Home » சிறுகதைகள் » அரணாகும் அறிவு

அரணாகும் அறிவு

முன்னொரு காலத்தில் பல சிற்றரசர்கள் தனித் தனி நாடுகளை ஆண்டு வந்தனர் .அப்படிப்பட்ட  ஒரு சிற்றரசுதான் இங்கு குறிப்பிடப்படும் ஒரு நாடு. சண்பக புரி என்று அந்த நாட்டுக்குப் பெயர்.அந்த நாட்டுப் பிரபுக்களுக்குச் சில அதிகாரங்கள் இருந்தன.

பிரபுக்கள் அந்த நாட்டுக்கு மன்னனைத் தேர்ந்தெடுப்பர். ஓராண்டானதும் அவன் பதவியிறக்கம் செய்யப்பட்டு தொலைவில் உள்ள மனிதரற்ற கடல் நடுவில் இருக்கும் தீவுக்கு அனுப்பப் படுவான். கானகம் நிறைந்த அந்தத் தீவில் பல விலங்கினங்கள் வாழ்ந்து வந்தன.

அங்கு செல்பவர் இறப்பது உறுதி.இப்படி ஓராண்டுக்கு ஒரு மன்னர் என்ற விசித்திர பழக்கத்தைக் கொண்டிருந்தனர் செண்பக புரி மக்கள்.அதனால் மன்னர் சிம்மாசனம் என்றால் மக்கள் ஓடி ஒளிந்து கொள்வர்.

அந்த ஆண்டும் மன்னரைத் தேர்ந்தெடுக்கும்  நாள் வந்தது. நாட்டிலுள்ள அனைத்து வீடுகளிலும் உள்ள மக்கள் அரசு அதிகாரிகள் கண்ணில் படாமல் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்தனர்.
அந்த ஊரில் வைசாலி என்று ஒரு பெண்மணி வாழ்ந்து வந்தாள். அவளுக்கு  ஒரே மகன் விசாகன். தந்தையற்ற விசாகனைக் கண்ணும் கருத்துமாக வளர்த்துவந்தாள் வைசாலி. வைசாலி கல்வி கற்காவிடினும்  கேள்வி ஞானம் நிறைந்தவள். அறிவும் ஆற்றலும் மிகுந்தவள். தன் மகனையும் அவள் அறிவு புகட்டி நிறைந்த அறிவுள்ளவனாகவே வளர்த்திருந்தாள்.

அன்று தாயும் மகனுமாகத் தங்கள் நிலத்தைக் கவனிக்க வயலுக்குச் சென்றிருந்தனர்.மாலையில் வீடு திரும்பும்பொழுது ஊர்மக்கள் யாரையும் காணோம்.இருவரும் காரணம் தெரியாமல் திகைத்தபடி நடந்து வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் எதிரே காவலர் நால்வர் வந்து நின்று அவர்களை பிரபுக்களின் முன்னே கொண்டு போய் நிறுத்தினர். இப்போது அவர்களுக்குப் புரிந்துவிட்டது.

விசாகன் “ஐயா, நான் விவசாயி. கல்விஎன்பதே அறியாதவன் என்னை மன்னனாக்கினால் நாட்டின் நிலை என்னாகும்?நன்கு படித்த பிரபுக்களின் வம்சத்தில் மன்னனைத் தேர்ந்தெடுங்கள்.”என்று கேட்டுக் கொண்டான்.

ஆனால் இருள் வருமுன் மன்னனுக்கு முடிசூட்ட வேண்டிய கட்டாயத்தினால் பிரபுக்கள் விசாகனுக்கு முடிசூட்டினர். இப்போது விசாகன் அந்த நாட்டு மன்னன். மக்கள் அவனை மகிழ்ச்சியோடு பார்த்ததைவிட பரிதாபமாகப் பார்த்தனர்.இன்னும் ஓராண்டுதானே இவன் ஆயுள். பிறகு இவன் விலங்குகளுக்கு இரையாகப் போகிறானே என்பதை எண்ணி அவனுக்காக அனுதாபப் பட்டனர்.வைசாலி கலங்கவில்லை.வருவது வரட்டும்.என்று துணிவுடன் இருக்க தன் மகனுக்கு அறிவுரை கூறினாள்.நாட்கள் சென்றன. விசாகன் மன்னனாகி இரண்டு மாதங்கள் கழிந்தன.

அந்த நாட்டிலிருக்கும் கிராமங்களிலிருந்து மக்கள் சிலர் காணாமல் போகத் தொடங்கினர்.பிரபுக்களுக்கு இதென்ன புது விபரீதம் என்று அச்சம் ஏற்பட்டது.இதனால் நாட்டில் குழப்பம் ஏற்படத் தொடங்கியது.தெய்வக் குற்றமா அல்லது கடல்கொள்ளையர் வேலையா என ஆலோசனை செய்யத் தொடங்கினர். இப்படியே மாதங்கள் ஓடின.

இப்போது இன்னும் ஒரு மாதம்தான் விசாகன் மன்னனாக இருப்பான்.அதன்பின் நடுக்கடலிலுள்ள தீவுக்கானகத்திற்கு அனுப்பப் படுவான்.அதன்பின் அவன் மீண்டு வரமாட்டான். பாவம் இளம் வயது. அவன் தாய்க்கு மனம் எவ்வளவு வேதனைப் படும்?என்று மக்கள் பலவாறு பேசிக் கொண்டனர்.

திடீரென்று ஒரு நாள் அரண்மனையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ராஜமாதாவான வைசாலியைக் காணோம். ஊரெங்கும் ஒரே பரபரப்பு. பிரபுக்களின் அச்சம் உச்சத்திற்கே போய்விட்டது. சபையைக் கூட்டி ஆலோசனை செய்தனர். ஊரெங்கும் ராஜமாதாவைத் தேட ஆணை பிறப்பித்தான் விசாகன்.

ஆனால் வைசாலியோ அவளுக்கு முன்னர் காணாமல் போன மக்களோ யாரும் கிடைக்கவே இல்லை.இதற்கிடையே விசாகனின் மன்னர் பதவி முடிவுக்கு வந்தது. அன்றுடன் அவன் அரசபதவி முடிந்தது.மறுநாள் அதிகாலையிலேயே அரண்மனையில் பிரபுக்கள் கூடினர்.சகல மரியாதையுடன் விசாகனை கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர்.

இளம் வயது மன்னனை கடைசியாகப் பார்க்க மக்கள் கூட்டம் நிறைந்து இருந்தது.ஒரு சிறிய கப்பலில் விசாகன் ஏற்றப் பட்டான்.அதில் ஒரு மாலுமியும் அவனுக்கு உதவியாளனும் மட்டும் இருந்தனர்.பிரபுக்கள் சைகை செய்து கப்பலை செலுத்தச் சொன்னார்கள்.கப்பல் புறப்பட்டது.கண்ணீருடன் சிலர் கப்பல் மறையும் வரை பார்த்து நின்றனர்.

சில நாட்கள் கழித்து அந்தக் கப்பல் மீண்டும் வந்தது. மாலுமி பிரபுக்களிடம் வழக்கம்போல் விசாகனையும் குறித்த இடத்தில் கடலில் தள்ளிவிட்டதாகத் தெரிவித்தான்.பிரபுக்களும் அடுத்த மன்னனைத் தேர்ந்தெடுத்து பட்டாபிஷேகம் செய்து முடித்தனர்.இப்போதும் சண்பகபுரி மக்கள் காணாமல் போவது நிற்கவில்லை.பிரபுக்களின் கவலை அதிகமாயிற்று.

அவர்களின் அதிகாரத்திற்கு இடையூறு வந்ததேயென்று அச்சமும் கோபமும் கொண்டனர்.ஓராண்டு முடியும் தறுவாயில் அந்த சண்பகபுரி  மீது படைஎடுத்தான் ஒரு மன்னன். பிரபுக்களுக்கு அச்சத்தை விட ஆச்சரியமே மேலோங்கியது.ஒற்றர்களை ஏவி யாரது என விவரம் கேட்டனர்.வீரபுரிஎன ஒற்றர் தெரிவிக்க மிகுந்த ஆச்சரியத்துக்கு உள்ளாகினர்.

அப்படி ஒரு நாடு இருப்பதாகவே தெரியாதே எனத் திகைத்து முடிக்கும் முன்பாகவே வீரபுரி மன்னன் அரண்மனைக்குள் நுழைந்து மன்னராக ஆட்சி புரிந்து வந்த பிரபுக்களைஎல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தான்.சண்பகபுரியின் ஆட்சியைக் கைப்பற்றினான்.பட்டாபிஷேகம் செய்து கொண்ட அந்தக் காட்சியைக் கண்டு தலை குனிந்து நின்றிருந்த பிரபுக்களின் முன் வந்து நின்றான் அந்த வீரபுரி மன்னன்.

“என்னைப் பார்த்த நினைவில்லையா உங்களுக்கு?ஓராண்டுக்குள்ளாகவே என்னை மறந்து விட்டீர்களா?”இந்தக் குரலும் முகமும் பழக்கமானதாக இருக்கிறதே எனத் திகைத்தார்கள் பிரபுக்கள்.அப்போது அவர்கள் முன் வந்து நின்றாள் வைசாலி.”திகைக்காதீர்கள்.கடந்த ஆண்டு உங்களுக்கு மன்னனாக இருந்த விசாகன்தான்.என் மகன்தான்.உங்களுக்கு அடிமையாக ஒரு ஆண்டு உங்கள் கைப் பாவையாக பொம்மை அரசனாக இருந்தவன்தான்.”

‘இன்னும் சாகாமல் இருப்பது எப்படி? காட்டில் வனவிலங்குகள் இவனைக் கொல்லவில்லையா? எப்படி ஒரு நாட்டின் மன்னனான்?’அவர்களுக்கு எழுந்த சந்தேகத்தைப போக்கி வைத்தாள் வைசாலி.

“நீங்கள் என்மகனை மன்னனாக்கியதும் அவனிடம் சில வேட்டைக்காரர்களை அனுப்பி அந்தக் காட்டிலுள்ள வனவிலங்குகளை வேட்டையாடச் சொன்னேன். மீண்டும் விவசாயிகள் கட்டடக் கலைஞர்களை அனுப்பி காட்டை நாடாக்கினேன்.அதையெல்லாம் சீர்செய்ய நானே அங்கு சென்று என்மகன் வரும்வரை நாட்டைப பாதுகாத்து படைகளைச் சேர்த்து வந்தேன்.

இந்த ஓராண்டுக்குள் எங்கள் வீரபுரி உங்கள் சண்பகபுரியை  விட வலுப்பெற்று நிற்கிறது. என்மகன் விசாகன் இப்போது அறிவினாலும் வீரத்தினாலும் உங்கள் முன் வெற்றிவீரனாக நிற்கிறான்.”விசாகன்,”பிரபுக்களே உங்களின் பேராசையால் அப்பாவி இளைஞர்களை நீங்கள் பலிகொடுப்பதை நிறுத்த என் தாயின் ஆலோசனையின்படி நடந்து நானும் உயிரபெற்று பிற இளைஞர்களையும் காப்பாற்றிவிட்டேன்.

எங்கள் உயிருக்கு அரணாக இருந்தது என் தாயின் அறிவு சார்ந்த ஆலோசனைகளே.இனி இந்த சண்பக புரி   வீரபுரியின் ஆட்சிக்குட்பட்டது.”என்று சொன்னதைக் கேட்டு மக்கள் மகிழ்ந்தனர்.

விசாக மாமன்னர் ! வாழ்க, வாழ்க! என்ற கோஷம் வானைப் பிளந்தது.

           “அறிவற்றங்  காக்கும்  கருவி  செறுவார்க்கும்
                உள்ளழிக்க  லாகா அரண்.”

அறிவு அழிவு வராமல் பாதுகாக்கும் ஆயுதம்.பகைவராலும் அழிக்கமுடியாத பாதுகாப்பு அறிவு.என்று வள்ளுவர் வாக்கு உண்மையல்லவா ?இதுவரை ஏமாற்றி வாழ்ந்தோம்.

இப்போது அறிவு நம்மை வீழ்த்தி விட்டது” என்று மனம் திருந்தி வைசாலிஇடம்  மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர் பிரபுக்கள்.உண்மைதானே.அறிவிருந்தால் எங்கும் வெற்றி பெற்று வாழலாம்.எனவே அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.ஆனந்தமாய் வாழ்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top