நல்லா பேசனே பழனி. கரிகாலன் வந்து சொன்னார். யாராவது மசிஞ்சாங்களா என்று கேட்டார் சந்திரசேகர்.
வரலாற்றுக்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்தவர். பல புத்தகங்கள் எழுதியவர். வேலையில் இத்தனை கவனம் கொண்டு வீடு மனைவி மக்களை துறந்துவிட்டு தனியாக வாழ்பவர். அந்த ஓட்டு வீட்டில் வெறும் புத்தகங்களும் பழைய ஓலைகளும், கல் வெட்டின் பெரிய புகைப்படங்களும் பூதக்கண்ணாடிகளும் வவ்வால் நாற்றமும் நிறைந்துக் கிடந்தன.
ஆமாம் சார். உணர்ச்சிப் பூர்வமா பேசியிருக்கேன். இந்த வருஷம் யாரும் இந்த தலைப்பை எடுத்துக்காத பட்சத்திலே நாம வேறு பல்கலை கழகத்து மாணவர்களைத் தான் போய் பார்க்கணும் என்றார் பழனியப்பன் யோசனையுடன்.
உடல் படபடப்புடன், அப்படி சொல்லாதே பழனி. இந்த வருஷம் தான் என்னுடைய வாழ்நாள்ல கடைசி வருஷம்னு தோணுது. நான் சாகரத்துக்குள்ள நீ களப்பிறர் ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் வாங்கறதை கண்ணாலப் பார்க்கணும்.
நெகிழ்ந்து போனார் பழனி. கட்டாயம் ஐயா. உங்கள் ஆசையை எப்படியாவது நிறைவேற்றி வைக்கிறேன்.
என்ன உதவி வேண்டுமானாலும் என்கிட்டே கேளு. கரிகாலன் உன் கூட படிச்ச பையன் தானே. அவன் என்ன உதவியும் பண்ணுவான். பணம் வேண்டும்னா என்கிட்ட கேளு. கல்லூரியில் சொல்லி ஒப்புதல் வாங்கித்தரேன். நம்ம பல்கலைகழகத்திற்கே பெருமை சேர்க்கற விஷயம் இது. மறந்துடாதே.
இல்லை ஐயா. கடந்து பத்து வருஷமா நாம சேகரிச்ச எல்லா விஷயத்தையும் இந்த வருஷம் கணினியில் ஏத்திடறேன். கட்டுரையும் எழுத ஆரம்பிச்சிடறேன். எழுத எழுத உங்களிடம் கொடுக்கறேன். நீங்கள் திருத்திக் கொடுங்கள். எப்படியாவது இந்த ஆண்டு நிறைவுக்குள் நான் டாக்டர் பட்டம் வாங்கிடறேன்.
ஆ. நல்லது. நீ இப்பவே டாக்டர் தான். ஆனா இந்த தலைப்பில தான் நீ டாக்டர் பட்டம் வாங்கனும் என்றார் சந்திரசேகர்.
ஆம். என்று கூறிவிட்டு விடை பெற்றுச் சென்றார்.
தன்னுடயை குறிப்பேட்டில் டிசெம்பர் 31 என்னுடயை மறைவு நாள் என்று எழுதிக் கொண்டார் சந்திரசேகர்.
கறுப்பு படர ஆரம்பித்திருந்தது அவர்கள் வாழ்வில்.
சங்கர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். அவன் முதுகலை சேர்ந்தது அவன் வீட்டில் யாருக்கும் பிடிக்கவில்லை. சீக்கிரம் படிப்பை முடிச்சிட்டு வேலையை பாருடா என்று அவனுடைய மூன்று அண்ணனும் இரண்டு அக்காவும் அவனை கடிந்துக் கொண்டார்கள்.
அவன் வீட்டில் ஆராய்ச்சி என்றதும் உன்னை கொலை பண்ணப்போறேன் என்பது போல பார்த்தார்கள். ஆனால் அவன் மாதம் 600 ரூபாய் ஊக்கத் தொகையாக கிடைக்கும் அதை அப்படியே வீட்டுக்கு கொடுத்துவிடுகிறேன் என்றதும் சரியென்று ஒத்துக் கொண்டுவிட்டார்கள்.
அப்ப நீ என்ன செலவுக்கு செய்வே என்று குணசேகரன் கேட்டான். சங்கரின் மூத்த அண்ணன்.
நீ அப்படியே அள்ளி கொடுக்கற மாதிரி பேசறே. இத்தனை நாள் என் கூட்டாளிகள் கொடுத்த பிச்சையில தானே வாழறேன் என்றான் சங்கர் காட்டமாக.
ஆமா வேண்டாம் வேண்டாம்னு சொன்னாலும் கேட்டாரா அப்பா. எனக்கும் உனக்கும் என் பொண்ணு வயசு வித்தியாசம். கண்டபடி பெத்துப் போட்டு என்னை பாத்துக்கோன்னா. நான் என் குடும்பத்தை பார்ப்பேனா இல்லை எனக்கு அப்புறம் பொறந்த அரை டசனைப் பார்ப்பேனா.
சரிதான் விடுங்க என்ற சங்கரின் அண்ணி சமாதானப்படுத்த அந்த பேச்சு முடிந்தது. உனக்கு என்ன துணி வேணும்னு சொல்லப்பா நான் எடுத்து வைக்கிறேன் என்றாள் அண்ணி.
என்னுடயை கறுப்பு சட்டையை மறக்காமல் எடுத்து வையுங்க என்றான்.
தொடரும்…