விட்டங்கள் போன்ற அமைப்புகள் பலாடியன் வகைக் கட்டடங்களில் காணப்படும் பொதுத் தன்மை.
இந்த வகைக் கட்டடங்கள் அளவில் பெரியதாக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும். உள்ளே சென்றால் இதமான காற்று வீசும் வகையில் திறந்த வெளி நடைப்பாதைகள் இருக்கும். பிரபுக்களும், அரச குடும்பத் தினரும், செல்வச் செழிப்பில் இருந்த வர்த்தகர்களும் இந்த வகைக் கட்டடங்களைப் பெரிதும் விரும்பினார்கள்.
பலாடியன் முறையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்படும் கட்டடங்கள் கட்டப்படும் இடத்தின் பருவ நிலை, கட்டடங்கள் கட்டப்படும் நில அமைப்பு இவற்றுக்கு ஏற்றாற் போல் மாற்றங்கள் செய்யப்பட்டன. இத்தகைய கட்டடங்கள் புதிய பலாடியன் வகைக் கட்டடங்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த முறையில் சிங்கப்பூரின் அதிக வெப்பம், அதிக அளவில் பெய்யும் மழை போன்ற பருவ நிலைக்கு ஏற்றாற் போல் பல மாற்றங்கள் செய்து கட்டப்பட்டது. இதற்கு முன்னோடியாக இருந்தவர் கோல்மென் என்று சொல்லத் தேவையில்லை.
1835 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் முதல் தேவாலயமான செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவலாயத்தைக் கோல்மென் கட்டினார். ஆனால் அது 1854 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு அதே இடத்தில் செயிண்ட் ஆண்ட்ரூஸ் கதீட்ரல் கட்டப்பட்டது. நகர மண்டப எம்ஆர்டி நிலையத்தின் அருகே இன்றும் பழங்கதைகளுக்குச் சாட்சியாக அந்த தேவாலயம் காட்சியளிக்கிறது.
1836 ஆம் ஆண்டு ஹில் ஸ்ட்ட்ரீட்டில் இருக்கும் ஆர்மினியன் தேவாலயம் கோல்மென்னால் கட்டப்பட்டது. கோல்மென் ஆர்மினியன் தேவாலயத்தின் முன் வாசலை சற்றே கீழ் இறங்கிய கூரையுடனும், சுற்றிலும் தேவலாய மணிக் கூண்டுடன் அமைத்திருந்தார். பிறகு 1853 ஆம் ஆண்டு கூரான கோபுர அமைப்புடன் கூடிய முகப்புடன் மாற்றம் கண்டது. இதுவே சிங்கப்பூரின் ஆகப் பழமையான கிறிஸ்துவ மத தேவாலயம்.
பீச் ரோடில் அமைந்த ராஃபிள்ஸ் கல்வி நிலையம், 1837 ஆம் ஆண்டு கட்டிய தெலோக் ஆயர் மார்க்கெட், 1841 ஆம் ஆண்டு கட்டிய கால்டுவெல் ஹவுஸ், சிங்கப்பூர் ஆற்றங்கரையில் அமைந்திருந்த போஸ்டெட் கிடங்கு போன்ற பல கட்டடங்கள் அவர் கட்டியவை. பீச் ரோடில் இருந்த ராஃபிள்ஸ் கல்வி நிலையம் 1972 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு ராஃபிள்ஸ் சிடி என்ற வர்த்தக மையம் ஆனது. விக்டோரியா சாலையில் இருந்த கால்டுவெல் ஹவுஸ் பின்னர் கான்வென்ட் ஆஃப் ஹோலி இன்பாஃன்ட் ஜீஸஸ் என்று மாற்றம் கண்டது.
பலாடியன் முறையில் முன்தாழ்வாரங்கள், ரோமானிய முறையில் வடிவமைக்கப்பட்ட உயர்ந்த தூண்கள், நுழைவாயிலின் மேல் முக்கோண வடிவக் கோபுர அமைப்பு, அழகிய வளைவுகள் கொண்ட முகப்புகள், வளைவுகள் கொண்ட நுழைவாயில், அழகுபட அமைந்த முன் சதுக்கங்கள், மாதுளம்பழ வடிவத்தில் அமைந்திருந்த சிறு தூண்கள் கொண்ட கைப் பிடிச்சுவர்கள் போன்ற அமைப்புகள் இவர் கட்டடங்களில் தவறாமல் இடம் பெற்றன.
நகர மத்தியில் அமையப்பெற்ற பல சதுக்கங்கள் ஐரோப்பா முழுவதும் காணப்படும். அதே போன்ற சதுக்கங்கள் ஆங்கிலேயர்கள் தாங்கள் காலனிகள் அமைத்த நாடுகளிலும் கட்டினார்கள். காற்று கட்டடத்தின் உள்ளே வீசும்படி உயரமான விட்டங்கள் அமைக்கப்பட்டன. கண்ணாடி இறக்குமதி செய்ய முடியாத அளவுக்கு மிக விலை உயர்ந்த பொருளாக இருந்ததால் சன்னல்களில் கண்ணாடிகள் பொருத்தப்படவில்லை.
அதற்கு மாறாக சன்னல்களில் செவ்வக மரச்சட்டங்கள் அமைக்கப்பட்டு அவை திறப்பதற்கும் மூடுவதற்கும் வசதி செய்யப்பட்டிருந்தன. இப்படி அமையப்பட்ட சன்னல்கள் கடுமையான சூரிய வெளிச்சம் அறையின் உள்ளே வராமல் தடுத்தது. பெரும் மழை பெய்யும் போது மழை நீர் உள்ளே வராமல் தடுத்தது. கட்டடத்தின் விட்டங்களின் உயரம் கிட்டத்தட்ட 15 அடி. கட்டடங்களைச் சுற்றி 10 அடி அகலமுள்ள நடைபாதைகள் இருந்தன. இவை தாழ்வாரங்களில் இருந்த வலுவான தூண்கள் அனைத்தையும் இணைத்தன.
இன்றும் இப்படிப்பட்ட பல கட்டடங்கள் உலகமெங்கிலும் இருக்கின்றன. வளர்ந்து வரும் நகரத்தில் நகர வளர்ச்சிக்காகவும், மக்கள் தொகைப் பெருக்கத்தினாலும் கட்டடக்கலை காலப்போக்கில் பல மாற்றங்களைக் கண்டாலும் பழைய பிரிட்டிஷ் காலத்துக் கட்டடங்களைப் பழமை மாறாமல் பாதுகாத்து வருவதில் சிங்கப்பூர் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. சிங்கப்பூரில் இன்றும் பழைய வடிவம் மாறாத பல கட்டடங்களைக் காணலாம்.
தொடரும்…