அதிகாலையில் வண்டி சிதம்பரத்தை தாண்டி ஒரு குக்கிராமத்தில் சென்று நின்றது. பேராசிரியர் தம்பிரான் அவர்களுக்காக ஒரு கிராம வீட்டை ஏற்பாடு செய்திருந்தார். அவருடைய பணியாள் அவர்களை தங்கவைத்துவிட்டு குளித்து முடித்துவிட்டு சுமார் 11 மணிக்கு வந்தால் தம்பிரனை பார்க்கலாம் மதியம் உணவு அங்குதான் என்று சொல்லிச் சென்றார்.
இரவு முழுவதும் உட்கார்ந்தே வந்ததால் அனைவரும் களைத்திருந்தனர். தம்பிரான் இவர்கள் காலை சிற்றுண்டி முடித்துவிட்டதாக நினைத்துவிட்டார் போலும்.
அனைவரும் கிணற்றடியில் குளித்து மகிழ்தனர். அந்த அதிகாலை கிராமப்பொழுது மிகவும் ரம்மியமாக இருந்தது. மரம் செடி கொடிகள், மண்ணின் மணம் குயில்களின் கூவல் தெளிந்த கிணற்று நீர் என்று நரகவாழ்கை அனுபவித்த வந்த நகரவாசிகளுக்கு அந்த குக்கிராமம் சொர்க்கம் போல் காட்சி தந்தது.
கரிகாலனுடன் சங்கர் சென்று அனைவருக்கும் காலை உணவு வாங்குவதாக முடிவானது. சிதம்பரம் 11 கிலோ மீட்டர் தூரம். ஆண்களும் பெண்களும் கிடைத்த இடத்தில் ஒரு குட்டித்தூக்கம் போடச் சென்றனர்.
சங்கர் இரவு பழனியப்பன் கொடுத்த காகிதங்களை வழியில் படிப்பதற்காக எடுத்துக் கொண்டான். நீலாவின் விளக்கங்களுக்குப் பிறகு நிஜமாகவே ஆராய்ச்சியில் பங்காற்றவேண்டும் என்று எண்ணம் மேலோங்கி நின்றது அவனுக்கு.
தூக்கம் கண்களில் இருக்க மெதுவாக படித்துக் கொண்டே வந்தான். கரிகாலன் மெதுவாக ஓட்டிச் சென்று நகரத்திற்கு நுழையும் முன் முதலில் கண்ணுக்கு தென்பட்ட உணவகத்தில் வண்டியை நிறுத்தினார்.
சிறிய உணவகமாக இருந்தாலும் சுத்தமாக இருந்தது. என்ன சாப்பிடறீங்க என்று வழக்கமாக கேட்கும் கேள்வி கேட்காமல் கரிகாலனுக்கும் சங்கருக்கும் இரண்டு தட்டு இட்லிகள் கொண்டு வைத்துவிட்டு ஒரு சிறிய காகிதத்தில் வெல்லக் கட்டி ஒன்றையும் இருவருக்கும் வைத்துவிட்டு போனார்.
இது எதுக்கு என்று சங்கர் கேட்க பிரசாதம் தம்பி என்று உரிமையாளர் பெரியவர் பதில் அளித்தார்.
காலை வேளையில் சுடச்சுட இட்லி சாம்பார் சாப்பிட்ட பிறகு இருவரும் உயிர் வந்தது போல இருந்தது. இன்னும் சில பலகாரங்களை சொல்லிவிட்டு எடுத்துக் கொண்ட போகவேண்டிய உருப்படிகளையும் சொன்னார் கரிகாலன். சங்கர் விடாமல் படித்துக் கொண்டிருந்தான்.
சாப்பிட்டு முடித்துவிட்டு காபி என்று சொன்னார்கள். சட்டென்று ஒரு பக்கத்தை பார்த்த சங்கர் அதிர்ந்தான்.
வாங்க கரிகாலன் சார் நாம அவசரமா போகனும். பழனி சார் கிட்டே இந்த விஷயத்தை சொல்லனும் என்றான் பதட்டமாக.
இருப்பா காபி வருது குடிச்சிட்டு போகலாமே என்றார் இட்லி தோய்ந்த ருசியான சாம்பாரை குடித்துக் கொண்டே.
இல்லை சார். நாம உடனடியா போகனும் வாங்க என்றான்.
காபி வேண்டாம் என்று சொல்லிவிட்டு சாப்பிட்டதுற்கும் எடுத்து செல்லவேண்டிய பொட்டலங்களுக்கும் காசு கொடுத்துவிட்டு வண்டியை எடுத்தார் கரிகாலன்.
வண்டி சிறிது தூரம் சென்றதும் அப்படி என்னப்பா படிச்சே இந்த பக்கங்களிலே என்று கேட்டார் கரிகாலன்.
சார். ஒரு பெரிய துரோகம் நடந்திருக்கு சார். இதை பழனியப்பன் சார் கிட்டே கட்டாயம் சொல்லியாகனும் என்று சொல்லிக் கொண்டே தன்னிடம் இருந்த ஒரு பக்கத்தை அவரிடம் காட்டினான்.
அட இது ரொம்ப அநியாயமா இருக்கே என்ற அவர், அந்த டாஷ்போர்டிலிருந்து அந்த டார்ச் லைட் எடேன் என்றார்.
இப்ப எதுக்கு சார் டார்ச் லைட் என்றான் சங்கர் பதட்டதுடன்.
அதுவா இந்த கியருக்கு கீழே வைக்கனும். எடேன் என்றார் அவசரமாக.
டாஷ் போர்டை திறந்து அந்த பெரிய கைப்பிடி கொண்ட டார்ச் லைட்டை எடுத்து தந்தான் கரிகாலனிடம்.
அவர் தன் இடது கையால் அதை வாங்கிக் கொண்டு, தம்பி நீ அதிகம் தெரிஞ்சிக் கிட்டே என்று சொல்லிக் கொண்டே அவன் தலையில் ஓங்கி அடித்தார்.
அவர் அடிக்க வருவதை உணர்ந்த அவன் சார் என்ன செய்யறீங்க……… என்று சொல்லி முடிப்பதற்குள் நச்-சென்று அவன் தலையில் அந்த ஸ்டீல் தலை இறங்கியது. பலபேர் தலையினுள் மேளக்கச்சேரி வாசிப்பது போல் இருந்தது. அப்படியே சரிந்தான். அவன் முழுவதும் நினைவு இழப்பதற்குள் இன்னொரு நச் தலையில் இறங்கியதை உணர்ந்தான்.
கறுப்பு வரலாறு தன் முதல் பலியை வாங்கிவிட்டது. மயங்கியவன் பிறகு எழுந்திரிக்கவே இல்லை.
தொடரும்…