சொல்லுங்க கரிகாலன் எதுக்காக நீங்க சங்கரை கொன்னீங்க என்று பொறுமையாக கேட்டார் இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட்.
சார், நான் அவரை கொலை பண்ணலை.
சரி. ஆனா உங்கள் வண்டியில் ரத்த கறை கிடைச்சிருக்கு. அவரு உங்களோட காலை வந்தவரு திரும்பி வரலை.
ஆமாம் சார். ஆனா என் வண்டியை ரகு தம்பியும் ஓட்டுவாரு.
அப்ப ரகு இந்த கொலை செஞ்சாருன்னு சொல்றீங்களா.
அப்படி சொல்லலை சார். எல்லா புள்ளைங்களும் நல்ல புள்ளைங்க தான். ஆனா………… என்று இழுத்தார்.
ஆனா என்ன சொல்லுங்க.
சார். இந்த சங்கருக்கும் ரகுவுக்கும் நீலா மேல ஒரு கண்ணு இருந்துது. ரெண்டு பேரும் தனித்தனியா அவளை காதலிச்சாங்க. இது அரசல் புரசலா எல்லாருக்கும் தெரியும். நீலாவுக்காக ரகு சங்கரை கொலை செஞ்சிருப்பான்னு நான் சொல்லலை. ஆனா தகராறு வந்திருக்கலாம். அதுலை எதிர்பாராம அவன் பம்பு செட்டில இவனை தள்ளி விட்டிருக்கலாம். அங்க வொயர் அவனை பதம் பாத்திருக்கலாம்.
ஆனா…………… போஸ்ட் மார்டத்தில் அவன் தலையிலே அடி என்று சொல்ல வந்தவர் நிறுத்திக் கொண்டு மௌனமானார் ரிச்சர்ட். இதுவும் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. எதனால் கரிகாலனை மட்டும் சந்தேகப்படவேண்டும் என்று நினைத்தார்.
ஒரு நிமிஷம் என்று சொல்லி வெளியே வந்தார். இன்னொரு அறைக்கு சென்று ரமேஷுக்கு போன் போட்டார்.
சார் கரிகாலன் இப்படி ஒரு ஆங்கிள் சொல்றாரு. என்ன பண்ணலாம்.
அப்படியா. அவரு சொல்றது சரியா இருக்கலாம். நீங்க அவரை ரீலீஸ் பண்ணுங்க. ரகுவை அரஸ்ட் பண்ணுங்க. ஆனா நான் சொல்ற விதத்துல அரஸ்ட் பண்ணுங்க என்று ஒரிரு வார்த்தைகள் கூறினான்.
அவன் அருகில் அமர்ந்து ஹிஸ்ட்ரி சானல் பார்த்துக் கொண்டிருந்த ஜெயா அவன் போனை வைத்ததும் அவனிடம், ரமேஷ், உங்களுக்கு அவர்தான் கொலை பண்ணாருன்னு தெரியும், அந்த சந்திரசேரோட அப்ளிகேஷனை காப்பாத்தத்தான்னு தெரியும் அதுக்கப்புறம் எதுக்கு அவரை ரீலீஸ் பண்ண சொன்னீங்க. பாவம் அந்த ரகுவை ஏன் கைதி பண்ண சொல்றீங்க என்றாள் குழப்பத்தில் மண்டை வெடித்துவிடுவதை போல பாவனை கொண்டு.
என் புத்திசாலி பொண்டாட்டியே ஒரு கப் டீ கொண்டுவா சொல்றேன் என்றான்.
அவள் சமையலைறயில் நுழைய அவனும் அவள் பின்னே சென்று உணவு மேசைக்கு அருகே அமர்ந்தான்.
ஜெயா நாம இரண்டாம் தேனிலவுக்கு லண்டன் போனா என்ன என்று கேட்டான்.
நான் தயார். ஆனா எதுக்கு ரகுவை அரஸ்ட் பண்ண சொன்னீங்க. அதை சொல்லுங்க முதல்ல என்றாள் விடாப்பிடியாக.
சரிப்பா சொல்றேன் கேளு. கரிகாலன் அலட்ச்சியமாக இருந்ததால மாட்டிக்கிட்டாரு. ஆனா அவரு தான் கொலை பண்றாருங்கறதுக்கு எந்த ஆதாரமும் சிக்கலை. அவர் வண்டியில ரத்தக்கறை இருந்ததால மட்டும் அவரு கொலை செஞ்சாருன்னு சொல்ல முடியாது. அது மட்டுமல்ல அவர் அம்பு தான். அவரை அனுப்பிய வில்லு வேறு எங்கோ இருக்கிறது. இந்த அம்பு திரும்பி அம்பாரைக்கு போகும். அப்ப போயி கப்புன்னு பிடிக்கனும்.
அவரை எதுக்கு விடுதலை பண்ணீங்கன்னு என்னாலேயே கெஸ் பண்ண முடிஞ்சுது. ஆனா பாவம் ரகுவை ஏன் அரெஸ்ட் பண்ண சொன்னீங்க.
செல்லம், கரிகாலனுக்கு நாம அவர் மேல சந்தேகம் இல்லை அப்படின்னு காட்டிக்கனும். ரகுவை அரெஸ்ட் பண்ணா அவரு மறுபடியும் ரிலாக்ஸ் ஆக வாய்ப்பு இருக்கு.
அப்ப அவரை ரிலாக்ஸ் பண்ணனும்னா அரெஸ்ட் பண்ணாமே இருந்திருக்கலாமே.
அங்க தான் திருப்பமே. அவருக்கு போலீஸ் பயம் இருக்கனும். இருந்தா அவங்க முதலாளிகளும் கொஞ்ச நாள் அடங்கி இருப்பாங்க. அந்த நேரத்தை பயன்படுத்திக்கிட்டு நமக்கு புரியாத பல விஷயங்களை புரிஞ்சிக்கனும்.
ஆனா அவங்களை வெளிய விட்டு பிடிக்கிறது தானே வழக்கமா போலீஸ் கையாள்ற யுத்தி.
ஆமா. அப்படி பண்ணா அதுக்கு விலையா பல உயிர்கள் போகும். அதனால கீப் தெம் கொயட் அண்ட் ஆக்ட். இது தான் என்னுடைய திட்டம்.
என் செல்லத்துக்கு மூளையே மூளை என்று ரமேஷை பின்புறமாக வந்து அணைத்துக் கொண்டாள்.
தொடரும்…