களப்பிறர் ஆட்சியைப் பற்றி இதுவரை யாராலும் சரியாக ஆராய்ச்சி செய்ய முடியவில்லை. நம்மிடம் உள்ள நூல்களையும் கல்வெட்டுகளையும் பழம் பெரும் கோவில்களில் கிடைத்த செய்திகளையும் பிராம்மி கல்வெட்டுகளையும் பழைய ஓலைகளையும் ஆராய்ந்து பார்த்ததில் தமிழக வரலாற்றைப் பற்றி பல அரும் பெறும் விஷயங்களை சேகரித்து விட்டோம். ஆனால் இந்த களப்பிறர் ஆட்சியைப் பற்றி யாராலேயும் நிறைவாக ஒன்றும் எழுத முடியவில்லை.
இதைப் பற்றி ஆக்ஸ்போர்ட் பல்கலை கழகத்தில் ஒரு திறந்த ஆய்வுக் கட்டுரை நிறைவு பெறாமலேயே இருக்கிறது. இதைப் பற்றி ஆராய்ந்து ஆதரங்களுடன் கட்டுரை சமர்ப்பிப்பவர்களுக்கு டாக்டர் பட்டம் மட்டுமல்ல ஒரு பெரிய சன்மானமும் சமூக அந்தஸ்தும் கிடைக்கவுள்ளது.
பலரும் ஆங்கிலேயர்கள் எழுதிய வரலாற்றுப் புத்தகங்களை வைத்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதி டாக்டர் பட்டங்கள் பெற்றுவிடுகின்றனர். பிறர் எழுதிய வரலாற்று நூல்கள் முற்றிலும் பொய்களாக
இல்லாவிட்டாலும் அவர்கள் தங்களுக்கு தகுந்தவாறு உண்மைகளை மாற்றியிருக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நான் வரலாறு படிக்கும் காலத்தில் இதைப் பற்றி எழுதத் துவங்கினேன். ஆனால் பல தொந்தரவுகளால் தொடர முடியவில்லை. என்னுடயை ஆசான் அ. சந்திரசேகர் 67 வயதாகியும் இன்னும் அதைப் பற்றி ஆராய்ந்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரால் அதிக வெற்றி காண முடியவில்லை.
ஊக்கமும் ஆக்கமும் விடாமுயற்சியும் கொண்ட உங்களைப் போன்ற இளைஞர்கள் முயன்றால் கட்டாயம் முடியும். இந்த நூற்றாண்டில் இதை செய்ய முடியாவிட்டால் அடுத்த நூற்றாண்டில் இதை யாராலும் சாதிக்க முடியாது.
மனிதர்கள் பல கோடியாக ஆகிவிட்டனர். வயல் வெளிகள் சிமென்ட் கட்டிடங்களாக மாறி வருகின்றன. முழு தமிழகமும் ஒரு அங்குலம் இடைவெளியில்லாமல் கட்டடங்களாக மாறிய பிறகு என்ன அகழ்வாராய்ச்சி செய்ய முடியும்.
கணினி துறை வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த காலத்தில் பல விஷயங்களை சேகரித்து ஆராய்ந்து அலசிப் பார்க்க பல மென்பொருட்கள் உள்ளன. நீங்கள் மனசு வைத்தால் முடியும். உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் நானும் என் ஆசானும் செய்ய உதவியாக இருக்கிறோம்.
கறுப்பு வரலாறு மீது ஒளி வீசுங்கள் . வாய்ப்புக்கு நன்றி என்று கூறி தன் பேருரையை முடித்தார் சி. பழனியப்பன். சென்னை அரசாங்க கல்லூரியின் முதுகலை வரலாற்று பேராசிரியர்.
பலத்த கைத்தட்டல் அரங்கத்திலிருந்து.
இதுவரை பொழுது போக்கிற்காக வரலாறு பாடம் எடுத்து படித்தவர்களும் உணர்ச்தி வசப்பட்டனர். நம் பாடத்திலும் இத்தனை சங்கதி இருக்கிறதா. வரலாறு என்பது இத்தனை முக்கியமானதா என்று ஆச்சர்யப்பட்டனர்.
வரலாறு படிப்பவன் முட்டாள், வரலாறு படைப்பவனே புத்திசாலி என்று அவர்களுடைய பள்ளி விஞ்ஞான ஆசிரியர் பத்தாம் வகுப்பில் சொன்னது பல வருடங்களாக சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் ரவி, ரகு, சங்கர், நீலவேணி மற்றும் சவிதாவுக்கு நினைவில் வந்தது.
கறுப்பு வரலாறு மீது ஒளி வீசுங்கள் என்று பழனியப்பன் சொன்னதை நினைவில் கொண்டபடியே கல்லூரியின் உணவகத்தை நோக்கி சென்றனர் அந்த ஐவரும்.
தொடரும்…