ராதிகாவை மெதுவாக முன்னே போகவிட்டு நந்தினியிடம் வந்தான். அவள் கைகளைத் தொட்டுத் திருப்பி ஒரு போஸ்ட் இட்டை ஒட்டிச் சென்றான்.
அவன் லிப்டுக்குள் சென்றான். அவனுக்கு அக்பர் மீது கோபமில்லை என்று காட்ட அவன் எடுத்து வந்த பேனாவை கழுத்துப் பட்டையுடன் அணிந்திருந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்தான்.
அவன் லிப்டுக்குள் சென்றதும் ஆவலாய் அதை திருப்பி பார்த்தாள்.
அதிர்ச்சியடைந்தாள்.
சாவு என்னை துரத்துகிறது. அதனால் நீ என்னைத் துரத்துவதை நிறுத்தி விடு.
என்ன பைத்தியக்காரத்தனம் இது. அப்படி சாகவேண்டும் என்றால் ஏன் அந்த வேலையை செய்யவேண்டும்.
ஒரு சிறிய காகிதத்தில் எதையோ கிறுக்கிவிட்டு படி இறங்கி ஓடினாள். அவன் காரில் நுழைந்து கதவை திறப்பதற்காக வெளியே காத்திருந்தாள் ராதிகா. வண்டியில் உட்கார்ந்தவன் காரை திறக்காமல் உள்ளேயிருந்துக் கொண்டு தன் பிரத்யேக போனில் விக்ரமனைத் தொடர்பு கொண்டான்.
சார் அமைச்சர் இன்டெர்வ்யூக்கு கூப்டறாரு. நானும் ராதிகாவும் போகப்போறோம். பரவாயில்லையா?
ஜாக்கிரதையா போயிட்டு வாங்க. நாங்க உங்களுக்கும் அமைச்சருக்கும் பாதுகாப்பு தர்றோம். நீங்க போறதுக்கு முன்னாடி எங்க ஆளுங்களை கட்சிக்காரங்க மாதிரி நிறத்தி வைச்சிடரோம்.
அவருடன் பேசிய பிறகே கதவைத் திறந்து ராதிகாவை உள்ளே அமர்த்தினான்.
ஸாரி ராதிகா ஒரு பெர்சனல் கால்.
பரவாயில்லை என்றாள் பவ்யமாக.
இன்ஜினை தொடக்குவதற்கு முன்பு நந்தினி ஓடி வருவதை பார்த்து வண்டியை விட்டு இறங்கினான். ராதிகா புரியாமல் பார்த்தாள்.
கண்ணாடி ஏற்றியிருந்ததால் என்ன பேசுகிறார்கள் என்று கேட்பது கடினம். ஆனால் அவர்களோ பேசவில்லையே!
ஓடி வந்தவள் அவனருகில் வந்ததும் நடையின் வேகத்தை குறைத்து மூச்சிறைக்க வந்தாள்.
கையிலிருந்த முதல் காகிதத்தை கொடுத்தாள்.
நீ செத்தால் நான் விதவை. என்றென்றும்.
முட்டாள் என்று சொன்னான். அவன் ராதிகாவின் முதுகு புறம் இருந்ததால் அவளால் அவனுடைய முகபாவத்தை பார்க்க முடியவில்லை. என்ன மீட்டிங் நடுவில் வந்து பேசியதால் மன்னிப்பு கேட்டிருப்பாள்.
நந்தினி இன்னொரு காகித்தை நீட்டினாள்.
தேனிலவக்கு எங்கே போகலாம்
கைகளை எடுத்து தலைக்கு வலதுகைப் பக்கம் சுற்றி நீ ஒரு கிறுக்கு என்பது போல பாவனை செய்து விட்டு அவன் அமர்ந்தான்.
அவன் காம்பௌண்டை விட்டு வெளியே செல்லும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு தேனிலவுக்கு எங்கே போகலாம் என்ற கனவில் கரைந்தாள்.
தொடரும்…