போலீஸ்க்கு சொல்லி அனுப்பி மூன்று மணி நேரத்திற்கு பிறகு வந்தது. ரவி யாரும் சங்கர் வீட்டில் சொல்ல வேண்டாம் என்றும் உடலை எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்ற பிறகே தகவல் சொல்லலாம் என்று சொல்லிவிட்டான்.
போலீஸும் பிரேத பரிசோதனை நடத்தி தகவலை சென்னையில் தெரிவிப்பதாக கூறினர். அனைவரும் அவன் பம்பு செட்டில் குளிக்க முயன்றிருக்கலாம் என்றும் அதனால் மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கலாம் என்று முதல் சோதனையில் முடிவுக்கு வந்திருந்தனர். அதனால் அதிக விசாரனை எதுவும் நடக்கவில்லை.
அனைவரும் சென்னைக்கு திரும்பினர். சங்கரின் வீட்டில் சோகம் சூழ்ந்தது. இருக்கும் போது வெட்டியாக இருக்கும் ஒருவன் இறந்த பிறகு எத்தனை பேரை சோகத்தில் ஆழ்த்த முடியும் என்று அன்று பார்க்க முடிந்தது. அவனுடைய அண்ணன் குழந்தையும் அண்ணியும் தான் அதிகம் அழுதது.
சில நாட்களுக்கு பிறகு அவர்களின் ஆராய்ச்சி பயணம் மீண்டும் தொடர்ந்தது. சோகத்தில் இருந்தாலும் எந்த வேலையும் யாருக்காகவும் நிற்பதில்லையே. தஞ்சை நோக்கி வண்டி பயணித்தது.
சங்கரின் அகால மரண கூத்தினால் யாரையும் சந்திக்காமலே தஞ்சை வந்து சேர்ந்தனர். நேராக தமிழ் பல்கலை கழகத்தில் வந்த சேர்ந்தனர்.
ஞானப்பிரகாசம் தன்னுடைய அறையில் இருந்தார். தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு கரிகாலனும் பழனியப்பனும் அமர்ந்தனர். மாணவர்கள் வணக்கம் தெரிவித்துவிட்டு ஒரமாக நின்றனர்.
ஞானப்பிரகாசம் சொன்ன தகவல்கள் இன்னும் பிரம்மிப்பை ஊட்டியது.
ஆமாம். தம்பிரானும் நானும் ஒன்னாத்தான் ஆரம்பிச்சோம். அவனுக்கு ஆர்வம் போயிடுத்து. நான் இன்னும் இரண்டு வருஷம் தொடர்ந்தேன். ஆனா ஒரு அதிர்ச்சியான விஷயம் நடந்தது. அதுக்கப்புறம் நானே அதை கைவிட வேண்டியதா போயிடுத்து.
என்ன என்று அனைவரும் ஆச்சர்யத்துடன் கேட்டனர்.
நீங்க சொன்னா ஆச்சர்யப்படுவீங்க. சினிமாவில வருகிற மாதிரி என்னை நாலு பேரு அடிச்சி துவைச்சிட்டாங்க. என்ன ஏதுன்னு கேட்க விடலை. நல்லா அடிச்சிட்ட பிறகு என்னடா மயி…. களப்பிறர் ஆராய்ச்சி. மவனே இந்த ஆராய்ச்சியில்லாம் விடலைன்னா உடம்புல ஒரு எலும்பு கூட இருக்காதுன்னு.
இந்த ஆராய்ச்சிக்கும் இந்த அடிக்கும் எனக்கு ஒரு சம்பந்தமும் புரியலை. வீட்டுக்கு வந்த என்னை காயத்தோட போட்டுட்டு வீட்டிலிருந்த ஆராய்ச்சி கட்டுரைகள் எல்லாம் எடுத்துட்டு போயிட்டாங்க.
என்ன ஐயா சொல்றீங்க. எதுக்காக யார் உங்களை அட்டாக் பண்ணனும் என்று ரகு கேட்டான்.
அதாம்பா எனக்கும் புரியலை. நான் என்ன வருமான வரி அதிகாரியா இல்லை நகராட்சி ஆபீஸரா.
நீங்க சொல்றது ரொம்ப ஆச்சர்யமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு. அப்ப உங்க கிட்ட எந்த தகவலும் இல்லையா ஆதங்கத்துடன் கேட்டாள் நீலா.
சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு பிறகு சொன்னார். இங்கப்பாரும்மா நீங்கள் எல்லாரும் இந்த தலைப்பில ரொம்ப ஆர்வமா இருக்கீங்க. இது நடந்து ஒரு 30 வருஷம் இருக்கும். அதனால யாராலையும் எனக்கு பிரச்சனை வராதுன்னு நினைக்கிறேன். ஆனா அந்த சம்பவத்திற்கு பிறகு எனக்கு இதை பத்தி பேசினாலே பயமா இருக்கு.
அந்த அறையில் ஒரு மயான அமைதி நிலவியது.
பிறகு அவரே பேசினார். என்னடைய காதலி மாலான்னு ஒரு பொண்ணு. வீட்டில பேசிடாதீங்கப்பா. எனக்கு அந்த பொண்ணோட கல்யாணம் ஆகலை. அவளுக்கு கையெழுத்து ரொம்ப அழகாக இருக்கும். அவ தினமும் நான் எழுதின குறிப்புகளை அழகா பிரதியெடுப்பா. அவகிட்டு அதிர்ஷ்டவசமா இந்த ஆராய்ச்சி பத்தி எல்லாம் இருக்கு பிரதியா. என்னுடைய மத்த ஆராய்ச்சியெல்லாம் அந்த ஆளுங்க எடுத்துட்டு போயிட்டாங்க. என்னை ஆஸ்பத்திரியில வந்து பாத்திட்டு அவகிட்ட இருந்த பிரதியை கொடுத்திட்டு போனா. நான் யார்கிட்டேயும் எதுக்காக அடிபட்டதுன்னு சொல்லலை. நான் அதை பத்திரமா வைச்சிருக்கேன்.
அவர்களுடைய கண்கள் விரிந்தது. மேலும் அவர் பேச காத்திருந்தனர்.
சரி.நீங்க ஊர் சுத்திப் பார்த்திட்டு வாங்க. சாய்ங்காலம் கல்லூரி முடிஞ்சதும் நான் உங்களுக்கு அந்த தொகுப்பை தர்றேன் என்றார்.
அனைவரும் நன்றி கூறி உற்சாகமாக விடை பெற்று சென்றனர். பிறகு அனைவரும் தஞ்சை பெரிய கோவிலை சுற்றிப் பார்த்துவிட்டு ப்ரதீஸ்வர பவனில் நன்றாக வெட்டினர்.
மாலையில் மங்களாபுரம் காலணியில் இருந்த அவர் வீட்டு அழைத்துச் சென்றார் ஞானப்ரகாசம். பின்னால் இருந்த அறையில் மிகவும் ரகசியமாய் வைத்திருந்த பழைய காகிதங்களை எடுத்த தந்தார். அதை மிகவும் பரவசத்துடன் வாங்கிக் கொண்டாள் சவிதா. அவர்களுக்கு மேலும் ஒரு படி முன்னேறியது போல ஒரு மகிழ்ச்சி. இதை அந்த ஜோடிக் கண்கள் வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தன.
தொடரும்…