மதுரை சென்று அடைந்ததும் அனைவரும் களைத்திருந்தனர். உடலும் மனமும் சோர்வடைந்திருந்தது.
மதுரை ஆனந்த விலாஸில் வண்டியை நிறுத்தி உணவு உண்டுவிட்டு பல்கலைகழகத்திற்கு அருகிலேயே ஒரு விடுதி எடுத்து தங்கினர்.
அனைவருக்கும் பல மணி நேரம் உறங்கியது போல் ஒரு உணர்வு. முதலில் எழுந்த்து சவிதா தான். ரவியை எழுப்பி வா, கோவிலுக்கு போகலாம் என்று அழைத்தாள். அவன் எழுந்து முகம் கழுவி, தயாரானான்.
நீலாவும் ரகுவும் தயாரானார்கள். பழனியப்பனை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. நால்வரும் ஜோடிகளாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார்கள்.
இன்று எப்படியாவது தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தான் ரகு. ஆறுவருடமாக காத்திருந்தான் இப்பேர்ப்பட்ட தருணத்திற்கு. சங்கர் என்ற தடை அகன்றுவிட்டது. இப்போது நீலா இருக்கும் மனநிலையில் தன் காதலைப் பற்றி சொன்னால் ஏற்றுக் கொள்வாள் என்று நினைத்தான்.
கோவிலில் சுமார் 2 மணி நேரம் இருந்திருப்பார்கள். இருள துவங்கியிருந்த்து. சரி போகலாம் என்று சவிதா சொல்ல அனைவரும் வாசல் நோக்கி வெளியே வந்தார்கள்.
சரி அவளுக்கு மல்லிகை வாங்கி கொடுக்கலாம். அப்படியே தலையில் வைத்துவிடவா என்று கேட்கலாம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டே ஒரு பூக்கடைக்கு அருகில் வந்தான் ரகு.
ஒரு காவல் வாகனம் வந்து நிற்க சட்டென்று ஒரு போலீஸ் அதிகாரி இறங்கினார். ரகுவிடம் வந்து நீங்க தானே ரகு என்றார்.
ஆம் என்று குழப்பமாக பார்த்தான்.
அந்த அதிகாரியின் பின்னால் இருந்து கரிகாலன் இறங்கினார். மிகவும் சோர்வாக காணப்பட்டார்.
சவிதா, ரவி, நீலா அதிர்ந்து நின்றனர்.
ரகு நீங்க நீலாவை காதலிக்கிறீங்க. சங்கர் அதுக்கு தடையாக இருந்ததால அவரை கொன்னுட்டீங்க. அதுக்காக உங்களை நான் கைதி செய்யறேன் என்றார் வசனம் ஒப்பிப்பது போல்.
நீலா ரகுவை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
ரகு, சார் என்ன சொல்றீங்க. நான் நீலாவை காதலிக்கிறது உண்மை தான். ஆனா சங்கர் என்னோட நண்பன். நான் அவனை எக்காரணத்தக் கொண்டு கொல்ல மாட்டேன் என்று பலம்பினான்.
நீலா ரகுவைப் பார்த்து, ரகு, நீ என்னை காதலிக்கிற விஷயத்தை இப்படித்தான் எனக்கு சொல்லனுமா. எதுக்காக இப்படி செஞ்சே. நான் உன்னைத்தான் காதலிக்கிறேன் அப்படின்னு வாய்விட்டுதான் உங்கிட்டே சொல்லனுமா என்றாள் கண்களில் நீர் வழிய.
நீலா, நீலா, அப்படி சொல்லாதே. நான் சங்கரை கொலை செய்யலை என்றான் கெஞ்சலாக.
ரகுவை ஏற்றிக் கொண்டு காவல் வாகனம் சென்றது. சவிதாவுக்கும் ரவிக்கும் கரிகாலனுடன் செல்ல இஷ்டம் இல்லை.
வண்டி சாவியை கரிகாலனிடம் கொடுத்துவிட்டு மெதுவாக நடந்து சென்றனர் இருவரும்.
சவிதாவிடம் தான் நடந்துக் கொண்டதைப் பற்றி ரவியிடம் சொல்லியிருப்பாள். அதனால் தான் இருவரும் முகம் கொடுக்காமல் போகிறார்கள் என்று உணர்ந்த கரிகாலன் வண்டியை எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
ஆட்டோவை பிடித்து விடுதியை சென்று அடைந்தனர். பழனியப்பன் தகவலை கேட்டு அதிர்ந்தார்.
கரிகாலனுடன் தொடர்ந்த ஒரு சாதாரண உடை அணிந்த போலீஸ் அதிகாரி அவர் எல்லையை கடந்ததும் ரகுவை கைது செய்த அதிகாரிக்கு போன் செய்தார்.
விடுதியில் இருந்த உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு வந்தனர். நேராக வரவேற்பாளரிடம் சென்ற நீலா, ரகு அவசரமா ஊருக்கு போயிட்டாரு. அதனால அவர் ரூம் சாவி கொடுத்தீங்கன்னா அவரோட திங்க்ஸ் நான் எடுத்துப்பேன் என்றாள்.
ஊருக்கு போயிட்டாரா. இப்பத்தானே மேலே போனாரு என்றார் வரவேற்பாளர்.
என்ன என்று அதிர்ச்சியடைந்த நீலா ஒடிச் சென்று லிஃப்டில் ஏறி மேலே சென்று அவசரமாக ஓடி ரகுவின் அறையை அடைந்தாள்.
அவளுக்காகவே காத்திருந்த்து போல ரகு அவளை பார்த்த்தும் சிரித்தவாறே கைகளை விரித்து நின்றான்.
என்ன நடக்குது இங்கே.
நீலா, போலீஸ் கரிகாலனை திசை திருப்ப என்னை அரஸ்ட் செய்த மாதிரி நாடகமாடினாங்க. ஆனா கரிகாலனை அவிழ்த்து விட்டு அவர் எங்கே போறாருன்னு பின் தொடர்ந்து போறாங்க என்றான்.
அவள் ஓடி வந்து ரகுவை இறுக அணைத்தாள். 1 மணி நேரத்தில என் உயிர் எத்தனை தடவை போயிடுத்து தெரியுமா என்றாள் கண்களில் ஆனந்த கண்ணீருடன்.
நீ சங்கரைத் தான் ஆசைபட்டிருந்தா உன்னோட சந்தோஷத்துக்காக என் காதலை தியாகம் செஞ்சிருப்பேன் நீலா. நான் எப்படி அவனை கொன்னிருப்பேன் சொல்லு என்றான் நாதழுதழுக்க.
எனக்குத் தெரியும் என்று நீலா சொல்லியபடியே அவனை இன்னும் இறக அணைத்தாள். அவள் பின்னால் வந்த சவிதாவும் ரவியும் சந்தோஷமாக தங்கள் அறைக்கு திரும்பிச் சென்றனர்.
பழனியப்பன் நடந்த விஷயங்களை கேட்டு ஆச்சர்யப்பட்டார். என்னப்பா நடக்குது. மதுரை வந்த பிறகும் பிரச்சனை முடியலையா. நாளைலேர்ந்தாவது நிம்மதியா ஆராய்ச்சியை பண்ணுவோம் பா என்றார்.
ஆம் என்று அனைவரும் தலையாட்டிவிட்டு அவரவர் அறைக்கு சென்றனர். பழனியப்பன் நடப்பது புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார்.
தொடரும்…