ராஜேஷpன் முகம் சிவந்து போனது. இவ்வளவு பேசுவாளா இவள்?
சரி சரி நந்தினி எப்படி இருக்கே. உட்காரு போதுமா என்றான் சிரித்தப்படியே. உன்னை 3 நாளாச்சு பார்த்து என்றான்.
அம்மா! உன்னை என்ற வார்த்தை வந்துவிட்டதே இவன் வாயிலிருந்து. எனக்கு… பிடிச்சிருக்கு.. இரண்டும் முன்பே இருக்கிறது. ஆனால் இந்த உன்னை இப்போது தான் இவன் வாயிலிருந்து வந்திருக்கிறது. ஆஹா ரிகார்ட் செய்ய டேப்பில்லையே என்று வருந்தினாள். ஆனால் என் மனதைவிட பெரிய ரிகார்டர் ஏது என்று சமாதானப்படுத்திக் கொண்டாள்.
என்ன யோசிக்கிறே?
ஒன்னும் இல்லை.
நீ இந்த டிரெஸ்ல ரொம்ப அழகா இருக்கே.
உள்ளுக்குள் பாரத ரத்னா விருதே வாங்கிவிட்டாள்.
அப்பாடா இப்பவாவது உங்க கண்ணிற்கு பட்டதே.
இல்லை. நீங்க ஸாரி நீ இப்பத்தான் சுடிதார் போட்டு பார்க்கறேன். அதுவும் இந்த ப்ளு எனக்கு பிடிச்ச வேரியேஷன்.
தெரிஞ்சுதான் போட்டு வந்திருக்கேன்டா முட்டாள் – மனதுக்குள் தான் .
என்ன இந்த பக்கம் அதிசயமாய்?
ராஜேஷ்கொஞ்சம் நியாயமா பேசுங்க. உங்களுக்கு அடிப்பட்டிருக்கு. நான் உங்க கொலீக். உங்களை பார்க்க வந்திருக்கேன். என்னமோ ஷாம்பூ விக்கிற சேல்ஸ் கேர்ல் உள்ள நுழைந்த மாதிரி இருக்கு உங்க பேச்சு – பொய்யாக கோபித்தாள்.
இல்லம்மா. இதுக்கு முன்னாடி நீ வந்ததில்லையே அதனால கேட்டேன்.
ம்மா. நெருக்கத்திற்கு இதைவிட வேறு என்ன வார்த்தை இருக்கிறது தமிழில்.
உற்று அவன் கண்களை பார்த்தான். அதில் சற்றும் காதல் தெரியவில்லை.
என்ன பார்க்கறே நந்தினி
மூன்றாவது முறை நந்தினி. அவன் வேறு ஏதுவும் பேசவேண்டாம். தன் பெயரைப் மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் போதும் என்று அவளுக்குத் தோன்றியது.
என்னாச்சு உங்களுக்கு?
காபி அவளுக்கும் தேனீர் அவனுக்கும் வந்தது.
வேண்டும் என்றே தேனீரை எடுத்து அவசரமாக பருகினாள்.
நந்தினி அது எனக்கு என்றான் அவசரமாக.
நான்காவது முறை நந்தினி.
ஓ ஐயாம் ஸாரி என்றுவிட்டு வேற டீ எடுத்துட்டு வரச்சொல்லட்டுமா என்றாள். இவளுக்கு யார் கற்றுக் கொடுத்தது நடிப்பு? பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் தொலைக்கல்வி படிக்கிறாளோ?
பரவாயில்லை என்று கூறிவிட்டு அவள் அருந்திய கோப்பையிலிருந்தே குடிக்கத்தொடங்கினான். கணவன் உண்ட இலையில் மனைவி உண்பது போல கணவன் செய்யக்கூடாதா? புதுமைப் பெண்ணின் மனம் பூரிப்படைந்தது. இன்றே இவன் காலடியில் மரணம் என்றாலும் புன்னகையோடு ஏற்றுக்கொண்டிருப்பாள்.
என்னாச்சு உங்களுக்கு? மறுபடியும் கேட்டாள்.
சின்ன ஆக்ஸிடெண்ட்.
10 வருஷமா கார் ஓட்டற உங்களுக்கு எப்படி ஆக்ஸிடெண்ட்?
ராத்திரி முழுசா தூங்காம கார் ஓட்டிக்கிட்டிருந்தேன். அதனால ஏற்ப்பட்ட லாப்ஸ்.
ஏன் இப்படி வேலை செய்யறீங்க?
வேற என்ன செய்ய?
கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த ஆசையில்லையா உங்களுக்கு?
இருக்கே. நிறையா இருக்கு. ஆனா என்னுடைய எதிர்பார்புக்கு இன்னும் யாரும் அமையவில்லை.
ஏன் நான் இல்லையா உன் கண் முன்னே? குருடா? – உள்ளே ஒரு குரல்.
நீங்க யாருகிட்ட பழகறீங்க அவங்களைப் பத்தி தெரிஞ்சிக்க?
ஆழமா பழக அவசியமில்லை நந்தினி. ஒரு நிமிஷத்தில கண்டு பிடிப்பேன்.
ஐந்தாவது முறை நந்தினி.
ஒரு நிமிஷம் மேலாக இங்கே இருக்கேன். என்னைப் பத்தி என்ன தெரிஞ்சிகிட்டீங்க?
மௌனமாக புன்னகைத்தான்.
சரியான சந்தர்ப்பம் இது. சுற்றிப் பார்த்தாள். ரங்கன் தென்படவில்லை. ரோஜாவை எடுத்து அடிபட்ட அவன் தலையில் லேசாக அடித்துவிட்டு அவன் மார்பருகே வைத்தாள்.
அவன் கண்ணை உற்றுப்பார்த்தாள். அவன் கண்கள் நெகிழ்வது தெரிந்தது. அழுதுவிடவேண்டும் போலிருந்தது. முகத்தை திருப்பிக் கொண்டாள். அவன் நெகிழ்வான பார்வையை பார்க்கும் சக்தி அவளுக்கு இல்லை. அதை பார்த்துவிட்டால் காதலை தானாக வெளிப்படுத்த வேண்டிய நிலை வந்துவிடுமோ என்ற பயம்.
அவன் படுக்கை சுற்றி புத்தகங்கள். போஸ்ட் இட்டுகள். அதில சில எண்கள்.
என்ன இந்த எண்கள்? பேச்சை மாற்ற முயன்றாள்.
சும்மா.
சும்மான்னா?
எப்போதாவது மனசுல வர்ற நம்பரை எழுதுவேன்.
என் மனசுல ஒரு நம்பர் வருது எழுதட்டுமா?
எழுதேன்.
5 என்று எழுதினாள்.
என்ன 5. உன் டேட் ஆப் பர்த்தா?
முட்டாள் என் பிறந்த நாள் கூட உனக்குத் தெரியவில்லை? அதே குரல்.
இல்லை. என்னை இந்த மூன்று வருஷத்தில இத்தனை தடவைதான் பேர் சொல்லி கூப்பிட்டிருக்கீங்க. உள்ளுக்குள் அழுதேவிட்டாள்.
சட்டென்று பையை எடுத்துக் கொணட்டு நான் கிளம்பறேன் என்று சொல்லிவிட்டு வெளியேறினாள்.
ஏதோ மறந்துவிட்டது போல திரும்பி வந்தவள் அந்த சீட்டில் இருந்த 5-ஐ அடுத்து 00000000000000 என்று எழுதிவிட்டு திரும்பி பார்க்காமல் வெளியேறினாள்.
அவனுக்கு புரியாமல் இல்லை. உள்ளுக்குள் மாற்றம் வந்தது. ஆனால் காதல் இன்னும் வரவில்லை.
மார்பின் மேலிருந்த ரோஜாவைப்பார்த்தான். அது வாடாமல் இருந்தது. வாசம் இருந்தது. அழகு இருந்தது. ஆனால் அது அவனுடையது இல்லை என்று தோன்றியது.
ஹோண்டா சிட்டி கிளம்பியது. அது வரை அந்த வீட்டை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த ஒரு டிவிஎஸ் விக்டரும் கிளம்பியது.
தொடரும்…