பத்து வாரங்களாக ராஃபிள்ஸ் கதையுடன் நகரத்தின் கதை இணைந்திருந்தது. இனி இந்த நகரத்தை அழகாக உருவாக்கிய ஒரு மனிதரின் கதையை இணைப்போம். பொதுவாகவே பிரிட்டிஷ்காரர்கள் தாங்கள் காலனிகளை அமைத்த நாடுகளில் தங்களுக்குத் தேவையான கட்டடங்களைக் கட்டுவதற்கு இராணுவக் கட்டட பொறியியலாளர்களின் உதவியை நாடுவார்கள்.
அவர்கள் அழகியல் உணர்வும் எந்தக் கலை நுட்பங்களும் இல்லாமல் ராணுவ பேரக்ஸ் என்று அழைக்கப்படும் படை வீரர்கள் தங்குவதற்காக அமைக்கப்படும் எளிமையான கட்டடங்களைக் கட்டுவார்கள் .அதே போன்ற கட்டடங்களை மற்ற தேவைகளுக்கும், அரசாங்கப் பணியாளர்கள் தங்குவதற்கு, கிடங்குகள் அமைப்பதற்கு போன்ற பல தேவைகளுக்கும் இதைப் போன்ற எளிமையான கட்டடங்கள் கட்டி தங்கள் வேலையை முடித்து விடுவார்கள்.
ஆனால் சிங்கப்பூரை வடிவமைக்க இப்படி ராணுவக் கட்டடங்களைக் கட்டும் கட்டட பொறியியலாளர்களை வைத்து வடிவமைக்க ராஃபிள்ஸ் விரும்பவில்லை. சிங்கப்பூரை வடிவமைக்க ராஃபிள்ஸ், தன்னுடன் இணைந்து பணியாற்ற ஒரு கட்டடக் கலை நிபுணர் ஜியார்ஜ் டுராம்கொல்ட் கோல்மென் உதவியை நாடினார் . நகர வடிவமைப்புத் திட்டத்தை உருவாக்கியதில் பெரும் பங்கு கோல்மென்னுக்கு உண்டு.
1795 ஆம் ஆண்டு அயர்லாந்தின் டப்ளின் நகரத்துக்கு 30 மைல் தொலைவில் இருக்கும் டிராகிடா என்ற சிறிய கடற்கரை நகரத்தில் பிறந்தவர். தந்தை பெயர் ஜேம்ஸ் கோல்மென். தாய் லௌத் என்ற வட்டாரத்தில் மிகப் பெயர் பெற்ற வர்த்தகக் குடும்பமான டிராம்கோல்ட் வம்சத்தில் பிறந்தவர். கோல்மென் கட்டடக் கலை நிபுணராக அறியப்பட்டாலும் அவர் எங்கே கல்வி பயின்றார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அவரது பெயர் டப்ளினில் இருக்கும் ஓவியக்கலைப் பள்ளியிலும் கிடையாது. லண்டனில் இருக்கும் ராயல் அகாடெமி பள்ளியிலும் இல்லை. யாராவது ஒரு கட்டடக் கலை நிபுணரிடையே உதவியாளராகவோ அல்லது தொழில் கற்பவராகவோ இருந்து கட்டட வடிவமைப்புக் கலையைக் கற்றுக் கொண்டிருக்கலாம்.
1815 ஆம் வருடம் அவருக்கு பத்தொன்பது வயது இருக்கும் போது அயர்லாந்திலிருந்து கல்கத்தாவுக்குக் கிளம்பினார். ஆனால் அவரிடம் கிழக்கிந்தியக் கம்பெனியிலிருந்து முறையான வேலை பார்ப்பதற்கான அனுமதிக் கடிதமோ வேறு எந்த ஆவணங்களும் கிடையாது. இருந்தாலும் கல்கத்தாவிற்கு வந்து வில்லியம் கோட்டையில் தங்கினார்.
அங்கிருந்தபடியே பல வணிகர்களுக்கு வீடுகளையும் கட்டடங்களையும் வடிவமைத்துக் கொடுத்தார். மூன்று ஆண்டுகளில் அங்கிருந்த வர்த்தகர்களிடையே தலைவரைப் போல் இருந்த ஜான் பாமர் என்ற வர்த்தகரின் நன்மதிப்பைப் பெற்றார். ஜான் பாமர் கோல்மெனின் தொழில் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவினார். 1819 ஆம் ஆண்டு பாமருக்கு வான் பிராம் என்ற நண்பரிடமிருந்து கடிதம் வந்தது.
இந்தியாவுடன் நட்புக் கரம் நீட்ட டச்சு ஜாவா அரசாங்கத்தின் ஆர்வத்தையும், மேலும் டச்சுக் காலனிகளை மறுசீரமைக்க எடுக்க இருக்கும் முயற்சிகள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பட்டாவியாவில் பிரைஸ்பைட்டிரியன் தேவாலயம் ஸ்காட்டலாந்து நாட்டு முறையில் கட்டுவதற்கும், ஒரு மாதா கோவில் கட்டுவதற்கும் வரைப்படத் திட்டங்களையும் கேட்டிருந்தார். ஜான் பாமர் கோல்மென் மூலம் சில வடிவமைப்புகளை அனுப்பினார். அவை உடனடியாக ஒப்புதல் பெற்றது.
இவற்றைக் கட்டும் பணிக்காக கோல்மென் பட்டாவியாவுக்குக் கிளம்பினார். (இன்றைய ஜாகர்த்தா ஆனால் அவர் வரைபடங்கள் ஒப்புதல் பெற்றதே தவிர அவரால் அவற்றைக் கட்ட முடியவில்லை. இவர் பட்டாவியா போய்ச் சேருவதற்கு முன்பே இவரை பட்டாவியாவுக்கு வரவழைத்த வான் பிராம் இறந்து போய்விட்டார். ஆனாலும் கோல்மென் ஜாவாவில் இரண்டு வருடங்கள் தங்கினார். அப்போது பல சர்க்கரை ஆலைகள் கட்டுவதற்கு உதவினார்.
ஆலையின் உள் கட்டட அமைப்புகளை வடிவமைத்தார். சர்க்கரை தயாரிக்கும் இயந்திரங்களை சரியான இடங்களில் நிறுவ உதவி செய்தார். சிங்கப்பூர் என்ற புதிய நகரை ராஃபிள்ஸ் நிர்மாணிக்க முடிவெடுத்த போது அதை அறிந்த கோல்மென் சிங்கப்பூரில் வேலை தேட தீர்மானித்தார். தன்னுடைய நண்பர் ஜான் பாமர் மூலம் ராஃபிள்ஸ்ஸின் அறிமுகம் கிடைத்தது. அவரைச் சந்திக்க சிங்கப்பூர் சென்றார். ஆனால் ராஃபிளஸ் அப்போது சிங்கப்பூரில் இல்லை.
பென்கூலனில் தங்கியிருந்தார். அவர் வருகைக்காகக் காத்திருந்த நான்கு மாத இடைவெளியில் பல கட்டடங்களுக்கு வரைபடங்கள் உருவாக்கினார். ராஃபிள்ஸின் வருகைக்காகக் காத்திருந்தார். கோல்மென் 1822 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். நான்கு மாதங்கள் கழித்து பென்கூலனிலிருந்து ராஃபிள்ஸ் சிங்கப்பூர் வந்த போது ஆளுநர் மாளிகை கட்டுவதற்கு (RESIDENCY HOUSE) கோல்மெனின் வரைபடங்களைப் பார்த்தார்.
அவற்றால் பெரிதும் கவரப்பட்டு ஆளுநர் மாளிகை மட்டுமல்லாது ஒரு தேவாலயம் கட்டுவதற்கான திட்டத்தையும் கோல்மென்னிடம் கொடுத்தார். ஆளுநர் மாளிகை அன்று புக்கிட் லராங்கன் (தடுக்கப்பட்ட குன்று) என்று அழைக்கப்பட்ட இன்றைய ஃபோர்ட் கேனிங் குன்றின் மேல் அமைக்கப்பட்டது. 1822 ஆம் ஆண்டு ராஃபிள்ஸ் பென்கூலனிலுருந்து திரும்பி வந்து சிங்கப்பூர் நகர வளர்ச்சியைப் பார்த்து ஏமாற்றமடைந்தார் என்பதை நாம் ஏற்கெனவே படித்தோம்.
இப்போது ராஃபிள்ஸிக்கு தான் கற்பனை கண்ட நகரை வடிவமைக்க ஒரு கட்டட வடிவமைப்பாளர் உதவி தேவைப்பட்டது. அந்த நேரம் கோல்மென் தன்னுடைய அழகிய வரைபடங்களைக் காட்டி அவருடைய நம்பிக்கையைப் பெற்றார். ராஃபிள்ஸின் நகர வடிவமைப்புத் திட்டத்தில் பெரிய பங்கு கோல்மெனுடையது என்பது மறைக்க முடியாத உண்மை.
நகர வடிவமைப்பில் பல விதங்களில் உதவி செய்த கோல்மென் சிங்கப்பூரின் புவியியல் அமைப்பு சுற்றிலும் இருக்கும் தீவுகளின் அமைப்பு அதன் பரப்பளவு போன்றவற்றை அளந்து சாலைகள், பாலங்கள் கட்டுவதற்கான திட்டங்கள் தீட்டினார். 1830 ஆம் ஆண்டு பொதுப் பணித் துறை மேலதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்த வேலையில் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக இருந்தார். 1841 ஆம் ஓய்வு பெறும் வரை பல கட்டடங்கள் இவர் மேற்பார்வையில் கட்டப்பட்டன. இந்த வேலை மட்டுமல்லாது நில மேற்பார்வையாளாராகவும், தொழிலாளர்களாக நியமிக்கப்பட்ட குற்றவாளிகளைக் கண்காணிக்கும் ஓவர்சியர் வேலையையும் தொடர்ந்தார். குற்றவாளிகள் கட்டுமானத் தொழிலாளிகளாக வேலை செய்தார்கள். எனவே கோல்மெனின் நேரடிக் கண்காணிப்பில் பல குற்றவாளிகள் கட்டடத் தொழிலாளிகளாக இருந்ததால் இந்த ஓவர்சியர் வேலையையும் கோல்மென் செய்ய வேண்டிய சூழல்.
இவர் அமைத்த நார்த் பிரிட்ஜ் சாலை, சௌத் பிரிட்ஜ் சாலை. இவை இரண்டும் 1833-35 ஆண்டுகளில் அமைக்கப்பட்டது. இவை நகரத்தின் வடக்குப் பகுதியையும் தெற்குப் பகுதியையும் இணைக்கும் முக்கிய சாலைகளாக இன்று வரை இருக்கிறது. சிங்கப்பூர் ஆற்றின் குறுக்கில் யூடொங் சாலையையும் ஹில் சாலையையும் இணைத்துக் கட்டப்பட்ட கோல்மென் பாலம் இன்றும் இவரது பெயரைத் தாங்கி மத்திய வர்த்தக வட்டாரத்தையும் நகரையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட பரந்த சாலைகள் அமைத்தது இவரது சாதனைகளில் ஒன்று.
இப்படி 66 அடி அகலமுள்ள சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று ராஃபிள்ஸ் திட்டம் தீட்டினாலும் அவர் திட்டங்களைச் செயல்படுத்தியது கோல்மென். இது மட்டுமல்லாது நிறைய கட்டடங்கள், மாளிகைகள், வீடுகள் கட்டுவதற்கும் வடிவமைப்புச் செய்தார். இந்தக் காலகட்டத்தில் புதிய நகரத்தின் வளர்ச்சிக்கும் எதிர்காலத் திட்டங்களுக்கும் நிறைய நிதி தேவைப்பட்டது. பொருளாதார முன்னேற்றத்தால் சிங்கப்பூர் வருங்காலத்தில் மேன்மேலும் வளர்ச்சியடையும் என்று ஆங்கிலேயர்கள் உணர்ந்தார்கள்.
வரவை அதிகப்படுத்த தங்கள் தேவைகளுக்கென்று ஒதுக்கியிருந்த நிலங்களைக் குத்தகைக்கு விடலாம் என்ற யோசனை தோன்றியது. சிங்கப்பூர் ஆற்றின் வடக்குக் கரையில் இருந்த நிலப்பகுதியும், கடற்கரையை ஒட்டிய சமதளப் பகுதியும்(esplanade) எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் தரிசு நிலமாக இருந்தது. அப்போதைய ஆளுநர் ஜான் கிராஃபோர்ட் இந்த நிலப்பகுதிகளை குத்தகைக்கு விட தீர்மானித்தார்.
அதை தற்காலிக குத்தகைக்கு எடுக்கும் ஐரோப்பிய வர்த்தகர்களுக்கு நிதியுதவியும் அளித்தார். நகர மையப் பகுதியில் அமைந்திருந்த இடங்களைக் குத்தகைக்கு எடுத்த ஐரோப்பிய வணிகர்கள் அங்கு வீடுகள், அலுவலகங்கள், கிடங்குகள் போன்ற கட்டடங்களைக் கட்டத் தொடங்கினார். கோல்மென்னுக்கு இப்போது பல வேலைகள் கிடைத்தன. அதில் முதலில் கிடைத்தது டேவிட் ஸ்கீன் நேப்பியர் என்ற வர்த்தகருக்கு ஒரு அழகிய மாளிகை கட்டுவது.
பின்னர் ஸ்காட்லாந்து வர்த்தகர் ஜான் அர்கைல் மாக்ஸ்வெல்லுக்கு ஒரு மாபெரும் மாளிகை கட்டினார். ஜாவாவைச் சேர்ந்த பெரும் செல்வந்தர் மாக்ஸ்வெல். அவர் தனக்காகக் கட்டிய மாக்ஸ்வெல் ஹவுஸ் என்று அழைக்கப்படும் கட்டடம் இன்றும் கோல்மென் ஒரு கட்டடக் கலை வல்லுனர் என்பதற்கு சாட்சியாக சிங்கப்பூரில் நிற்கிறது. அது தான் நகர மண்டபத்தின் அருகே இருக்கும் பழைய நாடாளுமன்றக் கட்டடம்.(old parliament house).
அந்த இடத்தை குத்தகைக்கு எடுத்து தான் வாழ்வதற்கு ஒரு பிரமாண்ட இல்லத்தைக் கட்ட விரும்பினார் மாக்ஸ்வெல். ஆனால் அவர் அதில் குடியேறினாரா என்பது தெரியவில்லை. குத்தகைக்கு விடப்பட்டது. அது முதலில் நீதிமன்றமாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர் அரசாங்க அலுவலகமாகச் செயல்பட்டது. அதன் பிறகு பதிவு அலுவலகமாக இருந்து வந்தது.
பின்னர் 1841 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் விலைக்கு வாங்கப்பட்டு பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 1873ஆண்டிலிருந்து 1875 ஆம் ஆண்டு மற்றும் 1901ஆம் ஆண்டு முதல் 1909 ஆண்டு வரை புதுப்பிக்கப்பட்டு இன்னும் அதிக பரப்பளவில் புதிய அறைகள் சேர்க்கப்பட்டன. 1959ஆம் ஆண்டு சிங்கப்பூர் தன்னாட்சி அமைத்த ஆண்டிலிருந்து மாக்ஸ்வெல் ஹவுஸ் நாடாளுமன்றக் கட்டடமாகச் செயல்பட்டு வந்தது.
தொடரும்…