சரி ஜெயா. இது தான் என்னுடயை திட்டம். நாம்ப இரண்டு பேரும் நேராக ஜான்கிட்டே போகலாம். நீ வீட்டுக்கு வெளியே இரு. நான் ஒரு ஆராய்ச்சியாளன் மாதிரி உள்ளே போறேன். நான் 2-3 மணி நேரத்தில திரும்பி வரலேன்னா நீ போலீஸோட உள்ளே வந்துடு. சரியா என்றான்.
அது சரி. ஜான்கிட்டே என்னன்னு சொல்லப்போறீங்க.
நான் சந்திரசேகர் அனுப்பிய ஆள்னு சொல்றேன்.
அப்படி சந்திரசேகர் அனுப்பறதா இருந்தா அவர் போன் பண்ணி சொல்லியிருக்க மாட்டாரா.
ஜெயா, இது சும்மா உள்ளே நுழைய தான். எப்படியிருந்தாலும் நம்மை உள்ளே விடப்போறதில்லை. பார்ப்போமே.
இருவரும் ட்யூப் பிடித்து லண்டன் ப்ரிட்ஜ் நிறுத்தத்தில் இறங்கினர். ரமேஷ் ஜெயாவுக்கு அந்த வீட்டை காட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.
ஜான் இவரை எதிர்பாராதவிதமாக வரவேற்று உள்ளே அமரச் செய்தார். அதுவே ரமேஷ்க்கு ஆச்சர்யமாக இருந்தது. அவனுடைய ஏழாவது அறிவு அவனை தயாராக இருக்கச் சொன்னது.
அவன் தான் சென்னையிலிருந்து வந்திருப்பதாகவும் சந்திரசேகர் அனுப்பியிருப்பதாகவும் களப்பிறர் ஆட்சியை பற்றி முக்கியமான தகவல் கிடைத்திருப்பதாகவும் கூறினான்.
அவரும் அப்படியா நல்லது. வாருங்கள் உங்களை என் பாஸிடம் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றார். சற்றே இருட்டிய அறை. பெரிதாக இருந்தது. பல புத்தகங்களும் சில பெரிய போட்டோக்களும் அதில புராதான சின்னங்களும் சிலைகளும் இருந்தன.
அவர் ஒரு பெரிய மேசைக்கு பின்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவனை அதன் எதிர்புறம் அமரச்சொன்னார்.
உங்கள் பெயர் என்ன.
ரமேஷ்.
அப்படியா. நீங்கள் தானே நேற்று வந்தது.
ஆமாம்.
ஏன் நேற்றே என்னிடம் இதைப் பற்றி பேசவில்லை.
அதுவா, உங்கள் முகவரிக்கு பதிலாக வேறொரு முகவரியை தவறுதலாக தேடிக் கொண்டிருந்தேன்.
ஒ. சரி. நேற்று என் அலுவகத்தில் நுழைந்து என்ன செய்தீர்கள்
என்ன இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று சொல்ல முடியாவிட்டாலும் அதிர்ச்சியாவது போல் காட்டிக் கொண்டான்.
ஹா ஹா. ரொம்ப அதிர்ச்சியாக வேண்டாம் ரமேஷ். இதோ இந்த புகைப்படத்தை பாருங்கள். இது எங்களுடயை பாதுகாப்பு காமிராக்கள். புத்தகங்களுக்கு நடுவே இருந்து நீங்கள் செய்தவைகளை கச்சிதமாக படம் பிடித்திருக்கிறது என்று சொல்லிக் கொண்டே அவனுக்கு எதிராக சில புகைப்படங்களை வீசினார்.
அதை எடுத்த பார்த்த அவன் மெல்ல புன்னகைத்தான்.
ஆம். நேற்று அழையா விருந்தாளியாக வரவேண்டியிருந்தது.
ஏன்.
நான் ஒரு சுற்றுலா பயணி. பணம் தொலைந்துவிட்டது. திருட வந்தேன். உங்கள் அலுவலகத்தில் பணம் கிடைக்கவில்லை. சில காகிதங்களில் இந்திய பெயர்கள் இருந்தது. அதனால் அந்த பெயர்களை சொல்லி ஏதாவது பணம் பறிக்கலாமா என்று பார்த்தேன். இப்போது மாட்டிக் கொண்டேன்.
வெரி ஸ்மார்ட். இங்கு பணம் இல்லை என்று யார் சொன்னது. அதோ பார் அந்த ஸேஃப். அதில் நிறைய பணம் இருக்கிறது. அந்த பக்கம் போகவில்லை நீ என்றார் வில்லத்தனமாக.
ஒ அப்படியா. நான் நடுவில் பயந்துவிட்டேன். அதனால் பாதியிலேயே ஓடி விட்டேன்.
நீ புத்திசாலி ரமேஷ். என் கதவின் பாதுகாப்பை உடைச்சி உள்ளே வந்திருக்கே. ஆனா நீ உன்னை ரொம்ப புத்திசாலின்னு நினைச்சிக்கறே. அதுதான் பிரச்சனையே என்றார்.
என்ன சொல்றீங்க.
எதுக்காக டாக்குமெண்ட்ஸ் தேடினே, போட்டோ எடுத்தே சொல்லு.
அமைதியாக இருந்தான் ரமேஷ்.
இன்னும் சில போட்டோக்களை அவன் முன் எரிந்தார். அவன் போட்டோ எடுத்தது எல்லாம் அதில் பதிவாகியிருந்தது.
அவன் அதை பார்த்துவிட்டு மீண்டும் மேசை மேல் வைத்தான்.
ரமேஷ் நீ துப்பறியும் நிபுணரா இருக்கலாம். இல்லை அரசாங்க உளவுத்துறையிலிருந்து வந்திருக்கலாம். எனக்கு அதைப்பத்தி கவலை இல்லை. நான் எதுவுமே சட்டவிரோதமா செய்யலை. உன் நாட்டில் ஏதாவது சட்ட விரோதகாரியம் நடந்தா அதை உன் நாட்டில போய் தேடு. இங்கே நேரம் செலவிடாதே. போ என்றார்.
ஜான் நீ எதுக்காக இவ்வளவு பணம் எங்க நாட்டுக்கு அனுப்பறே.
கள்பிறர் ஆட்சி காலத்தை ஆராய்ச்சி செய்ய.
அதுக்கு இத்தனை பணம் அனுப்பறது சரியா படலையே.
அப்ப கண்டுபிடி.
கண்டுபிடிக்கறேன்.
அதுக்கு முன்னாடி உனக்கு எங்கள் நண்பரை அறிமுகப்படுத்தறேன் என்று கூறியவாறே அவனை கடந்து சென்று கதவை திறந்தார்.
லண்டன் போலீஸ் கையில் விலங்கோடும் துப்பாக்கி நீட்டியபடியே நின்றிருந்தது.
உங்களை ஜான் ஸ்டுவர்டின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்கிறோம் என்றார் அந்த கூட்டத்தில் மேலதிகாரியாக தெரிந்த ஒருவர்.
என்னிடம் துப்பாக்கி இருக்கிறது. அதை நான் எடுக்கச் சென்று நீங்கள் என்னை சுடுவதற்கு பதில் நீங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று திரும்பி நின்றான்.
இரண்டு அதிகாரிகள் துப்பாக்கியை எடுத்து அவன் மீது குறிவைத்தபடியே இருக்க ஒருவர் சர்வ ஜாக்கிரதையாக அவனிடம் சென்று அவனுடைய பைகளை துளாவினார். அவன் பையில் ஒரு காமிரா மட்டும் கிடைத்தது.
எங்கே துப்பாக்கி. எங்கே துப்பாக்கி என்று கத்தினார்.
ஹாஹா உங்கள் விமான தள பாதுகாப்பு சோதனை பற்றி உங்களுக்கே பெரிய அபிப்பராயம் இல்லை போலிருக்கு. நான் சும்மா தமாஷ் பண்ணேன். வாங்க போகலாம் என்ற சர்வசாதாரணமாக.
அந்த மேலதிகாரி சற்றும் அந்த நகைச்சுவை ரசிக்காதவர் போல அவனை தள்ளிக் கொண்டு காவல் வண்டியில் ஏற்றினார்.
அங்கிருந்த அகல்வதற்கு முன் ரமேஷ் ஜானைப் பார்த்து மெதுவாக உன் வேலைகளையும் உன் நாட்டிலே வைத்துக் கொள். எங்க ஊர் பக்கம் வாலாட்டினால் வாலை ஒட்ட நறுக்கி விடுவோம் என்றான் முகத்திலிருந்த புன்னகை மாறாமல்.
கெட் லாஸ்ட் என்றார் ஜான் அவனுடயை புன்னகையால் எரிச்சலடைந்தவாறே.
தொடரும்…