அனைவரும் காலையில் குளித்து முடித்து தயாராகி காலை சிற்றுண்டி கழித்து நேராக மதுரையின் பெரிய நூலகத்திற்குள் நுழைந்தார்கள்.
பல மணி நேரம் தேடிய பிறகும் அவர்கள் தேடிய புத்தகம் கிடைக்கவில்லை. அங்கிருந்து நூலக பதிவாளரை கேட்டார்கள். அவர் ரொம்ப பழைய புத்தகமாக இருக்கும் போலிருக்கே. கையாள கஷ்டமான புத்தகங்களை நாங்கள் எடுத்து கோடவுன்ல வெச்சிடுவோம். ரொம்ப அவசியம்னா அங்க போய் தேடுங்க.
பழனியப்பன் மிகுந்த பணிவுடன் ஆமாம் சார். ரொம்ப அவசியம். கொஞ்சம் அனுமதி கொடுத்தீங்கன்னா……………. என்று இழுத்தார்.
என்ன சார் அனுமதி கினுமதின்னு பெரிய வார்தையெல்லாம் சொல்றீங்க. நேரா போய் ரைட்ல திரும்புங்க. ஒரு கதவு தெரியும். பூட்டாம தான் இருக்கு போய் பாருங்க. ஆனா எதையும் எடுத்தக்கறதுக்கு முன்னாடி என்கிட்டே காண்பிச்சுடுங்க.
ரொம்ப நன்றி என்று சொல்லி அனைவரும் அந்த அறைக்குள் நுழைந்தனர்.
மலைபோல் புத்தகங்களின் குவியல். பழைய புத்தகங்கள் பூச்சியின் வாடை. மூக்கடைக்கும் அளவுக்கு தூசி. உள்ளே வருபவர்களுக்கு ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்தும். புத்தகங்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டாலும் முறையாக அடுக்கி வைக்கப்படவில்லை.
இதில் இந்த ஒரு புத்தகத்தை மட்டும் எப்படி தேடுவது.
ராணுவ அதிகாரியை போல் ரவி விரைத்து நின்றான்.
சவிதா நீ அந்த மூலைக்குப் போ. ரகு நீ அந்த மூலைக்குப் போ. நீலா நீ இடது பக்கம் போ. நான் வலது பக்கம். சார் நீங்க நடுவில. முதல்ல இந்த இடத்தை சுத்தம் செய்யலாம். எல்லா புத்தகங்களையும் தலைப்புப்படி அடுக்குவோம். ஆங்கில புத்தகங்களை அந்த ஓரத்தில் வைப்போம். இல்லாட்டா நம்மளால ஒன்னும் செய்ய முடியாது. சரியா என்றான் ஆணையிடும் பாணியில்.
அனைவரும் அடிபணிந்தனர். விரைவாக வேலை நடந்தது. சுமார் 2 மணிக்கு அறை சற்று சுத்தமாக தெரிந்தது. புத்தகங்கள் பெருமளவு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அனைவரும் களைத்திருந்தனர். உடலில் தூசு தும்மல்.
ரவியின் சட்டையை பிடித்து இழுத்து பசிக்குதுடா என்றாள் சவிதா.
சரி. நாம ஒரு மணி நேரம் பிரேக் எடுத்துக்கிட்டு மறுபடியும் வரலாம்.
அனைவரும் பூனை போல் அவன் பின் தொடர்ந்தனர். வெளியே வந்ததும் ஒரு செட்டியார் மெஸ் கண்ணுக்கு பட்டது. அனைவரும் படையெடுத்தனர். ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் நூலகத்திற்கு வந்து சேர்தனர். நூலக அதிகாரி ஒரு நட்பு புன்னகை வீசினார். சம்பிரதாயத்திற்கு சிரித்துவிட்டு மறுபடியும் அந்த பழைய அறைக்குள் நுழைந்தனர்.
இந்த பெண்கள் சுடிதார் அணிவது எத்தனை வசதி என்று அன்று தான் உணர்ந்தார் பழனியப்பன். அனைவரும் கீழே உட்கார்ந்தனர்.
மறுபடியும் ரவி தன்னுடயை தலைவன் பணியை செய்தான்.
சரி, நீலா நீ லாப்டாப்பை எடுத்துக்க. யூனிகோட் தமிழ்ல 50 வார்த்தைக்கு மேலே வேகமாக அடிக்க உன்னாலத்தான் முடியும். சவிதா புத்தகங்களை எடுத்துக் கொடுக்க நீ டைட்டிலை நோட் பண்ணிக்க, பென்சில்லை புக்குக்கு மேலே ஒரு நம்பரை எழுதிக்கோ. மறுபடியும் அதே புக் வரக்கூடாது. நாம தேடற மூனு புக்ஸ் கிடைச்சதும் நீ உன் வேலையை நிறுத்து. நானும் ரகுவும் பேப்பர்ல எழுதிக்கிறோம் அந்த கார்னர்ல. சார் வேண்டுமானால் கொஞ்ச ரெஸ்ட் எடுக்கட்டும்.
இல்லைப்பா. நானும் அந்த கார்னருல வேலையை செய்யறேன். மறுபடியும் நாம் 2 மணி நேரத்துக்கு அப்புறம் பேசுவோம். ப்ராக்ரெஸ் என்ன அப்படின்னு டிஸ்கஸ் பண்ணுவோம்.
அங்கே பணியாளர் ஒருவர் நூலக பதிவாளரிடம் வந்து உங்களுக்கு சந்திரசேகர் கிட்டேர்ந்து போன் என்றார்.
வணக்கம் சார்.
…………………………………
ஆமாம் சார். நான் தான் போன் போட்டேன் உங்களுக்கு.
………………………………….
நீங்க சொல்லியிருந்தீங்கள்ல அந்த புத்தகங்களை தேடி யார் வந்தாலும் சொல்லச் சொல்லி. அதுக்குத்தான் போன் போட்டேன். 4 மாணவர்களும் ஒரு வாத்தியாரும் தான் வந்திருக்காங்க.
…………………………………..
இல்லை சார் டாட்டா சுமோவில வர்ல. பஸ்சுல வந்த மாதிரி தான் இருக்கு.
……………………………………
ஆமாம் சார். ஒரே வாத்தியாரு தான். இரண்டு பேரு இல்லை.
…………………………………..
சரி சார். அவசியம் சொல்றேன்.
இவ்வாறாக பேசிவிட்டு தொலைபேசியை அதன் இடத்தில் வைத்துவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தார்.
சுமார் இரண்டரை மணி நேரத்தில் பணியாளர் வந்து இன்னும் அரை மணியில் மூடிடுவோம் என்று சொல்லிவிட்டு போனார்.
அனைவரும் சோர்ந்திருந்தனர். மூன்றில் ஒன்று கூட கிடைக்கவில்லை. நாளை வந்த தொடரலாம் என்றிருந்த போதும் ஏதோ இன்றே உலகம் முடிந்துவிட்டது போன்ற ஒரு பிரமை.
ரவி மறுபடியும் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
கமான். லெட் அஸ் கன்டின்யூ அவர் வொர்க்.
அவன் நம்பிக்கை வீண் போகவில்லை. சரியாக 20 நிமிடத்தில் அடுத்தடுத்து அந்த மூன்று புத்தகங்களும் கிடைத்தன. வெற்றிக் களிப்போடு அதை எடுத்துக் கொண்டு விடுதிக்கு சென்றனர்.
மாலை மீனாட்ச்சியம்மனின் தரிசனம் அவர்களுக்கு மன அமைதியை தந்தது. பழனியப்பன் குழப்பத்தில் இருந்தார். அவர்களை யாரோ எப்போதும் தொடர்வது போல அவருக்கு ஒரு பயம் இருந்தது. மாணவர்களுக்கு அந்த பயம் இருப்பதை உணர்ந்தார். எப்படியாவது மற்ற 4 பிள்ளைகளையாவது ஒழுங்காக போய் சேர்க்கவேண்டுமே என்ற பயம். தனியாக இந்த காரியத்தை செய்ய முடியாது என்பது தெரிந்ததால் அமைதியாக இருந்தார்.
நீண்ட பகலுக்கு பிறகு உடல் சோர்ந்து ஆனால் மனதில் ஒரு வெற்றிக் களிப்புடன் படுக்கைக்கு சென்றனர்.
ரவி தானே அப்புத்தகங்களை வைத்துக் கொள்வதாக கூறினான். ரகு தன்னுடயை அறையை காலி செய்துவிட்டு ரவியின் அறைக்கு அவனுக்கு துணையாக வந்தான்.
மதுரையை இருள் கவ்வியது.
தொடரும்…