Home » சிறுகதைகள் » ஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் ! – புதிர் கதை

ஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் ! – புதிர் கதை

பொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள்.

ஒருநாள் மாலை நேரம்.அரசனும் அரசியும் உறங்கும் கட்டில் மெத்தையை அவர்களது வேலைக்காரன் சரி செய்ய வந்தான்..மெத்தை விரிப்புகளை தட்டிப் போட்டபின்பு, முல்லை மல்லிகை மலர்களை மெத்தையில் பரப்பினான்.பிறகு இனிய மணம் வீசும் ஊதுபத்திகளை ஏற்றிவைத்தான்.வேலையை சரியாக முடித்துவிட்டோமா என்று மெத்தையை ஒருதரம் சரிபார்த்தான்.

மெத்தையின் அழகும், அந்த அறையில் இருந்த இனிய நறுமணமும் அவனது சிந்தையையை மயக்கியது.’அரசனும் அரசியும் படுக்க வருவதற்கு எப்படியும் நிறைய நேரம் இருக்கிறது. அதற்குள் சிறிது நேரம் மெத்தையில் படுத்து, அந்த சுகத்தை நான் அனுபவித்தால் என்ன?’ என்ற்ற நினைவு அவன் மனதில் பீரிட்டது.ஆவலை அடக்க இயலாத வேலைக்காரன் மெத்தையின் ஒரு ஓரத்தில் படுத்தான். அப்படியே அசந்து உறங்கிவிட்டான்.

சிறிது நேரம் கழிந்தது.அரசி படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.அறையின் மங்கலான வெளிச்சத்தில் படுக்கையில் படுத்திருப்பது அரசன்தான் என்று நினைத்து, பக்கத்தில் படுத்தாள்.அரசன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். அதனால் அவரை எழுப்பவேண்டான் என்று நினைத்து மெத்தையில் ஒரு ஓரத்திலேயே படுத்து உறங்கிவிட்டாள்.

பிறகு சிறிது நேரம் கழித்து அரசன் படுக்கை அறைக்குள் வந்தான்.படுக்கையில் இருவர் படுத்திருப்பது தெரிந்தது.நம் படுக்கையில் யார் படுத்துள்ளது என்ற கேள்வியுடன் விளக்கு வெளிச்சத்தை அதிகப்படுத்தினான்.அங்கே அரசியுடன் வேலைக்காரன் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான் அந்த அதிர்ச்சி கடும் கோபமாக மாறியது.”உங்கள் இருவரையும் என்ன செய்கிறேன் பார்” என்று கத்தினான்.

அரசனின் இடிபோன்ற குரலைக் கேட்டு அரசியும் வேலைக்காரனும் பதறி எழுந்தார்கள்.அப்போதுதான் வேலைக்காரனுக்கு உண்மை உரைத்தது. தன்னை அரசன் என்று நினைத்து அரசி பக்கத்தில் படுத்துவிட்டார்கள் போலிருக்கிறது.

இதைப் பார்த்த அரசன் வேறுவிதமாக நினைத்துவிட்டான்.எப்படியும் தனக்கு கடும் தண்டனை கொடுக்காமல் விடமாட்டான். குற்றமில்லாத அரசியையாவது காப்பாற்றுவோம் என்று முடிவு செய்த வேலைக்காரன், அரசனின் கால்களில் விழுந்து ” அரசே, ஏதோ ஒரு ஆசையால் தங்கள் படுக்கையில் படுத்துவிட்டேன். அதற்காக தாங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். அரசியார் எனக்குத் தாய் போன்றவர்கள்.அரசர்தான் படுத்துள்ளார் என்று எண்ணி என் பக்கத்தில் படுத்துவிட்டார்கள். அவர்கள் மீது எந்த தவறும் இல்லை. தாங்கள் எனக்குத் தண்டனை கொடுத்து அரசியை மன்னித்துவிடுங்கள்” என்று கெஞ்சினான்.

கோபம் இன்னும் உச்சத்தை எட்ட ” என்னடா புதுக்கதை அளக்கிறாய்.?நீயும் அவளும் ஒரே மெத்தையில் இருந்ததை என் கண்ணால் பார்த்தேன்.கண்களைவிடச் சிறந்த சாட்சி இருக்கிறதா??.நீங்கள் இருவருமே நாளை தூக்கில் தொங்கப் போகிறீர்கள்” என்று கத்தினான்.

நடந்ததை அறிந்த அமைச்சர் அரண்மனைக்கு ஓடி வந்தார். அங்கிருந்த நிலைமையைப் புரிந்துகொண்டார். அரசனைப் பார்த்து, ” கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். அதனால் நடந்தது என்ன என்று இருவரிடம் கேட்போம். தவறு இருந்தால் தண்டனை கொடுப்போம்” என்றார்.

அமைச்சர் குறுக்கிட்டதை விரும்பாத அரசன், ” அமைச்சரே இருவரும் ஒரே படுக்கையில் இருந்ததை நான் எனது கண்களால் பார்த்தேன்.என் கண்களைவிட வேறு சாட்சிகள் இருக்க முடியுமா?அப்படி உன்னால் அவர்கள் குற்றம் அற்றவர்கள் என்று நிரூபிக்க இயலுமானால் , தாராளமாக நிரூபிக்கலாம். நானும் மன்னிக்கிறேன். இல்லையானால் நாளைக் காலையில் இவர்களுக்கு தூக்கு நிச்சயம்” என்றான்

அரசியையும் வேலைக்காரனையும் அமைச்சர் தீர விசாரித்தார். அந்த அறையிலும் நன்றாக ஆராய்ந்தார்.

பிறகு அரசனிடம் அவர்கள் குற்றம் செய்யவில்லை என்று நிரூபித்தார்.

நண்பர்களே, அமைச்சர், அவர்கள் இருவரும் குற்றம் செய்யவில்லை என்று எப்படி அரசனுக்குத் தெளிவு படுத்தினார்?

புதிர் விடை :

கதையில் ஆரம்பத்தில் வேலைக்காரன் படுக்கையில் முல்லை பூக்களை தூவியிருக்கிறான் இல்லையா, வேலைக்காரன் ஒரு ஓரமும், அரசி அடுத்த ஓரத்திலும் படுத்திருக்கிறார்கள், ஆனால் நடுவில் இருக்கும் முல்லை மலர்கள் நசுக்காமல் அப்படியே இருப்பதை வைத்து, அமைச்சர் இருவரும் தவறு செய்யவில்லை என்பதை அரசருக்கு புரிய வைத்திருப்பார்.

ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் நடந்த சம்பவம், எனவே அவர்களை விடுதலை செய்ய சொல்லியிருப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top